ஆயுர்வேதம் ஆயுள் பெறட்டும்!

இப்போது நம் நிலைமை எப்படி ஹீனமாயிருக்கிறதென்றால், நான் சொல்கிறேனே என்று நீங்கள் இத்தனை பேரும் ஆயுர்வேத வைத்யம் பார்த்துக் கொள்வது என்று ஆரம்பித்தால் இத்தனை பேரையும் ‘ட்ரீட்’பண்ண வைத்தியர்களே கிடைக்கமாட்டார்கள்!’ மெடிகல் டிகிரி’ என்றாலே இங்கிலீஷ் வைத்தியப் படிப்புத்தான் என்று வைத்துப் பாடத் திட்டத்தில் ஆயுர்வேதத்துக்கு இடமே தராமல் நெடுங்காலம் நடந்துவிட்டதுதான் இதற்குக் காரணம். சுமார் ஐம்பது வருஷத்துக்கு முன் நிலைமை கொஞ்சம் மாறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சி உண்டாயிற்று. அவர்கள் ஒரு பக்கம் காங்கிரஸின் ஸ்வந்திரப் போராட்டத்தை ஆதரிக்காமலிருந்தார்கள்; இன்னொரு பக்கம், ‘எல்லாத் துறைகளிலும் Brahmin domination (பிராம்மணனின் ஆதிக்கம்) ஏற்பட்டு விட்டது; இதைக் குறைக்க வேண்டும்’ என்ற கொள்கையுடையவர்களாக இருந்தார்கள். இப்படியிருந்தாலும் அவர்களிலும் புத்திமான்கள், விஷயங்களைச் சீர்தூக்கிப் பார்த்து நிதானமாகக் காரியம் செய்கிறவர்கள் இருந்தார்கள். அவர்களில் பனகால் ராஜா ஒருத்தர். மாம்பலத்தில் இருக்கிற பார்க் அவர் பேரில் ஏற்பட்டதுதான். (தியாகராஜ நகர் என்று மாம்பலத்தைச் சொல்கிறதுகூட ஜஸ்டிஸ் பார்ட்டியைச் சேர்ந்த பிட்டி தியாகராஜ செட்டி என்பவர் பெயரில்தான்.) பனகல் ராஜா மந்திரியானவுடன் மற்ற விஷயங்கள் ஒரு பக்கமிருந்தாலும், ‘வெள்ளைக்காரனிடமிருந்து ஸ்வதேச ஜனங்களான நம்மிடம் கொஞ்சம் அரசாங்கப் பொறுப்பு வந்திருக்கிறது; எனவே ஸ்வதேசியமாக ஏதாவது பண்ண வேண்டும்’ என்று நினைத்தார். அவர் ஸம்ஸ்க்ருதத்தில் நல்ல படிப்புள்ளவராதலால் நம்முடைய பழைய சாஸ்திரங்களை (சாஸ்திரமென்றால் தர்ம சாஸ்திரமில்லை;பழைய ஸயன்ஸ்கள், கலைகள் ஆகியவை பற்றிய சாஸ்திரங்களைத் தான்) ஆதரிக்க வேண்டுமென்ற அபிப்ராயமுள்ளவராயிருந்தார். நமது தேச ஒளஷதிகள்தான் நமக்கு ஒத்துக்கொள்வதென்றும் இதர முறைகள் விபரீதம் பண்ணுவதென்றும் அவர் அபிப்ராயப்பட்டு, ‘இப்படி ஆயுர்வேதம் க்ஷீணித்து வருகிறதே!’ என்று அதற்கு உயிர் கொடுப்பதற்காக மெட்றாஸில் ஆயுர்வேத வித்யாசாலை ஆரம்பித்தார். இன்னம் சிறிது காலம் அவர் ஆட்சி இருந்திருந்தால் நம்முடைய கணிதம், பௌதிகம், ஜ்யோதிஷம் முதலான சாஸ்திரங்களுக்கு ஏற்றம் கிடைக்கப்பண்ணியிருப்பார். நான் இப்படிச் சொல்வதால் எனக்கு patriotic spirit (தேச விச்வாஸ உணர்ச்சி) இல்லை என்று வேண்டுமானாலும் நினைத்துவிட்டுப் போங்கள். patriotism, ஸ்வதேசியம் என்றே சொல்லிக் கொண்டிருந்தவர்கள் ஆட்சிக்கு வந்தபின் ஸ்வதேச வித்யைகள், அறிவு (அறிவியல்) சாஸ்திரங்களை உயிர்ப்பிக்க என்ன செய்திருக்கிறார்கள்? இங்கிலீஷ்காரர் காலத்தில் இருந்ததைவிட இப்போதுதான் ட்ரெஸ், நடைமுறைகள், out-look என்கிறார்களே அந்த மனோபாவம் ஆகிய எல்லாவற்றிலும் ரொம்பவும் இங்கீலீஷ்காரன் மாதிரியே பண்ணிக்கொண்டு வருகிறார்கள்!ஆயுர்வேதம் ஏதோ ஜஸ்டிஸ் ஆட்சியிலாவது கொஞ்சம் கடாக்ஷம் பெற்று விட்டதால் அதை முன்னுக்குக்கொண்டு வருவதாக ஆமை வேகத்தில் என்னவோ செய்து, அல்லோபதியோடு ஆயுர்வேதத்தையும் சேர்த்து என்று G.C.I.M. பட்டம் கொடுக்கிற வரை கொண்டு வந்திருக்கிறார்கள்1. ஆனாலும் மற்ற அநேக சின்ன விஷயங்களைத் தடபுடல் படுத்துவது போலன்றி அரை மனஸாகப் பண்ணுவதால் இது ஒன்றும் விசேஷமாகப் பிரசாரமாகவில்லை. ஜனங்களுக்கும் நிஜமான ஸ்வதேசப் பற்று இல்லாததில் பனகால் ராஜா ஸ்வல்பமாக ஆரம்பித்தது, நாமே ராஜாங்க உரிமை பெற்றவுடனே எவ்விதம் பிரகாசமடைந்திருக்க வேண்டுமோ அப்படி ஆகவில்லை. இருந்தாலும் வெகு ஸமீப காலமாக அறிவாளிகளிடையே கொஞ்சம் விழிப்பு ஏற்பட்டிருப்பதால் இப்போது நிலைமை சற்று நல்ல திருப்பமடையலாமென்று தோன்றுகிறது.

மூன்று காரணங்களுக்காக ஆயுர்வேதத்தை ஆதரிக்கலாம். ஒன்று, இதில் அநாசாரம் ரொம்பக் குறைவு. இரண்டு, நம் தேச சீதோஷ்ணம், நம் ஜனங்களின் தேஹவாகு ஆகியவற்றுக்கு என்றே ஏற்பட்டதாதலால் வேண்டாத விளைவுகளை உண்டாக்கமலிருப்பது. மூன்று, செலவும் குறைச்சல் – இது முக்கியமான காரணம். இன்னொன்று கூட: வாய்க்கே ஆரோக்கியமாயிருக்கும். ஓமம், திப்பிலி மாதிரி சரக்குகளுக்கும் அநேக மூலிகைகளுக்கும் ஒரு தனி ருசி, மணம், விளக்கெண்ணெய் மாதிரி வயிற்றைப் புரட்டுவது, நிலவேம்பு மாதிரிக் கசப்பாகக் கசப்பதிலெல்லாங்கூட அநேக அந்நிய பதார்த்தங்களிலிருக்கிற துர்வாடை கிடையாது.

ஆதியில் ரணசிகித்ஸை தெரியாமலிருந்த வெளிதேசங்களுக்கு நம்மிடமிருந்தே அது போயிருக்க, அப்புறம், ‘ஆயுர்வேதத்தில் ரணசிகித்ஸை கூட உண்டா?’ என்று நாமே கேட்கிற அளவுக்குப் போனது போல எல்லாப் பழைய அறிவு சாஸ்திரங்களையும் நாம் கோட்டை விட்டால் ஸ்வதேசி ராஜாங்கம் என்று ஸந்தோஷப்படுவதற்கு எதுவுமில்லாமல் போகும். Tribal Dance -ஐ (ஆதிவாஸிகளின் நடனத்தை) அந்நிய தேசப் பிரமுகர்கள் வரும்போது ஆடிக்காட்டி விட்டால் இதுதான் ஸ்வதேசிய கலாசாரத்தைக் காப்பாற்றிக் கொடுப்பது என்று ஆகியிருக்கிறது!

மெடிகல் ஸயன்யுக்கு உரிய பூர்ண லக்ஷணத்தோடு தேஹத்தின் தன்மை, வியாதிகளின் தன்மை, அவை எப்படி ஏற்படுகின்றன, ஏற்படாமலே எப்படி தடுப்பது, ஏற்பட்டுவிட்டால் அப்புறம் எப்படி குணப்படுத்துவது, மருந்துச் சரக்குகளின் தன்மை என்ன என்றெல்லாம் தீர்க்கமாய் அலசி உண்டான நம் ஆயுர்வேதம் அவசியம் ரக்ஷிக்கப்பட வேண்டியதாகும். தேஹ ரஷையைத் தருகிற அந்த சாஸ்திரத்துக்கே வியாதி பிடித்து மெலிய வைக்ககூடாது! மெடிகல் ஸயன்ஸாகப் பூர்ண ரூபத்தில் இருப்பதோடு மட்டுமின்றி, மற்ற ஸயன்ஸ்களும் இதில் கலந்திருப்பதை உத்தேசித்தும், இத்தனை ஸயன்ஸ்கள் இருந்த போதிலும், ஸயன்ஸ் என்றால் ஸமயாசாரத்துக்கு விரோதமாகத்தான் போக வேண்டுமென்றில்லாமல் நம் ஆசாரத்துக்கு ஏற்றதாகவும் ஆயுர்வேதம் இருப்பதால் அதற்கே ஆயுர் விருத்தியை நாம் உண்டாக்கித் தரவேண்டும்.

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”, “சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும்” என்ற பழமொழிகள் ஆரோக்யமாயிருக்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறவையே. கிராம வாழ்க்கையின் ஸுகாதாரமான காற்றோட்டமும், எளிமையும் அநுஷ்டானங்களும் போய் நகர வாழ்க்கையின் பலவித நெரிசல்கள் ஏற்பட்டபின் வியாதிகள் அபரிமிதமாகப் பெருகி வருகின்றன. வைத்யத்தோடு ஈச்வரனைப் பிரார்த்தித்துத்தான் ஸரி செய்யணும். தெய்வ ஸம்பந்தமான பாராயண நூல்கள் பலவற்றிலும் ‘பலச்ருதி’யில் “ரோகார்த்தீ முச்யதே ரோகாத்2 என்பது போல ரோக நிவ்ருத்தியை ஒரு பலனாகச் சொல்லியிருப்பதால் மத ரக்ஷணைக்காகவே தேஹ ரக்ஷணையும் நம் நிலையில் அவசியந்தான் என்று தெரிகிறது. நம்முடைய கலாசாரத்தோடு ஒட்டிப்போகிற நம்முடைய பிராசீன வைத்ய சாஸ்திரப்படியே இந்த ரக்ஷணையைப் பெற்று எல்லோரும் ஸெளக்யமாய் வாழவேண்டும்.


11958-ல் இருந்த நிலையைக் கூறியது.

2 ‘விஷ்ணு ஸஹஸ்ரநாம’ பலச்ருதி. பலச்ருதி என்பது நூற்பயன்களைக் கூறும் பகுதியாகும்.

