சாச்வதச் சட்டமும் தாற்காலிக மாறுதல்களும்

எடுத்ததற்கெல்லாம் தன்னிஷ்டப்படிச் சட்டம் செய்ய இடமுள்ளபோதுதான் யதேச்சசாதிகாரத்துக்கு இடம் கொடுத்துப் போகும். பழைய காலத்தில் ‘மானார்க்கி’ தான் நடந்ததென்றாலுங்கூட ராஜாக்களுக்கு இப்படி நினைத்த மாதிரியெல்லாம் சட்டம் செய்ய ‘அதாரிடி’ இருக்கவில்லை என்பது தெரியாததால்தான் ‘க்ரிடிஸைஸ்’ செய்கிறார்கள். க்ரிடிஸைஸ் செய்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயமென்னவென்றால், அடிப்படைச் சட்டங்கள் யாவும் தர்ம சாஸ்திரத்திலும் அர்த்த சாஸ்திரத்திலும் எழுதி வைக்கப்பட்டவையாகவே இருந்துவிட்டன. சாச்வத வாழ்க்கைக்கு ஒரு துணை உபாயமாக இந்த தார்மிகச் சட்டங்கள் இருப்பதால் இவையும் சாச்வதம்தான் என்ற நம்பிக்கையும் பிடிப்பும் எல்லா ராஜாக்களுக்கும் இருந்தன. வைதிகத்தையும், ஆஸ்திக்யத்தையும், தர்மத்தையும் விருத்தி செய்வதே ராஜாவின் பொறுப்பு என்று சின்ன வயஸில் குருகுல வாஸத்திலேயே அரச குமாரர்களுக்கு ஆழமாக போதிக்கப்பட்டிருந்தது. ‘இந்த சாச்வத ஸத்யங்களைப் பழைய சாஸ்திரங்களின் சட்டங்களையே சாச்வதமாகப் பின்பற்றினால்தான் அடைய முடியும்; கொஞ்சமும் ஸ்வயநலம் கலக்காமல், லோகத்தின் நிரந்தர க்ஷேமத்திற்கென்றே ரிஷிகள் கொடுத்துள்ள விதிகளை அவர்களுடைய நிலைக்கு எவ்வளவோ கீழே உள்ள நாம் மாற்றப்படாது’ என்று ஒரு ராஜா வித்யாப்யாஸத்தின் போதே ‘கன்வின்ஸ்’ பண்ணப்பட்டிருப்பான். அதனால், இந்த சாஸ்திரங்கள், நடைமுறைத் தேவைகள் ஆகிய இரண்டையும் நன்றாயறிந்த மந்திரிகளின் துணையுடன் அவன் ஆட்சி பண்ணும்போது கால, தேச, வர்த்தமானங்களின் நிர்ப்பந்தத்தினால் சாஸ்திரச் சட்டங்களில் எங்கே மாறுதல் தேவைப்படுகிறதோ அங்கே மட்டும் கொஞ்சம் பண்ணிப் புது ‘ரூல்’ போடுவான். மாறுதல் என்றால் முழுக்க change பண்ண மாட்டான்; கொஞ்சம் modify மட்டும் பண்ணுவான். சாஸ்திரத்திலேயே அவ்வப்போது வருகிற ராஜாவின் discretion-க்கு (ஸமயோசித புத்திக்கு) என்று விட்டிருக்கிற இனங்களில்தான் சட்டம் போடுவான். ‘தேர்ச் சக்கரம் பாதையை விட்டுக் கொஞ்சங்கூட விலகாத மாதிரி மநு தாமத்தை விட்டு விலகாமலே திலீபன் ஆட்சி பண்ணினான்’ என்று காளிதாஸன் சொல்வது1 அக்காலத்தில் பொதுவாக எல்லா ராஜாங்கத்தின் நடைமுறையையும் reflect பண்ணுவதுதான்.

‘ஸெக்யூலரிஸம்’ என்பதை இப்போது நடத்துகிற மாதிரி நடத்துகிறபோது சாச்வத தர்மத்தைப் பற்றி நினைக்க இடமேயில்லை. மாறிக்கொண்டேயிருக்கிற நடைமுறை வாழ்க்கை நலனை, மாறி மாறிப் பலவிதமாக நினைக்கிறவர்கள் ரக்ஷித்துக் கொடுப்பதே ராஜாங்கம் என்று ஆகிறபோது, சட்டங்களும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. தார்மிகச் சட்டங்கள் எத்தனையோ ஆயிரம் வருஷங்கள் இந்த தேசத்தில் மாறாமல் பின்பற்றப்பட்டிருக்க, ‘அர்த்தம்’ என்கிற தற்காலிக விஷயத்தையே லக்ஷ்யமாகக் கொண்ட இன்றைய ஜனநாயக அரசாங்கங்களின் சட்டங்கள் அவ்வப்போது ஆட்சிக்கு வருகிறவர்களின் இஷ்டப்படி தினம் தினம் மாறுகின்றன.

புரோஹிதர், குலகுரு, மந்திரி-அமாத்யர்-ஸசிவர் என்கிற பலவிதமான ஆலோசகர்களைக் கலந்து கொண்டும், ஒவ்வொரு ஸமுதாயத்துக்குமான பிரதிநிதிகளைக் கொண்ட ஸபைகளின் அபிப்ராயங்களைக் கருத்தில் கொண்டும், ஏற்கனவே ஏற்பட்டுள்ள ராஜநீதி சாஸ்திரச் சட்டங்களை ஆதாரமாகக் கொண்டும்தான் ராஜாக்கள் ஆண்டார்களே தவிர, யதேச்சாதிகாரம் பண்ணவேயில்லை. ஸ்தல ஸ்தாபன ஆட்சி என்று இப்போது வார்த்தையில் சொல்கிறபடி நிஜமாக அங்கங்கே பஞ்சாயத்து ராஜ்யம் நடந்தது பழங்காலத்தில்தான். ஸூபர்வைஸர் மாதிரிதான் ராஜா மேற்பார்வை பார்த்து வந்தான். யுத்தம், ராணுவ ஸமாசாரத்தில்தான் மத்ய ராஜாங்கத்துக்கு அதிகாரம் நிறைய இருந்தது. கோயில் குளம் கட்டுவது, சிஷ்டர்களையும் வேத வ்யுத்பன்னர்களையும், பல கலைகளைச் சேர்ந்தவர்களையும் மானியம் தந்து ஆதரிப்பது முதலானவையே ‘ஸிவில்’ விஷயங்களில் ராஜாவின் முக்ய கார்யமாயிருந்தது. மற்ற ‘ஸிவில்’ விஷயங்கள் ஸ்தல ஸ்தாபானங்களின் ஆலோசனைகளை முக்யமாகக் கொண்டே கவனிக்கப்பட்டன.

அவ்வப்போது ஆட்சி செய்யும் ராஜாக்கள் பழைய ஆதாரச் சட்டத்தை அநுஸரித்தே அவசியமான இடத்தில் புது ரூல் போடலாம் என்பது அக்காலத்தில் பின்பற்றியமுறை. அவ்வப்போது ஆட்சியதிகாரத்திலிருப்பவர்கள், தங்களுக்கு இஷ்டமானபடி, தங்களுக்கு அநுகூலமானபடி எப்படியெல்லாம் அபிப்ராயப்படுகிறார்களோ, அப்புறம் இந்த ஐடியாலஜியையும் எப்படியெல்லாம் மாற்றிக் கொள்கிறார்களோ அதன்படி ‘லா’க்கள் பண்ண வேண்டும் என்பதற்காக, இதற்கு அநுகூலமாக ஆதாரச் சட்டத்தையே மாற்றிவிட வேண்டுமென்பது இப்போதைய நடைமுறை! வருஷா வருஷம் கான்ஸ்டிட்யூஷனுக்கு அமென்ட்மென்ட்! இது ஜனநாயகம்! பழைய முறை யதேச்சாதிகாரம்!


1“ரகுவம்சம்” 1.17

அர்த்த சாஸ்திரமும் தர்ம சாஸ்திரமும்

இந்தப் பெரிய ரக்ஷணையைச் செய்வதற்குத்தான் அது அநேக சட்டங்களைப் போட்டுக் கொடுத்திருக்கிறது. இப்படி அர்த்த சாஸ்த்ரம் சட்டம் போடுவதற்கு முந்தியே உபவேதத்தைவிட உயர்ந்த ஸ்தானத்தில் கருதப்படும் வேத உபாங்கங்களிலேயே உள்ள தர்ம சாஸ்திரத்திலும் ராஜநீதியைப் பற்றி நிறையைச் சொல்லப்பட்டிருக்கிறது. மநு, யாஜ்ஞ்யவல்கியர் மாதிரியானவர்களின் ஸ்ம்ருதிகளில் வர்ணாச்ரம தர்மங்களை விவரிக்கும்போது க்ஷத்ரிய தர்மம், ராஜ தர்மம என்கிறவற்றில் தேச பரிபாலனத்துக்கான சட்டங்களும் வந்துவிடுகின்றன. மநு தர்மப்படி ஆட்சி நடத்துவதாகத்தான் எந்த ராஜாவும் — ஆதிகாலத்திலிருந்து தமிழ் நாட்டு அரசர்களும் – சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பின்னாடி வந்த அர்த்த சாஸ்திரத்தைவிட முன்னாடி வந்த தர்ம சாஸ்திரப்படி போவதைத்தான் முக்யமாகக் கருதி ஆட்சி முறை நடந்து வந்திருக்கிறது. ஏனென்றால் உபவேதங்கள் எல்லாமே கண்ணுக்குத் தெரிகிற இந்த லோக வாழ்க்கைக்கு எது லாபம் என்பதைத்தான் கருத்தில் கொண்டவை. பரலோக சிரேயஸ் என்ற நித்ய ஸெளக்யத்தைக் கருத்தில் கொண்டு ஆத்மாவின் மேம்பாட்டுக்கு வழி சொல்வது வேத உபாங்கங்களில் உள்ள ஸ்மிருதிகளும் மற்ற தர்ம சாஸ்திரங்களும்தான்.

