புலன் நுகர்ச்சிகளுள் உணவின் முக்யம்

ஆஹாரம் என்றால் நாக்கால் சாப்பிடுவது மட்டுமில்லை. பஞ்ச இந்திரியங்களுக்கும் ஒவ்வொரு ஆஹாரம் உண்டு. பல காட்சிகளைப் பார்க்கிறோம். இது கண்ணுக்கு ஆஹாரம். பலவிதமான பாட்டு, பேச்சுகளைக் கேட்கிறோம். இது காதுக்கு ஆஹாரம். இப்படியே நாம் அநுபோகம் பண்ணுகிறதெல்லாம் நமக்கு ஆஹாரம்தான். இதில் எல்லாமே சுத்தமானதாய் இருக்க வேண்டும். மனஸைக் கெடுக்கிற காட்சிகளைப் பார்க்கப்படாது; மனஸைக் கெடுக்கிற பேச்சுகளைக் கேழ்க்கக் கூடாது; அநுபவிக்கிறதெல்லாம் ஈச்வர ஸாக்ஷாத்காரத்துக்கு உதவுகிறவையாகவே இருக்க வேண்டும்.

இப்படி பொதுப்படையாகச் சொன்னாலும், இந்தப் பலவிதப் புலன்-நுகர்ச்சிக்கான ஆஹாரங்களிலும் வாயால் நுகர்கிற ஆஹாரந்தான் முக்யமாக இருப்பதால் அதைப்பற்றி இவ்வளவு ஆசார விதிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் ஸ்தூலமாக நமக்கு உள்ளே போய், தேஹம் முழுக்க ரத்தமாக வியாபிக்கிறது; இதுவே சித்தத்தையும் பாதிக்கிறது. ஒரு பக்கம் ஆஹாரமில்லாவிட்டால் மநுஷ்யன் ஜீவிக்கவே முடியவில்லையென்றால் இன்னொரு பக்கமோ அது மித ஆஹாரமாக இல்லாவிட்டால் தேஹத்துக்கும் ச்ரமம், மனஸுக்கும் அசாந்தி என்றாகிறது. வயிற்றிலே திணித்துக்கொண்டே போவதால் சாப்பாட்டுப் பொருளுக்கும் நஷ்டம், கார்யம் செய்ய முடியாமலும் நஷ்டம், இவற்றைவிட த்யானத்தில் மனஸ் ஈடுபடாமல் போவது பெரிய நஷ்டம். ஆகையால் “சோற்றால் அடித்த பாண்டம்” என்றே மநுஷ்யனுக்குப் பேர் இருப்பதால் இந்தப் பாண்டமும், இதற்கு உள்ளேயிருக்கிற மனஸும் நல்லபடியாக வளர்வதற்காக ரிஷிகள் காட்டிக் கொடுத்திருக்கும் போஜன விதிகளை மேற்கொண்டு நடத்திக்காட்ட வேண்டும். இதன் முக்யத்வமும் அவசியமும் எல்லோருக்கும் புரிவதற்குப் பரமேச்வரனைப் பிரார்த்தனை பண்ணிக் கொள்கிறேன்.

“Give us this day our daily bread” – “இன்றைக்கு எங்களுக்கு உன் அருளால் சோறு கிடைக்கட்டுமப்பா!” என்று கிறிஸ்துவ மதத்திலும் பிரார்த்திக்கச் சொல்லியிருக்கிறது. அதே சமயத்தில் “Man shall not live by bread alone” –  “சோற்றைத் தின்று மட்டும் மநுஷன் வாழவில்லை” என்றும் பைபிள் சொல்கிறது. பக்தி, ஞானம், உயர்ந்த குணங்கள், உத்தமப் பண்புகள் ஆகியவற்றால்தான் மநுஷன் மநுஷனாக வாழ்கிறான் என்பது அர்த்தம். இந்த குண விசேஷங்கள் விருத்தியாகவும் ஆஹார நியமமே உதவுகிறது என்று நம் சாஸ்திரங்கள் காட்டுகின்றன.

தேஹ புஷ்டியை மட்டுமின்றி, ஞான வைராக்யங்களையும் அநுக்ரஹிக்கும் அன்னத்தை ஸாக்ஷாத் அம்பாளிடமிருந்து ஆசார்யாள் யாசித்ததைச் சொல்லி உங்கள் எல்லாருக்காகவும் பிரார்த்திக்கிறேன்.