ஆயுர்வேதத்தைப் பின்பற்றக் காரணங்கள்

இந்தியாவிலுள்ள நாம் நம் தேசத்திலேயே ஏற்பட்ட ஆயுர்வேத முறைகளைத்தான் பின்பற்ற வேண்டுமென்பதற்கு ஒரு காரணம், அப்போதுதான் கூடியமட்டும் சாஸ்த்ர விரோதமான அநாசாரங்கள் சேராமலிருக்கின்றன என்பது. இன்னொரு காரணமும் உண்டு. அது இயற்கையாக அமைந்திருப்பது. அதாவது இந்தப் பிரபஞ்சத்தை உண்டாக்கி நடத்துகிற ஈச்வரனே ஸஹஜமாக ஏற்படுத்தி வைத்திருக்கிற அமைப்புகளைச் சேர்ந்தது. ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமான சீதோஷ்ணமிருக்கிறது. ஒவ்வொரு விதமான பயிர் பச்சைகள் விளைந்து அவற்றை அங்கே உள்ளவர்கள் ஆஹாரம் பண்ணுகிறார்கள். அவற்றை ஒட்டி அவர்களுடைய ஆரோக்யம், வியாதி இரண்டும் ஏற்படுகின்றன. அந்தந்த தேச சீதோஷ்ணமும் அங்கே கிடைக்கிற ஆஹார பதார்த்தங்களுந்தான் ஒவ்வொரு தேசத்தவருக்கும் ‘ஸூட்’ஆகிறது என்பதைப் பார்க்கிறோம் அல்லவா? இப்படியே, அங்கங்கேயும் இந்த சீதோஷ்ணம், ஆஹாரம் முதலியவற்றை அநுஸரித்து அநாரோக்கியத்தைப் போக்கிக் கொள்ளவும் அங்கே உள்ளவர்களுக்கு ஒவ்வொரு வைத்யமுறை தோன்றுமாறு பகவான் புத்தி கொடுக்கிறான்; அந்த வைத்யத்துக்கு வேண்டிய சரக்குகள் அந்தந்த தேசத்தில் கிடைக்கும்படியாகவும் வைத்திருக்கிறான். ஸாத்விகர்களாக வாழ வேண்டிய நம் தேச ஜனங்களுக்கு நம்முடைய சீதோஷ்ணம் ஆஹாரம் முதலியவற்றுக்கு அநுஸரணையாக பச்சிலை, ரஸ வர்க்கம் என்றிப்படி ஸாத்விகமான மருந்துகளாலேயே வியாதி நிவ்ருத்தி ஏற்படுமாறு அவன் ஏற்படுத்தியிருக்கும் ஸஹஜமான அமைப்பிலே இருக்கிறது. ‘கர்ம பூமியிலுள்ளவர்கள் கர்மாநுஷ்டானத்துக்கு முதுகெலும்பாக இருக்கிற தர்மசாஸ்திரத்தை மீறாமலே சரீர ரக்ஷை, வியாதி, நிவ்ருத்தி, ஆயுர்விருத்தி முதலியவற்றைப் பெறட்டும்’ என்றே நம் ரிஷிகளுக்கு ஆயுர்வேதம் ஸ்புரிக்கும்படியாக அநுக்ரஹித்திருக்கிறான். அந்தந்த தேசத்திலுள்ள ஜனங்களின் பக்வநிலைக்கு ஏற்க அவர்களுக்கு தேசாசார, மதாசாரங்களைக் கொடுத்து இவற்றுக்கு அநுஸரணையாகவே வைத்யமுறை முதலியவை அங்கங்கும் தோன்றும்படி செய்திருக்கிறான்.

வைத்யம் மட்டுமில்லை, ‘சில்பம்’ என்று வீடு வாசல் கட்டிக் கொள்கிற முறை, ‘க்ருஷி’என்பதான வியவஸாய முறை எல்லாவற்றிலும் இப்படி ஒவ்வொரு தேசத்துக்கும் ‘ஸூட்’ ஆகிற ஒன்று உண்டு. நாம் வெள்ளைக்கார ஃபாஷனில் வீடு கட்டிக்கொண்டால் நம் அநுஷ்டானங்களையே பண்ண முடியாமல் விட வேண்டியதாகிறது. Japanese method of agriculture பண்ணி நாலு மடங்கு மாசூல் காட்டுவேன் என்று போனால் நம் கையை மீறி அதிவ்ருஷ்டி, அநாவ்ருஷ்டி (பெருமழை அல்லது வறட்சி) என்று ஏற்பட்டு பஞ்ச நிலைமை உண்டாகிறது. நேச்சரை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது; அதுவே ஏற்றத்தாழ்வுகளை பாலன்ஸ் பண்ண விட வேண்டும் என்று அறிவாளிகள் ஒரு பக்கம் சொல்கிறார்கள். இது மெடிகல் ஸயன்ஸ் உள்பட எல்லாவற்றிலும் ஆலோசனைக்குக் கொண்டுவர வேண்டிய விஷயம்.

ஆயுர் வேதத்தின் ப்ரமாண நூலான ‘சரக ஸம்ஹிதை’ யிலேயே இந்த விஷயத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

யஸ்மிந் தேசே ஹி யோ ஜாத:
தஸ்மை தஜ்ஜௌஷதம் ஹிதம்

ஒரு தேசம் என்றால் அதில் பல மநுஷ்யர்கள் உண்டாகிறார்கள். மநுஷ்யர்களைப் போலவே ஒவ்வொரு தேசத்திலும் மூலிகை முதலான மருந்துச் சரக்குகளும் உண்டாகின்றன. ஈச்வர நியதியில் இது ஏதோ குருட்டாம்போக்காக நடப்பதல்ல. இந்த தேசத்துக்காரனுக்கு இந்தச் சரக்கால் பண்ணின ஒளஷதம்தான் எடுத்தது என்று இது காட்டுகிறது. இதைத்தான், “எந்த தேசத்தில் ஒருவன் பிறந்திருந்தாலும் அவனுக்கு அங்கேயே உண்டான சரக்குகளால் ஏற்பட்டதுதான் மருந்து” என்று சரகத்தில் சொல்லியிருக்கிறது.

பத்தியம்

மற்றவர்கள் [வெளி நாட்டார்], நவீனர்கள் நம்முடைய ஆயுர்வேதத்தில் சிலாகித்துச் சொல்கிற ஒரு விஷயம், இதில் மருந்துகளைச் சொன்னதோடு மாத்திரமின்றி, அதைவிட முக்யமாகப் பத்தியங்களைச் சொல்லியிருப்பதாகும்.

‘பத்யம்’ என்றால் ஒரு வழியில் போகப் பண்ணுவது. பாதை, path என்பதெல்லாம் ‘பதி’யிலிருந்து வந்ததுதான். ஆரோக்யப் பாதையில் செலுத்துவதற்காக ஏற்பட்டதே பத்தியம். மருந்து சாப்பிட்டால் மட்டும் போதாது. உடம்பு ஸரியாவதற்கு இன்ன ஆஹாரங்களை நீக்கிவிட்டு, இன்ன மட்டுமே இன்ன அளவில் சாப்பிட வேண்டுமென்பது முக்யம். இதுதான் பத்தியாமயிருப்பது. இந்தப் பத்தியங்களில் ஒன்றாக ஸகல ஜனங்களுக்குமே பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை உபவாஸம் இருக்க வேண்டுமென்று வைத்திருக்கிறது. ஸகல ஜனங்களுமே அவ்வப்போது ஒரு வேளை, லங்கனம் போடுவது நல்லது; பக்ஷத்துக்கு ஒரு நாள் பூராவும் பட்டினியிருப்பது விசேஷம் என்று வைத்ய சாஸ்திரம் கருதுகிறது. இதையே ஏகாதசி சாஸ்த்ரமும் நம் பூர்விக வைத்ய சாஸ்த்ரமும் கை கோத்துக் கொண்டு போகின்றன என்பதற்கு இதுவும் உதாரணம்.

ஆயுர்வேதத்தில் இதர ஸயன்ஸ்கள்

மினரல் தாதுக்களைக் கலந்தும் மருந்து செய்வதால் ‘கெமிஸ்ட்ரி’ என்ற ரஸாயன சாஸ்த்ரமும் நம் வைத்ய சாஸ்திரத்தில் வந்து விடுகிறது. ‘கெமிஸ்ட்ரி’ மட்டுமில்லை – இன்னம் ஏழெட்டு ஸயன்களும் Medical Science என்ற இது ஒன்றிலேயே அடங்கி விடுகிறதைப் பார்த்தால் ஆச்சர்யமாயிருக்கும். மூலிகைகளின் நேச்சரை தெரிந்து கொண்டே மருந்து பண்ண வேண்டும் என்பதால் தாவர தத்வ சாஸ்திரமான Botany -யையும் நன்றாகத் தெரிந்து சொல்லியிருக்கிறார்கள். மருந்துகளின் இன்னொரு மூலச் சரக்கான ரஸ வர்க்கங்களை பற்றி அறியப் போவதிலும் ரஸாயனம் (கெமிஸ்ட்ரி) வந்துவிடுகிறது. என்ன மருந்து கொடுக்க வேண்டும், அதில் என்ன ஸாமான்கள் சேர்க்க வேண்டும் என்று தெரிந்தால் போதுமா? இது செலுத்தப்படுகிற தேஹத்தின் அமைப்பைப் பற்றி நன்றாகத் தெரியவேண்டுமல்லவா? நோயாளியின் தேஹ தத்வத்தைத் தெரிந்து கொள்ளாமல் சிகித்ஸை எப்படி? இவ்வாறு Physiology -யும் சாஸ்திரத்தில் வந்து விட்டது. Veterinary என்கிற பிராணி வைத்தியமும் புராதனமாகவே நம்மிடமுண்டு. வீட்டுக்கு வீடு பசு, வியவஸாயத்துக்கு எருது, ஸைன்யத்தில் ரத கஜ துரகம் என்பதில் ஆனை குதிரை – இப்படிப் பல மிருகங்களை ஆரோக்யமாக காப்பாற்ற வேண்டியதை முன்னிட்டு ப்ராணி தத்வ சாஸ்திரமான Zoology -யையும் நம் பூர்விகர்கள் ஆயுர் வேதத்திலேயே சேர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். எந்த ஸத்யத்தையும் துளைத்துக்கொண்டு பார்க்கிற அதீந்திரிய சக்தியால் ரிஷிகள் இந்த எல்லா ஸயன்ஸ்களையும் தெரிந்து கொண்டு ஆயுர்வேதம் முதலான சாஸ்திரங்களில் தெரிவித்திருக்கிறார்கள். கருணை மிகுந்த ரிஷிகள், பிராணிகளுக்கு மட்டுமில்லாமல், மரம் செடி கொடிகளுக்கு வருகிற நோய்களைக் கூடப் போக்க வேண்டுமென்று “வ்ருக்ஷாயுர் வேதம்” என்றே ஒரு சாஸ்திரம் செய்திருக்கிறார்கள். சரக்குகளை இன்ன விகிதத்தில் கலக்கணும், ஒவ்வொன்றும் இன்ன எடை இருக்கணும், நோயாளி இன்ன அளவு அதைச் சாப்பிடணும் என்று துல்யமாய் கணிப்பதில் கணிதமும் வந்துவிடுகிறது. இப்படி, பௌதிக சாஸ்திரம் என்கிற Physics -ஐத் தவிர பாக்கி முக்கியமான ஸயன்ஸ்களையெல்லாம் ஆயுர்வேதம் ஒன்றிலேயே அகப்படும்படியாகக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். வேறு சாஸ்திரங்களிலும் தனியாகவும் ஃபிஸிக்ஸையும் அலசி ஆராய்ந்து கொடுத்திருக்கிறார்கள். ஸர் P.C.ரே என்பவர் நம்முடைய பிராசீன சாஸ்திரங்களில் நவீன ஸயன்ஸ்கள் எல்லாவற்றுக்கும் மூலம் இருக்கிறதென்று ஆராய்ச்சி செய்து நிரூபித்திருக்கிறார். வெள்ளைக்காரர்களே ஒப்புக் கொள்கிறபடி குறைந்த பக்ஷம் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முற்பட்ட சரகம், ஸுச்ருதம் முதலிய க்ரந்தங்களில், ‘இந்த இருநூறு, முன்னூறு வருஷங்களில் நாங்கள் கண்டுபிடிக்கிறதற்கு முந்தி எவருக்குமே இந்த உண்மைகள் தெரிந்திருக்கவில்லை’என்று அவர்கள் சொல்லிக் கொள்ளும் நவீன ஸயன்ஸ்களெல்லாம் அடங்கியிருக்கின்றன.

சஸ்த்ர சிகித்ஸை

ஆபரேஷன்-ஸர்ஜரி என்பது-செய்துகொள்ள வேண்டிய வியாதி என்றால் இப்போது இங்கிலீஷ் வைத்தியத்துக்குத்தான் போகவேண்டுமென்றாகி விட்டது. இது இப்போதைய நிலையில் தவிர்க்க முடியாததுதான். ரொம்பவும் ஆசாரம் பார்க்கிறவர்கள்கூட ‘காடராக்ட் மாதிரி ஏற்பட்டால் இங்கிலீஷ் வைத்ய முறையில் ஆபரேஷன்தான் பண்ணிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதிலே இப்போது நாம் ஒன்றும் பண்ணிக்கொள்வதற்கில்லையென்றாலும் முன்காலத்திலேயே நம்முடைய ஜாக்ரதைக் குறைவால் ஒரு தப்பு ஏற்பட்டுவிட்டதென்பது என் அபிப்ராயம்.

