அபரிக்ரஹம்

நமக்காக ஸம்பாதனம் செய்துகொள்வது, செலவழித்துக் கொள்வது இரண்டிலுமே ரொம்பவும் கணக்காயிருப்பதுதான் இதற்கு அடிப்படை. இதைத்தான் ‘அபரிக்ரஹம்’ என்று பெரிய தர்மமாக சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. ‘பரிக்ரஹம்’ என்றால் உடைமை சேர்த்துக் கொள்வது; அப்படிச் சேர்த்துக் கொள்ளாமலிருப்பதே ‘அபரிக்ரஹம்’. நீ ஜீவிப்பதற்கு எது அத்யாவச்யமோ அதற்கு அதிகமாக ஒரு துரும்புகூடச் சேர்த்துக் கொள்ளாதே’ என்பதுதான் அபரிக்ரஹ தர்மம். இதை யோக சாஸ்திரத்தில் ஸாதகன் அடிப்படையாகக் கொள்ள வேண்டிய ஐந்து ‘யம’ங்களிலேயே ஒன்றாகப் பதஞ்ஜலி (யோக ஸூத்ரத்தில்) சொல்லியிருக்கிறார். ‘யமம்’ என்றால் அடக்கி வைப்பது. மஹா பாபிகளையும் அடக்கி வைத்துத் தண்டிப்பதால் யமனுக்கு அப்படிப் பெயர். மனஸை அடக்குகிறதற்குப் பதஞ்ஜலி யோகஸூத்ரம் எழுதினார். அதிலே ஐந்து யமங்களாக அஹிம்ஸை, ஸத்யம், அஸ்தேயம் (திருடாமை) , பிரம்மசர்யம் ஆகியவற்றோடு அபரிக்ரஹத்தையும் சொல்லியிருக்கிறது. ‘அது வேணும், இது வேணும்’ என்று பொருளைச் சேர்த்துக் கொள்கிற ஆசை அடங்கணும் என்றே இதைச் சொல்லியிருக்கிறார். இந்த ஆசை அடங்கினால், பணத்தாசை, அதற்காக எந்த தேசத்துக்கு வேண்டுமானாலும் போய் என்ன தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற பறப்பு, எந்தப் பொய் புரளி வேண்டுமானாலும் பண்ணிப் பணம் பண்ணலாம் என்ற அரிப்பு எல்லாமே போய்விடும்.

மநு தர்மசாஸ்திரத்தில் ஐந்து தர்மங்களை அடிப்படையாகச் சொல்லுமிடத்தில் அஹிம்ஸை, ஸத்யம், அஸ்தேயம் இந்த மூன்றையும் சொல்லிவிட்டு நாலாவதாக ‘சௌசம்’ என்னும் சுத்தத்தையும், கடைசியில் இந்த்ரிய நிக்ரஹத்தையும் கூறியிருக்கிறார். ‘பிரம்மசர்யம்’ என்று பதஞ்ஜலி சொன்னதைக் கொஞ்சம் விஸ்தாரம் பண்ணினால் அதுவே இந்திரிய நிக்ரஹம். பதஞ்ஜலி சொன்ன அபரிக்ரஹத்துக்குப் பதில் மநு சௌசத்தைச் சொல்லியிருக்கிறார். தனக்கு அத்யாவச்யமானதற்கு அதிகமாக ஒன்றைச் சேர்த்துக் கொண்டால் அதுவே திருட்டுதான் என்று மநு நினைத்திருப்பார் போலிருக்கிறது. அதனால் ‘அஸ்தேயம்’ என்று (திருடாமையைச்) சொன்னதிலேயே அபரிக்ரஹமும் அடக்கம் என்று அவர் அபிப்ராயப்பட்டிருக்கலாம்.

திருட்டுக்குப் பல டெஃபனிஷன்! “உள்ளங்கவர் கள்வன்“, “சித்த சோர்” என்றெல்லாம் பகவானுக்கே திருட்டுப் பட்டங்கள்! வரவு சிறுத்து செலவு பெருகினால் அதுவே ஒரு திருடு என்று வசனமிருக்கிறது. கீதையில் பகவான் லோக வாழ்க்கைக்கானவற்றை தேவ சக்திகளிடமிருந்தே பெறுகிற மனிதனானவன் அவற்றை அவர்களுக்கு அர்ப்பணிக்காமல் அநுபவித்தால் அதுவே ஒரு திருட்டு தான் என்கிறார்1.

ஜீவாதாரத் தேவைக்கு ஜாஸ்தியாக எதைச் சேர்த்துக் கொண்டாலும் அது கொள்ளையடித்து வைத்துக் கொள்கிற தோஷம்தான் என்று கருதி, அபரிக்ரஹ தர்மத்தைப் பின்பற்ற முயலவேண்டும்.

நம்முடைய ஆசார்யாளும் “விவேக சூடாமணியி” ல் இதைச் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறார். யோகத்தின் முதல் வாசல் மௌனம் என்று சொல்லிவிட்டு அடுத்ததாக அபரிக்ரஹத்தையே கூறுகிறார்:

யோகஸ்ய ப்ரதமம் த்வாரம் வாங்நிரோதோ (அ)பரிக்ரஹ:

ரூபாய் என்று ஒன்று ஏற்பட்ட நாளாகத்தான் சொந்தத்துக்கு ஜாஸ்தி சேர்த்து மூட்டை கட்டிவைத்துக் கொள்வது, தன்னுடைய துராசைகளுக்கே கன்னா பின்னா என்று செலவழிப்பது இதெல்லாம் அதிகமாகி, தானதர்மங்கள் பண்ணுவதற்கும், அபரிக்ரஹ தர்மத்துக்கும் ஹானி உண்டாகி வந்திருக்கிறது. ரூபாய் என்று ஒன்று இல்லாத நாள் உண்டா என்று தோன்றலாம். அப்படி ஒரு நாள் இருந்திருக்கிறது. ஆதியில் எல்லா இடத்திலும் barter என்று ஒரு பொருளுக்குப் பதில் இன்னொரு பொருளை ‘எக்ஸ்சேஞ்ஜ்’ (பரிவர்த்தனை) பண்ணிக்கொள்வதுதான் இருந்ததே தவிர ரூபாயோ ஸ்டெர்லிங்கோ டாலரோ இல்லை. அப்புறந்தான் ஒவ்வொரு சீமையிலும் ஸமுதாயங்கள் ஒரு அமைப்பாகக் கெட்டிப்பட்டு, அங்கங்கே ராஜாங்கம் தோன்றி ஒரு ஆட்சி முறையின் கீழே வந்த பிற்பாடு நாணயம், கரென்ஸி என்பது தோன்றிற்று. எந்தப் பொருளானாலும் இதைக் கொண்டு மதிப்பை நிர்ணயம் பண்ணுவது ஸுலபமாயிருந்தது. கையடக்கமாக எடுத்துப் போகும்படியாகவும், வைத்துக் காக்கும்படியாகவும் இப்படி ஒன்றை ஏற்படுத்திக்கொண்டார்கள். ஆனாலும் ஈஸ்ட் இண்டியா கம்பெனி ஆட்சி வருகிறவரை கூட நம் நாட்டில் எல்லா ஜனங்களிடையேயும் விசேஷமாக நாணயப் பழக்கம் இருந்துவிடவில்லை. மேல்மட்டங்களில் சில கார்யங்களுக்கு மட்டுந்தான் நாணய மாற்றத்தில் கொடுக்கல் வாங்கல் நடந்தது. ஒரு நாணயத்துக்கு நிஜமாகவே அதன் மதிப்பு இருக்கும்படியாகத் தங்கம், வெள்ளி இவற்றிலேயே காசு இருந்ததால், அதிகமாகக் கிடைக்காத இந்த லோஹங்களில் அளவாகவே நாணயம் போடுவார்கள். அப்புறம்தான் நாணயத்துக்கும் அதன் மதிப்புக்கும் ஸம்பந்தமேயில்லாமல் நிக்கல், செம்பு, வெறும் காகிதம் என்று ஏற்பட்டபின் இஷ்டத்துக்கு அச்சடித்து எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் விநியோகிப்பதாக ஆகிவிட்டது. இதற்கு முன்னாடி, ஸமீப நூற்றாண்டுகளில் கூட பொதுஜனங்களுக்கிடையே பண்ட மாற்று முறையில் தான் பெரும்பாலும் வியாபாரம் நடந்தது. அரசாங்கத்திற்குக்கூட விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு தான்யமாகவே தான் கொடுக்கப் பட்டு வந்தது. பாக்கி தான்யத்தைப் பணமாக்க முடியாது. வியவஸாய நாடு அல்லவா இது? இங்கே உற்பத்தியாகிற பண்டங்களில் தான்யம்தான் மிகவும் அதிகம். அநேகமாக ஒவ்வொருவனுக்கும் சொந்தமாகத் துண்டு நிலமாவது இருக்கும்; அல்லது வர்ணாச்ரம பரிபாலனம் ராஜாங்கக் கடமையாக இருந்ததால் தன் குலத்தொழிலைச் செய்கிற அநேகத் துறையினருக்கு ராஜமான்யமாக நிலமோ, தான்யமோ கிடைத்து வந்தது. தவிர பாக்கியை விற்றுப் பணம் பண்ணுவதற்குப் பெரும்பாலும் இடமில்லாமலே இருந்தது. அதனால் வருகிற போகிற யாத்ரிகர்களுக்கெல்லாம் அன்ன சத்திரம், கோயிலில் முக்குறுணி நாலுகுறுணி என்று நிவேதனம் பண்ணிப் பிரஸாதமாக விநியோகிப்பது, லக்ஷ பிராம்மண போஜனம் என்கிற மாதிரி தானதர்மம் என்றெல்லாம் செய்தே தீரவேண்டியிருந்தது. அப்புறம் பணமாய்ப் பண்ணிப் பாங்கில் போட்டுக் கொள்ளலாம் என்று ஏற்பட்ட பின்தான் தனக்கென்று எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம் என்பதாக பரிக்ரஹத்தின் உச்சிக்குப் போய், தான தர்மம் என்பதையே அடைத்து விட்டதாக ஏற்பட்டிருக்கிறது.

அபரிக்ரஹத்துக்கு எங்கேயோ போகவேண்டியதில்லை. நாலைந்து தலைமுறைக்கு முன்னால் எப்படியிருந்தார்கள் என்று பார்த்தால் போதும். மண்பானை, கல்சட்டி, ஓலை, பாக்குப்பட்டை இதுகள்தான் அவர்களுடைய சொத்து. கருகமணிதான் நகை. நாலு கீற்றை வேய்ந்து கொண்டால் அந்தப் பர்ணசாலைதான் அரண்மனைக்கு மேலே. அரண்மனைக்காரனான திலீபன் முதலான சக்ரவர்த்திகள் இப்படிப் பர்ணசாலைகளில் வசித்து வந்த வஸிஷ்டர் முதலானவர்களின் காலில்தான் வந்து விழுந்தார்கள்.

நம் ஸமீபகால முன்னோர்கள்கூட இப்படி எளிமையாயிருந்து கொண்டே நிம்மதியாகக் காலக்ஷேபம் நடத்தியிருக்கிறார்கள். இப்போது நாம் பணத்தாலும் உடைமைகளாலும் லக்ஷரிகளாலுந்தான் அந்தஸ்து என்று ஆக்கிக்கொண்டு, இதைத் தேடிக் கொண்டே போவதில் சீலங்களை இழந்து, சீலத்தாலேயே நம் முன்னோர்கள் எந்தச் சொத்துமில்லாமலும் பெற்றிருந்த ஸமூஹ கௌரவத்தையும் அடியோடு இழந்து, ரொம்பக் குறைந்தவர்களாக நிற்கிறோம்.

உடைமைகளைச் சேர்த்துக்கொள்ளக் கொள்ள பயந்தான் ஜாஸ்தியாகிறது. அபரிக்ரஹத்தின் நிம்மதி இங்கே ஒருகாலும் கிடைக்காது.

