‘உப’வும், ‘மூல’மும்

உபவேதங்களில் ஒவ்வொன்றையும் மூலவேதம் ஒவ்வொன்றிலிருந்து வந்ததாகச் சொல்வதுண்டு. இதன்படி முதலாவதான ஆயுர்வேதம் ரிக்வேதத்தைச் சேர்ந்தது1. ரிக் வேதத்துக்குப் ‘புஷ்டியைத் தரவல்லது’ என்று பொருள்படுவதான ‘பௌஷ்டிகம்’ என்றே ஒரு பெயர் உள்ளது. இரண்டாவதான தநுர்வேதம் யஜுர் வேதத்தையும், மூன்றாவதான காந்தர்வ வேதம் ஸாம வேதத்தையும், நான்காவதான அர்த்தசாஸ்திரம் அதர்வ வேதத்தையும் சேர்ந்தவை.

தநுர்வேதத்தில் அஸ்திரப் பிரயோகம் செய்யும் போது வாருணாஸ்த்ரம், ஆக்நேயாஸ்தரம், ப்ரஹ்மாஸ்த்ரம் போன்றவற்றை வருணன், அக்னி, பிரம்மா முதலிய அந்தந்த தேவதைகளுக்குரிய மந்திரத்தோடுதான் விட (எய்ய) வேண்டும். மந்த்ர சக்திதான் இங்கே ஆயுதத்தைவிட முக்யம். இந்த மந்த்ர ப்ரயோகங்களை அதர்வவேதம்தான் கூறுகிறது. ஆகையால் தநுர் வேதத்துக்கு அதர்வ ஸம்பந்தமும் இருப்பதாக ஆகிறது.


1ஆயுர்வேதத்தில் முக்யமான ஒரு சாஸ்திரகர்த்தரான ஸுச்ருதர் இதனை அதர்வ வேதத்தைச் சேர்ந்ததாகக் கருதுகிறார்.

உபவேதங்கள் எதற்கு?*

‘ஸாங்கோபாங்கமாக’ச் செய்வது என்று ஒரு வார்த்தை அடிபடுகிறது. ஒரு அம்சமும் விடாமல், பூராவாக எந்த ஒன்றைச் செய்வதையும் ‘ஸாங்கோபாங்கம்’ என்கிறோம். ‘ஸ அங்க உப அங்க’ என்பதே ஸாங்கோபாங்கம். எல்லா அங்கங்களுடனும் துணை உறுப்புக்களுடனும் கூடியது என்று அர்த்தம். நம் மதத்துக்கு மூலமான வேத வித்யையை வைத்தே இந்த ‘ஸாங்கோபாங்கம்’ என்பது எல்லா விஷயங்களுக்கும் பரவியிருக்கிறது. வேத மதம் ஒரு தேவதாமூர்த்தி என்று வைத்துக் கொண்டால் அதற்கு ரிக், யஜுஸ், ஸாமம், அதர்வம் என்னும் நாலு வேதங்களின் ஸம்ஹிதைகள், ப்ராம்மணங்கள், ஆரண்யகங்கள், இவற்றில் முடிவாய் வரும் உபநிஷத்துக்கள் ஆகியவைதான் முக்யமான உடம்பு மாதிரியும் அதற்குள் எங்கும் பரவியிருக்கிற உயிர் மாதிரி, ரத்தம் மாதிரியும். ஆக நாலு வேதமே முக்யமான ரூபம். இந்த ரூபத்துக்கு ஆறு அங்கங்கள். சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என்பன. இந்த ஆறு அங்கங்களோடு கூடின நான்மறையை ‘ஸாங்கமானது’ எனலாம். ‘ஸாங்க உபாங்கத்தில்’ உப அங்கமாக, துணை உறுப்பாக இன்னம் நாலு இருக்கின்றன – அவற்றுக்கு மீமாம்ஸை, ந்யாயம், புராணம், தர்ம சாஸ்த்ரம் என்று பெயர். நாலு வேதம் ப்ளஸ் ஆறு அங்கம் ப்ளஸ் நாலு உபாங்கங்களைச் சேர்த்து வேதமத தேவதையின் ஸாங்கோபாங்கமான பூர்ண வடிவமாகக் கொண்டிருக்கிறோம். இப்படி மொத்தம் வருகிற பதினாலையும் ‘சதுர்தச வித்யா’, ‘பதினாலு வித்யை’ என்று சொல்வது வழக்கம்1.