அர்த்த சாஸ்திரம் முதலான உபவேதங்களும் வேத தர்மத்தின் ஆதாரத்தில் எழுந்தவைதான். ஆனாலும் பூராவும் அந்தத் தர்மப் பிரகாரமே போகும் என்று சொல்ல முடியாது. வைத்யம், அர்த்தம், பொழுதுபோக்குகள் என்று ஏதோ ஒரு ஸப்ஜெக்டை ‘ஸ்பெஷலைஸ்’ பண்ணுவதாக இவை அமைந்திருக்கின்றன. அதனால் இந்தக் கால இங்கிலீஷ் வைத்யத்தில் ஸ்பெஷலைஸேஷனைப் பற்றிச் சொல்கிற டிஃபெக்ட் உபவேதங்களுக்கும் வந்து விடுகிறது. காதுக்கு ஒரு வைத்தியர்; தொண்டைக்கு ஒரு வைத்தியர்; மூக்குக்கு ஒருவர்;’ ஹார்ட்’டை மட்டும் பார்க்க ஒரு டாக்டர்; லங்க்ஸை மாத்திரம் பார்க்க இன்னொரு ஸ்பெஷலிஸ்ட் என்று இருப்பதால் மொத்த கான்ஸ்டிட்யூஷனைப் பார்க்காமல் இப்படி ஒரே பிரிவில் ஸ்பெஷலைஸ் பண்ணி வைத்தியம் பண்ணுகிறபோது அந்தப் பிரிவிலுள்ள வியாதிக்கு மட்டும் மருந்து கொடுத்து குணம் பண்ணும் போதே வேறொரு பிரிவில் புது வியாதி வருகிறது; மொத்தத்தில் கான்ஸ்டிடயூஷன் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள். இது மாதிரிதான் அர்த்தத்தை மாத்திரம் அபிவிருத்தி பண்ணுவது, ஆட்டம் – பாட்டு முதலியவற்றை மட்டும் வளர்ப்பது என்று உபவேதங்கள் செய்கிறபோது இந்த எல்லாம் எதற்கு அங்கமாயிருக்க வேண்டுமோ அந்த தர்ம வாழ்க்கை என்ற பூரண விஷயத்தில் கவனக் குறைவு ஏற்பட்டு அதற்குப் பாதகமாகக்கூடப் போகும்படியான ஹேதுக்கள் உண்டாகிவிடுகின்றன.

அதனால்தான் ராஜாக்கள் அர்த்த சாஸ்திரத்தைப் பின்பற்றுவதைவிட மநு தர்ம சாஸ்த்ராதிகளை அநுஸரிப்பதையே விஷயமாகச் சொல்லிக் கொண்டார்கள். முடிவில் பார்க்கப் போனால் அர்த்த சாஸ்த்ரத்திலும் அது வேத தர்மத்தை அஸ்திவாரமாகக் கொண்டு, அதை நிலைநாட்டவே ஏற்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லியிருக்கும்.

தர்ம சாஸ்திரங்கள் மட்டுமின்றி உபாங்கங்களில் வருகிற புராண இதிஹாஸங்களிலும் ராஜநீதியைப் பற்றி நிறைய இருக்கிறது. இங்கெல்லாமும் தாற்காலிகமான ‘அர்த்த’த்தைவிட, சாச்வதமான தர்மத்துக்குப் பிராதான்யம் கொடுத்தே அரசாட்சி முறை சொல்லப்பட்டிருக்கும்.

தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவே வியாஸ மஹரிஷி அநுக்ரஹித்த மஹாபாரதத்திலும், ‘தர்ம விக்ரஹவான்’ என்றே கியாதி பெற்ற ராமசந்திரமூர்த்தியின் கதையான ராமாயணத்திலும் ராஜநீதிகள் கொட்டிக் கிடக்கின்றன. மஹாபாரதத்தில் யுத்தத்துக்கு அப்புறம் பட்டாபிஷேகம் பண்ணிக்கொண்ட தர்மபுத்ரருக்கு பீஷ்ம பிதாமஹர் சாந்தி பர்வா, ஆநுசாஸனிக பர்வா என்ற இரண்டு பெரிய பர்வங்களில் பண்ணுகிற உபதேசங்களில் ராஜ தர்மத்தைப் பற்றி ஏராளமாக வந்துவிடுகிறது. காட்டுக்குப் போன ராமரைத் திரும்ப அழைத்து வருவதற்காக பரதன் சித்ரகூடத்துக்குப் போனபோது, எப்படி ராஜாங்கம் நடத்த வேண்டும் என்று ராமர் அவனுக்கு நிறைய உபதேசித்த விஷயம் ராமாயணத்தில் வருகிறது. ‘ராமராஜ்யம்’ என்ற தர்ம ராஜ்யத்தின் விதிகளையே இங்கே ராமர் சொல்லியிருக்க வேண்டும்.

இப்படி தர்மத்துக்காக ஏற்பட்ட நூல்களில் சொல்லியுள்ள ஆட்சிமுறைக்கு அப்புறம்தான் ‘அர்த்த சாஸ்த்ரம்’ என்றே உள்ளதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது அர்த்த சாஸ்த்ரம் என்றால் சாணக்யன் எழுதின ஒரு புஸ்தகந்தானென்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அர்த்த சாஸ்த்ர புஸ்தகங்கள் பலவற்றில் ஒன்றுதான் அது. அதற்கு ‘சாணக்ய நீதி’ அல்லது ‘சாணக்ய தந்த்ரம்’ என்றே பெயர். இப்படியே ‘சுக்ர நீதி’ என்று சுக்ராசாரியார் செய்த அர்த்தசாஸ்த்ர நூல் ஒன்றும் இருக்கிறது. தர்மத்துக்கென்றே ஏற்பட்ட நூல்களின் அளவுக்கு அர்த்தசாஸ்திர புஸ்தங்களில் ஸத்யம், தர்மம், நியாயம், நேர்மை ஆகியவைகளை எதிர் பார்க்க முடியாது. ராஜ தந்த்ரம், ஸமயோசிதம் — diplomacy, expediency என்றெல்லாம் சொல்கிறார்களே, இவற்றைத் தவிர்க்க முடியாத கட்டங்களில் தர்ம நூல்களிலேயே கொஞ்சம் அநுமதித்துத்தானிருக்கும். அர்த்த சாஸ்திரத்திலோ இவற்றுக்கு இன்னும் அதிக இடம் கொடுத்திருக்கும். சில ஸந்தர்பப்ங்களில் அரசாங்கம் உள்ளதைச் சொல்லாமல் மறைக்கலாம் என்ற அளவுக்கு தர்ம நூல்கள் போகுமென்றால், அர்த்த சாஸ்திரமோ உள்ளதை இல்லையென்றே மறுக்கலாம், இல்லாததை உள்ளதாகச் சொல்லலாம் என்றுகூடச் சொல்லிவிடும். இப்படி அஸத்ய ஸம்பந்தம் வருவதால்தான், பாக்கி மூன்று உபவேதங்களுக்கு ஆயுர்வேதம், தநுர்வேதம், காந்தர்வவேதம் என்று பெயரிருக்க இதற்கு அர்த்த வேதம் என்றில்லாமல் இது ஒரு சாஸ்த்ரம் என்றே பெயர் இருக்கிறது. ‘சாஸ்த்ரம்’ என்றால் எந்த ஸப்ஜெக்டைப் பற்றியும் விதிகள் கொடுப்பதுதான்.

தர்ம சாஸ்திரத்தோடு உபவேதங்களில் வரும் ஸப்ஜெக்ட்கள் எது மாறுபட்டாலும் நாம் இதைத் தள்ளிவிட்டு தர்ம சாஸ்திரத்தைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆயுர்வேத வைத்யர் எவராவது தம் சுவடியிலிருந்து மேற்கொள் காட்டி சிராத்த தினத்தில்கூட ஒரு வியாதிக்கார பிராம்மணன் பூண்டு லேஹ்யம் சாப்பிடலாம் என்று சொன்னால், அதைக் கேட்காமல், உயிர் போனாலும் போகட்டும் என்று தர்ம சாஸ்த்ரப்படி அதை அன்று ஒதுக்கத்தான் வேண்டும். இப்படியே அர்த்த சாஸ்த்ரக்காரர் தர்மத்தை விட்டு ஒரு ராஜா தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளச் சிலது செய்யலாமென்றால், இவற்றை ‘டிப்ளமஸி’ என்ற பெயரில்கூட தர்ம சாஸ்திரம் சொல்கிற ராஜதர்மம் ஒப்புக் கொள்ளாத இடத்தில் நாம் அர்த்த சாஸ்திரத்தைத் தள்ளி தர்ம சாஸ்த்ரத்தைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்யம், யுத்த ஜயம், கண்ணுக்குக் காதுக்கு இன்பம், அதிகாரம் என்று இந்த உபவேதங்களின் பலன் பிரத்யக்ஷத்தில் உடனே தெரிந்தால் தெரிந்துவிட்டுப் போகட்டும். தர்மாதர்மங்களின் பலன் அப்படித் தெரியாமல் அத்ருஷ்டமாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக நிரந்தரமானதை விட்டுத் தற்காலிகமானதைப் பிடித்துக் கொள்வார்களா? சரீரத்தைப் பல விதங்களில் ரக்ஷித்து ஸந்தோஷப்படுவதற்கு உபவேதங்கள் வழிசொன்னாலும், இந்த சரீரத்தைப் இப்படியே என்றைக்கும் ஸந்தோஷமாகக் காப்பாற்றித் தர அவற்றால் முடியுமா? சரீரம் போனவிட்டு தர்மாதர்மங்களுக்குத் தானே நாம் பதில் சொல்லியாக வேண்டும்?