இதிலே நானே ஒன்று பண்ணிக்காட்ட வேண்டியதாயிருக்கிறது. எனக்குப் பட்டுப் பொன்னாடை போர்த்தி மரியாதை பண்ணுவது என்று ஒரு வழக்கம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். பக்திக்கு ஸ்தூலமாக அடையாளம் காட்டணுமென்ற எண்ணத்தில் பஹு காலமாகவே இப்படிப் பெரியவர்களுக்குப் பண்ணுவது என்று நடந்து வந்திருக்கிறது. அதெல்லாம் தேசம் ஸுபிக்ஷமாக ஸம்ருத்தியாக இருந்த காலம். பொன்னாடை மரியாதைக்குப் பாத்திரமான அந்தக் கால பூர்வாசார்யார்களுக்கும் நிரம்ப யோக்தை இருந்தது. அதைப் பார்த்து நானும் இந்த ரேஷன்-நாள், ஸ்கார்ஸிடி-காலத்தில் பொன்னாடை அலங்காரம் பண்ணிக்கொள்வது ஸரியேயில்லை. ரொம்ப நாளாக எனக்கு இந்த அபிப்ராயமிருந்தபோதிலும், பிரியமாக “மரியாதை பண்ணுகிறோம்” என்று வருகிறவர்களைத் தடுத்தால் மனோ வ்யாகுலப்படுவார்களே என்று பேசாமலிந்து வந்திருக்கிறேன். ஆனால் இப்போது ‘அபரிக்ரஹம்’ என்று உங்களுக்கு நீட்டி முழக்கி உபதேசிக்கிறபோது, ‘நாம் ஸந்நியாஸி; இப்படி ஐந்நூறு, ஆயிரம் விலைக்குச் சாதரா போர்த்திக்கலாமா?’ என்று மனஸை உறுத்துவதால், குறிப்பாக இப்போது யாரும் சாதரா கொண்டு வராததால், இனிமேலே எனக்குப் பொன்னாடை போர்த்த வேண்டாமென்று எல்லாரையும் கேட்டுக்கொள்கிறேன். அபரிக்ரஹத்தில் எனக்கும் ஒன்று செய்யணும் என்ற ஆசையிருக்காதா? அதற்காக இதை ஆரம்பிக்கிறேன்.

ஒன்று ஞாபகம் வருகிறது. இங்கே (ஸ்ரீ மடத்தில்) நாங்களும் வித்வான்கள், புலவர்களுக்குப் பொன்னாடையோ சால்வையோ போர்த்தி ஸம்மானிப்பது என்று வழக்கிமிருக்கிறதல்லவா? அதன்படி உ.வே. ஸ்வாமி நாதய்யர் அழைத்துக்கொண்டு வந்திருந்த ஒரு தமிழ்ப் புலவருக்குப் போர்த்துவதற்காக சால்வை கொண்டு வரச் சொல்லி, ஸ்வாமிநாதய்யர் கையாலேயே அதை அவருக்குப் போடச் சொன்னேன். அந்தப் புலவரின் கொள்கைகள் சிலது எனக்குப் பிடிக்காது. இது அவருக்கும் தெரிந்திருக்கிறது. ஸ்வாமிநாதய்யர்தான் எங்கள் இரண்டு பேருக்கும் இருக்கிற மனோ வித்யாஸத்தைப் போக்கணும் என்று அக்கறை எடுத்துக்கொண்டு இரண்டு பக்கமும் பேசி அவரை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். இப்போது நான் அவருக்கு சால்வை போர்த்த வேண்டும் என்றவுடன் அவர், “பெரியவங்க என்னை இரண்டு விதமாகவும் போத்தணும், போத்தணும்” என்று பெரிசாக விஞ்ஞாபனம் பண்ணிவிட்டார்! போர்த்துவது, போற்றுவது இரண்டையுமே பேச்சிலே ‘போத்துவது’ என்றுதானே சொல்கிறோம்? அந்த அர்த்தத்தில்தான் அவர் சிலேடையாக, நான் சால்வை போர்த்தினால் மட்டும் போதாது மனஸில் பேதம் போய் அவரைப் போற்றவும் வேண்டும் என்று சொல்லிவிட்டார்!

என்னைப் போத்தறதுக்கு (போற்றுவதற்கு) இனிமேல் எவரும் பொன்னாடை போத்த (போர்த்த) வேண்டாம் என்று சொல்கிறேன்!

சொந்தச் சொத்து, சொந்தச் செலவு ஆகியவற்றில் கணக்காய் இருப்பதற்காக (இதவ்வளவும்) சொன்னேன். காந்தியும் இந்த அபரிக்ரஹத்தை ரொம்பவும் சொல்லி, அநுஷ்டானம் பண்ணியும் வந்தார். அப்புறம் இப்போது (1958ல்) விநோபாவும் சொல்லிக்கொண்டிருக்கிறார். தலைவர்கள் எனப்பட்டவர்கள் இந்த இரண்டு பேருக்கும் நமஸ்காரம் பண்ணிக் கொண்டே ‘ஆப்போஸிட் டைரக்ஷனில்’ தேசத்தை வேகமாக இழுத்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேல் நாடுகளுக்கு நாம் பிற்பட்டு நிற்கவில்லை என்று ‘ப்ராக்ரஸ்’ காட்ட வேண்டாமா?

ராஜாங்கங்கள், அவற்றின் ஐடியாலஜிகள் எதுவும் சாச்வதமில்லை. ஸநாதன தர்மந்தான் சாச்வதம். சாச்வத ஸெளக்யத்துக்கு வழி காட்டுவதும் அதுதான். அதனால் அதைப் பார்த்து ஜனங்கள் வாழ்க்கையின் அம்சங்கள் எல்லாவற்றிலும் ஒரு அளவுக்கு, கணக்குக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டு இங்கே இந்த உலகத்திலேயே நிம்மதியும், அதோடு பாரமார்த்திகமான ச்ரேயஸும் அடைய வேண்டும்.

இதைப்பற்றி இன்னமும் பேசிக்கொண்டே போனால் நானே, சொல்கிறமாதிரி அளவறிந்து நிறுத்திக் கொள்கிறேனோ என்று ஸந்தேஹம் வந்துவிடும்!