‘ஸர்ஜரி’ நம்முடைய வைத்ய முறையில் இல்லை என்று நாம் நினைக்கும்படி ஆக்கியிருப்பதுதான் தப்பு. வாஸ்தவத்தில் நம்மிடம்தான் ஆதியிலேயே, ஆயுர்வேத சாஸ்திரம் ஏற்பட்ட புராதன காலந்தொட்டே ‘ஸர்ஜரி’ என்பதான சஸ்த்ர சிகித்ஸை இருந்திருக்கிறது. ஆயுர் வேதத்துக்கு இரண்டு பெரியவர்கள் மூல புருஷர்கள். ஒருத்தர் சரகர், இன்னொருவர் ஸுச்ருதர். இவர்கள் எழுதிய ஸம்ஹிதைகள்தான் ஆயுர்வேதத்துக்கு மூல க்ரந்தங்களாக இருப்பவை. சரகர் என்பது பதஞ்சலியே எனத் தெரிகிறது. அக்னிவேச்ய ரிஷி எழுதியதைச் சரகர் விஸ்தாரம் செய்திருக்கிறார். வாக்படர் எழுதிய ‘அஷ்டாங்க ஹ்ருதய’மும் ஆயுர்வேதத்துக்கு ஒரு அதாரிடி. தமிழ் பாஷையிலும் அநேக பிராசீன நூல்கள் ஸம்பிரதாயமாக வந்திருக்கின்றன. சரகர், ஸுச்ருதர் என்ற இருவரில் சரகர் மருந்து கொடுத்துக் குணப்படுத்துவது பற்றிச் சொல்கிறார். ஸுச்ருதர் சஸ்த்ர சிகித்ஸை செய்து குணப்படுத்துவது பற்றிச் சொல்கிறார். Physician, surgeon என்று இப்போது இரண்டு பேரை சொல்கிறோம். மருந்து கொடுப்பவன் ஃபிஸீஷியன்; சஸ்த்ர சிகித்ஸை செய்பவன் ஸர்ஜன். எம்.பி.,பி.எஸ். என்பதில் இரண்டும் அடக்கம். ‘எம்.பி.’என்றால் மருந்து கொடுக்கிறவன்; Medicine Bachelor*1. ‘பி.எஸ்.’என்றால் ஆபரேஷன் பண்ணுகிறவன்: Bachelor of Surgery. ஆயுர்வேதத்தை நாம் ஜாக்கிரதையாகப் பூர்ண ரூபத்தில் காப்பாற்றி வந்திருந்தால் ஆயுர்வேத வைத்தியர்களும் M.B.,B.S. காரர்கள் மாதிரி மருந்து கொடுப்பதோடுகூட சஸ்த்ர சிகித்ஸை செய்வதிலும் திறமை படைத்தவர்களாயிருந்திருப்பார்கள். ஆனால் சரக ஸம்ஹிதை பிரசாரத்தில் வந்திருக்கிறமாதிரி, ஸுச்ருதருடைய ‘ஸர்ஜரி’ நூல் வராததால் நஷ்டமடைந்திருக்கிறோம்.

இதிலே என்ன பரிதாபம் என்று சொல்கிறேன். ‘என்ஸைக்ளோபீடியா ப்ரிட்டானிகா’ என்ற வால்யூம்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதிலே ஒவ்வொரு ஸயன்ஸ், சாஸ்த்ரம், கலை பற்றியும் விவரமாகச் சொல்லியிருக்கும். இருபது, முப்பது வருஷத்துக்கு ஒரு தடவை புதிசு புதிசாகத் தெரிய வருகிறவைகளையும் சேர்த்துத் திருத்தி அந்தப் புஸ்தகங்களின் புது எடிஷன்கள் போடுவார்கள். அதிலே எந்த ஸயன்ஸானாலும், சாஸ்திரமானாலும் அதைப் பற்றின சரித்திரமும் போட்டிருக்கும். அது எங்கே முதலில் தோன்றிற்று, எந்தக் காலத்தில் தோன்றிற்று, எந்தக் காலத்தில் எவர் அதை எந்தெந்தப் பிற தேசங்களுக்குக் கொண்டு போனார்கள் என்று விவரம் கொடுத்திருக்கும். அதிலே என்ன போட்டிருக்கிறதென்றால் ஸர்ஜரி என்ற ரணசிகித்ஸை வித்யை இந்தியாவிலேயே முதலில் தோன்றிற்று என்று இருக்கிறது. இங்கேயிருந்து அது அரேபியா வழியாக க்ரீஸ் தேசத்துக்குப் போனதாகவும், அங்கேயிருந்து இத்தாலிக்குப் பரவி, பிறகு ஐரோப்பா பூரா பிரசாரமானதாகவும் போட்டிருக்கிறது.

இது ‘ஸுச்ருதம்’ என்கிற சாஸ்திரத்தில் நவீன காலத்தில் ஆஸ்பத்திரிகளில் எத்தனை விதமான ரண சிகித்ஸை ஆயுதங்கள் உபயோகத்திலிருக்கின்றனவோ அத்தனையைப் பற்றியும் சொல்லபட்டிருக்கிறதாம். புதிதாகக் கண்டெடுத்த சுவடிகளைப் பரீக்ஷித்தும், ரிக் வேதத்திலிருந்து ஆரம்பித்து புராணம், காவியங்கள் முதலியவற்றிலுள்ள கதைகளில் ரோக நிவ்ருத்தி பற்றி, இருப்பவற்றை இதோடு பொருத்தியும் பல அறிஞர்கள் ‘அநேக ஆச்சர்யமான ஸர்ஜரி நுணுக்கங்களெல்லாம் நம் பூர்விகர்களுக்கு நன்றாகத் தெரியும்’ என்று காரணம் காட்டி எழுதி வருகிறார்கள். ரிக்வேதத்தில் வீராங்கனையாக இருந்த ஒரு ராணிக்கு*2 யுத்தத்தில் கால் போய், அதற்குப் பதில் அச்விநி தேவர்கள் என்ற தேவ வைத்யர்கள் இரும்புக் கால் வைத்ததாக வருகிறது. வால்மீகி ராமாயணத்தில் அஹல்யையிடம் தப்பாக நடந்து கொண்ட இந்திரனுக்கு இந்திரியம் போய்விட்டதாகவும் அதற்குப் பதில் ஆட்டின் இந்திரியத்தைப் பொருத்தினார்களென்றும் வருகிறது. சயவனர், யயாதி முதலியவர்கள் வயோதிகம் போய் யௌவனம் அடைந்ததாக மஹாபாரதத்தில் இருக்கிறது. இப்படியிருக்கும் அநேகம் கதைகளை வைத்ய சாஸ்திரங்களில் சொல்லியிருப்பவற்றோடு சேர்த்து நன்றாக ஆராய்ச்சி பண்ணிப் பார்த்ததில், இவையெல்லாம் கற்பனை இல்லை. நிஜமாகவே நடந்திருக்க வேண்டும். ஏனென்றால் வைத்ய சாஸ்திரங்களில் நமக்குக் கிடைத்திருப்பதில் தெளிவாகவும் நுட்பமாகவும் சொல்லியிருக்கிறவற்றிலிருந்து அந்தக் காலத்திலேயே artifical limb surgery (செயற்கை உறுப்புகளைப் பொருத்தும் சஸ்த்ர முறை), transplantation (ஒருவர் உறுப்பை இன்னொருவருக்குப் பொருத்துவது) , ‘காயகல்பம்’ என்ற பெயரில் rejuvenation (ஒருவருடைய சதை முதலியவற்றையே எடுத்துப் பொருத்தித் தோற்றத்தை அழகாகும்படி மாற்றி அமைப்பது) எல்லாம் செய்யப்பட்டிருக்க வேண்டும்’ என்று ரிஸர்ச் ஸ்காலார்கள் எழுதுகிறார்கள்.

ஸெப்டிக் ஆகாமல் தடுப்பது ஸர்ஜரியில் முக்யம். ஆபரேஷன்போது வலி தெரியாமல் மயக்க நிலை மாதிரி இருப்பதும் முக்யம். இந்த இரண்டுங்கூடப் பூர்வ காலத்திலேயே தக்கபடி செய்யப்பட்டு வந்தன என்று காட்டியிருக்கிறார்கள். ‘வாளால் அறுத்துச் சுடினும்‘ வைத்யனிடம் நோயாளி மனஸ்தாபப்படாத மாதிரி பகவான் எத்தனை சோதித்துக் கஷ்டப்படுத்தினாலும் அவனிடம் தனக்குப் பிரேமை போகமாட்டேனென்கிறது என்று (குலசேகர) ஆழ்வார் பாடியிருக்கிறார். இங்கே ‘வாளால் அறுப்பது’ தான் ஸர்ஜரி. அப்புறம் அதைச் ‘சுடுவது’ என்பது அது ஸெப்டிக் ஆகாமல் ‘காடரைஸ்’ பண்ணுவது.

இத்தனை இருந்தும், ஏதோ கட்டி, ராஜபிளவை என்றால் அறுப்பது தவிர பிற்காலத்தில் ஆயுர்வேதத்தில் சஸ்த்ர சிகித்ஸை ஏன் நஷ்டமாய் விட்டதென்றால் இரண்டு காரணம் தோன்றுகிறது. என்ன இருந்தாலும் ஆபரேஷன் என்பது ஆபத்துதான். அதனால் பின்னால் பாதகமான விளைவுகள், after-effects ஏற்படுவதும் அதிகம். எனவே கற்றுக்குட்டிகள் கையில் கத்தியைக் கொடுப்பதாகவும், எடுத்ததற்கெல்லாம் இந்தக் காலத்தில் இங்கிலீஷ் வைத்தியத்தில் நடப்பதுபோல் அறுப்பது கிழிப்பதாகவும் ஆகிவிடக் கூடாதென்று மிகவும் ஜாக்ரதை பண்ணிச் சிலபேருக்கு மட்டும் கற்றுக் கொடுத்ததிலேயே நாளாவட்டத்தில் இதை வெகுவாக இழக்கும்படியாகியிருக்கலாம். இன்னொரு காரணம்: அப்போது வைத்யர்கள் நல்ல அநுஷ்டாதாக்களாக இருந்து நல்ல தபோபலம் பெற்றவர்களாயிருந்ததால் அவர்களுக்கு ஹிமாசலம், பொதிகை மாதிரி எந்த மலையில் எந்தப் பொந்தில் என்ன மூலிகை இருந்தாலும் தெரிந்திருக்கிறது. எத்தனை கொடிய வியாதியானாலும், ஆழமான வ்ரணமானாலும் அதை குணம் செய்யவும் மூலிகையே போதுமானது என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஸைன்யமெல்லாம் பிரக்ஞை போய்க் கிடந்தபோது ஆஞ்ஜநேய ஸ்வாமி ஸஞ்ஜீவி பர்வதத்தைக் கொண்டு வந்தார்;அந்த மூலிகையின் காற்றுப் பட்ட மாத்திரத்திலேயே ஸேனை புது பலத்தோடு எழுந்துவிட்டதென்று படிக்கிறோமல்லவா? இப்படி மூலிகை வைத்தியத்தால் ஸெளக்யமாகவே எதையும் ஸ்வஸ்தம் செய்துவிடத் தெரிந்திருந்ததால்தான், ஆயுதத்தைப் போட்டு வெட்டிக் குடைந்து சஸ்த்ர சிகித்ஸை செய்வதை அவ்வளவாக மேற்கொள்ளாமல் இருந்து, இதனால் நாளா வட்டத்தில் அதை மறந்து விடும்படியாகியிருக்கலாமென்றும் தோன்றுகிறது.

மருந்து சாப்பிடுவது, ஆபரேஷன் என்ற இரண்டு மாத்திரமின்றி இன்னம் அநேக சிகித்ஸை முறைகளும் ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. ‘லேபம்’ என்று ஒன்று. ஆயின்மென்ட் பூசுவது. ப்ளாஸ்டர் போடுவது எல்லாம் ‘லேபம்’தான். மலையாள வைத்யத்தில் இவை பின்பற்றப்படுகின்றன. ‘வமனம்’ என்பது வாந்தி பண்ண வைத்து குணம் செய்வது. ‘விரேசனம்’ என்பது இதே மாதிரி பேதியாக வைப்பது. ‘ஸ்வேதனம்’ என்பது வியர்த்துக் கொட்டப்பண்ணி அதன்மூலம் துர்நீர் வெளியே போகச் செய்வது. ‘ஸ்நேஹனம்’ என்பது எண்ணெய் தேய்த்து மயிர்க்கால் வழியே உள்ளுக்குள் மருந்தை இறக்குவது. இதுவும் மலையாள வைத்யத்தில் நிறையக் காணப்படுகிறது. உள்ளே இருக்கும் கெடுதலை வெளியிலே கொண்டு வருவதற்காக ஆயுர்வேதத்தில் உள்ள பஞ்சகர்மம் என்ற ஐந்து சிகித்ஸை முறைகளில் வமனம், விரேசனம் தவிர ‘நஸ்யம்’ என்பது மூக்காலே தும்ம வைத்து தோஷத்தை வெளிவரச் செய்வது; ‘அநுவாஸனம்’, ‘நிரூஹம்’ என்ற இரண்டும் இருவிதமான எனிமா.

கண்ணுக்குத் தெரிகிற ரோகம் மாத்திரமின்றி குடல், மூளை இவற்றின் உள்ளுக்குள்ளேயிருப்பது, தோல் – எலும்பு -ரத்தம் (blood pressure) , டயாபெடீஸ், மனோவியாதி என்று கணக்கில்லாமலுள்ள அத்தனையையும் ‘டயாக்னோஸ்’ பண்ணி மருந்து தருவதற்கும் ஆயுர்வேதத்தில் வழி சொல்லியிருக்கிறது. இப்போது ‘ஆயுர் வேதம்’ என்றால் முக்யமாக ‘ஓஷதி’ என்கிற மூலிகை அடுத்தபடியாக ‘ரஸ வர்க்கம்’ என்கிற தாதுக்கள் (மினெரல் என்பவை) ஆகியவற்றால் செய்யும் மருந்துதான் என்றே நினைக்கிறோம். மரம், செடி, கொடி எல்லாமே ஓஷதி வர்க்கத்தில் வந்துவிடும். கந்தகம், பாஷாணம், லோஹங்கள் முதலியவை ரஸவர்க்கம்.