உப அங்கமாக இருப்பதோடு உபவேதமாகவே மேலும் நாலைக் கூட்டிப் “பதினெட்டு வித்யைகள், அஷ்டாதச வித்யா ஸ்தானங்கள்” என்று சொல்வார்கள் இந்த நான்கு உபவேதங்கள் ஆயுர்வேதம், தநுர்வேதம், காந்தர்வ வேதம், அர்த்த சாஸ்திரம் என்பவையாகும்.

இந்த நாலும் ஸமய ஸம்பந்தமாக (ரிலிஜியஸாக) , தத்வ விசாரணையாக (ஃபிலஸாபிகலாக) தெரியாமல் நடைமுறை வாழ்க்கை (ப்ராக்டிகல் லைஃப்) தப்பு தண்டா இல்லாமல் தனி மநுஷ்ய ரீதியிலும் ஸமூஹ, தேச, லோக ரீதியிலும் நடப்பதற்கு உதவுவதாகவே உள்ளன. அதனால் தான் பதினாலு தர்ம ஸ்தானங்களில் இவற்றைச் சேர்க்காமல் – அதாவது ஆத்மார்த்தமாக நேரே ஈடுபடுத்தும் தர்ம நூல்களில் சேர்க்காமல் – அறிவைத் தரும் பதினெட்டு வித்யா ஸ்தானங்களில் மட்டுமே சேர்த்திருக்கிறார்கள். இவற்றுக்கு நீதிகளைச் சொல்லும் சட்ட நூல்களான தர்ம சாஸ்த்ரங்களுக்குள்ள அதாரிடி (அதிகாரத்தன்மை) கிடையாது. பலவிதமான விஷயங்களை மட்டும் தெரிவிப்பதால் வித்யா ஸ்தானமாக மாத்திரம் மதிக்கப்படுகின்றன.

ஆனாலும் இவற்றுக்கு வேதத்தின் அங்கம், உபாங்கம் என்று பெயர் கொடுப்பதைவிட உசத்தியாக, இதில் ஒவ்வொன்றுமே ஒரு துணை வேதம், supplementary வேதம் என்று பொருள்பட “உப வேதம்” என்று தெரிய பெயர் கொடுத்திருக்கிறது. ஏனென்றால் தர்மத்தின் அடிப்படையில் நின்றுகொண்டு இந்த நாலையும் ‘ப்ராக்டிகல் லைஃபி’ல் நடத்தினால் அதனால் ப்ராக்டிகல் லைஃபே ஐடியல் லைஃபாக மலர வழி ஏற்படும். அதாவது நாம் வாழ்கிற முறை எப்படி வாழ்ந்தால் உசந்த மநுஷ்ய லக்ஷணத்துக்கு உரிய உத்தமமான உபாயமாகுமோ அப்படி ஆகிவிடும். அப்படி ஆனால் அப்போது இந்த நடைமுறை வாழ்க்கையே, இம்மை என்பதே மறுமை என்கிற சாச்வத ஸெளக்யத்தை ஸம்பாதித்துத் தர வழி பண்ணுவதாகிவிடும். முடிவிலே பரமாத்மாவிடமே கொண்டு போய்ச் சேர்க்கும் படியாக வாழ்க்கைப் பாதையை ராஜ மார்க்கமாகப் போட்டுக் கொடுத்துவிடும்.