1கீதை 3.12

பலவித வரவு-செலவுகளில் கணக்கு

கல்வியில் கணக்குக்கு எவ்வளவு முக்யத்வம் தந்திருக்கிறோம்? வாழ்க்கையிலும் தரவேண்டும். இப்போது ரூபாய்க் கணக்கு மட்டும்தான் முக்யமாயிருக்கிறது. எல்லா ஆபிஸிலும் அக்கவுன்ட் ஸெக்ஷன், அது தவிர அக்கவுன்டன்ட்-ஜெனரல் ஆபீஸ்கள் என்றே நிறைய இருக்கின்றன. பழைய காலத்திலிருந்து இப்படி ராஜாங்க ரீதியாக வரவு செலவுகளைக் கணக்குப் பார்க்கும் ஏற்பாடு இருந்து வந்திருக்கிறது. ‘பெருங்கணக்கு’ என்று பழைய நாளில் ஒரு உத்யோகஸ்தர் — அவர்தான் இந்நாளில் அக்கவுன்டன்ட்-ஜெனரல் என்கிறவர். இது உச்சத்திலுள்ள உத்யோகம். அடிநிலையில் இருந்தது, ‘பெருங்கணக்கு’ என்ற மாதிரி ‘சிறுகணக்கு’ இல்லை; இந்தச் சின்ன உத்யோகத்துக்குத்தான் ‘கணக்குப்பிள்ளை’ என்று பெயர். ‘பிள்ளை’ என்பது இங்கே ‘சிறிய’, ‘சின்னது’ என்பதைக் குறிக்கும்; பிள்ளை ஜாதி இல்லை. தென்னம்பிள்ளை, அணிற் பிள்ளை என்றெல்லாம் சொல்கிறபோது ‘பிள்ளை’ என்பது சின்னதைத் தானே குறிக்கும்? அப்படியே கணக்குப்பிள்ளை என்கிறவர் ராஜாங்க வரவு-செலவு பார்ப்பவர்களில் சிறிய ஊழியர். ஆனால் அவருக்கு எல்லா நுணுக்கமும் தெரிந்திருக்கும். அதனால்தான் முன்னெல்லாம் ஜில்லா கலெக்டராக ட்ரெயினிங் பண்ணுகிறவன் கூடக் கணக்குப் பிள்ளையிடம்தான் வேலை கற்றுக் கொள்ள ஆரம்பிக்க வேண்டுமென்று வைத்திருந்தார்கள்.

‘இப்போது இதெல்லாமே பேப்பரில் (வரவுக்குச் செலவு) ஸரிகட்டுவதாகக் காட்டிவிட்டால் போதுமென்று ஆகிவிட்டது; ஃபைனான்ஸ் மினிஸ்டரைப் பார்த்தால், அப்படி ஸரிகட்டாவிட்டால்கூடப் பரவாயில்லை; டெஃபிஸிட் ஃபைனான்ஸிங், (ரூபாய்) நோட்டுப் போட்டும், ஊரெல்லாம் உலகமெல்லாம் கடன் வாங்கியும் ஸரிக்கட்டினதாகக் காட்டினால் போதும் என்றாகி விட்டது’ என்று சொல்லிக்கொள்கிறார்கள். மொத்தத்தில் இப்போது நவீன முறை என்று சொல்லி, கணக்கில்லாமல் ஆசைகளையும் தேவைகளையும் பெருக்கி, அதற்காகச் செலவையும் பெருக்கி, மக்களையெல்லாம் கடனாளிகளாகவும், நிம்மதியில்லாதவர்களாகவும் செய்திருப்பதாகவே தெரிகிறது.

தேவை, வரவு, செலவு எல்லாவற்றிலுமே இப்படியில்லாமல், நாம் அவற்றை ஒரு கணக்குக்குக் கீழே கொண்டு வரவேண்டும்.

வரவு-செலவு என்பது பணம் ஒன்றில் மட்டுமில்லை. எல்லாவற்றிலும் உண்டு. நாம் வார்த்தையை அதிகம் விட்டால் எதிராளியிடம் வாங்கிக் கட்டிக்கொள்கிறோமே இதுகூட வரவு-செலவுதான். நாம் வாயால் விட்டது செலவு; வாங்கி கட்டிக்கொண்டது வரவு! நாம் அனவரதமும், தூங்கும்போதுகூடப் பண்ணுகிற காரியம் என்ன? மூச்சுவிடுவது. அதுகூட வரவு செலவுதான்! காற்றை உள்ளே வாங்கிக்கொண்டு வெளியே விடுவது வரவும் செலவுந்தான்! அதில் கூடக் கணக்கு வேண்டுமென்றுதான் ப்ராணாயாமம், மந்த்ர ஜபம், ஸோஹம் த்யானமென்று பல யோகங்களை வைத்திருப்பது. புசுக் புசுக்கென்று வேகமாக ச்வாஸித்தால் ஆயுசும் குறையும்; ஆத்மா சுத்தப்பட்டு சாந்த நிலைக்கு வருவதற்கான நாடி சமனமும் ஏற்படாது. அதனால் மூச்சுக்கூடக் கணக்காக விடணும் என்று வைத்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 21,600 ச்வாஸமே விடணும் என்று கணக்கு. அதாவது ஒரு ச்வாஸத்துக்கு நாலு ஸெகன்ட் ஆகவேண்டும். நாம் அவசரமாகக் காரியம் செய்யும் போதும், கோபதாபத்திலும் காமம் முதலான உணர்ச்சி வேகங்களிலும், புஸ் புஸ்ஸென்று ஒரு ஸெகன்ட், இரண்டு ஸெகன்டிலேயே ஒரு ச்வாஸம் முடிந்துவிடும். அதற்காகத் தான், ஈடுகட்ட இன்னொரு எக்ஸ்ட்ரீமில் ரொம்ப நேரம் தீர்க்கமாக மூச்சையிழுத்து அடக்கி வைத்து, நிதானமாக விட்டுப் பிராணாயாமம் பண்ணச் சொல்லியிருப்பது. ஆக இந்த சரீரத்துக்கான ஆயுஸ், சரீரத்துக்குள்ளே இருக்கிற ஆத்மாவின் நிறைந்த ஸமநிலையான ஸமாதிநிலை இரண்டுமே மூச்சு ஒரு கணக்காயிருப்பதில்தான் அடங்கியிருக்கிறதென்று தெரிகிறது.

வெளியில் காட்டுகிற அக்கவுன்டஸில் ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு ஸரிகட்டினதாகக் காட்டி விடலாம். ஆனால் “நமக்கு நாமே accountable -ஆக இருக்க வேண்டும்” என்கிறார்களே, அதில் எந்த தகிடுதத்தமும் செய்து ஜயிக்க முடியாது! நாம் செய்கிற அத்தனையையும் கர்ம ஸாக்ஷியாக ஒருத்தன் பார்த்துக் கொண்டிருக்கிறான்! அவனை ஏமாற்றவே முடியாது! பண்ணிய பாபத்துக்கெல்லாம் ஈடாக எதிர்த் தட்டில் புண்ய கர்மங்களை ஏற்றியாக வேண்டும். அந்தக் கணக்குப் புஸ்தகம் அவன் கையில் இருக்கிறது. நாம் நல்லது செய்வதில் கணக்கு வழக்கில்லாமலிருந்தால்தான் அவன் பாலன்ஸ்-ஷீட்டை ஸரி செய்ய முடியும். இப்படிக் கணக்கு வழக்கு இல்லாமல் புண்யம் பண்ணுவதற்கு மனநெறி முதலில் ஏற்பட வேண்டும். அது ஏற்படுவதுற்கு நம்முடைய பேச்சு, எண்ணம், நமக்கென்று பண்ணிக்கொள்ளும் காரியம், சொந்தச் செலவு, சாப்பாடு, ட்ரெஸ் எல்லாவற்றிலும் கணக்காயிருந்தால்தான் முடியும். இவை யாவற்றிலும் நாம் கணக்காயிருப்பது சாச்வத ‘லாப’த்தை உத்தேசித்தே என்பதை மறந்து விடக்கூடாது. இப்போது நம் பர்ஸுக்குள் இருப்பதன் லாப நஷ்டத்தையே நினைத்துக் கொண்டிருக்கும். நாம் இனிமேலாவது புண்ய லாபம் – பாப நஷ்டம் பற்றி நினைத்து, அந்தக் கணக்குப் புஸ்தகம் ஸரி கட்டுவதற்கானவற்றைச் செய்ய வேண்டும்.