‘காயகல்பம்’ என்றால் சரீரத்தை அழியாமல் பண்ணிக் கொள்வது என்று கேள்விப்படுகிறோம். இப்படி சிரஞ்ஜீவியானவர்கள் எவருமில்லை என்பது பிரத்யக்ஷம். ஆனாலும் இப்படி காயஸித்தி பண்ணிக்கொண்டு பிற்பாடு இந்திரிய விரயம் ஏற்படாமல் சுத்தர்களாக, சாந்தர்களாக இருந்தவர்கள் மற்றவர்களைவிட வெகு நீண்ட காலம் நோய் நொடி இல்லாமலிருந்தார்களென்று தெரிகிறது. யோகம், தபஸ், ஞானாப்யாஸம் முதலியவை செய்வதற்கே உடம்பை த்ருடமாகவும், தீர்க்க காலமுள்ளதாகவும் வைத்துக் கொள்ள வேண்டுமென்று காரியஸித்தி பண்ணிக் கொண்டாலே ஜாஸ்தி பலன் தருவதாகவும், போக போக்யங்களை அநுபவிப்பதற்காகப் பண்ணிக் கொண்டால் அவ்வளவு பலிக்கவில்லை என்றும் தோன்றுகிறது. காயகல்ப முறையில் ரஸாயன சாஸ்திரம் நிறைய வந்துவிடும். பசு மந்தையில் இருந்துகொண்டு செய்கிற ரஸாயன ஸேவை, நெல்லி மரத்தடியில் செய்யும் ரஸாயன ஸேவை என்றெல்லாம் உண்டு. தர்ம சாஸ்திரத்தின் பாப, புண்ணியமே வைத்ய சாஸ்த்ரத்தில் ஹிதம், அஹிதம் என்று வருகிறதென்று நான் சொன்னதற்கு இதுவும் சான்றாகிறது. கோதூளி பட்டாலே பாபநிவ்ருத்தி, நெல்லி மரத்தின் கீழ் தியானம் பண்ணினால் அதற்கு effect அதிகம் என்று தர்ம சாஸ்த்ரங்களில் இருப்பதை இந்த ரஸாயன ஸேவைகள் வைத்ய ரீதியில் பயனுள்ளவையாகக் கொண்டு வந்துவிடுகின்றன.

மொத்தத்தில் காயஸித்தி முறைகள் தேஹத்தில் புது மாம்ஸம், ரத்தம் இவற்றை உண்டாக்கி, ஆயுஸை விருத்தி பண்ணுபவையாகும்.


*1 M.B. என்பது Bachelor of Medicine என்று பொருள்படும் என்பதன் Medicinae Baccalaureus முதல் எழுத்துக்களாகும்.

*2 கேலன் என்ற மன்னனின் மனைவியான விச்பலா.

ஆயுர்வேதமும் மத ஆசரணையும்

ஆயுர்வேதம் என்று மெடிகல் ஸயன்ஸாகத் தனியே ஒன்றைப் பார்க்கும்போது அதற்கு இவ்வளவு தெய்வ ஸம்பந்தம் கிடையாது. ஆனாலும் அல்லோபதி (இங்கிலீஷ் வைத்தியமுறை) , யுனானி மாதிரி அடியோடு தெய்வ ஸம்பந்தமே இல்லாமலும் இல்லை. நாஸ்திகனுக்கு வைத்யம் பண்ணவேண்டாம் என்று இந்த சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதே அதற்கு ஒரு proof.

ஈச்வர த்யானத்தோடுதான், குறிப்பாக, பகவான் மஹாவிஷ்ணு அம்ருத கலசத்தைப் பாற்கடலிலிருந்து கொண்டு வந்தபோது எடுத்த தன்வந்திரி என்ற அவதாரத்தை ஆராதித்துத்தான் ஆயுர்வேதம் அப்யஸிப்பது வழக்கம்.

அதோடுகூட நம் மத சாஸ்திரங்களுக்கு மிகப் பெரும்பாலும் விரோதமில்லாமலே இருக்கிற வைத்ய முறை ஆயுர்வேதந்தான். இங்கிலீஷ் மருந்துகள், சிகித்ஸை முறை முதலியவற்றில் சாஸ்திரம் ஒப்புக்கொள்ளாத அநாசாரங்கள் ஏகப்பட்டவையாக வந்து சேரும். ஆயுர்வேதத்தில் இப்படி இல்லை. பூண்டு, கீண்டு மாதிரி ஏதோ ஒன்றிரண்டு தவிர அநாசார வஸ்துகள் பெரும்பாலும் ஆயுர்வேதத்தில் கலப்பதில்லை. இவற்றுக்கும் பிற்பாடு பிராயசித்தம், புண்யாஹவாசனம் சொல்லிப் பரிஹாரம் வைத்திருக்கிறது. ஆஸ்திகர்கள் இங்கிலீஷ் வைத்யத்துக்கு கூடியமட்டும் போகாமலிருப்பதுதான் சிலாக்யம். ஆயுர்வேதம் உடம்பில் பிடிக்க நாள் பிடிக்கிறது, இங்கிலீஷ் மருந்தானால் உடனே ரிஸல்ட் தெரிகிறது என்கிறார்கள். நாளானாலும் மூலம் வரைக்கும் போய் ரோகத்தைப் போக்குவது ஆயுர்வேதம்; இங்கிலீஷ் வைத்யம் இப்படி இல்லை என்றும் விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். அநேகமாக தற்கால சாந்தியாகவே அல்லோபதி ஸரிப்படுத்துகிறது என்கிறார்கள். அதோடு இங்கிலீஷ் மருந்திலே ஒன்றை ஸரி செய்து கொள்ளப் போவதில், அது ஸரியானாலும், after-effect , side-effect என்றெல்லாம் வேறு பல உபத்ரவங்கள் உண்டாவது போல ஆயுர்வேதத்தில் உண்டாவதில்லை. வைத்தியம் ஆரம்பிக்கும்போது சில உபாதைகளைக் கிளறி விட்டாலும் அது நீண்டகாலக் கோளாறாகிவிடாமல் சீக்கிரத்திலேயே தணிந்து போய்விடும்.

வேத சாஸ்திரங்களுக்கு ஒத்துப் போவதாகவே நம்முடைய வைத்ய சாஸ்திரம் இருக்க வேண்டுமென்பது முக்யம். உடம்பைக் காப்பாற்றிக் கொள்வது முக்யம் என்பதற்காக வேத சாஸ்திர விருத்தமாக (விரோதமாக)ப் போகக்கூடாது. ஏனென்றால் இப்படி விருத்தமாகப் போனால் அதுதான் நாஸ்திக்யம்*1. நாஸ்திகனுக்குத்தான் வைத்யமே பண்ணக்கூடாதே!

ஸமய சாஸ்திரமும் ஆயுர்வேத சாஸ்திரமும் மிகப் பெரும்பாலும் ஒத்துப் போகின்றவையாகும். ஸமய சாஸ்திரம் முக்யமாக மநுஷ்யனின் மூன்று குணங்களான ஸத்வ, ரஜோ, தமோ குணங்களில் எதுவும் ஏறிப் போகாமல் ஒன்றையொன்று ஈடுகட்டிக் கொண்டு ‘ந்யூட்ரலைஸ்’ பண்ணி மனஸை ஆடாமல் ஸமநிலைப்படுத்துவதற்காகத் தான் ஏற்பட்டது. ‘ஸாங்க்யம்’ என்னும் தர்சனத்தில் (தர்சனம் என்றால், சுருக்கமாக, ஆத்ம சாஸ்த்ரம் என்று வைத்துக்கொள்ளுங்கள்) இதைப்பற்றி விரிவாகச் சொல்லியிருப்பது அடிப்படையில் வைதிக தர்மத்துக்கும் ஏற்புடையதுதான். க்ருஷ்ண பரமாத்மா கீதையில் இந்த முக்குணங்களைப் பற்றிப் பல அத்யாயங்களில் சொல்லியிருக்கிறார். ஸாங்க்யமும் யோகமும் கைகோத்துக் கொண்டு போகிற தர்சனங்களாதலால் யோக சாஸ்திரத்திலும் த்ரி குணங்களுக்கு ‘இம்பார்டன்ஸ்’ கொடுத்திருக்கிறது. இப்படி ஆத்ம வித்தைக்கு வேதோக்தமாக இருக்கிற ஸத்வ-ரஜோ-தமோ குண ‘பாலன்ஸிங்’கேதான் (ஸமநிலைப்படுத்துவதேதான்) நம்முடைய வைத்ய சாஸ்த்ரத்தில் கப-வாத-பித்த தாதுக்களின் ‘பாலன்ஸிங்’காக ஆகிறது!

ப்ரக்ருதி, மாயை, அவித்யை என்றெல்லாம் சொல்கிற ஜீவ-ஜகத் கோளாறுகளுக்கெல்லாம் முக்குணம் தான் காரணமாதலால் இதுகளை பாலன்ஸ் பண்ணி மனஸை ஸம நிலைக்குக் கொண்டு வந்துவிட்டால் எல்லாம் சாந்தமாக அடங்கிப் போகும் என்று வேதாந்தம் சொல்கிறதென்றால், அதையே ஆயுர்வேதம், ‘சரீரக் கோளாறுக்கெல்லாம் கப-வாத-பித்தம் என்று மூன்று தாதுக்கள்தான் காரணம். இவற்றை ஒன்றுக்கொன்று ஈடுகட்டிவிட்டால் சரீரம் ஸெளக்யமாயிருக்கும்’ என்கிறது. சித்தத்தை வைத்து வேதாந்தம் பேசுவதையே சரீரத்துக்குப் பொருத்தி ஆயுர்வேதம் பேசுகிறது. பிரகிருதியிலுள்ள இத்தனை ஆயிரம் க்ருத்ரிமத்துக்கும் மூலம் மூணே குணங்களில் அடங்கிவிடுகிறது என்கிறாற்போலவே சரீரத்துக்கு வருகிற இத்தனை ஆயிரம் நோய் நொடிகளுக்கும் மூலம் மூன்று தாதுக்கள்தான் என்று ஆயுர்வேதம் நிர்ணயம் பண்ணிவிடுகிறது.

கபம் என்பது உங்களுக்குத் தெரியும். சளி, க்ஷயம், ப்ளூரிஸி, நிமோனியா எல்லாம் அதனால் வருவதுதான். முக்யமாக ச்வாஸ கோசத்தைப் பற்றியது இது. ஆனால் ரக்த ரூபத்தில் சரீரம் முழுதும் வியாபிப்பது. வாதம் என்றாலும் வாயு என்றாலும் ஒன்றேதான். காற்று என்று அர்த்தம். பிடிப்பு, எலும்புகளில் வலி, முடக்கு, உடம்பு கனத்துப் போகிறது ஆகியவை எல்லாம் இதிலிருந்து உண்டாகிறவை. ரூமேடிஸம், ஆர்த்ரைடிஸ், அது, இது என்று ஏதேதோ பேர் சொல்கிற வியாதிகளுக்கு வாதம்தான் காரணம். காற்று என்றவுடன் மூச்சு, அதனால் ச்வாஸ கோச ஸம்பந்தம் என்று தோன்றிவிடலாமாயினும், சரீரம் பூராவுமே நாடி சலனத்தில் வாயுவின் வியாப்தி (பரவுதல்) தான் ஏற்படுவதால் இதுவும் தேஹம் முழுவதையும் குறித்த தாதுதான். பித்தம் என்பது பித்த நீரை முக்கியமாகவும், ஜீர்ணத்தில் சுரக்கிற எல்லா நீர்களையுமே பித்த நீர் பாதிப்பதால் அவை அனைத்தையும் பற்றியதாகவும் கருதப்படுகிறது. அதனால் இது ஜீர்ண உறுப்புகளோடு நின்றுவிடுவது என்று அர்த்தமில்லை. ஜீர்ணித்த அன்ன ஸாரம் ரத்தமாகத்தானே ஆகி சரீரம் பூராவும் ஓடுகிறது? அதனால் பித்தத்தினால் ஏற்படுகிற கோளாறுகளும் தேஹம் முழுவதையும் பாதிப்பதுதான். நாடி பார்த்தே மூன்றில் எந்த தாதுவின் கோளாறு என்று கண்டுபிடித்து ஸரி செய்ய ஆயுர்வேதம் வழி சொல்கிறது.