உபவேதங்கள் தருகிற த்ருஷ்ட லாபங்களைவிட தர்ம சாஸ்திரங்கள் தரும் அத்ருஷ்ட லாபம்தான் உயர்ந்தது என்பதற்குப் பொது ஜன வசனமே அத்தாட்சியாயிருக்கிறது. நடைமுறை வாழ்க்கையில் த்ருஷ்டமாகவே அதாவது, கண்ணால் பார்க்கும்படியாகவே ஒரு பெரிய லாபம் கிடைத்துவிட்டால் “அத்ருஷ்டம் அடிச்சுது” என்றுதானே சொல்கிறோம்? ஆகையால் த்ருஷ்டத்தைத் தரும் அர்த்த சாஸ்த்ரம் முதலானதுகளும் அத்ருஷ்டத்தைத் தரும் தர்ம சாஸ்திரத்தின் காலில் விழ வேண்டியவைதான். ‘தர்மார்த்த காம மோக்ஷம்’ என்பதில் அர்த்தம் பெரும்பாலும் காமம் என்ற தற்கால ஸுகத்தைத் தருவதோடு முடிவதே. தர்மம்தான் நித்ய ஸுகமாயுள்ள மோக்ஷத்துக்கு உபாயம். அந்த தர்மத்தில் போவதற்கு அநுகூலமாகவே அர்த்தத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நான் இப்படிச் சொல்வதால், தற்காலத்தில் சிலர் நினைக்கிற மாதிரி சாணக்ய தந்திரம் முதலானவற்றில் ஜனங்களின் நன்மையையும், ஸத்யம் தர்மம் ஆகியவற்றையும் புறகணித்து ராஜாங்கத்துக்கு யதேச்சாதிகாரம் கொடுத்திருக்கிறது என்று தப்பாக நினைத்து விடக்கூடாது. தற்போது உலகத்தில் ‘மானார்க்கி’ (முடியரசு) உள்ள நாடுகள் உள்பட எல்லா தேசங்களிலும் யதேச்சாதிகாரம் இல்லாமல் ஸர்வ ஜன அபிப்ராயப்படி, ஸர்வ ஜன க்ஷேமத்துக்காகத்தான் அரசாட்சி நடத்தப்படுவதாக ஜனநாயகக் கொள்கை என்பதாக ஒன்று பேசப்படுகிறது. ஆனாலும் தினமும் ஒரு coup வருவதாகவும், கொஞ்ச காலத்திலேயே இந்த ராணுவ ஆட்சியும் போய் இன்னொரு மிலிடரி ஸர்க்கார் வருவதாகவும் தானிருக்கிறது. ஜனங்கள் நலனை முந்தி இருந்த ராஜாங்கம் கவனிக்கவேயில்லையென்றும், ஜனப் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்கள் ஸத்ய தர்மங்களை அடியோடு விட்டு விட்டு லஞ்சம், கையாலாகாத்தனம் இவற்றால் தேச வாழ்க்கையைக் கெடுத்து விட்டதாகவும் புது ஆட்சி ஏற்படுத்துபவர்கள் சொல்கிறார்கள். இப்போது நடக்கிற இத்தனை யதேச்சாதிகாரமோ, இப்போது பார்க்கிற இத்தனை inefficiency-யோ அர்த்த சாஸ்திரங்களில் அநுமதிக்கப் படவேயில்லை. இப்போது வாயினால் உசந்த ப்ரின்ஸிபிள்களைச் சொல்லிக்கொண்டே கார்யத்தில் ரொம்பவும் வேறு விதமாகச் செய்வதாக இருக்கிறது. அர்த்த சாஸ்த்ரங்களில் இப்படி வாயினால் ஒரேயடியாக தர்ம ஜோடனை பண்ணாமல், ஒரு ராஜாங்கம் நடத்துவதென்றால் அதில் ஒரு ராஜ்யத்தையே மேய்த்துக் கட்ட வேண்டியிருப்பதை முன்னிட்டும், மேலும் அந்நிய ராஜ்யங்களில் மோதல்களைச் சமாளிக்க வேண்டியிருப்பதை முன்னிட்டும், அநேக விஷயங்களை ரஹஸ்யமாகத்தான் வைத்திருக்க வேண்டும். சில விஷயங்களைக் கொஞ்சம் வேறே மாதிரித் தெரிகிற விதத்தில்தான் காட்ட வேண்டும்’ என்ற practical necessity-யால் ரொம்வும் ஸத்ய-தர்மம் பார்த்து முடியாது என்றே சில அம்சங்களில் காம்ப்ரமைஸ் பண்ணிக்கொண்டு போகும்படியாகச் சொல்லியிருக்கும். வார்த்தையில் ரொம்பவும் தர்ம ஜோடனை பண்ணாவிட்டாலும், கார்யத்தில் அதில் சொல்லியிருக்கிற அளவுக்கே ராஜாக்கள் விட்டுக்கொடுத்து ராஜ்ய பாரம் பண்ணினதால், இக்காலத்தில் கார்யத்தில் நடக்கிற அதர்மமும் யதேச்சாதிகாரமும் அப்போதெல்லாம் நடந்ததேயில்லை.

அர்த்த சாஸ்திரம்

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்கிற நாலில் தர்மத்துக்கு அடுத்தது அர்த்தம். ‘அர்த்தம்’ என்பதற்கு இங்கே அர்த்தம், ‘நடைமுறை வாழ்க்கை நடத்துவதற்குப் பிரயோஜனமாகிற பொருட்கள்’ என்பதே. வாழ்க்கை நடப்பதற்கு வீடு, வஸ்திரம், ஆஹார தானியம் முதலிய என்னவெல்லாம் வாங்குகிறோமோ அவையெல்லாம் ‘அர்த்த’த்தில் சேர்ந்தவைதான். இப்படி வாங்குவதற்காக நாம் சம்பாதிக்கிற பணத்துக்கும் ‘அர்த்தம்’ என்று பெயர். நடைமுறை வாழ்க்கை வாழ்ந்து என்றைக்கோ ஒருநாள் செத்துப்போய்விட்டு, மறுபடி இதே மாதிரி பிறந்து கொண்டிருப்பதற்கே இந்த ‘அர்த்தம்’ என்று ஆக்கிக் கொண்டுவிட்டோமானால் அப்போது அது அனர்த்தந்தான். “அர்த்தம் அநர்த்தம் பாவய நித்யம்” என்பதாக இந்த உண்மையைத்தான் எப்போதும் நினைவூட்டிக் கொள்ளும்படி ஆசார்யாள் உபதேசிக்கிறார்1. ‘இதில்லாவிட்டால் வாழ முடியவில்லை; ஆத்மாவை, பரமாத்மாவைத் தெரிந்துகொள்வதற்காக எல்லாரும் ஸந்நியாஸியாகப் போய்விட்டால் யார் அவர்களுக்கு பிக்ஷை பண்ணுவது? அதனால் சம்பாதித்துத்தான் ஆகவேண்டும்’ என்பதற்காகவே ‘அர்த்த’த்தில் ஈடுபட வேண்டும். சாதாரண மநுஷ்யர்களாக இருக்கப்பட்ட எல்லாருக்கும் இருக்கக்கூடிய நியாயமான ஆசைகளை மிஞ்சி அதியில் போகும்படி விடாமல் அளவோடு அந்த ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் ‘அர்த்த’த்தை நாடி சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும். இங்கே ‘அர்த்தம்’ என்பது அதற்கு அடுத்ததாக வரும் ‘காம’த்துடன் சேர்கிறது. ஆனால் அதோடோயே நின்றுவிடக் கூடாது. முடிவாக உள்ள புருஷார்த்தமான ‘மோக்ஷ’த்தை மறந்து ‘அர்த்த-காமம்’ என்பதிலேயே தலை தெறிக்கப்போய் விழப்படாது. இதற்கெல்லாம் அடிப்படையாக முதலில் வரும் ‘தர்ம’த்தில் ஆரம்பத்திலிருந்தே பிடிப்பு இருக்க வேண்டும்.

முதலில் தர்மத்தைச் சொன்னதற்குக் காரணம், இந்த லோகமாகிற மாயா நாடகத்தில் அர்த்த-காமங்கள் இல்லாமலிருக்க முடியாதென்றாலும், இந்த மாயை என்றைக்காவது ஒரு நாளாவது விலகிப்போய் ஞானமும் மோக்ஷமும் ஏற்பட வேண்டுமென்றால் அப்போது அர்த்த-காமங்களிலும்கூட அதர்மத்தைச் சேர்த்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். (அப்பர்) “பல பல காமத்தராகி” என்கிறாற்போல எத்தனையோ காமங்களிருந்தாலும் இப்படி ஏதோ ஒரு பொருளிடம் ஆசை இருக்கிறதென்றால், அந்த ஆசையையே தீய்த்துக் கொள்கிற வைராக்யமில்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அந்தப் பொருளைத் திருடிப் பெறக்கூடாது; இன்னொருத்தனை வஞ்சித்துப் பெறக்கூடாது. ரதி ஸுகம் தர்மபத்னியுடன் அநுபவிக்கலாமாயினும் நிஷேத தினங்களில் (சாஸ்த்ரங்களில் விலக்கப்பட்ட நாட்களில்) கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்; பர ஸ்திரீகளை மனஸாலும் நினைக்கப்படாது. பண ஸம்பாத்யம் பண்ணலாமாயினும் அதற்காக லஞ்சம் வாங்கக்கூடாது; இன்னொருத்தன் வயிற்றில் அடிக்கக் கூடாது. இப்படியெல்லாம் அர்த்த காமங்களுக்கும் தர்ம வேலி போட்டால்தான் என்றைக்கோ ஒரு நாளாவது ஞானப் பழம், மோக்ஷப் பழம் பழுக்க முடியும்.

‘அர்த்தம்’ தமிழில் ‘பொருள்’ எனப்படுகிறது. தர்ம-அர்த்த-காம-மோக்ஷங்கள் அறம்-பொருள்-இன்பம்-வீடு எனப்படுகின்றன. திருவள்ளுவர் திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் மூன்றும் மூன்று பகுதிகளில் சொல்லியிருக்கிறார். மோக்ஷத்தைப் பற்றித் தனியாக இப்படிப் பெரிய பகுதி இல்லாவிட்டாலும், அறத்துப் பாலிலேயே ‘இல்லற இயல்’ என்பதற்கு அப்புறம் ‘துறவற இயல்’ என்று சில அதிகாரங்கள் பண்ணி, அதில் நூற்றுக்கு மேற்பட்ட குறள்களில்2 மோக்ஷம் ஸித்திப்பதற்கான வழிகளைச் சொல்லியிருக்கிறார். அதிலே, “மோக்ஷ லோகம் போவதற்கு அருள் ரொம்ப அவசியம்; எவ்வளவு அவசியமென்றால் இந்த பூலோகத்தில் வாழ்வதற்குப் பொருள் எவ்வளவு அவசியமோ, அவ்வளவு” என்று சொல்லி, லோக யாத்ரைக்கு அர்த்தம் எப்படி இன்றியமையாதது என்பதை புரிய வைக்கிறார்:

அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை -பொருளிலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

வெயில், மழையால் உபத்ரவப்படாமலிருக்க வீடு வேணத்தான் வேண்டும். சரீரத்துக்குப் பசி முதலிய துன்பம் ஏற்படாமலிருக்க ஆஹாரம் வேணத்தான் வேண்டும். மானத்தை ரக்ஷித்துக்கொள்ள வஸ்திரம் வேணத்தான் வேண்டும். இப்படிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள பணம் வேணத்தான் வேண்டும். அதனால் மநுஷ்யாளுக்கு இதற்கான வழிகளைச் சொல்லித் தரத்தான் வேண்டும். அதுதான் ‘அர்த்த சாஸ்திர’ என்கிற நான்காவதான உபவேதம்.