அளவறிந்து செய்தல்

எந்த சக்தியையும், திரவியத்தையும் விரயமாகச் செலவழிக்காமலும், அதே ஸமயம் ஒரேயடியாகப் பூட்டி வைத்துக்கொண்டு விடாமலும், தானும் ஸமூஹமும் பயனடையும்படி அளவறிந்து செலவழிக்கவும், காத்து வைத்துக் கொள்ளவும் வேண்டும். பயன்களில் பெரியதான ஈச்வர ஸாக்ஷாத்காரத்துக்குங்கூட அளவறிந்த இந்தப் போக்கு வழி செய்யும். ஸமநிலைக்கு வரவேண்டும். லெவலுக்கு வரவேண்டும். Water finds its level. ஜீவத்மா லெவலுக்கு வந்தால்தான் பரமாத்ம ஸமுத்திரத்தில் கலக்க முடியும். இதற்கு எதிலும் அளவு, மிதம் வேண்டும்.

அளவறிந்து எதையும் செய்பவரால்தான் பரம ஸத்யத்தை அறிய முடியும் என்பதைத்தான் திருமூலர்,

கணக்கறிந்தார்க்கன்றிக் காணவொண்ணாதது
கணக்கறிந்தார்க்கன்றிக் கைகூடாக் காட்சி (1.316)

என்று சொல்லியிருக்கிறார். அவர் பண்ணின நூலுக்குத் ‘திருமந்திரம்’ என்று பெயர். அதனால் இந்த வார்த்தைகள் மந்திரம் மாதிரியானவையாகும்.

அதிகமாகப் போகாமல் எல்லாவற்றிலும் கணக்காய் இருக்க வேண்டும். பேச்சு, எண்ணம், செய்கை, உணவு, உடை, செலவு எதிலானாலும் வாழ்க்கைக்கு எவ்வளவுதான் அத்யாவசியமோ அதோடு கணக்காய் நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்போது பண்ணுகிறமாதிரி விரயம் செய்யக்கூடாது. கணக்காயிருப்பதுதான் இஹம் பரம் இரண்டுக்கும் நன்மை செய்வது. மனநெறி இல்லாவிட்டால் பரம் எப்படி லபிக்கும்? அந்த மனநெறி, mental discipline வருவதற்கு வாழ்க்கையம்சங்கள் எல்லாவற்றிலும் கணக்காயிருந்து கட்டுப்படுத்திக் கொள்வதே உதவும்.

இப்போதைய நிலையில் ஸமயாநுஷ்டானங்களில் இரண்டு எக்ஸ்ட்ரீம்களிலும் போவதாலேயே இப்படிப்பட்ட அளவு, ‘கணக்காயிருக்கிற’ தன்மை உண்டாகிறது என்று சொன்னேன். ஆரம்ப நிலையில் நம்முடைய மதாநுஷ்டானம், ‘கணக்கு’ இரண்டுமே பக்வமாகாதவையாகத்தான் இருக்கும். ஆனால் நாளாவட்டத்தில் இவை ஒன்றுக்கொன்று போஷித்துக்கொண்டு, ஒன்றை மற்றது பக்வப்படுத்திக்கொண்டு போகும். அப்படிப் பக்வ ஸ்திதிக்குப் போகப்போக கணக்கறிந்து செய்வதே மனஸின் ஸமநிலை என்கிற உயர்ந்த பிரசாந்த ஸ்திதிக்கு கொண்டு விடும். பூர்ண பக்வநிலையிலோ தன்னியல்பாக நாம் செய்கிறதெல்லாமே அளவறிந்து, கணக்காக அமைந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

மிதத்துக்காகவே மிகைகள்*

“விதவிதமாகப் பண்ணி மூக்கைப் பிடிக்கத் தின்னு” என்று ஒரு சாஸ்திரம்! பூஜா கல்பங்கள் என்று வழிபாட்டு முறைகளைக் கூறும் புஸ்தகங்கள் இப்படிச் சொல்வதாகத்தான் அர்த்தம்! அவற்றில் நைவேத்யம் பண்ணும்போது, “நைவேத்யம் ஷட்ரஸோபேதம்” என்று போட்டிருக்கும். “ஷட்ரஸோபேதம்” என்றால் அறுசுவையுடன் கூடிய போஜன தினுஸுகள். அத்தனை வித அன்னங்களையும், வியஞ்ஜனங்களையும், பக்ஷ்யங்களையும் ஸ்வாமிக்குக் காட்ட வேண்டும். அவனுக்கு வெறுமனே காட்டுவதுதான். “நிவேதயாமி” என்றாலே, “தெரிவிக்கிறேன்”, அதாவது “இந்த ஆஹாரமெல்லாம் உனக்கு முன்னால் வைத்திருப்பதை உனக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுதான் அர்த்தமே தவிர, “உன்னைச் சாப்பிடப் பண்ணுகிறேன்” என்று அர்த்தமில்லை. எங்கேயோ நாமதேவர் மாதிரி ஒருத்தரால்தான் அவனைச் சாப்பிடப் பண்ண முடியும்; நாமெல்லாம் அவனுக்குக் காட்டிவிட்டு, தெரிவிக்கிறதோடு ஸரி. அவன் பார்வை பட்டதாலேயே அந்த நைவேத்யம் பிரஸாதமாகிவிடுகிறது. அதை நாம்தான் சாப்பிடுகிறோம். ஆனதால் சுசி ருசியாய் பல தினுஸு பண்ணி நாம் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று சாஸ்திரமே சொல்வதாக ஆகிறது!