நமக்குக் குறிப்பாக சரீரத்தின் ஒவ்வொரு பாகத்தில் மட்டுமே இந்த ஒவ்வொரு தாதுவும் ஸம்பந்தப்படுவதாக தோன்றினாலும், இவை வாஸ்தவத்தில் தேஹம் முழுதிலும் வியாபித்திருப்பதால் தான் ஹ்ருதயம், மூளை, கண், காது, மூக்கு, வாய் உள்பட எந்தக் கோளாறானாலும் முதலில் தாது பார்த்தே ஆயுர்வேதத்தில் ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கிறார்கள்.

நம்முடை வைத்ய சாஸ்திரம், வேதாந்த சாஸ்திரம் எல்லாம் வெளி நாடுகளுக்குப் பரவியபோது இதையே க்ரீஸ் முதலான தேசங்களில் நாலு தாதுக்களாக நாலு humour -கள் என்று ஆக்கினார்கள். முக்குணம், மூன்று தாது என்பதோடு பஞ்ச பூதக் கொள்கையையும் சேர்த்து அவர்கள் நாலு ஹ்யூமர் என்று வைத்துக் கொண்டார்கள். ஸுக்ஷ்ம அநுபவமுள்ளவர்களுக்கே புரியக்கூடிய ஆகாச பூதத்தை அவர்கள் விட்டு விட்டு மற்ற நாலு பூதங்களை மட்டும் எடுத்துக் கொண்டார்கள். நாலு ஹ்யூமர்களாக சரீரத்திலுள்ள தாதுக்களே ஒருவனின் குணத்தை நிர்ணயம் பண்ணுவதாகவும் அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். phlegm – கபம், choler – பித்தம், melancholy -இதுவும் இன்னொரு தினுஸான பித்தம்தான், blood – அதாவது ரத்தம் என்பவை நாலு ஹ்யூமர்கள். ரத்த சுத்திகரிப்பு ச்வாஸத்தாலேயே நடப்பதால் ரத்தத்தை ‘வாதம்’என்று வைத்துக் கொள்ளலாம். இவற்றைக் குணங்களோடு பொருத்தி ஒருத்தனுக்கு ‘ஃப்ளெம்’ (கபம்) ஜாஸ்தியிருக்கிறபோது அவன் எல்லாவற்றிலும் அசட்டையாக, மந்தமாக அடங்கியிருப்பானென்றும் (இதை ‘ஸத்வம்’ மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம்) , ‘காலர்’அதிகமானால் ரொம்பக் கோபிஷ்டனாயிருப்பானென்றும் (இதுதான் ரஜோகுணம்) ‘மெலங்கலி’ அதிகமானால் அழுமூஞ்சியாக, சிந்தா க்ராந்தனாக இருப்பானென்றும் (இதைத் தமஸில் ஒருவிதம் எனலாம்), ப்ளட் ஜாஸ்தியானாலும் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டவனாயிருப்பானென்றும் (இதுவும் ரஜஸ்தான்) அவர்கள் வைத்துக் கொண்டார்கள்*2.

முக்குணம், மூன்று தாது என்பதில் நம்முடைய புராதனமான வைத்ய சாஸ்திரம் வைதிக சாஸ்திரத்தோடு ஒத்துப் போகிறதென்று சொல்லிக் கொண்டிருந்தேன். இப்படியேதான் தர்ம சாஸ்த்ரோக்தமான பஞ்ச கவ்யமே வைத்ய சாஸ்த்ரோக்தமாகவும் விதிக்கப்பட்டிருக்கிறது. பாப பரிஹாரத்துக்காக தர்ம சாஸ்த்ரம் பசுவின் பால், தயிர், நெய், சாணம், மூத்ரம் ஆகிய ஐந்தையும் சேர்த்த பஞ்ச கவ்யத்தை உட்கொள்ளச் சொல்கிறது. அதையே வியாதிக்குப் பின் பலஹீன ஸ்திதியில் புதிதாக நோய்க் கிருமிகள் தாக்காதபடித் தடுப்பதற்காக வைத்ய சாஸ்திரத்திலும் சாப்பிடச் சொல்லியிருக்கிறது.

நம்முடைய வைதிக சாஸ்திரங்களில் பாபம் – புண்ணியம் என்று சொல்லியிருக்கிற இப்படிப்பட்ட பலவற்றையே ஆயுர்வேதத்தில் ஹிதம்-அஹிதம், அதாவது சரீரத்துக்கு நல்லது செய்வது-கெட்டது செய்வது என்பதாகச் சொல்லியிருக்கும். ஆசாரம் புண்யத்திலும் அநாசாரம் பாபத்திலும் சேர்ப்பதல்லவா? அதனால் நம்முடைய வைத்ய சாஸ்திரத்தில் பெரும்பாலும் அநாசாரம் அஹிதமானதாகத் தள்ளப்பட்டுத்தானிருக்கும். இதனால்தான், தவிர்க்க முடியாமல் அல்லோபதிக்குத்தான் போகவேண்டுமென்று இருந்தாலொழிய மற்ற உடம்புகளுக்கு ஆயுர்வேதப் பிரகாரமே நம்முடைய தர்மாசாரங்களில் நம்பிக்கையுள்ளவர்கள் சிகித்ஸை செய்துகொள்ள வேண்டுமென்கிறேன். காட் லிவர், லிவர் எக்ஸ்ட்ராக்ட் என்று எடுத்ததெற்கெல்லாம் அநாசாரத்துக்குப் போக வேண்டாமென்கிறேன்.


*1 நாஸ்திகம் என்பது இறைவனை நம்பாமை என்பதைவிட வேத தர்ம முறைகளை நம்பாமை என்பதே எனும் விஷயம் குறித்து “தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதியில் “வேதம்” என்ற உரையில் “வேதமும் தமிழ்நாடும்” என்னும் உட்பிரிவில் பார்க்க.

*2 இந்தப் பாரா பெரும்பாலும் அடியார் ஒருவர் மொழிந்ததை ஸ்ரீசரணர்கள் பிறருக்கு எடுத்துரைத்ததாகும்.

மணி, மந்திரம், ஒளஷதம்

சரீர ரக்ஷைக்கு மூன்று வழி சொல்வார்கள் — மணி, மந்திரம், ஒளஷதம் என்று. நவரத்தினங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித வியாதிகளைப் போக்கும் குணமுண்டு. நவரத்தினங்களில் ஒவ்வொன்றும் நவக்ரஹங்களில் ஒவ்வொன்றுக்குப் பிரீதியானவையாகும். வியாதி என்பது கர்மாவால் ஏற்படுவதே என்றாலும் அந்தக் கர்மா ஒவ்வொரு கிரஹக் கோளாறாக ரூபம் எடுத்து உண்டாகிறது. ஆகையால் அதற்கு சாந்தியாக நவரத்தினங்களில் அந்த கிரஹத்துக்குரியதை மோதிரமாக, மாலையாகப் பண்ணிப் போட்டுக் கொள்வது, அந்த மணியால் மூர்த்தி பண்ணி அதற்கு அபிஷேகித்த தீர்த்தத்தைப் பானம் பண்ணுவது என்றெல்லாம் ஒரு வழி. இதுதான் ‘மணி, மந்திர, ஒளஷதம்’ என்பதில் ‘ மணி’. நவரத்தினத்தை நவமணி என்றும் சொல்கிறோமல்லவா? மணிகளைப் போலவே ஸ்வர்ணம் ரஜதம் (வெள்ளி) , தாம்ரம், பாதரஸம் முதலான லோஹங்களைக் கொண்டும் சிகித்ஸை செய்து கொள்வதுண்டு.

மந்த்ர ஜபம், ஜ்வரஹரேச்வரர் கம்பஹரேச்வரர் என்றெல்லாம் வியாதிகளைப் போக்கவே உள்ள மூர்த்திகளுக்குரிய மந்த்ரங்களை ஜபிப்பது, ஸூர்ய நமஸ்காரம் கந்தரநுபூதி பாராயணம் முதலியவற்றால் நோயை குணப்படுத்திக் கொள்வது — ஆகியனதான் (மணி, மந்திரம் என்பதில்) இரண்டாவதான ‘மந்த்ரம்’.

‘ஒளஷதம்’ என்பது மருந்து மூலம் குணம் செய்து கொள்ளும் மருத்துவ சாஸ்திரம். வைத்தியம் என்பது இதைத்தான். ஓஷதி என்றால் மூலிகை. அதன் அடியாகப் பிறந்த சொல்தான் ஒளஷதம். முக்யமாக மூலிகைகளை அதாவது பச்சிலைகளைக் கொண்டே மருந்துகளைச் செய்வதுதான் ஆயுர்வேதம். பவள பஸ்மம், முத்து பஸ்மம், தங்க பஸ்மம் (‘பஸ்பம்’ என்றே பொதுவில் சொல்கிறார்கள்) என்பது போல மணி, லோஹங்களை எப்போதாவது பிரயோஜனப்படுத்தினாலும் ஆயுர்வேதத்தில் முக்யமான மூலச்சரக்கு மூலிகைகள்தான்.

ஸித்த வைத்தியத்தில்தான் மணி, லோஹம், பாஷாணம், மற்ற தாதுப் பொருட்களைக் கொண்ட மருந்துகள் ஜாஸ்தி. ஸித்த வைத்யமும் நம் சாஸ்திர ரீதியானதுதான். ஆனால் வீர்யம் ஜாஸ்தி. தப்பினால் ரொம்பக் கெடுதல் உண்டாய்விடும். துளிப்போல சூர்ணம்தான் டோஸேஜ் ஆனாலும் potency (உள் சக்தி) மிகவும் அதிகம். அதனால் ஜாக்ரதையாக சிகித்ஸை செய்ய வேண்டும். அகஸ்தியர், தேரையர் முதலான ஸித்த புருஷர்கள் நமக்குப் புரியாத பரிபாஷையில் ஸித்த வைத்ய சாஸ்திரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். ‘பவர்’ ஜாஸ்தி என்பதாலேயே இப்படி எல்லாருக்கும் புரியாதபடி ஜாக்ரதை பண்ணி எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஸித்த வைத்தியம், ஆயுர்வேதம் இரண்டிலுமே மணி ஸம்பந்தமும் இருக்கிற மாதிரி, மந்திர ஸம்பந்தத்தையும் சேர்த்து மருந்தை மேலும் effective-ஆகப் பண்ணுவதுண்டு. நல்ல ஸம்பிரதாயத்திலே வந்த வைத்யர்கள் அநேக மந்த்ரங்களை ஜபித்தபடியே ஒளஷதங்களைப் பண்ணி ஜபித்துத் தருவார்கள். த்ரயம்பக மந்த்ரம், அச்யுத-அநந்த-கோவிந்த என்ற நாமத்ரயம் (மூன்று திருநாமங்கள்) தன்வந்தரி, அச்வினி தேவர்கள், ஸூர்யன் முதலான மூர்த்திகளுக்கான மந்திரம், கவசம் முதலியவற்றை மருந்தோடு சேர்த்துக் கொள்வதுண்டு. அகஸ்தியர் ஸ்ரீராமசந்திர மூர்த்திக்கு உபதேசித்த “ஆதித்ய ஹ்ருதயம்” பிரஸித்தமாயிருக்கிறது. விஷக் கடிகளுக்கு என்ன மூலிகை, சிந்தூரம் (சித்த வைத்ய சூர்ணத்தை சிந்தூரம், செந்தூரம் என்று சொல்வார்கள்) கொடுத்தாலும் மந்திர ஜபம்தான் முக்யமாயிருக்கிறது. ஸர்ப்பங்கள் பயந்து நடுங்குகிற கருட பகவானைக் குறித்த மந்திரத்துக்கு விஷம் இறங்குவதில் ஆச்சர்யமான சக்தி இருக்கிறது. நம்முடைய ஆசார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி’ யில் ஒரு ச்லோகத்தில்*1 அம்பாளை ஸகல அவயங்களிலிருந்தும் அம்ருத ரஸ கிரணங்கள் பெருகுகிற சந்திர காந்த சிலா வர்ண மூர்த்தியாக த்யானம் செய்வதால் ஒருத்தன் கருடனைப் போலப் பாம்பு விஷத்தை சமனம் செய்கிற சக்தி பெற்று விடுகிறானென்றும், இப்படிப்பட்டவனுக்கு அம்ருத நாடி என்று உண்டாகி அதன்பின் இவனுடைய த்ருஷ்டிபட்டாலே பிறரின் ஜ்வரதாபம் இறங்கிவிடுமென்றும் சொல்லியிருக்கிறார். இந்த ச்லோக ஜபத்தாலேயே விஷம், ஜ்வரம் முதலியவைகளை நிவ்ருத்தி செய்துவிட முடிகிறது. ‘ஸெளந்தர்ய லஹரி’யின் வேறு பல ச்லோகங்களை ஜபிப்பதற்கும் இவ்வாறு பலவிதமான வியாதி நிவிருத்தி சக்தி இருக்கிறது. நாராயண பட்டத்திரி ‘நாராயணீயம்’ பண்ணியே அவருடைய வயிற்று உபாதை நீங்கியதால் அதையும் நோய் தீருவதற்காகப் பாராயணம் பண்ணுகிறார்கள். “இருமலுரோக முயலகன் வாத” என்று ஒரு திருப்புகழ உண்டு. அதுவும் ஸர்வ வியாதி நிவ்ருத்திக்காக ஜபிக்கப்படுகிறது. ஸம்பந்த மூர்த்தி ஸ்வாமிகள் கூன்பாண்டியனை ஸ்வஸ்தப்படுத்துவதற்காகச் சொன்ன திருநீற்றுப்பதிகத்தையும் பல ஆவிருத்தி ஜபித்து விபூதி இடுவதுதுண்டு. வியாதியஸ்தரே விபூதியில், அல்லது ஜலம், தேன், பால் போன்ற ஒன்றில் ஜபித்து அதை இட்டுக் கொள்வதோ பானம் பண்ணுவதோ உண்டு. அல்லது அவருக்கு ரொம்ப அசக்தமானால் அவருக்காக இன்னொருத்தர் பண்ணி, விபூதியானால் இட்டு விட்டு வாயில் போடலாம்; தேன், பால் போன்றவற்றை நோயாளி குடிக்கப் பண்ணலாம். ‘மந்த்ர ராஜா’ என்கிற காயத்ரியையும் இப்படி வியாதிகள் ஸ்வஸ்தமாவதற்கு ஜபிப்பதுண்டு.