ஆனால் அர்த்த சாஸ்திரத்தைப் பார்த்தால் அதில் பொருளாதாரத்தை, எகனாமிக்ஸைவிட அதிகமாக ராஜ நீதியை, ஸ்டேட்-க்ராஃப்ட், பாலிடிக்ஸ் ஆகியவற்றையே சொல்லியிருக்கும். திருக்குறளிலும் பொருட்பாலில் எடுத்தவுடனேயே அரசாட்சியைப் பற்றித்தான் வருகிறது. அப்புறம் பல அதிகாரங்களில் செங்கோல் ஆட்சியின் தன்மை, கொடுங்கோன்மை, நீதியோடு கூடிய தண்டனை முறை, அமைச்சர்கள்-ஒற்றர்கள்-தூதர்கள் பின்பற்ற வேண்டிய முறைகள், படை மாட்சி, கோட்டை கொத்தளங்களின் அவசியம், யுத்த தந்திரங்கள், வரி போட வேண்டிய நீதிகள் என்று ராஜாங்க விஷயங்களைப் பற்றியே நிறையச் சொல்லியிருக்கிறார்.

ஏனிப்படி என்றால், ஒரு மநுஷ்யன் ஆஹாரம், வஸ்திரம், வீடு, வயல், பணம் முதலிய ‘அர்த்த’ங்களால் வாழ்க்கை நடத்த வேண்டுமென்னும்போது அவனுக்கு இந்தப் பொருள்களை எல்லாம் தானே ரக்ஷித்துக் கொள்ள முடியாததால், ரக்ஷித்துத் தருவதற்கென்றே ஒரு பெரிய ஸ்தாபனம் தேவையாயிருக்கிறது. தேசமென்றிருந்தால் துஷ்டர்கள் இருக்கத்தான் இருப்பார்கள். அவர்கள் தாங்களாகப் பாடுபட்டு ஸம்பாதனம் பண்ணாமல் இன்னொருத்தனை அடித்துப் பிடித்து, கொலைகூடப் பண்ணி அவனுடைய உடைமையைக் கவரப் பார்ப்பார்கள். அப்படி விடக்கூடாது. அவனவனுக்கும் உடைமையைக் காப்பாற்றிக் கொடுக்க சக்தி வாய்ந்த ஒரு ஸ்தாபனம் தேவை. பலிஷ்டர்கள் பலஹீனர்களை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாமல், ஸாதுக்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்த முடியாதபடி கொலை, கொள்ளை, பெண்களை மானபங்கம் செய்வது என்றெல்லாம் செய்யாமல் தடுப்பதற்கு ஒரு அமைப்பு வேண்டும். அந்நிய தேசத்தினர் ஒரு தேசத்துக்குக் கூட்டமாக வந்து அதன் ஜனங்களைக் கஷ்டப்படுத்தி, அவர்களுடைய ‘அர்த்தம்’, மதம், கலாசாரத்தைச் சிதைத்துச் சேதம் பண்ணாமலும் தடுக்க வேண்டும். தடுத்தும், இந்த உள்நாட்டு-வெளிநாட்டு துஷ்டர்கள் கைவரிசையைக் காட்டிவிட்டால் அவர்களைத் தண்டித்து சிக்ஷை பண்ணுவதற்கும் அந்த அமைப்புக்கு அதிகாரமும், செல்வாக்கும், ஆள் பலமும் இருக்க வேண்டும். ஜனங்களுக்கு அர்த்தத்தை சேகரம் பண்ணிக் கொள்வதற்கும், லௌகிக ரீதியில் ஜீவனம் நடத்துவதற்கும் அதிகம் சொல்லித் தரவேண்டியதில்லை. Self-interest -ல் அவர்களே கொஞ்சம் சொல்லிக் கொடுத்தாலும் இந்த விஷயங்களில் விருத்தி பண்ணிக்கொண்டு விடுவார்கள். பிறன் interest -ஐக் கெடுக்காமல், தங்களுடைய சாச்வதமான interest -ஐயும் கெடுத்துக் கொள்ளாமல் அவர்களை இவ்விஷயங்களில் கட்டுப்படுத்தவே சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அது தர்ம சாஸ்திரத்தின் காரியம். அர்த்த சாஸ்த்ரம் என்று வருகிறபோது, இப்படி தனித்தனிப் பிரஜைகள் அர்த்தத்தைச் சேர்த்துக் கொள்விதைவிட, அத்தனை பிரஜைகளுமாகச் சேர்த்ததை ரக்ஷித்துக் கொடுப்பதற்கான ஸ்தாபனத்தைப் பற்றித்தான் நிறையக் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதோடு, அவர்களுடைய லௌகிக வாழ்க்கையைக் காப்பாற்றித் தருவதோடு அவர்களுடைய அத்யாத்ம வாழ்க்கை, கலாசாரம் இவற்றையும் பேணிக் காத்துத் தரும் ஸ்தாபனமாயும் இதுவே இருந்துவிட்டால், அது இத்தனை பெரிய கார்யங்களை, ஒரு பெரிய தேச ரீதியில் இதற்காக நடத்த வேண்டிய நிர்வாஹங்களை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தானே விஸ்தாரமாகச் சொல்ல வேண்டியதாயிருக்கும்?ராஜாங்கம் என்பது இப்படிப்பட்ட ஸ்தாபனம் தானே? ஒவ்வொரு தேசத்திலும் இப்படித்தானே எத்தனையோ ஆயிரம் வருஷங்களுக்கு முந்தியே ராஜாங்கம் என்பதை ஏற்படுத்தி, ஜனங்கள் முறையான வழியில் தாங்கள் ‘அர்த்தம்’ தேடுவதற்குக் குந்தகம் இல்லாமலிருப்பதற்காகவும், தேடிப் பெற்ற அர்த்தத்தையும் அதோடு தங்கள் ஜீவனையும் உள் சத்துருக்களிடமிருந்தும் வெளி சத்துருக்களிடமிருந்தும் ரக்ஷித்துக் கொள்வதற்காகவும், தங்களுடைய தேசிய கலாசாரம், மதம் முதலியவற்றைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் வழி கண்டிருக்கிறார்கள்? பின்னாடி பல ஸித்தாந்தங்கள் வந்து ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டு ராஜாங்கமே மெஜாரிட்டியாயிருக்கிற பலிஷ்டர்களின் பக்கம் இருந்துகொண்டு துர்பலர்களாயிருக்கிற மைனாரிட்டிகளின் உடைமைகளை நியாயாநியாயம் அவ்வளவாகப் பார்க்காமல் பறிப்பதாகவும், தேசாசாரங்களைச் சிதைப்பதாகவும் ஆனாலுங்கூட வாயளவில், எழுத்தளவில் இப்படிப்பட்ட ராஜாங்கமும் ஸர்வஜனங்களையும் தர்மப்படி ரக்ஷிப்பதற்காகவும், தேச தர்மத்தையும் இப்படியே போஷித்துத் தருவதற்காகவும் தான் இருப்பதாகப் பிரகடனம் பண்ணிக் கொள்வது வழக்கமாயிருக்கிறது. இங்கே ஐடியாலஜி, கொள்கை என்பவை வந்து மோதுகிறபடியால் ஜெனரலாகச் சொல்கிறேன். அர்த்த சாஸ்திரத்தில் ராஜாங்கத்துக்கு, ஆட்சி முறைக்கு முக்யமான இடம் கொடுத்ததற்குக் காரணம் ராஜாங்கந்தான் தேச ஜனங்களின் ‘அர்த்த’த்தை தர்மப்படி ரக்ஷித்துத் தருவதற்காக ஏற்பட்ட அமைப்பு என்பதால்தான்.


1“பஜகோவிந்த”த்தில்

2அறத்துப்பால் 25-37 அதிகாரங்களிலுள்ள 130 குறட்பாக்கள்

லக்ஷ்யம் மறக்கலாகாது

கலை என்பதற்காகவே பரவட்டும், பரப்பட்டும்;சந்தோஷம்தான். ஆனாலும் ஆதியிலிருந்து இந்தக் கலைகளுக்கு எது லக்ஷ்யமாயிருந்ததோ அது மறந்து போகுமாறு விட்டுவிடக் கூடாது. ஈச்வரனிடம் கொண்டு நிறுத்துவதற்காகத்தான் இவை ஏற்பட்டிருக்கின்றன என்ற நினைப்பு போகக்கூடாது. சரபோஜி போன்ற ராஜாக்கள் கேட்டுக் கொண்டால்கூட, ராஜஸதஸில் போய்ப் பாடுவதில்லை, ‘நிதி வேண்டாம்; ஈஸ்வர ஸந்நிதிதான் வேண்டும்’ என்று வைராக்யமாயிருந்த தியாகையர்வாள் போன்ற மஹான்களின் ‘ஐடியல்’ எப்போதும் நினைவில் இருக்க வேண்டும். சாந்த ஸெளக்யத்தைத் தானும் அடைந்து, மற்றவர்களும் அடைவிக்கப் பண்ணுவதாகவே காந்தர்வ வேதத்தை அதற்கான உயர்ந்த ஸ்தானத்திலே வைத்துக் காத்துக் கொடுக்க வேண்டும்.