இன்னொரு பக்கம் சாஸ்திரத்திலேயே அநேக உபவாஸங்கள், பழம் மட்டுந்தான் சாப்பிடலாம், ஜலங்கூடக் கூடாது என்றெல்லாம் கண்டிப்பு.

ஒரு பக்கம் வேத கோஷம், ராமாயண நவாஹம், பாகவத ஸப்தாஹம், ஹரிகதை, பஜனை, ஜால்ரா, சிப்ளா மிருதங்கம், “கதயந்தச்ச மாம் நித்யம்” என்று பகவானே சொன்னபடி1 அவன் கதைகளையே ஓயாமல் பேசுவது பாடுவது, இன்னும் மிஞ்சினால் ஆனந்தக் கூத்தே ஆடுவது என்று அமர்ககளம் மேளதாளம், சேகண்டி, அதிர்வேட்டு.

இன்னொரு பக்கம் லோகமே போனாலும் போகட்டுமென்று மௌனமாக மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விடுவது.

ஒரு பக்கம் பலி, கிலி; யஜ்ஞத்தில் பசுவைக் கொடுப்பது.

இன்னொரு பக்கம் ரொம்பப் பிஞ்சாகப் புடலங்காயைப் பறித்துவிட்டால்கூடப் பாபமென்று பிராயசித்தம்.

ஒரு பக்கம் முனி, காட்டேரி என்று ஏகப்பட்டவை. அப்புறம் ஸௌம்யமாக தேவதா ரூபங்கள். பலவிதமான கலர். நாலு கை, எட்டு கை, பத்துக் கை, பதினெட்டுக் கை என்று அநேக மூர்த்திகள். மூஞ்சூரிலிருந்து யானை, சிங்கம் வரை வாஹனங்கள்.

இன்னொரு பக்கம் நிர்குணம், நாமம் ரூபம் இல்லை, பகவானுமில்லை, பக்தனுமில்லை என்று வேதாந்தம்.

ஒரே சாஸ்திரங்களே இப்படி ஒன்றுக்கொன்று வித்யாஸமாகச் சொன்னால் என்ன அர்த்தம்?

நமக்குத் தெரிந்த இடத்தில் ஆரம்பித்துத் தெரியாததற்குப் போகவேண்டுமென்று அர்த்தம். அப்படிக் கொண்டு போவதற்காகவே நமக்குத் தெரிந்தது, தெரியாதது என்று ரொம்ப வித்யாஸமுள்ளதாயிருக்கிற இரண்டையும் சொல்கிறது.

நமக்கு என்ன தெரிகிறது? த்வைத ப்ரபஞ்சந்தான். ஏகப்பட்ட ரூப வித்யாஸங்கள், குண வித்யாஸங்கள், மற்ற வித்யாஸங்கள் கொண்டதான த்வைதந்தான் நாம் இருக்கிற நிலை. பலவித ருசிகள், பலவிதக் காட்சிகள், பலவிதக் கேள்விகள், கோபம், தாபம், பிரேமை, சாந்தி, உக்ரம், ஸெளம்யம் என்று பலவித உணர்ச்சி வேகங்கள், குண வித்யாஸங்கள், நாமம் ரூபம் இவைதான் நாம் இருக்கிற நிலையில் தெரிவது.

‘நாம் இருக்கவேண்டிய நிலை என்ன? இப்போது நமக்குத் தெரியாததாக இனிமேல் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?’ என்றால் அதுதான் இந்த த்வைதத் தோற்றத்துக்கெல்லாம் ஆதாரமாயிருக்கிற ஒன்றே ஒன்று – ‘அத்வைதம்’என்று என்னமோ ஒன்று சொல்கிறார்களே அது. அங்கே ருசியில்லை, சப்தமில்லை, ரூபமில்லை, நாமமில்லை, குணமில்லை. ஆனால் இதற்கெல்லாம் காரணமானது இருக்கிறது.

தெரிந்ததையே தெய்வ ஸம்பந்தமுள்ளதாக்கித் தரவேண்டுமென்றுதான் ‘நைவேத்யம் ஷட்ரஸோபதேசம்’, ஹரிகதையும் பஜனை சத்தமும், உக்ர-ஸெளம்ய தேவதைகள், அவற்றுக்கு அநுகுணமான ஹிம்ஸை-அஹிம்ஸைக் கார்யங்கள்.

ஆனால் தெரிந்ததோடு மட்டும் நிற்கப்படாது, தெரியாததையும் கொஞ்சங் கொஞ்சமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றுதான் பட்டினி – ருசி இல்லாத ஸமாசாரம்; மௌனம் – சத்தமில்லை; நிர்குணப் பிரம்மம் – நாம ரூபமில்லாத ஸமாசாரம்.

இப்படி இரண்டு எக்ஸ்ட்ரீம்களைச் சொல்லிவிட்டால் மட்டும் ஸரிப்பட்டு வராது. இரண்டையும் link பண்ணுவதற்கு (இணைப்பதற்கு) ஒன்று செய்யவேண்டும். நாம் வாழ்கிற முறையில் எல்லா aspect-ம் இந்த link -ஐ reflect பண்ணும்படியாக (இந்த இணைப்பைப் பிரதிபலிக்கும்படியாக) வாழவேண்டும்.

இந்த ‘லிங்க்’ என்ன? அதுதான் மிதமாக இருப்பது. மாடரேஷன் என்கிறார்களே, அது. ‘மிதவாதி’கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். “உடனே பூர்ண ஸ்வராஜ்யம் வேண்டுமென்று அவஸரப்படக்கூடாது. அதே ஸமயத்தில் வெள்ளைக்கார ராஜாங்கத்துக்கு இத்தனை ஆதிக்யமும் இருக்கவிடக் கூடாது” என்பது அவர்கள் கட்சி. அவர்கள் சொன்னதில் உள்ள நியாயம் இப்போது ஸ்வதந்திரம் வந்துவிட்டு நமக்கே தெரிகிறது!