விபூதிக்கு இதிலே தனியான சக்தி. நாட்டு ஜனங்களுகளுங்கூட என்ன உடம்பானாலும் “துண்ணூறு” என்று திருநீறு வாங்கி இட்டுக் கொள்வதையும் வாயில் போட்டுக் கொள்வதையும் பார்க்கிறோம். விஷயம் தெரிந்தவர்கள் பஞ்சாக்ஷர, ஷடக்ஷரங்களைச் சொல்லி தாரணம் பண்ணிக் கொள்வார்கள். திருச்செந்தூர் விபூதி ஸர்வரோக ஹரணமென்று ஆசார்யாளே ஸ்தோத்திரித்திருக்கிறார்*2. “பன்னீர் இலையில் வைத்துத் தரும் அந்த விபூதியை முழுங்கணும், இட்டுக்கணும் என்பதெல்லாங் கூட வேண்டாம். வெறுமே க்ஷணம் பார்த்தாலே போதும் – “விலோக்ய க்ஷணாத்” – fits, குஷ்டம், துர்வியாதிகள், ஜ்வரம், பைத்தியம், குன்மம், ஆவிசேஷ்டை எல்லாமே ஓடிப்போய்விடும் என்கிறார். பழநியாண்டவரின் மூர்த்தம் மூலிகைச் சாறுகளை இறுக்கிப் பண்ணியதே என்பார்கள். அதனால் அவருக்கு அபிஷேகமாகிற தீர்த்தம் முதலானவற்றையும் வியாதி நிவ்ருத்திக்குக் கொடுப்பதுண்டு. குருவாயூர் தைலம், திருச்சூர் நெய், இன்னம் அநேக க்ஷேத்ரங்களில் இப்படியே மருத்துவ சக்தி உள்ளதாகப் பிரஸாதம் கொடுக்கிறார்கள். பிரஸாதமென்று ஸ்தூலமாகத் தராமல், ‘நடந்தே மலை ஏறுகிறேன்’, ‘அங்கப் பிரதக்ஷிணம் பண்ணுகிறேன்’, ‘மாங்கல்யம் சாத்துகிறேன்’ என்றெல்லாம் வேண்டிக் கொண்டாலே வேங்கடரமண ஸ்வாமி தீராத வியாதியெல்லாம் தீர்த்து வைக்கிறார். பரமேச்வரனும் பவரோகம் என்னும் ஸம்ஸார வியாதியை மட்டுமின்றி, அந்த ஸம்மஸாரத்திலே வருகிற அநேக ரோகங்களைத் தீர்ப்பதற்காக ‘வைத்யநாத ஸ்வாமி’ என்றே பெயர் வைத்துக்கொண்டு வைத்தீச்வரன் கோயிலில் விளங்குகிறார். உப்பு, வெல்லம் கரைகிற மாதிரி வியாதி கரைவதால் அங்கே இவற்றைக் கரைப்பதாக வேண்டிக் கொள்வார்கள்.

பரமேச்வரனுக்குரிய பில்வ பத்ரம், பெருமாளுக்குரிய துளசி, அம்பாளுக்கு (முக்யமாக மாரியம்மனுக்கு) விசேஷமான வேம்பு — இந்த மூன்று இலைகளை ஒரே அளவு சேர்த்து தினந்தோறும் ஒரு பிடி தின்றுவிட்டால் போதும்; எந்த வியாதியும் வராது என்று ஒரு நாட்டு வைத்தியர் எழுதியிருக்கிறார்.

வேப்பங்காற்றே ரத்த சுத்தி உண்டாக்குவதென்றும் அதோடு கர்ப்பக் கோளாறுகளைப் போக்குவதென்றும், அரசமரக் காற்றுக்கும் கர்ப்பப் பை நோய்களை நிவ்ருத்தி செய்கிற சக்தி இருக்கிறதென்றும், அரசுக்கும் வேம்புக்கும் கல்யாணம் பண்ணி வைத்து, புத்ர ஸந்தானமில்லாதவர்கள் அதைப் பிரதக்ஷிணம் பண்ண வேண்டுமென்று வைத்திருப்பதில் இப்படி வைத்ய சாஸ்திரப் பிரகாரமே ஸந்ததி உண்டாவதற்குக் காரணம் தெரிகிறதென்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

பூஜையில் தூபம் போடுவது, கர்ப்பூரம் கொளுத்துவது ஆகியனகூட disinfectant-ஆக (க்ருமி நாசினியாக) அநேக வியாதிகளைத் தடுக்கிறது என்று எழுதியிருக்கிறார்கள்.

அசையாத நம்பிக்கையாக பக்தி இருந்தால் அதனாலேயே ரோக நிவ்ருத்தி முதலான எதையும் ஸாதித்துக் கொண்டுவிடலாம்; அல்லது ரோகம், ஆரோக்யம் எதுவானாலும் வித்யாஸமில்லை என்கிற உசந்த நிலையை ஸம்பாதித்துக் கொள்ளலாம். இதிலே வைத்ய சாஸ்திரத்துக்குப் பிடிபடாத மந்திரம், பிடிபடுகிற மூலிகைகள், வேம்பு துளஸி மாதிரியான மருந்துச் சரக்குகள் எல்லாமே கலந்து வரலாம்.


*1“கிரந்தீம் அங்கேப்ய” எனத் தொடங்கும் இருபதாவது ச்லோகம்

*2ஸுப்ரஹ்மண்ய புஜங்கத்தில் ‘அபஸ்மார’ என்று தொடங்கும் 25-வது ச்லோகம்.

வைத்தியத்திலும் ஆன்மிக லக்ஷ்யம்

இது மட்டுமில்லை. இதுதான் முக்யமாக மேல் பார்வைக்குத் தெரிந்தாலும் உள்ளுக்குள்ளே இதிலும் பாரமார்த்திகமான லக்ஷ்யத்தில் சேர்க்கிற ஒரு நோக்கம் இருக்கிறது.

எவ்வளவோ பாபம் பண்ணித்தான் இந்த ஜன்மாவை அடைந்து அலையாக அலைந்துகொண்டு, சாச்வத ஸெளக்யத்தை தெரிந்து கொள்ளாமல் உழன்று கொண்டிருக்கிறோம். இப்போதாவது புண்யங்களைப் பண்ணிப் பண்ணிப் பாபத்தைக் கரைக்க ஆரம்பிக்க வேண்டாமா? புண்ய கார்யங்களை, அநேக தர்மங்களைப் பண்ணியாக வேண்டும். அவற்றை இந்த உடம்பு இருக்கும்பொழுதுதான் செய்ய முடியும். சரீரம் இருந்தால் தான் பலவித பரோபகாரப் பணிகளைச் செய்யமுடியும். இருந்தால் மட்டும் போதாது. பலமுள்ளதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் பிறருக்காக நிறைய ‘ச்ரம் தான்’ பண்ணிப் பாபத்தைக் கரைத்துக் கொள்ள முடியும். கர்மாவைக் கழிப்பதற்காக இடுப்பொடிய யாகம் பண்ணுவது, அல்லது நவாவரண பூஜை பண்ணுவது, நடந்தே திருப்பதி மலை ஏறுவது, நூற்றியெட்டு ஆயிரத்தெட்டு பிராணாயாமம் செய்வது, தியானம் செய்வது என்றால் இதற்கெல்லாம் வியாதியும் வக்கையும் இல்லாத சரீரமிருந்தால்தானே முடியும்? நாம் நோயும் நொடியுமாயிருந்தால் பிறத்தியாருக்கு வேறு எத்தனை கவலை? அவர்களை மெனக்கிட வைத்து எவ்வளவு சிரமம் கொடுக்கிறோம்?

நமக்கு தேஹ உபாதையிருக்கிறபோது ஈச்வர த்யானம் எப்படி ஒருமுகப்பட்டுப் பண்ணுவது? ஜ்வரம், பல் வலி என்று வந்தால் எப்படிப் பூஜை பண்ணுவது?

சரீரத்தில் சக்தி இல்லாவிட்டால், ‘சார்தாம்’என்று ஒவ்வொரு திக்கின கோடியிலும் ஒரு க்ஷேத்ரமாக ஏகப்பட்ட புண்ய ஸ்தலங்களையும் புண்ய நதிகளையும் கொண்ட இந்த தேசத்தில் எப்படி க்ஷேத்ராடன தீர்த்தாடனங்கள் செய்வது? உடம்பிலே வலி அசக்தமென்றால் ஜபம் செய்ய முடியுமா? யோகம் முடியுமா? நிஷ்டை எங்கே? ஞானம் எங்கே?

இப்படியாக, பரமாத்ம ஸ்மரணைக்காகவே சரீரத்துக்கு வியாதி – வராமல் preventive-ஆகவும், வியாதி வந்தால் ஸ்வஸ்தப்படுத்திக் கொள்வதற்காகவும் மருந்துகளையும், பத்யங்களையும், ஆஹார விஹார முறைகளையும், மற்ற ஸுகாதார விதிகளையும் சொல்லிக் கொடுப்பதற்கு ஒரு சாஸ்திரம் தேவைப்படத்தான் செய்கிறது. அதுதான் ஆயுர்வேதம். தர்ம சாஸ்திர விதிகளின்படி ஒருத்தன் சுத்தமான வாழ்க்கை நடத்தி விட்டாலே preventive; எந்த வியாதியும் வராது. ஆனாலும் வைத்ய சாஸ்த்ரமும் இதில் கொஞ்சம் செய்ய வேண்டியதாயிருக்கிறது.

வியாதியின் கஷ்டம் தீர்கிறது மட்டும் போதாது. வியாதியில்லாமல் தீர்க்க ஆயுஸுடனும் இருக்க வேண்டும். அதற்கு இந்த வைத்ய முறை வழி காட்டுகிறது என்பதால் தான் இதற்கு ‘ஆயுர்வேதம்’ என்று பெயர். ‘எப்படியும் முடியப்போகிற ஆயுஸை எதற்கு விருத்தி பண்ணிக் கொள்ள யத்தனம் பண்ண வேண்டும்?’ என்றால் இதற்கும் காரணம் சொன்னேன். உடம்பை வைத்துக்கொண்டுதான் புண்யம் பண்ணிப் பாபத்தைப் போக்கிக்கணும், தர்ம அநுஷ்டானம் பண்ணிக் கர்ம சேஷத்தைக் கழிச்சுக்கணும் என்று சொன்னேன். இப்போது நமக்கு வாய்த்திருக்கிற இந்த உடம்பு நசிக்கிறதற்கு முந்தியே அப்படி “இருவினையொப்பு, மல பரிபாகம்” என்று (சைவ ஸித்தாந்திகள்) சொல்கிறபடி கர்மாவை ஈடுகட்டி மும்மலங்களை1 அகற்றிக் கொள்ள வேண்டும். “ஏன் இந்த உடம்பு உள்ளபோதே, இன்னொரு ஜன்மா எடுத்து இன்னொரு உடம்பு வந்தால் அதை வைத்துக்கொண்டுதான் பண்ணுவோமே!” என்றால், அடுத்த ஜன்மாவில் வருகிற உடம்பு எப்படிப்பட்டதாயிருக்குமோ? “இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?” என்று மஹான்களே கதறியிருக்கிறார்களே? புண்ய கர்மாக்களைச் செய்ய எல்லா ஸெளகரியமும் பெற்றுள்ள மநுஷ்ய சரீரமாகத்தான் அடுத்த ஜன்மாவில் வாய்க்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்? மநுஷ்யப் பிறவியே லபித்தாலும் ஸத்கர்மா பண்ணுவதற்கு இப்போதிருக்கிற சக்தியும் புத்தியும் ஸெளகர்யமும் ஸந்தர்ப்பமும் surrounding -உம் அப்போது இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்? இப்போது கர்மபூமியான இந்த தேசத்தில் பிறந்து, இத்தனை சாஸ்திரம், க்ஷேத்திரம், ஸ்தோத்திரம், அநேக ஸாதனா மார்க்கங்கள், ஆசார்யன், மஹான்களின் உதாரணம் எல்லாம் கிடைத்திருக்கிற மாதிரியே மறுபடியும் கிடைக்குமென்று சொல்லமுடியுமோ? ஆனபடியால் இந்த ஜன்மத்திலேயே, இப்போது வாய்த்திருக்கிற இந்த தேஹத்தை வைத்துக் கொண்டே சித்த சுத்தியைப் பெற்று ஜீவன் முக்தியை அடையப் பிரயத்னம் பண்ணவேண்டும்.