தேச கௌரவத்தை உயர்த்தும் கலை

இந்த லக்ஷ்யம் நமக்கு எந்நாளும் மறந்து போகக் கூடாது. இப்போது வெளி தேசங்களிலெல்லாம் நம்முடைய ஸங்கீதமும் நாட்டியமும் பரவி வருகிறது. அங்கே யுனிவர்ஸிடிகளில் இவற்றைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பெரிய பெரிய உலக ஸ்தாபனங்களில் நம்முடைய ஸங்கீதக் கச்சேரி வைத்துப் புகழ்மாலை சூட்டுகிறார்கள். இதிலே நமக்கு ஒரு ஆறுதல். என்ன ஆறுதலென்றால், ஆதியில் நமக்கு லோகத்தில் எதனால் பெரிய கௌரவம் இருந்ததோ அந்தப் பாரமார்த்திகமான பெருமை இப்போது ரொம்பவும் எடுபட்டுப்போய், மற்ற தினுஸிலும் பெருமை இல்லாமல் எல்லா தேசங்களிடமும் நாம் கப்பரை நீட்டுவதாகவும், அதிலே போட்டு உபகரிப்பவர்களிடமும் நம் ஸ்தானத்துக்கு மீறி ‘உபதேசம்’ பண்ணி அவர்கள் நம்மை நன்றியில்லாதவர்கள் என்று மட்டமாய் நினைக்கும்படியாகவும் காரியங்கள் நடந்து வருகின்றன. இப்படியிருக்கிறபோது நம்முடைய ஸங்கீத, நாட்டியக்காரர்களை அவர்கள் ரொம்பவும் கொண்டாடி, ‘இந்தியாவில் உள்ள இந்தக் கலைகளைப் போல எங்கேயுமில்லை’ என்று கற்றுக் கொள்வதற்கு முன்வருவதைப் பார்க்கும்போது, “நாம் பிக்ஷாபாத்ரம் நீட்டுபவர்களாக மட்டுமில்லாமல் அவர்களுக்குப் போடுபவர்களாக இருக்கிற கௌரவம் இது ஒன்றால் தானே நமக்குக் கிடைத்திருக்கிறது?” என்று ஆறுதல் ஏற்படுகிறது.

நாட்டு-தொழில்-வாழ்க்கைப் பாடல்கள்

நாட்டுப் பாடல்கள் என்று ஒரு பிரிவு. இப்படியே நாட்டு மக்களுக்கென்று கூத்தும், பலவிதமான நடனங்களும் இருக்கின்றன – கரகம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை. எதுவானாலும் ஈச்வர சம்பந்தம் எப்படியாவது வந்து சேர்ந்துவிடும். தெம்மாங்கு, காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து முதலானவை நாட்டுப் பாடல் வகைகள். உழுகிறவன், ஏற்றம் இறைக்கிறவன், படகு ஓட்டுகிறவன், பாரம் இழுக்கிறவன், தயிர் சிலுப்புகிறவள், நெல்லு குத்துகிறவள் எல்லாருமே பாடிக்கொண்டே தொழில் பண்ணுகிறார்கள், வேலையின் பளு நெரிக்காமல் வேலையை மனசுக்குப் பிடித்த மாதிரி மாற்றித் தருகிற மருந்தாகப் பாட்டு இருக்கிறது. பல பேர் பாடி ஆடிக்கொண்டு வேலை செய்கிறபோது ஜாஸ்தி வேலையும் நடக்கிறது. இந்தப் பாட்டுகளிலும் கொஞ்சமாவது தெய்வ ஸம்பந்தம் தொட்டுக் கொள்ளாமலிராது.

மனசுக்கு உத்ஸாஹத்தைக் கொடுத்து அதனாலேயே சிரமமான சரீர உழைப்பையும் சுலபமாக்கித் தருகிற ஆற்றல் இசைக்கு இருப்பது போலவே, எந்த உணர்ச்சியானாலும் அதை நன்றாக கிளறிவிட்டு நம் மனஸை விட்டுக் கொட்டும்படிப் பண்ணி, இதனால் அப்புறம் சாந்தியை உண்டாக்கும் ஆற்றலும் அதற்கு இருக்கிறது. சாந்தம் தரும் சக்திக்குத் தாலாட்டை த்ருஷ்டாந்தம் காட்டினால் போதும். எத்தனை துஷ்டத்தனம் பண்ணுகிற குழந்தையானாலும் காலில் போட்டுக் கொண்டோ தூளியில் போட்டோ தாலாட்ட ஆரம்பித்து விட்டால் அப்படியே மயங்கித் தூங்கிப் போய் விடுகிறது. ஸர்ப்பம்கூட ஸங்கீதத்தில் கட்டுப்பட்டு லயித்து நின்று விடுகிறது. ஆரம்பத்தில் தாலாட்டிலிருந்து அந்திமத்தில் பிலாக்கணம் வரையில் பலவிதமான பாட்டுக்கள். அநேகமாக இதெல்லாம் ஸ்திரீகளின் சொத்தாகவே இருக்கிறது. பாட்டிலேயே புராணக் கதைகளைச் சொல்லித்தான் தாயார்க்காரி குழந்தைகளை நல்வழியில் கொண்டுபோவது முன் கால வழக்கம். குழந்தை எழுந்திருக்கிறதற்கு முந்தியே அம்மாக்காரி ‘ஷிஃப்டு’க்குப் போய் விடுவதுதான் புது நாடகம்! கல்யாணம் கார்த்திகை என்றால் ஊஞ்சல் நலங்கு என்று பாட்டுக்கள். மங்கள காரியம் எதுவானாலும் மேளம் நாயனமில்லாமல் இல்லை. அதற்கு மங்கள வாத்யம் என்றே பேர் ஏற்பட்டிருக்கிறது. யுத்தத்துக்கும் ரணபேரி, துந்துபி, ‘மார்ச்’ பண்ணுவதற்கென்று பாட்டுக்கள். National Song, தேசிய கீதம் என்று ரொம்பவும் மரியாதை கொடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம். ஸ்வதந்த்ரப் போராட்டத்தில் ஜனங்களுக்கு ஸ்வதேச உணர்ச்சி மூட்டுவதற்கே தேசிய கவிகள் என்கிறவர்களின் பாட்டுக்களைத்தான் முக்யமாகப் பாடிப் பிரசாரம் பண்ணினார்கள். சந்தோஷம், துக்கம், வீரம் என்று எந்த உணர்ச்சியானாலும் பாட்டில் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் முடிவாக சாந்தத்தில் சேர்க்கவே ஸங்கீதம். பரம ஸெளக்யத்தை ஸங்கீதத்தின் மூலம் அடைவதற்கே வழிகாட்டிய தியாகையர்வாள் ‘சாந்தமுலேக ஸெளக்யமு லேது’என்று பாடினதால் சாந்தம்தான் சங்கீதத்தின் நிறைவான குறிக்கோள் என்று தெரிகிறது. ஈச்வர ஸ்மரணம்தான் அப்படிப்பட்ட நித்யமான சாந்தத்தைக் கொடுக்க வல்லதாகையால் சங்கீதம் பரமாத்மாவை மையமாகக் கொண்டதாகவே நம்முடைய உயர்ந்த சம்பிரதாயத்தில் நெடுங்காலமாக வந்திருக்கிறது.

கலைப் பெரியார்கள்

இதில் ஸித்தியடைந்தவர்கள் காந்தர்வ வித்யை குறித்து அநேக சாஸ்திரங்களைத் தந்திருக்கிறார்கள்; அநேகம் ஸாஹித்யங்களையும் மற்றவர்கள் பாடுவதற்குத் தந்திருக்கிறார்கள். பரத ரிஷியை முக்யமாகச் சொன்னாலும் வேறு அநேக ரிஷிகள், தெய்விக புருஷர்களும் இவர்களில் இருக்கிறார்கள். நாரதர், அகஸ்த்யர், மதங்கர், ஆஞ்சநேயர், நந்திகேச்வரர் போன்றவர்களை ஸங்கீத உபாஸகர்களாகவும், சாஸ்த்ரகாரகர்களாகவும் சொல்லியிருக்கிறது. ‘ஹநும தோடி’ என்றே தோடி ராகத்துக்குப் பெயர். (கல்யாணி, சங்கராபரணம், பைரவி, ஷண்முகப்ரியா, ராமப்ரியா. கரஹரப்ரியா1 என்றே தெய்வ ஸம்பந்தமாக அநேக ராகப் பெயர்கள் இருக்கின்றன.) நமக்குக் கிடைத்திருக்கிற சுவடிகளிலிருந்து சார்ங்க தேவர், ஸோமதேவர், ராமாமாத்யர், மந்திரியாகவும் அத்வைத சாஸ்த்ரத்தில் கரைகண்டவராகவுமிருந்த கோவிந்த தீக்ஷிதர், அவருடைய புத்ரரான வேங்கடமகி முதலியவர்கள் சங்கீத சாஸ்த்ரத்துக்கு லக்ஷணங்கள், விவரணங்கள் கொடுத்து உபகரித்திருப்பது தெரிகிறது. மஹேந்த்ர வர்மா, ரகுநாத நாயக் போன்ற ராஜாக்களும் இப்படி உபகரித்திருக்கிறார்கள். குடுமியா மலையில் (புதுக்கோட்டைக்குப் பக்கம்) சங்கீத சாஸ்த்ரம் பற்றி மஹேந்த்ர பல்லவனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு இருக்கிறது. தற்போது நடைமுறையிலுள்ள வீணைக்கு ‘ரகுநாத வீணை’ என்று நாயக் ராஜாவை வைத்துத்தான் பெயர் ஏற்பட்டிருக்கிறது. இப்படிப் பல பேர் சங்கீதத்தில் நிறைந்த ஞானம், அநுபவம் பெற்றவர்கள்.

பூர்வத்தில் தேசம் பூராவுக்கும் ஒரே ஸங்கீத முறைதான் இருந்ததென்றும், முகாலய ஆட்சியில் வடக்கே எல்லாத் துறைகளிலும் foreign influences (விதேச அளாவல்கள்) அதிகமானபின் அங்கே ஹிந்துஸ்தானி ஸங்கீதமென்றும், தக்ஷிணத்தில் கர்நாடக ஸங்கீதமென்றும் பிரிந்ததாகவும் தெரிகிறது.