எதிலும் மிகையாகப் போகாமல் நடுநிலைமையில் இருப்பதுதான் மிதம். ‘மிதம்’ என்றால் ‘அளக்கப்பட்ட’, ‘அளவறிந்த’ என்று அர்த்தம். Measured behaviour என்று சொல்லும்போதும் எதிலும் தீவிரமாகப் பறக்காமல், நிதானமாக, கவனமாகச் செய்வதைத்தானே measured என்பது குறிக்கிறது? Measured -தான் மிதம். ‘ஜ்யாமெட்ரி’ என்கிறோமே அது ‘ஜ்யா-மிதி’ என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தைதான். ‘ஜ்யா’ என்றால் பூமி. ‘மிதி’ என்பது ‘மிதம்’ தான் – அதாவது அளக்கிற விதிமுறை. யஜஞ்த்தில் வேதிகை நிர்மாணம் முதலானதுகளுக்கு பூமியை அளப்பதிலிருந்தே ‘ஜ்யாமெட்ரி’ உண்டாயிற்று. ‘க்ஷேத்ரம்’ என்றாலும் பூமிதான். அதனால்தான் இதற்கு ‘க்ஷேத்ர கணிதம்’ என்றும் பெயர் இருக்கிறது.

செய்கிற காரியம், பேசுகிற பேச்சு, ஸம்பாதிப்பது, செலவழிப்பது, புத்தியை ஓடவிட்டு நினைப்பது, அலைவது, சாப்பிடுவது, ட்ரெஸ் பண்ணிக் கொள்வது, பொழுது போக்கு எல்லாவற்றிலுமே, ஒவ்வொன்றிலுமே ‘ஓவராக’ப் போய்விடாமல், மனஸ் எதற்கும் வசப்பட்டு விடாதபடி, அளவறிந்து measured -ஆக வைத்துக் கொள்வதுதான் மிதம். எல்லாவற்றிலும் இப்படிப் பண்ணுகிற பழக்கம் வந்துவிட்டால் சித்தம் ஸமநிலையில் பரம சாந்தமாக ஆவதற்கு உதவும்.

பழக்கம் எப்படி வரும்? ஈச்வர க்ருபையில்தான் வரும். ‘அந்த க்ருபை எப்படி வரும்?’ என்றால், அதற்காகத் தான், அதை வருவித்துக் கொள்வதற்காகத்தான், இரண்டு ‘எக்ஸ்ட்ரீம்’களாக அநுஷ்டானங்களை சாஸ்த்ரங்கள் ஏற்படுத்திக் கொடுப்பது. நமக்குத் தெரிந்த நிலையில் ஒரு எக்ஸ்ட்ரீமாக பண்டிகை போஜனம், பாட்டு, கூத்து ஆகியவற்றையும், தினுசு தினுசுகளில் அபிருசி கண்ட நம் மனஸுக்கு ஏற்றபடி அநேக தெய்வங்கள் ஆகியவற்றையும் ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே, அதே ஸமயத்தில் இன்னொரு எக்ஸ்ட்ரீமான, உண்ணாத உறங்காத பேசா நிலையையும், நிர்குண ஏக பரமாத்மாவையும் ஞாபகப்படுத்திக்கொண்டேயிருப்பது. இப்படி இரண்டு எக்ஸ்ட்ரீம்களையும் மாறி மாறி அப்யாஸம் செய்கிறதாலேயே, தராசின் இரண்டு தட்டுகளிலும் ‘வெயிட்’ களைப் போடுவதால் அது ஸம நிலைக்கு வருகிற மாதிரி மனஸு ஸமத்துக்கு வந்து, அதோடு வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் மாடரேஷன் வந்துவிடும்.

ஒரு கயிற்றை ‘தொய்யாமல் நில்லு’ என்று வெறுமனே விட்டால் அது நிற்குமா? அதை இரண்டு பக்கம் இரண்டு கழியை நட்டு இரண்டு கோடிக்குமாக இழுத்துக் கட்டினால்தானே ஸம நிலையில் தொய்யாமல் நிற்கும்? அப்படித்தான் தானாக ஸம நிலைக்கு வராத நம் வாழ்க்கை முறையை அப்படி வரப் பண்ணவே இரண்டு கோடியாக இரண்டு வித எக்ஸ்ட்ரீம்களில் அநுஷ்டானங்களைக் கொடுத்துக் கட்டிப் போட்டிருக்கிறது. நேராக மாடரேஷனுக்குப் போகத் தெரியாததால், எக்ஸ்ட்ரீம்களை ஸமயாநுஷ்டானத்தில் கொடுத்து, அதன் வழியாக, நாம் வாழ்கின்ற முறை மாடரேஷனில் போகும்படிப் பண்ணியிருக்கிறது.

இதர மதங்களில் அஹிம்ஸை, அரூப த்யானம் என்று ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரீமை மட்டும் வைக்கிறபோது ஜனங்களால் அந்த பிகு தாங்காமல் fail ஆகிறார்கள். அப்படியில்லாமல் மாறுபட்ட இரண்டு எக்ஸ்ட்ரீம்களை நம் மதம் மாற்றிச் சொல்வதால், change-ல் ஆசை கொண்ட ஜீவ மனஸ் இஷ்டத்தோடு இப்படி மாற்றி மாற்றிப் பண்ணுகிறது.

ஸமயாநுஷ்டானம் என்று இப்படி ஒவ்வொரு ஸமயத்தில் பண்ணுவதாக மட்டுமில்லாமல், ஸதா கால வாழ்க்கைப்போக்காகவும் நெறியாகவும் பின்பற்ற வேண்டிய அஹிம்ஸை, பிக்ஷுத்வம் முதலானவற்றிலும் நம் மதம் மற்றவற்றைப்போல் ஒரே கண்டிப்பாக எல்லாருக்கும் லக்ஷ்யத்தை விதிக்காமல் பிரித்துக் கொடுத்திருப்பதைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறேன். இதனாலெல்லாந்தான் நம் மதம், இத்தனை ஆசார சாஸ்த்ரமிருந்த போதிலும், மற்ற எல்லா மதங்களையும்விட flexible -ஆக (நெகிழ்ந்து கொடுப்பதாக) ஆகி, இதற்கு ஒரு சிரஞ்ஜீவித்வம் ஏற்பட்டிருக்கிறது.

ஸமயாநுஷ்டானங்களில் இப்போது நாம் இருக்கிற தசையில் நம் மதம் காட்டும் இரண்டு எக்ஸ்ட்ரீம்களில் பண்டிகைச் சாப்பாடு, பஜனைக் கூத்து, உருவ வழிபாடு இவற்றில் கிடைக்கிற ஆனந்தம் பட்டினியிலும், மௌனத்திலும், ஆத்ம த்யானத்திலும் கிடைப்பதில்லை. ஏதோ ஒரு பார்வையின் பேரிலும், ‘இது பெரியவர்கள் காட்டும் வழியாச்சே’ என்ற நம்பிக்கையின் பேரிலுந்தான் இப்போது நமக்குத் தெரியாதவையாக இருப்பவற்றுக்கான அநுஷ்டானத்தைப் பண்ண முடிகிறது. ஆனாலும் விடாமல் போனால் வாழ்க்கையில் மாடரேஷன் வரும்.