உங்களுக்கே இந்த நாலு என்ன என்பது புரிந்திருக்கும். ஆயுர்வேதம் என்பது வைத்ய சாஸ்திரம். தநுர்வேதம் யுத்த சாஸ்திரம். காந்தர்வ வேதம் என்பது ஸங்கீதம், நாட்டியம், நாடகம் முதலிய லளித கலைகள். அர்த்த சாஸ்திரம் என்பது பொருளாதாரத்தை அங்கமாகக் கொண்ட அரசியல்.

இந்த நாலில் ஒவ்வொன்றாலும் ஆத்மாவுக்கு எத்தனை ஹானி பண்ணிக் கொள்ளலாமோ அத்தனையும் பண்ணிக் கொள்வதுதான் நமக்குக் கண்கூடாகத் தெரிவது. வைத்ய சாஸ்திரத்தில் உடம்பைப் பேணிப் பேணித்தான் தேஹாத்ம புத்தியை விட்டுக் கொஞ்சங்கூட மேலே போகாமல் நிற்கிறோம்! யுத்தத்தால் ஆடம் பாம்(ப்) , ஹைட்ரஜன் பாம்(ப்) இவற்றைப் போட்டுப் பண்ணின அக்ரமம் போதாது என்று ஒவ்வொரு Power Block -க்கும் இவற்றைக் காட்டிக் காட்டியே Cold War என்று அத்தனை ஜனங்களையும் கிலியிலும், பரஸ்பர ஸந்தேஹத்திலும், த்வேஷத்திலும் பிடித்து வைத்திருக்கிற அக்ரமத்தைப் பார்த்து வருகிறோம். பாட்டும் கூத்தும் மநுஷ்யனை மிருகத்தின் மட்டத்துக்குக் கொண்டு விடுவதாக எத்தனை cheap-ஆகியிருக்கிறதென்பதையும் அநுபவித்து வருகிறோம். அரசியலா? அதைப்பற்றி நான் வாய் திறக்க வேண்டாம்.

இப்படி எதெல்லாம் பாரமார்த்திகத்துக்கு ரொம்பவும் விக்னம் உண்டாக்கும் ஹேது உள்ளதாக இருக்கிறதோ அதையெல்லாம் விட்டு ஓடு என்று சொல்லாமல், “அதுகளையும் சுத்தப்படுத்து. அதுகளையும் தர்மத்தில் ஊறப்போடு! எத்தனை களிம்பையும் பாசியையும் புளியிலும் எலுமிச்சைச் சாற்றிலும் ஊறப் போட்டு அகற்றிவிடுகிற மாதிரி இவற்றையும் தர்ம வழியால் சுத்தப்படுத்திப் பளிச்சென்றாக்கி, தர்மத்துக்காகவே பிரயோஜனப்படுத்து. அழுக்குக் கண்ணாடி படத்தை மறைக்கிறதென்று கண்ணாடியை எடுத்துவிட்டால் படம் கெட்டுத்தானே போகும்? அதனால், அழுக்கை மட்டும் துடை. கண்ணாடியை எடுத்துவிடாதே. சரீரமும் அதற்கான வைத்யமும், யுத்தமும், பொழுது போக்குகளும், ராஜ நீதியும் ஆத்மாவை மறைக்கிற அழுக்குக் கண்ணாடியாக இருக்கிற நிலையை மாற்றி அவற்றையே ஆத்மாவை நன்றாக ரக்ஷித்து, பிரகாசமாகக் காட்டுகிற கண்ணாடியாக மாற்று” என்றே இதற்கு உபாயமாக நம் முன்னோர்கள் நாலு உபவேதங்களையும் கொடுத்திருக்கிறார்கள்.