சக்நோதீஹைவ ய: ஸோடும் ப்ராக்-சரீர-விமோக்ஷணாத் |
காம-க்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸுகீ நர: ||
(கீதை 5.23)

என்றே பகவானும் சொல்லியிருக்கிறார். “சக்நோதி இஹைவ” என்று ஆரம்பிக்கிறார். ‘இஹ ஏவ’ என்பதே ‘இஹைவ‘ என்றாயிருக்கிறது. ‘இஹ ஏவ’ என்றால் “இங்கே இருக்கிறபோதே” என்று அர்த்தம். அப்புறம் “ப்ராக்-சரீர-விமோக்ஷணாத்” என்கிறாரே, அதற்கு “இந்த உடம்பு போவதற்கு முன்னாடியே” என்று அர்த்தம். “இங்கேயே இந்த உடம்பு போகிறதற்கு முந்தியே எவன் காம-க்ரோதங்களால் உண்டாகும் சலனத்தைத் தாங்குவதற்கு, அதாவது அதுகளால் தான் பாதிக்கப்படாமல் அவற்றை அடக்கி ஆள்வதற்கு வலியவனாக ஆகிறானோ அவன்தான் யோக ஸித்தி பெற்றவன்; அவன்தான் நிஜ ஸுகத்தைக் கண்டவன்” என்ற கருத்தையே இந்த ச்லோகத்தில் சொல்லியிருக்கிறார்.

காமமும் க்ரோதமும் போகத்தான், அதாவது சித்தம் சுத்தியாகிறதற்குத்தான் இத்தனை புண்ய கர்மாக்கள், மதாநுஷ்டானங்கள். இந்த சரீரம் விழுகிறதற்கு முந்தியே, இதைக் கருவியாக வைத்துக் கொண்டே, இவற்றைப் பண்ணிப் பண்ணி, உயிரும் உடலும் பிரிவதற்கு முன் காமமில்லை, க்ரோதமில்லை என்று ஆக்கிக்கொண்டு விட்டால் அப்புறம் உயிர் பிரிகிறபோது பேருயிர் என்கிறார்களே, அதில் போய்க் கலந்துவிடலாம். மறுபடி உடம்பு எடுக்க வேண்டாம். அப்படிச் செய்யாமல் உயிரை விட்டால் மறுபடி அது மாட்டு உடம்பில் புகுந்து கொள்ளுமோ, ஆட்டு உடம்பில் புகுந்து கொள்ளுமோ நமக்குத் தெரியாது. ஆகையால் காம க்ரோதாதிகளைப் போக்கிக் கொண்டுவிட்டோம், மன மாசுகளை முழுவதும் துடைத்துதெடுத்துவிட்டோம் என்று தெரிகிறவரை இந்த சரீரத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கான பிரயத்தனத்தைப் பண்ணத்தான் வேண்டும். நாம் பிரயத்தனம் பண்ணியும் அவன் ஆயுஸை முடித்துவிட்டால் வேறு விஷயம். நம் கர்மா, அவன் லீலை அப்படி நடந்தால் நடந்துவிட்டுப் போகட்டும். அதில் நாம் பண்ணிக் கொள்கிறதற்கு எதுவுமில்லை.

‘சாவு அவன் கையில்தானிருக்கிறது என்றால் அப்புறம் நம் அளவில் நாம் ஆயுஸை நீடித்துக்கொள்ளப் பார்ப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது?’ என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். அப்படிப் பார்த்தால், சாவு மட்டுந்தானா? நம்முடைய ஸகல விஷயங்களுமே, கல்யாணம், கார்த்திகை, உத்யோகம், ஸாதனை பண்ணுவது, நல்லது செய்வது, கெட்டது செய்வது எல்லாமே அவன் கையில்தானிருக்கிறது.

அந்த ஸூத்ரதாரி ஆட்டுவிக்காமல் நாம் என்னதான் பண்ண முடியும்? ஆனாலும் ஏதோ ஒரு விநோதமாக இதில் நமக்கே கொஞ்சம் ஸ்வயேச்சை, ஸ்வாதந்திரியம் இருந்து நாமாகப் புருஷ யத்தனம் பண்ணி இந்த மற்ற எல்லா விஷயங்களையும் நடத்திக் கொள்கிற மாதிரிதானே இந்த நாடகம் நடக்கிறது?அதனால் இதில், அவன் கையிலேயே இருக்கிற மற்ற எல்லா விஷயங்களிலும் நம் இஷ்டம், நம் பிரயாஸை இவற்றைக் கொண்டு நாமே செய்து கொள்கிற மாதிரிதான், மரணம் அவன் கையிலேயே இருந்தாலும் இந்தப் பிறவி நீங்குமுன் ஜனன மரணத்தைத் தாண்டுவதற்கான யோக்யதையை நாமே ஸம்பாதித்துக் கொண்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆயுஸ் ரக்ஷணை செய்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். இதற்காகவே உடம்பை ஜாக்ரதையாகக் காப்பாற்ற வேண்டும்.

இதற்கு உதவும்படியாகத்தான் அநேக ரிஷிகள் ஆயுர்வேத சாஸ்திரங்களைச் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

ஆயுர்வேதத்தில் இந்த விஷயம் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. “நாஸ்திகனுக்கு வைத்யம் செய்யாதே” என்று அதில் சொல்லியிருக்கிறது. அது இந்த உள்ளர்த்தத்தில்தான். கேட்கிறபோது, ‘இதென்ன? கருணையில்லாமல் இப்படிச் சொல்லியிருக்கே!’ என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் இப்படிச் சொன்னதே கருணையில்தான். வியாதியில்தான் கஷ்டம் தெரிகிறது. கஷ்டம் என்று வரும்போதுதான் எப்படியாவது மீள வேண்டுமென்ற தவிப்பில், ‘கடவுள் இருப்பது நிஜமானால், வேத சாஸ்திரம் நிஜமானால் என்னை அவன் காப்பாற்றட்டும்; நான் அப்புறம் சாஸ்திரப்படி பண்ணுகிறேன்’ என்று ஒரு நாஸ்திகன் பகவான் பக்கம் திரும்பத் தான் செய்வான். பகவானும் அவனை சொஸ்தப்படுத்தினாலும் படுத்துவான். அப்பர், கூன்பாண்டியன் மாதிரியானவர்கள் நாஸ்திகர்களானபோது, ஈச்வர ஸங்கல்பத்திலேயே அவர்களுக்கு வியாதி வந்து அப்புறம் ஈச்வர சக்தியிலேயே அவர்கள் குணமானதையும், அதனால் அநேகம் பேர் வேதத்துக்குத் திரும்பி ஆஸ்திகர்களாக ஆனதையும் பற்றிப் படிக்கிறோம். அந்தக் காலத்தில்தான் அப்படி நடந்தது என்றில்லை. இப்போதும் அநேக நாஸ்திகர்கள் வேங்கடாசலபதி, குருவாயூரப்பன், இல்லாவிட்டால் யாரோ ஒரு மஹான் அல்லது ஸித்த புருஷரின் அநுக்ரஹத்தால் ரொம்பவும் உக்ரமான ஏதோ ஒரு பிணி தீர்ந்ததில்தான் தெய்வநம்பிக்கை உள்ளவர்களாக மாறியிருக்கிறார்கள் என்று அவர்களே எழுதிப் படிக்கிறோம். வைத்தியமே இல்லை என்றால்தான் ஒரு நாஸ்திகன் பகவான் பக்கம் திரும்ப அதிகம் ‘சான்ஸ்’ உண்டு. பகவானுக்கும் இவனைக் காப்பாற்றுவதன் மூலம் இன்னம் அநேகரைத் திருப்பிக் கொள்ளும் ‘சான்ஸ்’ கிடைக்கும்! காப்பாற்றாவிட்டாலும் கடைசி காலத்தில் இந்த நாஸ்திகன் அவனை நினைத்தற்காக அடுத்த ஜன்மாவில் ஆஸ்திக்ய புத்தி உள்ளவனாகப் பிறப்பிப்பான்.

வைத்தியம் செய்து வியாதியைப் போக்காததால் ஒரு நாஸ்திகன் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டியதாகும் அல்லவா? இந்தக் கஷ்ட அநுபவத்தால் அவனுடைய பாபம் குறையும். இது ஒரு உபகாரந்தானே? பாபத்தைப் போக்கிக்கொள்ள அவன் வேறு எந்த அநுஷ்டானமும் பண்ணாதவனாச்சே!

நாஸ்திகனுக்கு வைத்யம் பண்ணி ஆயுஸை விருத்தி பண்ணுவதால் அவன் நாஸ்திக்ய பாபத்தையும் விருத்தி செய்து கொள்வதாகவே ஆகும். அவனால் ஊர் கெடுவதற்கும் ஜாஸ்தி வாய்ப்புத் தந்ததாகும். இந்த மஹா தோஷமெல்லாம் அவனுக்குச் சேர வேண்டாமென்ற கருணையால்தான் அப்படிச் சொன்னது. இந்த விஷயம் இருக்கட்டும்.

நான் சொன்னவற்றிலிருந்து என்ன ஏற்படுகிறதென்றால் மத ரீதியாகவும், வேதாந்த த்ருஷ்டியாகவும் பார்த்தால்கூட சரீர ஸம்ரக்ஷணம் அவசியந்தான். “தர்மத்தை ஸாதிப்பதற்குரிய கருவியாக இருப்பது இந்த சரீரமே அல்லவா? “சரீரம் ஆத்யம் கலு தர்ம ஸாதநம்?” என்றே காளிதாஸன் எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறான்2. “சுவரை வைத்தே சித்ரமெழுதணும்” என்பது இதுவே. ஹோமத்துக்கு தர்ப்பையும் ஸமித்தும் நெய்யும் மற்ற ஆஹுதி திரவியங்களும் எப்படி ஸாதனமோ அப்படியே ஹோமம் பண்ணுகிற யஜமானனின் உடம்பு ஒரு ஸாதனம். இது இல்லாவிட்டால் எப்படி லோக க்ஷேமார்த்தம் வேத வேள்விகள் நடக்க முடியும்? இந்த வாழ்க்கையே ஒரு ஹோமமாகிறபோது அதிலே ஆஹுதியாவதற்கே ரக்ஷித்துக்கொள்ள வேண்டிய ஸாதனமாக சரீரம் ஆகிறது.

‘நெல்லுதான் முக்யம், உமியை உதறிவிட வேண்டும்; ஆத்மாதான் நெல்லுமணி, சரீரம் உமி மாத்திரந்தான்’ என்று ரொம்பவும் வேதாந்தமாகச் சொல்வதுண்டு. ஆனால் இந்த உமியையும் உதறிவிடாமல் ஹோமத்துக்கு என்று சேகரித்து வைக்கிறோம்! நெல்லை ஹவிஸ்ஸாக்கி ஆஹுதி பண்ணுகிறோமென்றால், அந்த ஆஹுதியை ஏற்றுக்கொள்கிற அக்னி விருத்தியாவதற்காக உமியையே பிரயோஜனப்படுத்துகிறோம்! அந்த உமியைப் போலவே இந்த சரீரத்தையும் ரக்ஷிக்க வேண்டும்.

மொத்தத்தில் இதுவரை நான் சொன்னதில் என்ன ஏற்படுகிறதென்றால், சரீரம் எக் கேடு கெட்டாலும் பொருட்டில்லை என்று ஆத்மாவிலே ஆணி அடித்த மாதிரி நிற்கிற பக்வம் வருகிறவரை, அல்லது அடுத்த பக்ஷமாக எத்தனை உடம்புக்கு வந்தாலும் அதை கவனிக்காமல் ஈச்வர த்யானம் பண்ணுகிற ‘ஸ்டெடினெஸ்’ வருகிற வரை, உடம்பை வியாதி வக்கையில்லாமல் காப்பாற்றிக் கொள்ள வேண்டியவர்களாகவே இருக்கிறோம்.