இப்படி மாடரேஷனில் நன்றாகப் பழக்கப்பட்டு முதிர்ந்த நிலைமை, கனிந்த நிலைமை உண்டாகிறபோது, இப்போது எது நமக்குத் தெரியாததாக இருக்கிறதோ, இன்னொரு ‘எக்ஸ்ட்ரீம்’ஆகத் தோன்றுகிறதோ, எதை நாம் ஏதோ ஒரு பாவனையின் பேரில்தான் கொஞ்சம் ஊகித்துப் பார்க்க மாத்திரமே முடிகிறதோ, அது – அதாவது பரமாத்வோடு ஏகமாக ஒன்றியிருக்கிற நிலை – எக்ஸ்ட்ரீமாக இல்லாமல், ஸஹஜமான எக்ஸ்பீரியன்ஸாக ஆகிவிடும்.

அளவறிந்து, எதிலும் ஓவராகப் போகாமல், மிதமாக மத்யமாகப் போகிறதைத்தான் பகவான் கீதையில் உபதேசித்திருக்கிறார்:

நாத்யச்நதஸ்து யோகோ (அ)ஸ்தி ந சைகாந்த-மநச்நத: |
ந சாதிஸ்வப்ந-சீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந || (6-16)

யுக்தாஹார-விஹாரஸ்ய யுக்த-சேஷ்டஸ்ய கர்மஸு |
யுக்த-ஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி து:கஹா || (6-17)

“பெருந்தீனி தின்கின்றவனுக்கும் யோகம் ஸித்திக்காது; ஒரே பட்டினி கிடக்கிறவனுக்கும் ஸித்திக்காது. எப்போது பார்த்தாலும் தூங்குகிறவனுக்கும் யோகம் வராது; தூக்கமேயில்லாதவனுக்கும் வராது. சாப்பாடு, ஸஞ்சாரம், மற்ற காரியம் எல்லாவற்றிலுமே மிதமாக இருக்கிறவனுக்குத்தான் யோகம் ஸித்திக்கும்; ஸம்ஸார துக்கத்தைப் போக்கும்” என்கிறார். மிதமாக இருப்பதற்கு இங்கே பகவான் சொல்லும் வார்த்தை ‘யுக்தம்’ என்பதாகும். ‘எப்படி யுக்தமோ அப்படிப் பண்ணுங்கள்’ என்று நாம் கூடப் பேச்சில் சொல்கிறோம். ‘யுக்தம்’, ‘யோகம்’ என்ற இரண்டு வார்த்தையும் ‘யுஜ்’ என்னும் ஒரே தாதுவிலிருந்து வந்தவைதான். ‘யுஜ்’ என்றால் இணைப்பது. ஜீவாத்மாவைப் பரமாத்மாவோடு இணைப்பது யோகம். அப்படி இணைக்க வழியாக உள்ள மிதமான போக்கே ‘யுக்தம்’.

எக்ஸ்ட்ரீமுக்குப் போவதுதான் மனஸின் நேச்சர். ‘மிதமாயிரு’ என்றால் அதனால் முடிவதில்லை. இதற்காகத் தான் சாஸ்திரங்கள், “இரண்டு எக்ஸ்ட்ரீம்களுக்கு மாறி மாறிப் போ” என்கிறது. “மிதமாகச் சாப்பிடு என்றால் நாக்கு கேட்கமாட்டேன் என்கிறதா? ஸரி, இதோ பண்டிகைகளைக் கொடுக்கிறோம்; இந்த நாட்களில் ஷட்ரஸோபேதமாகச் சாப்பிடு” என்கிறது. ஆனால் இதோடு விடாமல், ஈடுகட்டுகிறதற்கு வ்ரத உபவாஸ தினங்களையும் விதிக்கிறது. இப்படியே சில நாட்களில் “வாய் கொண்ட மட்டும் கத்து, ஆடு, பாடு” என்று விட்டுவிட்டு வேறே சில நாட்களில் “வாயைத் திறக்கவே திறக்காதே” என்று மௌனத்தை அநுஷ்டிக்கச் சொல்கிறது. இந்த எல்லாவற்றையுமே தெய்வ ஸம்பந்தப்படுத்திக் கொடுக்கிறது. பித்ரு கார்யம், பஞ்சாயதனம், வைச்வதேவ பலி, அது இது என்று பலதுகளுக்கு (பலவற்றுக்கு) வழிபாட்டைச் சொல்லும்போதே, ‘காம்பன்ஸேட்’ பண்ண “ப்ரஹ்மைவாஹமஸ்மி”2 என்று மூக்கைப் பிடித்துக் கொள்ளவும் சொல்கிறது.

வாழ்க்கையம்சங்களில் தானாக மிதமாக இருக்க முடியாத மநுஷ்ய ஸ்வபாவததுக்கு இப்படி ஸமயாநுஷ்டானத்தில் இரண்டு எக்ஸ்ட்ரீம்களையும் அப்யாஸம் பண்ணுவதே மிதப்படுத்துவதற்கு வழியாக ஆகிறது. உபவாஸத்தால் விருந்தை ‘பாலன்ஸ்’ பண்ணுவது, மௌனத்தால் உத்ஸாஹக் கூத்தை ‘பாலன்ஸ்’ பண்ணுவது என்றிப்படி சாஸ்திரப் பிரகாரம் ஒரு எக்ஸ்ட்ரீமால் இன்னொன்றை ‘பாலன்ஸ்’ பண்ணுகிற பழக்கத்தால், வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் தராசு ஸமமாக நிற்கிற மிதமான நிலைமை, ‘யுக்த’மான நிலைமை கைவரும். இரண்டு விதத்தில் மிகையாக மாறி மாறிப் பண்ணுவதாலேயே மிதம் வந்துவிடும்!


* இவ்வுரையை தெய்வத்தின் குரல் முதற்பகுதியில் சமூக விஷயங்கள் என்றி பிரிவிலுள்ள கணக்காயிருக்கணும் என்ற உரையுடன் இணைத்துக் கொள்ளலாம்.

1 கீதை 10.9

2 நான் பிரம்மமாகவே இருக்கிறேன் என்ற அத்வைத வாக்கியம். ஸந்தியாவந்தனத்தில் இந்த அநுஸந்தானமும் அங்கமாகும்.