அன்னபூர்ணே! ஸதாபூர்ணே! சங்கர ப்ராண வல்லபே |
ஞாந வைராக்ய ஸித்த்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி ||

ஸாரமான பலன்கள்

இத்தனை நேரம் தொண தொணவென்று நான் சொன்னதன் ஸாரம் என்னவென்றால்: ஸ்வயம்பாகம் என்ற ஒரு சின்ன நியமத்தால் அநேக நன்மைகள் உண்டாகின்றன. ஒன்று — சித்த சுத்தி. இரண்டு — தேஹ ஆரோக்கியம். மூன்று — செலவு மட்டுப்படுவது. நாலு — ஜாதிச்சண்டைக்கு இடமில்லாமல் பண்ணுவது. ஐந்து — ஐம்பது வயஸுக்கு மேல் கல்யாணம் கூடாது என்பது போன்ற சாஸ்திர விதிகளை அநுஸரிக்க முடிவது. ஆறு — நம்முடைய மஹா பெரிய தர்மத்துக்கே மூலமான வேத வித்யை வளர வழி ஏற்படுவது. ஏழு – பிராணி ஹிம்ஸை குறைவது. எட்டு — லோகத்தில் மற்றவர்களுக்கும் ஸாத்விக ஆஹார ஐடியலைக் காட்டிக் கொடுப்பது. லோகத்தில் சாந்தத்தைப் பரப்புவதற்குச் செய்கிற காரியத்தைவிடப் பெரிய நன்மையில்லை. இத்தனை பலன்கள்! எல்லாவற்றுக்கும் மேலே, ‘இந்தக் குழந்தை சாஸ்திரப்படி பண்ணுகிறான். நாக்கைக் கட்டுகிறான்’ என்று பகவானே கிருபை செய்வது. இப்படி ஈச்வராநுக்ரஹம் பெற்று, ஸகல ஜனங்களும் சிரேயஸ் பெறுவதற்காக அவரவரும் ஸ்வயம்பாக நியமம் வைத்துக் கொள்ள வேண்டியது. இதற்கு ஒரு ஆரம்பமாக இப்போதிலிருந்தே ஆஃபீஸோ ஸ்கூலோ அதில் அன்றைக்கு, வாரத்தில் ஞாயிறு ஒரு நாளாவது ஸகலமான பேரும் ஸ்வயம்பாக வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

இத்தனை நான் சொன்னதிலிருந்து ஸ்வயம்பாகம் நல்லதுதான் என்று உங்களில் கொஞ்சம் பேருக்காவது நம்பிக்கை வந்திருக்கலாம். ஒன்றில் நம்பிக்கை வந்து, அது ஸாத்யமாகவும் இருந்துவிட்டால், அதைப் பண்ணிக் காட்ட வேண்டும். அதுதான் பெருமை.

நிவேதனம்

பகவானுக்குக் காட்டிவிட்டுச் சாப்பிட வேண்டுமென்பது முக்கியம். வேறே பூஜை என்று பெரிசாகப் பண்ணாவிட்டாலும், நமக்குக் கையைக் கொடுத்து, அந்தக் கையாலேயே சமைத்துக் கொள்ளணும் என்ற புத்தியைக் கொடுத்து ஸ்வயம்பாகம் பண்ணிக் கொள்ள வைத்தவனுக்கு அதைக் காட்டி, நிவேதனமாக்கி அதில் இருக்கக் கூடிய கொஞ்ச நஞ்சம் தோஷத்தையும் போக்கிவிட வேண்டும்.

தெலுங்கு தேசத்தில் ஆயிரம் பேர் ஸமாராதனை என்று உட்கார்ந்தாலும், ப்ராணாஹுதி பண்ணுவதற்கு முன்னாடி ஒவ்வொருத்தனும் இஷ்ட தெய்வத்தை நினைத்து ஸ்வாமி நைவேத்யம் பண்ணித்தான் சாப்பிடுவான்.

வேறே மூர்த்தி, விக்ரஹம் இல்லாவிட்டாலும் பிரத்யக்ஷ பகவானாயிருக்கிற ஸூர்யனுக்காவது நைவேத்தியம் செய்யணும்.

அம்மா சமைக்கிறாள், ஸம்ஸாரம் சமைக்கிறாள் என்பதால் [புருஷர்கள் சமைக்கத்] தெரிந்து கொள்ளாமலிருந்தால் அப்புறம் எங்கேயாவது தனியாக வெளியே போய் இருக்கும்போது, அல்லது வீட்டிலேயே அவர்களுக்கு அஸந்தர்ப்பமாகிறபோது, கண்டதைத் தின்பதான கெட்ட பழக்கம் வந்துவிடுகிறது. ஸ்வயம்பாகம் தெரிந்து, தானே பண்ணிக் கொள்வது என்று கொஞ்சநாள் பழகி விட்டால் அப்புறம் பிறத்தியார் சாப்பாடு பிடிக்கவே பிடிக்காது. கெடுதலான சாப்பாட்டுக் கிட்டேயே போகத் தோன்றாது. நாமே பண்ணிச் சாப்பிடுவதில் ஒரு pride-ஏ [பெருமிதமே] உண்டாகிவிடும். இப்போது நாக்கு எப்படி கண்டதற்குப் பறக்கிறதோ, அத்தனைக்கத்தனை ஸத்வ பதார்த்தங்களைத் தவிர மற்றதை நினைக்கவே நினைக்காது.