மீமாம்ஸை என்று ஒரு சாஸ்திரம். அதிலே பூர்வ மீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை என்று இரண்டு பிரிவு3. பூர்வ மீமாம்ஸை கர்ம மார்க்கத்தையும் அதைச் சேர்ந்த தர்மாநுஷ்டானங்களையும், உத்தர மீமாம்ஸை ஞான மார்க்கத்தையும் சொல்பவையாகும். இந்த இரண்டுக்கும் சரீர ரக்ஷணை செய்துகொள்ள வேண்டியதாயிருக்கிறது. ஸமாதியில் நிஷ்டை கூடுகிற ஸ்திதி உண்டாகிறவரை ஞானமார்க்கக்காரனும் அநேக ஞான நூல்களைப் படித்து ஆத்ம விசாரம் பண்ணுவதற்காக ஆரோக்யத்தைப் பேணிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

யோகத்தில் ராஜயோகம் பண்ணும்போது ஆஸனம், பிராணாயாமம் ஆகியவை நல்ல ஆரோக்யத்தையும் தருபவைதாம். ஹடயோகத்திலோ உடம்பை ஆச்சர்யமான சக்தி உள்ளதாக ஆக்கிக் கொள்கிறார்கள்.


1அணுவால் ஏற்படும் ஆணவ மலம், கர்மாவால் ஏற்படும் கார்மிக மலம், பேதப் பார்வையால் ஏற்படும் மாயா மலம் என்று மூன்று சைவ ஸித்தாந்தத்தில் கூறப்படுகிறது.

2 ‘குமாரஸம்பவம்’ 5.33

3 “தெய்வத்தின் குரல்” இரண்டாவது பகுதியில் “மீமாம்ஸை : கர்ம மார்க்கம்” என்ற உரை பார்க்க.

உடம்பைப் பேணுவது எதற்காக?

ஆயுர்வேதம் என்பது ஆயுஸ் விருத்திக்கு வழி சொல்லும் சாஸ்த்ரம். ஆயுஸ் குறைவது அநேகமாக வியாதியால்தானே? ஆகையினால், வியாதி வராமல் தடுக்கவும், வந்தால் குணப்படுத்தவும் வழி சொல்லும் வைத்ய சாஸ்த்ரமே ஆயுர்வேதம் எனப்படுகிறது.

ஆயுர்வேதம் தீர்க்காயுஸோடும், அப்படி இருக்கிற வரையில் சரீர ஸெளக்யத்தோடும் இருக்கும் வழிகளைச் சொல்லும் வைத்ய சாஸ்த்ரமாகும். அதாவது நம் ஆயுஸை தீர்க்கமாக்கிக் கொள்வதற்கும் சரீரத்துக்கு வரும் வியாதிக் கஷ்டங்களை குறைத்துக் கொள்வதற்கும் மார்க்கத்தைச் சொல்ல இது ஏற்பட்டிருக்கிறது.

எதற்காகச் இப்படிச் செய்ய வேண்டும்? உடம்பைப் பேணி வளர்ப்பானேன்? எவ்வளவு பேணிவைத்துக் கொள்ளப்பார்த்தாலும் அது நிரந்தரமாயிருக்கப் போவதில்லையே? ஒருநாள் அழியத்தானே போகிறது? அழிவது, அழியவேண்டியது, என்ன பண்ணினாலும் அழிவை நிறுத்த முடியாதது, என்றைக்குப் போனால் என்ன? ஞானிகளாக இருப்பவர்கள் இந்த உடம்பு என்றைக்குப் போனாலென்ன என்றுதானே சொல்கிறார்கள்? இது இருக்கிற மட்டும் இந்திரிய இழுப்புத்தான், கர்மாவில் நுழைப்புத்தானென்பதால் இது போகாதா என்றே காத்துக் கொண்டிருந்தவர்களாகத் தானே மஹான்கள் இருந்திருக்கிறார்கள்?

அது இருக்கட்டும். மஹான்களின் கதையும், நிறுத்தி வைக்க முடியாமல் சாவு ஒன்று இருக்கும்போது சரீர ரக்ஷணை எதற்கு என்று நாம் ‘இன்டெலச்சுவலாக’க் கேட்பதும் இருக்கட்டும். நடைமுறையில் என்ன செய்கிறோம்? மஹான்களின் வைராக்ய உணர்ச்சியும், நம் ‘இன்டெலெக்டு’ மா கை கொடுக்கின்றன? நம்முடைய ஸாமானிய உணர்ச்சியின்படிதானே செய்கிறோம்? அப்போது என்ன நினைக்கிறோம்? தேஹத்துக்குக் கொஞ்சம் அஸெளக்யமென்றால்கூட அதைத்தானே பெரிதாக நினைத்து ‘ஐயோ, அப்பா’ என்கிறோம்? லக்ஷ ரூபாய் லாட்டரி விழுந்த ஸந்தோஷத்தைக்கூட ஒரு வயிற்று வலியோ, ஜலதோஷமோ விரட்டிவிடுகிறதே! இந்த வியாதியைத்தானே அந்த வரவைவிடப் பெரிசாக நினைக்கிறோம்? உடம்பெல்லாம் அழுகி, ஜீவனோபாயமே இல்லாமல் தெருவிலே நாற்றமடித்துக் கிடக்கிற ஒரு குஷ்டரோகி கூட, ‘போகாதா இந்த உயிர்?” என்று புலம்பிக் கொண்டிருந்தாலும், அந்தப் பக்கம் ஏதாவது ஒரு லாரி, பஸ் ஏதாவது ஓரமாக வந்துவிட்டால், “நல்லது; அரை பட்டுச் சாவோம்” என்று கிடக்கிறானா? எப்படியோ சரீரத்தைப் பூமியோடு தேய்த்துக் கொண்டாவது அந்தண்டைதானே புரள்கிறான்? தேஹாத்ம புத்தி என்பது அவ்வளவு ஆழமாக நமக்குள் ஊறியிருக்கிறது! தொண்ணூறு தொண்ணூற்றைந்து வயஸு ஆகி நடைப்பிணமாகக் கிடக்கிறபோதும் மருந்து சாப்பிட்டு மரணத்தை ஒத்திப் போடப் பார்க்கவேண்டும், ஆயுஸை விருத்தி பண்ணிக்கொள்ள வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

இது தன் சரீரத்தை ரக்ஷித்துக் கொள்வது. இன்னொன்று இருக்கிறது. நமக்கு ரொம்பவும் பிரியமாக பதி அல்லது பத்தினி, புத்ரர்கள் இருந்தால், நாம் போனாலும் நமக்கு வேண்டிவர்களான அவர்கள் தீர்க்காயுஸுடன் இருக்கவேண்டுமென்று ஆசைப்படுகிறோம். “நம் கண்முன் அவர்கள் போகப்படாது” என்று வேண்டிக்கொள்கிறோம். அவர்களுக்கு உடம்புக்கு வந்து விட்டால் ராக்கண் முழித்து, எத்தனை வைத்யம் முடியுமோ அத்தனையும் பார்த்து, அதற்காக என்ன செலவானாலும் செய்கிறோம். பாபர் அல்லாவுக்கு வேண்டிக்கொண்டு தன் உயிரைக் கொடுத்தே ஹுமாயூனை சாவிலிருந்து மீட்டார் என்று படித்திருப்பீர்கள்.

இப்படியாகத் தன்னுடையவும், தனக்கு வேண்டியவர்களுடையவுமான சரீரத்தை ரக்ஷிப்பதும், ஆயுஸை நீடித்துக் காப்பாற்றிக் கொள்ள முயல்வதும் ஸகலப் பிராணிகளுக்கும் ஆழமாக வேரோடிப்போன இயற்கையாயிருக்கிறது. மநுஷ்யன் மட்டுமல்ல; எந்தப் பிராணியுமே, ஒரு சின்ன புழுவும் எறும்புங்கூட ஜீவனை ரக்ஷித்து வைத்துக் கொள்ள எந்தப் பாடும் படத் தயாராயிருக்கிறது.

இயற்கையை முறித்துக் கொண்டுபோய் இசகு பிசகாக்கிக் கொள்ளாமல், இயற்கையை அநுஸரித்தே போய் அதை ஆத்மாவின் வழிக்குக் கொஞ்சம் கொஞ்சமாக வளைத்துக் கொள்ளுவதுதானே நம் ஆன்றோர்கள் நமக்குத் தந்துள்ள ஏற்பாடு? கல்யாணம், குழந்தை குட்டி பெறுவது, உத்யோகம் எல்லாவற்றையும் இயற்கை, நடைமுறை என்ற இரண்டுக்காகவும் ஒப்புக்கொண்டு இவற்றையும் சாஸ்த்ரோக்தமாகப் பண்ணிப் பக்வமாக்குவதுதானே அவர்கள் வகுத்துள்ள வழி? இதற்கேற்கவே வியாதிகளைப் போக்கிக்கொண்டு தீர்க்காயுஸுடன் வாழ்வதற்கான ஆயுர்வேதத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

வாஸ்து சாஸ்திரம்

ஸங்கீதம் ஸாமவேதம் என்கிற மாதிரியே சிற்பம், கட்டிட நிர்மாணம் (sculpture,architecture) என்கிறவை, இவற்றை அங்கமாகக் கொண்ட வாஸ்து சாஸ்த்ரம் ஆகியவையெல்லாம் சேர்ந்து ஒரு உபவேதமென்றும், இது அதர்வ வேதத்துக்கு ஸம்பந்தமுடையதென்றும் சுக்லா என்கிறவர், பஞ்சாபைச் சேர்ந்தவர் (ஸ்ரீமடம் நடத்திய) இளையாத்தங்குடி ஸதஸில் சொன்னார். ப்ருகு மாதிரியான வேதரிஷிகளே வாஸ்து சாஸ்த்ரம் பண்ணயிருப்பதை அவர் காரணம் காட்டி, மற்ற எந்த உபவேதத்துக்கும் இப்படி வேதரிஷிகளின் நூல் இல்லை என்று சொன்னார்1. வாஸ்து சாஸ்திரம் என்பதுதான் எப்படி நகர நிர்மாணமும், அதிலுள்ள ஆலயம், அரண்மனை, தனி மநுஷ்யனின் வீடு ஆகியவற்றின் நிர்மாணமும் அமைய வேண்டுமென்று சொல்வது. வீடு கட்டும்போது மனை மூஹுர்த்தம் என்று பண்ணும்போது வாஸ்து புருஷனுக்குத்தான் பூஜை பண்ணப்படுகிறது. ஒரு ஊர் அல்லது ஆலயம், அரண்மனை வீடு, மண்டபங்கள், சத்திரம், வித்யாசாலை எதுவானாலும் அதை வாஸ்து புருஷன் என்று ஒரு நராகாரமாக வர்ணித்து அதில் தலைப்பாகம், உடம்பு, கால், கை என்றெல்லாம் அந்தந்தக் கட்டுமானத்திலுள்ள ஸந்நிதிகள், மண்டபங்கள், ரூம்கள் முதலியவற்றை வர்ணித்திருக்கும். வாஸ்து சாஸ்திரப் பிரகாரம் ஒரு ஊரில் கோயில்கள், குடியிருப்புக்கள், பொதுஸ்தலங்கள் முதலியவை அமையாவிட்டாலும், இப்படியே ஒவ்வொரு வீட்டிலும் அதன்படி அறைகள், கூடம், தாழ்வாரம் முதலியவை அமையாவிட்டாலும் துர்பிக்ஷம், வியாதி, சித்தவிகாரம் முதலியன ஏற்படும் என்று சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறது. இப்போது நாம் வாஸ்து சாஸ்த்ரப்படி எதுவும் செய்யாமல் இங்கிலீஷ் ஃபாஷனில் town planning, காலனி, வீட்டு நிர்மாணம் எல்லாம் செய்கிறோம். சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிற அனர்த்தங்களையும் அநுபவித்து வருகிறோம்!

சிற்பக் கலை, கட்டிடக் கலை எல்லாமே வாஸ்து சாஸ்திரத்தில் வந்து விடுகிறது.

ஆனாலும் பொதுவான அபிப்ராயத்தில் அர்த்தசாஸ்திரம்தான் நான்காவதான உபவேதமாக நினைக்கப்படுகிறது.


1உபவேதங்களில் அர்த்தசாஸ்திரத்துக்குப் பதிலாக ஸ்தாபத்யசஸ்த்ர வேதம் என்ற சாஸ்திரத்தைச் சொல்வாருமுண்டு. இது அதர்வ வேதத்திலிருந்து கிளைத்ததாகச் சொல்வர். ஸ்தபதி எனும் கட்டிட, சிற்ப நிர்மாணிகரின் கருவிகளைக் குறித்ததே ‘ஸ்தாபத்யசஸ்த்ர’மாதலால் இதுவே ஸ்ரீ B.N. சுக்லாவின் கூற்றுக்கு அடிப்படை எனத் தோன்றுகிறது. கட்டிடச் சிற்பம் மட்டுமின்றி அனைத்துக் கருவிகளையும் பற்றிய Mechanics என்பதே பொதுவில் ஸ்தாபத்யசஸ்த்ர சாஸ்த்ரமாகக் கொள்ளப்படுகிறது.