மெட்டமைத்து ஸாஹித்யம் செய்திருப்பவர்களில் சரித்ர காலத்திலே எண்ணூறு வருஷத்துக்குமுன் ‘கீத கோவிந்தம்’ இயற்றிய ஜயதேவரை முதலாவதாகச் சொல்கிறார்கள். அப்புறம் முக்யமாகச் சொல்வது புரந்தரதாஸ். ‘கர்நாடக’ சங்கீதம் என்றே அவரால்தான் பெயர் உண்டானதாக ஒரு அபிப்ராயம். இவர்கள் இருவரும் க்ருஷ்ண பரமாத்மாவைப் பாடியவர்கள். நாராயண தீர்த்தரும் ‘க்ருஷ்ண லீலா தரங்கிணி’ என்றே பாடியிருக்கிறார். ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் தமிழில் பண்ணியுள்ள ‘க்ருஷ்ண கானம்’ இப்போது பிரபலமாகி வருகிறது. பத்ராசல ராமதாஸ் முழுக்க ராமபரமாகவே கீர்த்தனைகள் செய்திருக்கிறார். நம் சங்கீதத்துக்கே முக்ய புருஷர்களாக ‘த்ரிமூர்த்திகள்’ எனப்படுகிறவர்களில் தியாகையரும் விசேஷமாக ராமார்ப்பணமாகவே பாடியிருக்கிறார். சிவன், அம்பாள் முதலானவர்கள் மீதும் சிற்சில க்ருதிகள் செய்திருக்கிறார். முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஐயனார், மாரியம்மனிலிருந்து ஆரம்பித்து ஒரு ஸ்வாமி விடாமல் அத்தனை தெய்வங்களையும் பாடியிருக்கிறார். சியாமா சாஸ்திரிகள் அம்பாள் ஒருத்தியையே பாடியிருக்கிறார். கோபாலக்ருஷ்ண பாரதியாரும், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை முதலியவர்களும் சிவனையே, அதிலும் முக்யமாக நடராஜாவையே பாடினவர்கள். அருணாசலக் கவிராயர் ‘ராம நாடகம்’ என்று செய்திருக்கிறார். கிறிஸ்துவரான மாயவரம் வேதநாயகம் பிள்ளை ஸர்வமத ஸமரஸமாக ஏக பரமாத்மாவைக் குறிப்பிடும்படியான வேதாந்தப் பாடல்கள் பாடி வைத்திருக்கிறார். நம் காலத்திலும் பாண்டித்யம், பக்தி உள்ள ஸாஹித்யகர்த்தாக்கள் இல்லாமலில்லை.

அன்றிலிருந்து இன்றுவரை யாராயிருந்தாலும் தெய்வத்தைக் குறித்துத்தான் பாடல் இயற்றுவதென்றும், ‘ஸெக்யூலர் தீம்’ என்னும் லௌகிக விஷயமாக இயற்றுவதில்லையென்றும் இந்திய மரபு வளர்ந்து வந்திருக்கிறது.


1கரஹரன்: கரன் என்ற அரக்கனை வதைத்த ஸ்ரீராமன்.

நாத நாட்டியங்களிலிருந்தே ஸ்ருஷ்டியும் முக்தியும்

சக்தி, சக்தி என்று சொல்லப்படுகிறவளே இப்படி அடங்கின ஸமுத்ரமாக சாந்தமாயிருக்கிறாற்போல, வேதாந்த சாந்த விசாரமாக இல்லாமல் ப்ராணசக்தியின் விழிப்பையும் எழுச்சியையும் நமக்குள் பூர்ணமாக ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலமே முடிவில் அத்வைத சாந்தத்தில் சேர்க்கிற ஒரு மார்க்கம் உண்டு. குண்டலிநீ யோகம் என்று பெயர். அதைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்வதானால்: முகெலும்பின் அடியிலுள்ள மூலாதாரம் என்பதிலிருந்து உச்சந்தலை வரையில் ஒரு முக்யமான நாடி இருக்கிறது. மூலாதாரத்தில் இருக்கிற பிராண சக்தியை இந்த நாடி மூலம் உச்சந் தலையில் சேர்த்து விட்டால் அத்வைத முக்தி ஸித்திக்கும். இந்த நாடியில் ஆறு சக்ரங்கள் இருக்கின்றன. பிராணாயாமம், மந்த்ரம், தியானம் முதலானவற்றால், எல்லாவற்றுக்கும் கீழேயுள்ள மூலாதார சக்ரத்திலிருந்து மேலே உள்ள ஒவ்வொரு சக்ரமாகக் ‘குண்டலிநீ’ என்கிற ப்ராண சக்தியை ஏற்றிக்கொண்டு போக வேண்டும். இவற்றில் ஹ்ருதயத்துக்கு நேரே இருக்கிற சக்ரத்தில் பிராணனையும் மனஸையும் நிறுத்தும்போது அங்கே தானாகவே ‘அநாஹதமாக’ ஒலிக்கிற பிரணவ சப்தத்தைக் கேட்க முடியும். அதனால் இதற்கு அநாஹத சக்கரம் என்றே பெயர். ஒவ்வொரு சக்கரத்திலும் சிவ-சக்தி தம்பதி ஒவ்வொரு ரூபத்திலிருப்பார்கள். அந்தந்த சக்கரத்தில் அதற்கான ரூபத்தில் பரமேச்வர பராசக்திகளை த்யானம் செய்ய வேண்டும். இந்த விஷயங்களை ‘ஸெளந்தர்யலஹரி’யில் நம் ஆசார்யாள் சொல்லிக்கொண்டு வரும்போது மூலாதார சக்ரத்தில் அம்பாள் ஈச்வரன் இரண்டு பேருமே நடனம் செய்பவர்களாக விளங்குகிறார்கள் என்று சொல்கிறார்1. லாஸ்யம் என்ற பெண்களுக்கான நடனத்தைச் செய்யும் ‘ஸமயா’ என்னும் ரூபத்தில் அம்பாள் இருக்கிறாளாம். நவரஸ மஹா தாண்டவம் – தாண்டவம் தான் புருஷர்களின் நடனம் என்று முன்னேயே சொன்னேன் அதைச் செய்கிற ஆனந்த பைரவர் என்ற மூர்த்தியாக ஈச்வரன் இருக்கிறாராம். இங்கே அவர் ஆடுவது ஊழிக்கூத்து என்ற ஸம்ஹார நடனமல்ல. ஊழியில் அழிந்த லோகத்தை மறுபடி ஸ்ருஷ்டி செய்வதற்காகவேதான், ஜனக-ஜனனியாக, அம்மா-அப்பாக்களாகத் தாங்களிருவரும் ஸகல லோகங்களையும் பெற்றெடுக்க வேண்டுமென்றேதான் இங்கே பரமேச்வரனும் பராசக்தியும் நர்த்தனம் செய்கிறார்களாம். தாயின் அன்பு மிளிர்கிற லாஸ்யத்தை அம்பிகையும், தகப்பனாக உலகை அடக்கியாளுவதற்குரிய காம்பீர்யம் நிறைந்த தாண்டவத்தை சிவபெருமானும் மூலாதார சக்ரத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனந்த பைரவி என்று ஒரு ராகத்தின் பேர் சொல்கிறோமே, இங்கே ஆனந்த பைரவரின் சக்தியாக இருக்கப்பட்ட ஸமயா தேவியின் இன்னொரு பெயர்தான் அது.

நாதம், நடனம் இவற்றிலிருந்தே ஸ்ருஷ்டி என்று சொல்வதிலிருந்து இந்த காந்தர்வ வித்யைகளின் பெருமை தெரிகிறது. Vibration-களிலிருந்தே creation (அதிர்வுகளிலிருந்தே படைப்பு) என்கிற ஸயன்ஸ் கொள்கையும் இதுவும் ஒன்றுதான். வைப்ரேஷன் (அதிர்வு) என்பதே ஆட்டம் தானே? சப்தத்தின் பலவிதமான ஆட்டம் ஸங்கீதம்; ரூபத்தின் பலவிதமான ஆட்டம் நாட்டியம். பூமி, ஸூர்யன், சந்திரன், நக்ஷத்ரம், கிரஹம் எல்லாம் சுற்றிச் சுற்றி ஆடிக்கொண்டுதானிருக்கின்றன. சின்னதற்கெல்லாம் சின்னதான அணுவுக்குள்ளும் எலெக்ட்ரானும், ப்ரோடானும் நம்ப முடியாத வேகத்தில் நாட்டியம் பண்ணிக் கொண்டிருக்கின்றன. இந்த நாட்டியம் நடக்காவிட்டால் அவை அணு என்ற ரூபமே பெறமுடியாது.

ஸ்ருஷ்டி இதிலிருந்துதான் பிறக்கிறது என்பதாலேயே ஸ்ருஷ்டியிலிருந்து விடுபடுவதற்கும் இதன் மூலத்துக்குப் போக வேண்டும் என்றுதானே ஆகிறது? அதனால்தான் கீத, வாத்ய, ந்ருத்யங்களையே மோக்ஷமார்க்கமாக அப்யஸிக்கச் சொல்லியருக்கிறது.


1‘தவாதாரே மூலே’ என்று தொடங்கும் 41-வது ஸ்லோகம்.