விருந்துபசாரம் எப்படி?

“அவனவனும் ஸ்வயம்பாகம் என்றால் அதிதி ஸத்காரம் (விருந்தோம்பல்) எப்படிப் பண்ணுவது? அதையும் பெரிய தர்மமாகச் சொல்லியிருக்கே!” என்றால் வருகிறவனுக்கும் அவனே சமைத்துக் கொள்வதற்கான பண்டங்களைச் கொடுத்துவிட்டாலே அது ஸத்காரம்தான். இப்போது துர்லபமாக எங்கேயோ இருக்கப்பட்ட ஸ்வயம்பாகிகள் இப்படித்தானே தாங்களே சமைத்துக் கொள்கிறார்கள்? இதையும் அதிதி பூஜையாகத்தான் சொல்லியிருக்கிறது. இப்படி யாத்ரிகர்களுக்குச் சமைத்த அன்னமாகப் போடாமல் மாவு, சர்க்கரை முதலான சரக்குகளை மட்டும் தருவதை வடக்கே ‘ஸதாவ்ருத்தி’ என்றே சொல்வார்கள். அவர்கள் சமைத்துப் போட்டாலும் ஏற்றுக் கொள்ளாமலே இப்படி ‘ஸதாவ்ருத்தி’தான் வாங்கிக் கொள்வார்கள். நம் மடத்திலுங்கூடச் சாப்பிடுவதில்லை. ஆட்டா மாவு, நெய் முதலியன கொடுத்தால் மட்டும் வாங்கிக் கொண்டுபோய்த் தாங்களே சமைத்துக் கொள்வது என்று அநேக தேசாந்தரிகள் இருக்கிறார்கள். ஆகையால் ஸ்வயம்பாகத்தால் விருந்தோம்பல் போய்விடுகிறதென்று நினைக்க வேண்டாம்.

அப்படி, ‘நம் கையால் கொடுத்து நேரே அவர்கள் குக்ஷியில் போகணும், அதுதான் உபசாரம்’ என்று ஸென்டிமென்ட் இருந்தால் பால் அல்லது மோரும், பழமும் கொடுக்கலாம். பழைய நாளில் திருடனுக்குக்கூட பால் சாதம் போட்டுவிட்டால் அப்புறம் அவன் திருடமாட்டான். நல்லெண்ணத்தை வளர்ப்பது பால். இப்போது பால் சாதமாக இல்லாமல் பாலோடு பழமாகக் கொடுக்கச் சொல்கிறேன்.

ஸ்கூலுக்குப் போகிறவர்கள், ஆஃபீஸ் போகிறவர்கள், ரிடையர் ஆனவர்கள் ஆகிய எல்லாருமே – புருஷர்களைச் சொல்கிறேன் – இப்படிக் கால்மணியில் தயாரிக்கும்படியான சமையல் தெரிந்துகொண்டு அவரவர் பண்ணிச் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

உணவு முறையில் உண்மைச் சீர்திருத்தம்

பத்து, இருபது ஸாமான் வைத்துக் கொண்டால் தான் சமையல் என்று நம் சீமையில் ஆகியிருப்பதை மாற்ற வேண்டும். இதுதான் சீர்திருத்தம். ஏதோ நிர்பந்தம் மாதிரி, ரஸம், கறி, கூட்டு, குழம்பு என்று பிரதிவேளையும் சாப்பிட்டாக வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இத்தனை வஸ்து இருப்பதால்தான் புளி ஜாஸ்தியாகிவிடுமோ, உப்பு ஜாஸ்தியாகிவிடுமோ ஸரியாகக் கொதி வந்துவிட்டதா என்றெல்லாம் ஸந்தேஹம்! வறுக்கிறதை எப்போது நிறுத்த வேண்டும், மாவு எப்போது கரைத்து விடணும், எவ்வளவு கரைத்து விடணும் என்றெல்லாம் யோஜனை! இந்த வேண்டாத சிரமங்கள் இல்லாமல் லேசான ரீதியில், ‘லைட்’டாக ஆஹாரத்தை ஆக்கிக்கொள்ள வேண்டும். பூரியைத் தட்டிப்போட்டு பாலை விட்டுக்கொண்டு சாப்பிடுவதானால் அதைப் பத்து நாட்களுக்குக்கூடக் கெடாமல் வைத்துக்கொண்டு வயிற்றுப் பாட்டைத் தீர்த்துக் கொள்ளலாம். வயிறு நன்றாக ரொம்பும். வியாதி வராது. சரீரத்துக்கே ஸெளகர்யம். நாள் கணக்கில் பிரயாணம் பண்ணும்போதுகூட, கண்ட இடத்தில் கண்டதைத் தின்னாமல், இந்த மாதிரிப் பற்றுப் படாத பூரி, ஸத்துமா இதுகளைக் கொண்டே காலம் தள்ளி விடலாம். அரிசியைக் களைந்து உலர்த்தி, சிவக்க வறுத்தெடுத்து அரைத்து வைத்துக் கொள்வதே ஸத்துமா. ‘ஸக்து’ என்பதே அதன் ஸரியான பெயர். ஆனால் உடம்புக்கு நல்ல ஸத்து தருவதாலும், ஸத்வகுணம் ஊட்டுவதாலும் அந்தப் பேரை ஸத்து [மா] என்று ஆக்கியிருப்பதிலும் அர்த்தம் இருக்கிறது! அதிலே மோரை விட்டோ, பாலை சாப்பிடலாம், கொஞ்சம் சாப்பிட்டால்கூட புஸ் என்று ஊறிக்கொண்டு பசியடங்கிப் புஷ்டியாயிருக்கும்.