‘அத்வைதா, மாயா’ என்று சொல்லிக்கொண்டு ஹிந்து மதம் நடைமுறை வாழ்க்கையையே கவனிக்காமல், பேடி மாதிரி அதிலிருந்து தப்பி ஓடச் சொல்கிறது என்று இதர மதஸ்தர்கள் சொல்வதுண்டு. இதைவிடத் தப்பான அபிப்ராயம் இருக்க முடியாது. அவர்களுடைய மதங்களையெல்லாமும்விட மிக மிக விரிவாகவும் ஆழமாகவும் நடைமுறை வாழ்க்கையின் ஸகல அம்சங்களையும் அலசி அது ஒவ்வொன்றிலும் ஒரு ஜீவன் எப்படிப் புகுந்து புறப்பட்டு தீரனாக ஜயசாலியாக வரவேண்டும் என்று விஸ்தாரமாக வழிகாட்டுவது நம் மதம்தான். அவதாரத்தின் உச்சியிலேயே ராமனையும் கிருஷ்ணனையும் வைத்துக் கொண்டு இன்றைக்கும் நாம் கொண்டாடுவது அவர்களுக்கே (இதர மதஸ்தர்களுக்கே) தெரியும். ராமனும் கிருஷ்ணனும் நடைமுறை வாழ்க்கையை விட்டு ஓடவில்லை; அதில் பூரா பூரா ஈடுபட்டு நடத்தினவர்கள் தான் என்று தெரியும்;’ இதை விட்டுவிட்டு ஓடிப்போய் மூக்கைப் பிடித்துக்கொள்கிறேன்’என்று பிடிவாதம் பண்ணின அர்ஜுனனை பகவான் இழுத்துப் பிடித்து உட்கார வைத்து, காண்டீவத்தைக் கையில் கொடுத்து, “ம், போடு சண்டை” என்று கீதையில் சொன்னதும் தெரியும். ஆனாலும் criticise பண்ணுகிறார்கள். நாமும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்!

தர்மத்துக்காக, தர்மத்தோடு இங்கே தநுர் வேதத்தை அப்யஸிக்கும்படி பகவான் அர்ஜுனனைத் தூண்டியிருக்கிறார். இப்படித்தான் ஒவ்வொரு உபவேதமும் தர்மார்த்தமாகப் பிரயோஜனப்படுத்தப்பட வேண்டியதாகும்.

மற்ற மதங்களில்தான் ஈச்வர ஸம்பந்தமானது என்று சிலதை மட்டும் சொல்லிவிட்டு மநுஷ்யனின் ராஜாங்கம், வாழ்க்கையம்சங்கள், ராணுவம், வைத்யம் முதலானவற்றைப் பற்றி எதுவுமே சொல்லாமல் விட்டு விட்டதால் நடைமுறையில் பெரிய கோளாறு உண்டாகி விட்டது. நடைமுறை வாழக்கைக்கு அவசியமான தொழில், சாப்பாடு, ஜாகை, கல்யாணம், படிப்பு முதலானவற்றுக்கும் கலைகளுக்கும் மத ஸம்பந்தமான தர்ம ஆதாரம் இல்லாததனாலேயே அந்த மதங்களைச் சேர்ந்தவர்கள் இவற்றில் ரொம்பவும் கோளாறாகப் போக இடம் ஏற்பட்டுவிட்டது. ‘ஆத்ம ஸம்பந்தமானது’ என்று தனியாகச் சிலதை வைத்துவிட்டதாலேயே அதற்குப் பெரும்பாலோர் போகாமல் நடைமுறை வாழ்க்கையோடு நிற்பதாகவும் இந்த நடைமுறையிலே சாஸ்திர ஒழுங்கு இல்லாததால் மனஸு போனபடி செய்ய இடமேற்படுவதாகவும்தான் ஆகியிருக்கிறது.

லோக வியாபாரத்தில் எல்லாத் துறைகளையும் நெறிப்படுத்தித் தரும் நம் மதத்தில் நாலு உபவேதங்களில் முதலாவதாக வருவது ஆயுர்வேதம்.


*உபவேதங்களைக் குறித்து தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதியில் வித்யாஸ்தானம்: முடிவுரை என்ற உரையிலும் பார்க்க.

1இப்பதினான்கில் ஒவ்வொன்றையும் குறித்த விரிவுரைகள் தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதியில் காண்க.