இசையால் அன்பும் அமைதியும்

வேதாந்தத்திலே எல்லாம் உள்ளத்துக்குள்ளே ஹ்ருதய குஹையில் சாந்தத்தில் ஒடுங்கிவிடுவதாகச் சொல்லியிருக்கிறது. அந்த சாந்தத்திலே சேர்க்கத்தான் ஸங்கீதம் ஏற்பட்டிருக்கிறது1. சியாமளா என்று ஸங்கீத மூர்த்தியாகப் பராசக்தி இருக்கிறபோது அவளுடைய உள்ளம் அப்படியே குழைந்திருக்கிறது (ம்ருதுள ஸ்வாந்தாம்); அவள் பரம சாந்தையாக இருக்கிறாள் (சாந்தாம்) என்று காளிதாஸன் ‘நவரத்னமாலா’வில் சொல்கிறார். உள்ளக் குழைவு என்பது ப்ரேமை, கருணை; ஸங்கீதத்தினாலே ஆத்ம சாந்தம் உண்டான பிறகு, ஸகலமும் அந்த ஆத்மாவே என்பதால் எல்லாவற்றிடமும் அன்பு பொங்குவதைத்தான் சாந்தாம், ம்ருதுள ஸ்வாந்தாம் என்று கவி சொல்கிறார். இந்த்ரிய இன்பமாயில்லாமல் ஆத்மானந்தத்தில் சேர்ப்பதாலேயே ஸங்கீதம் இப்படிப்பட்ட ப்ரேமையுள்ளத்தை உண்டாக்குகிறது. நினைத்துப் பார்த்தாலே மனம் குளிர்கிறது. அம்பிகை வீணையில் சப்த ஸ்வரங்களையும் மீட்டியபடி, அந்த ரீங்காரத்திலேயே சொக்கிப் பரம சாந்தையாக இருக்கிறாள்; அவளுடைய ஹ்ருதயம் புஷ்பம் மாதிரி மிருதுளமாக ஆகி கருணை மதுவைப் பொழிகிறது. இதை நினைக்கும்போது பக்தர்களுக்கும் மனம் குழைகிறது. பக்தியும், அன்பும், சாந்தமும் தன்னால் ஏற்படுகின்றன. வர்ணனாதீதமான சாந்தத்தில், ஆனந்தத்தில் முழுகியிருக்கிற ஸங்கீத அம்பிகை நமக்கும் சாந்தம், ஆனந்தம், அன்பினால் குழைந்த மனம் முதலியவற்றை அநுக்ரஹிக்கிறாள். ‘ஸங்கீத மூர்த்தி’ என்கிறபோது அவள் உத்தேசம் பண்ணி, அதாவது deliberate-ஆக இப்படிச் செய்கிறாளென்று தோன்றவில்லை. ஸப்த ஸ்வரங்களில் ரமிக்கவேண்டுமென்பதற்காகத்தான் அவள் வீணையை மீட்டுவதாகத் தெரிகிறது. “ஸரிகமபதநி ரதாம்” என்று ஸப்தஸ்வரானந்தப்படுபவளாகவே ஸ்லோகத்தில் ஆரம்பித்திருக்கிறது. அவள் அப்படி ஆனந்தப்பட்டால், லோகம் பூரா அவளுக்குள் இருப்பதால் லோகமும் ஆனந்தப்படுகிறது. இப்படி லோகம் ஆனந்தப்படுவதற்காகத்தான், லோகத்தில் ஆனந்தத்தை ஊட்டும் ஸங்கீதக் கலைக்கு அநுக்ரஹம் செய்வதற்காகத் தான் ஸப்த ஸ்வரங்களில் ரஸித்து அவளும் ஆனந்திக்கிறாள். இங்கே ‘ஸரிகமபதநி’யில் களிப்பவள் என்று காளிதாஸன் சொல்லியிருக்கிறாற்போலவே தியாகையர்வாளும் ஈச்வரனை ‘நாத தநும் அநிசம்’ கீர்த்தனத்தில் ‘ஸரிகமபதநி வர ஸப்த ஸ்வரவித்யாலோலம்‘ என்கிறார். நாம் உத்தேசிக்காவிட்டாலும் ஸப்தஸ்வரத்தில் ஹ்ருதயம் லயித்து இருந்துவிட்டால் சாந்த ரஸம் தானாக உண்டாகிவிடும். ‘சாந்தாம்’ என்று காளிதாஸன் சொன்னதையேதான் தியாகையர் க்ருதியில் ‘விமல ஹ்ருதய’ என்று சொல்லியிருக்கிறது. விமல ஹ்ருதயம் என்பது அதில் சாந்தி, ப்ரேமை இரண்டும் அடங்கியிருப்பதைக் குறிக்கிறது. அதாவது காளிதாஸன் ‘ம்ருதுள ஸ்வாந்த’ என்பதில், சொன்ன அன்பும் ‘விமல ஹ்ருதய என்பதில் வந்துவிடுகிறது. ‘ஸ்வாந்தம்’ என்றால் ‘ஹ்ருதயம்’ தான். ஸங்கீதத்தால் சாந்தம் வரும். அதேபோல சாந்த ரஸத்திலே ஸங்கீதம் தானாக நிறைந்துவிடும். இதனால்தான் ஸதாசிவ ப்ரம்மேந்திராள் போன்ற மஹாஞானிகள் கூடப் பாடியிருக்கிறார்கள். ஸங்கீதத்துக்காகவே ஸங்கீதம், அல்லது ஆத்மாவுக்காக ஸங்கீதம் என்று பாடிக் கொண்டிருந்தால்தான் நிறைந்த சாந்தம் அதிலேயே ஏற்படும். ‘ஸங்கீதம் அப்யஸித்தும் அசாந்தமாயிருக்கிறதே’ என்றால் மனஸ் வேறு எதையோ ஆசைப்படுகிறது என்று அர்த்தம்.ஸங்கீதத்தைக் கொண்டு திரவியமோ புகழோ வேண்டும் என்ற ஆசையிருந்தால் பூர்ணபலன், அதாவது நிறைந்த சாந்தம் ஏற்படாது. அப்போதுங்கூட சில சில ஸமயங்களில் சாந்தம் உண்டாகும் – தேன் எடுத்தவன் புறங்கையை நக்கிக்கொண்டு ஏதோ கொஞ்சம் ருசி பார்ப்பது மாதிரி. பாக்கி தேனை அவன் ரஸாஸ்வாதம் பண்ணுவதில்லை. அது கடைக்குப் விலைக்குப் போகிறது. இப்படி ஸங்கீதத்தை விலை பண்ணுவது, அதனால் புகழ் எடுப்பது என்கிறபோதுகூட வித்வான்கள் அவ்வப்போது தன்னை மறந்து பாடுகிறார்கள்; நம்மையும் ‘தன்னை மறக்க’ப் பண்ணுகிறார்கள். இதிலே கொஞ்சம் சாந்தம், ஸந்தோஷம் அடைகிறோம். தியாகையர் மாதிரி ஹ்ருதய பூர்வமாக அதிலேயே ஈடுபட்டு வேறு பிரயோஜனம் வேண்டாமென்று இருந்துவிட்டால் நிறைந்த சாந்தம், பேரானந்தம் எல்லையில்லாமல் கிடைத்துவிடும். நல்ல நாதோபாஸகர்களானால் ஹ்ருதயம் புஷ்பம் போல் ம்ருதுவாகிவிடும். தியாகையர், கோபாலகிருஷ்ண பாரதி போன்றவர்களிடம் பழகினவர்கள், அவர்களுடைய ஹ்ருதயம் கருணையோடு மிருதுவாக இருந்தது என்று எழுதியிருக்கிறார்கள். இன்றைக்கும் உத்தமமான பாகவதர்களிடம் பழகுகிறவர்கள் அவர்களுடைய மென்மையான மனஸைப் பற்றிச் சொல்கிறார்கள்.


1“தெய்வத்தின் குரல்” முதற் பகுதியில் ‘ஸங்கீத லக்ஷியம் சாந்தமே‘ எனும் உரை பார்க்க.

தெய்வங்களின் தொடர்பு

ஸங்கீத, நாட்யக் கலைகளுக்கு தெய்வங்களோடேயே இப்படி ஸம்பந்தம் ஏற்படுத்தியிருக்கிறது. நடராஜமூர்த்தி போல லோகத்திலே எதுவும் கிடையாது என்று இன்று லோகத்திலிருக்கிற அறிஞர்களெல்லாரும் சொல்கிறார்கள். நம் தேசத்துக்கு ரொம்ப உசந்த ‘ஸிம்ப’லாக வெளி தேசத்திலிருக்கிறவர்களுக்கு ஏதாவது ‘ப்ரெஸன்ட்’ பண்ணுவதென்றால் ராஜாங்கத்தினரே நடராஜ விக்ரஹம்தான் கொடுக்கிறார்கள். அந்நிய தேச ம்யுஸீயங்களுக்கு மில்லியன், இரண்டு மில்லியன் டாலர் விலைக்குப் போவது நம் கோவில்களிலிருந்து திருடின நடராஜாதானென்றால், அந்த நடராஜாவின் சிறப்பு முழுவதும் நடனத்தால் ஏற்படுவதுதான். நர்த்தன கணபதி, காளிங்க நர்த்தன மூர்த்தி, நடன ஸரஸ்வதி என்றெல்லாமும் நாட்டியமூர்த்திகளிருக்கின்றன.

வாத்யங்களை எடுத்துக் கொண்டாலும் ஒரே தெய்வ ஸம்பந்தந்தான். கலைத் தெய்வம் என்றே சொல்கிற ஸரஸ்வதி கையில் வீணை இருக்கிறது. வீணைதான் நம் ஸங்கீதத்துக்கே ஜீவநாடி என்பார்கள். அதனால் ஒவ்வொரு தெய்வத்துக்கும் உள்ள வீணைக்கென்று ஒரு பெயர் உண்டு. ‘கச்சபி’ என்பது ஸரஸ்வதியின் வீணை. ‘விபஞ்ச்யா காயந்தீ’ என்ற ‘ஸெளந்தர்ய லஹரி’ ஸ்லோகத்தில், ஸரஸ்வதியானவள் அம்பிகையின் ஸந்நிதியிலே சிவலீலைகளை வாயால் பாடிக்கொண்டே ‘விபஞ்சி’ வாசிக்கிறாள் என்று ஆசார்யாள் வர்ணித்திருக்கிறார். ‘விபஞ்சி’ என்பது வீணைக்கு ஒரு பொதுப் பெயர்.

‘நாரத கானம்’ என்பதாக ஸங்கீதத்தில் பரம உத்க்ருஷ்டமானதைச் சொல்கிறோம். த்யாகராஜ ஸ்வாமிகளுக்கு ஸங்கீத சாஸ்த்ர புஸ்தகத்தைக் கொடுத்து அநுக்ரஹித்தவர் நாரதர்தான். “நாரத குருஸாமி” என்று அவர் மேலேயே தியாகையர்வாள் பாடியிருக்கிறார். நாரதர் கையிலும் வீணை இருக்கிறது. அந்த வீணைக்கு ‘மகதி’ என்று பேர். “எம் இறை நல் வீணை வாசிக்கும்மே” என்பதாக அப்பர் ஸ்வாமிகள் பரமசிவன் வீணாகானம் செய்து கொண்டிருப்பதைச் சொல்கிறார். கைலாஸத்துக்கு அடியிலே மாட்டிக் கொண்ட ராவணேச்வரன் அதிலிருந்து விடுபடுவதற்காகத் தன் சிரஸுகள், நரம்புகள் ஆகியவற்றை அறுத்து வீணை பண்ணி, அதில் ஸாமகானத்தை வாசித்தே ஈச்வரனைப் பிரீதி பண்ணி மீண்டானென்று கதை.

கிருஷ்ண பரமாத்மா என்றாலே அவரோடு இணை பிரிக்க முடியாததாகப் புல்லாங்குழல் வந்து விடுகிறது. வேணுகோபாலன், முரளீதரன் என்றெல்லாம் அவருக்குப் பெயர்கள் ஏற்பட்டிருக்கின்றன.

ப்ரதோஷ ஸ்தோத்ரம் என்று ஒன்று உண்டு. அதிலே அத்தனை தெய்வங்களையும், கீத வாத்யங்களோடு ஸம்பந்தப்படுத்திச் சொல்லியிருக்கிறது. ஸாக்ஷாத் பரமேச்வரன் ப்ரதோஷ காலத்தில் அம்பாளை ரத்ன பீடத்தில் உட்கார்த்தி வைத்துவிட்டு அவளுக்கெதிரே, கைலாஸ மலையிலே நடனம் செய்கிறானாம். அவனுடைய டான்ஸுக்குத்தான் ஆர்க்கெஸ்ட்ராவாக அத்தனை தேவர்களும் வாத்யம் வாசிக்க வந்திருக்கிறார்களாம். வாக்தேவியான ஸரஸ்வதி வீணை வாசிக்கிறாளாம், வீணைக்கு ‘வல்லகி’ என்று ஒரு பேர். அந்தப் பேரைதான் இங்கே சொல்லியிருக்கிறது. இந்த்ரன் புல்லாங்குழல் ஊதுகிறானாம். பிரம்மா ஜால்ரா போடுகிறாராம். லக்ஷ்மி வாய்ப்பாட்டுப் பாடுகிறாளாம். விஷ்ணு ம்ருதங்கம் வாசிக்கிறாராம். நந்திகேச்வரைத்தான் பொதுவில் ம்ருதங்கத்துக்கு சொல்வது வழக்கம். ஆனால் ப்ரதோஷ தாண்டவத்தின் போது நந்திகேச்வரர் யஜமானனின் லாவண்யத்தில் தன்னையே மறந்து போய்விட்டார் போலிருக்கிறது1. அதனால் மஹாவிஷ்ணு ம்ருதங்கம் வாசித்திருக்கிறார். பரமேஸ்வரனோடு மஹாவிஷ்ணுவுக்கு எத்தனை விதமான உறவுகளிருக்கின்றன என்று நம் ஆசார்யாள் ‘சிவாநந்தலஹரி’யில் “பாணத்வம் ரிஷபத்வம்” என்ற ஸ்லோகத்தில் அடுக்கிக் கொண்டு போகிறபோதும் அவர் சிவ தாண்டவத்துக்கு மத்தளம் கொட்டுவதை “ம்ருதங்க வஹதா” என்று குறிப்பிடுகிறார்.

ப்ரதோஷ நாட்யத்தில் அம்பிகையை சிவ தாண்டவத்தை வெறுமே பார்த்துக்கொண்டு ரஸிப்பவளாக மாத்திரம் சொல்லியிருக்கிறது. இந்த ஆனந்த தாண்டவத்தை மட்டுமின்றிக் கல்பப் பிரளயத்தில் எல்லாவற்றையும் தன்னில் ஒடுக்கிக் கொண்டு ஈஸ்வரன் ஸம்ஹார தாண்டம் செய்யும்போதும் அம்பாள் ஒருத்தி மட்டும் அழிந்து போகாமல் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று லலிதா ஸஹஸ்ர நாமத்தில் சொல்லியிருக்கிறது:

மஹேச்வர மஹா கல்ப மஹா தாண்டவ ஸாக்ஷிணீ.

அந்தப் பரதேவதையையே ஸங்கீத தேவதையாகச் சொல்லும்போது ராஜ மாதங்கி, ராஜ ச்யாமளா என்று பெயர். “மீநாக்ஷி மே முதம் தேஹி … ராஜ மாதங்கி” என்று தீக்ஷிதர் பாடியிருக்கிறபடி மதுரையிலே நித்ய வாஸம் பண்ணுகிற மீநாக்ஷியானவள் பராசக்தி ஸங்கீதத்தின் அதி தெய்வமாக இருக்கப்பட்ட அவஸரம் (கோலம்) தான். காஞ்சீபுரத்தில் காமாக்ஷி கோயிலிலும் இவளுக்குத் தனி ஸந்நதி இருக்கிறது. ‘ச்யாமளா தண்டகம்’ இப்படி ஸங்கீதமூர்த்தியாக இருக்கப்பட்ட பராசக்தியைப் பற்றியதே. ‘நவரத்னமாலா‘ என்பதாக ‘ஓம்கார பஞ்ஜர சுகீம்‘ என்று ஆரம்பிக்கிற – ஸ்துதி ஒன்றைக் காளிதாஸன் செய்திருக்கிறான். அதுவும் இந்த ச்யாமளா தேவியைப் பற்றியதுதான். அதிலே இவளும் ஸரஸ்வதியைப் போலவே கையில் வீணை வைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. “வீணா ஸங்க்ராந்த காந்த ஹஸ்தாம்“. நிறத்தில் மட்டும் அவளுக்கும் இவளுக்கும் நேர் வித்யாஸம். ஸரஸ்வதி நல்ல வெளுப்பு. இவளே சாம்பல் கறுப்பு. அதனால்தான் ‘ச்யாமளா’ என்று பெயர். இவளுடைய லாவண்யம் நிறைந்த கையின் நுனிவிரல் வீணையின் தந்திகளில் எப்போதும் ஸஞ்சாரம் பண்ணிக் கொண்டிருக்கிறது. அவள் இப்படி இருக்கிறாளென்றால் நாமும் ஸங்கீத உபாஸனையால் அவளைப் பிடித்துவிடலாம் என்று அர்த்தம். நிறைய சாஸ்த்ராப்யாஸம் பண்ணி, யோகாதிகளால் சித்தத்தை நிறுத்தி வசப்படுத்த முடியாத நாமும் ஸ்வரங்களில் லயிப்பதால் மனஸை நிறுத்தி அவளுடைய சரணார விந்தத்தில் அதைக் கிடத்திவிடலாம். ஸுலபமாக அவள் கடாக்ஷத்தைப் பெற்றுவிடலாம்.

‘ப்ரதோஷ ஸ்தோத்ர’த்தைப் போல அந்த ப்ரதோஷ கால நடராஜ தாண்டவத்தை வர்ணிப்பதாக ‘சம்பு நடன அஷ்டகம்’ என்று ஒன்று உண்டு. இது பதஞ்ஜலி பண்ணின ஸ்தோத்ரம். அவர் ஆதிசேஷன் அவதாரம். அவரைப் போலவே நடராஜாவோடு ஸதா இருக்கும் வ்யாக்ர பாதர் புலிக்கால் பெற்றவர். பாம்பு, புலி முதலான க்ரூர ஜந்துக்களையும் ஸங்கீத நாட்யங்கள் ப்ரேமையாய், சாந்தமாய் பண்ணிவிடுகிறதென்று அர்த்தம். இந்த ‘அஷ்டக’ ஸ்லோகங்களின் சொல்லமைப்பாலும், கதியாலும், சொல்கிறபோதே எதிரே நாட்டியம் நடக்கிறது போன்ற ப்ரமை தட்டும். இதை ப்ரதோஷ பூஜையில் ந்ருத்யோபசாரம் பண்ண வேண்டிய இடத்தில் வாஸ்தவமாகவே சந்த்ர மௌளீச்வரருக்கு நாட்டியமாக அர்ப்பணிக்க வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது. மடத்திலே ஸ்த்ரீகள் ஆடுவதற்கு இடமில்லை. அதனால், த்ரவியத்தையோ கீர்த்தியையோ முன்னிட்டதாயில்லாமல் பூஜாங்கமாக ஈஸ்வரனுக்கு ஸமர்ப்பணமாவதுதானே என்பதால் நம்முடைய ஆஸ்தான (ஸங்கீத) வித்வானையே2 இந்த ஸ்தோத்திரத்துக்கு அபிநயம் பிடிக்கும்படி சொன்னேன். அவர் முதலில் பயந்தேபோய்விட்டார். ‘எத்தனையோ வருஷம் நாட்ய சிக்ஷை சொல்லிக் கொண்டால்தானே இது வரும்? தமக்குப் பாட்டில் உள்ளது போல டான்ஸில் பரிசயமில்லையே’ என்பதால் பயப்பட்டார். நான்தான் “ஒன்றும் பயப்பட வேண்டாம்! நடராஜாவை நினைத்துக் கொண்டு, குயவன் களிமண்ணைத் துவைக்கிற மாதிரி காலாலே பண்ணிக்கொண்டு, சொல்போகிற போக்கில் கையைக் காட்டிக்கொண்டு போ. ஸரியாய் வந்துவிடும்” என்று தைரியம் கொடுத்தேன். அப்படியே நன்றாக அமைந்தது. சிதம்பரத்திலே சுத்த மத்தளம் என்கிற ‘ஸ்பெஷல் டைப்’ மத்தளம் நடராஜாவுக்கு வாசிக்கப்படுகிறது. அதனால் இந்த சம்பு நடன அபிநயத்தின் போதும் இங்கே சுத்தமத்தளம் வாசிக்குமாறு ஏற்பாடு செய்தது. சங்க நாதத்தையும் சேர்த்துக் கொண்டது. இதனால் பூஜையிலேயே ஸாந்நித்யம் கூடுதலாகி விட்டாற்போல இருந்தது.

இதற்கெல்லாம் என்ன அர்த்தமென்றால் ச்ருதி-லய சங்கீதம், ந்ருத்யம் எல்லாமே உபஸனையாக அப்யஸிக்கப்பட்டால் நம்மை ஈஸ்வர ஸந்நிதானத்திலேயே கொண்டுபோய் நிறுத்திவிடும். முடிவிலே அந்த ஸந்நிதானம் எங்கே இருக்கிறது? நம் ஹ்ருதயத்துக்குள்ளேயேதான். அதற்குள்ளே அடங்கி ஆத்மானந்தத்தை அடைய ஸங்கீதம் ஒரு வழி.


1நந்திகேச்வரரின் இரு கொம்புகளுக்கிடையேதான் ஈசன் ப்ரதோஷத் தாண்டவம் செய்வது.

2ஸ்ரீவாஞ்சியம் ராமசந்திரய்யர்.