‘குக்கர்’, ‘கிக்கர்’ கூட வேண்டாம். ஸுலபமாக, சீக்ரமாக அதில் நாலைந்து தினுஸைப் பண்ணிக் கொள்ள முடியலாம். ஆனால் நாக்கைக் கட்டுவதற்கு, ஸத்வ ஆஹாரத்தைத் தவிர மற்றவற்றுக்குப் போகாமலிருப்பதற்கு அது பிரயோஜனமில்லை. குக்கர் வந்தால் அப்புறம் அஞ்சறைப்பெட்டி, ரொம்பப் புளி, ரொம்பக் காரம் எல்லாம் கூடவே வரும். இது சித்தத்துக்குச் செய்கிற கெடுதலோடு உடம்புக்கும் கெடுதல் வந்து, பரிஹாரமாக மருந்து, அந்த மருந்திலே அநாசாரம், இந்த அநாசாரத்துக்குப் பரிஹாரம் என்று போய்க்கொண்டேயிருக்கும். செலவையும் சொல்ல வேண்டும். நிறைய வியஞ்ஜனம் என்றால் நிறையச் செலவாவதோடு, அப்புறம் டாக்டருக்காகவும் மருந்துக்காகவும் ஆகிற செலவு வேறே.

அதனால் ஒரு ஸாமான், இரண்டு ஸாமானை வைத்துக்கொண்டு, ஸாத்விகமாக, பெரியவர்கள் சொல்கிற மாதிரி ‘மதுர’மாக ‘ஸ்நிக்த’மாக லேசான ஆஹாரத்தைத் தானே தயார் பண்ணிச் சாப்பிட வேண்டுமென்பதை ஜன்ம விரதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

‘ஸ்நிக்தம்’ [பசையுள்ளது] என்பதற்காக நெய் சொட்ட வேண்டுமென்று அர்த்தமில்லை. வறட்டு வறட்டு என்றில்லாமல் பாலிலோ மோரிலோ ஊறினதாக, அல்லது நெய்ப்பசை உள்ளதாக இருக்க வேண்டும் என்றே அர்த்தம். ‘மதுரம்’ என்றாலும் ஒரே தித்திப்பு என்று அர்த்தமில்லை. அரிசி, கோதுமை முதலான எந்தப் பதார்த்தமானாலும் அதற்கென்றே ஒரு தித்திப்பு உண்டு. இப்போதைய புளி, கார சமையலில் பதார்த்தத்தை ஓவராக வேகவைத்து, அதன் இயற்கையான ஸத்து க்ஷீணிக்கும்படிப் பண்ணுவதில் தித்திப்பு போய்விடுகிறது. பண்டத்தை விட்டு இயற்கையான தித்திப்பு போகாதபடியான ஆஹாரமாகச் சாப்பிட வேண்டுமென்று அர்த்தம்.

கல்வித் திட்டத்தில் சமையற் படிப்பு

ஜீவிக்கிறதற்கு basic-ஆக இருப்பது சாப்பாடு தானே? அதனால் இந்த ஸ்வயம்பாகத்துக்குத்தான் basic education-லேயே (அடிப்படைக் கல்வியிலேயே) முதலிடம் கொடுத்து ஆண், பெண் அனைவருக்கும் சமையல் அறிவைக் கொடுத்துவிட வேண்டும். ஆமாம் “சமய அறிவைக் கொடுக்கும்படியாக இப்போதிருக்கிற ஸெக்யூலர் எஜுகேஷனை மாற்ற வேண்டும்” என்கிற நான்தான் இப்போது எல்லாவற்றுக்கும் “முந்தி சமையல் அறிவைக் கொடுக்கணும். எல்லாரையும் சாப்பாட்டு ராமன் ஆக்கணும்” என்கிறேன். ஆஹாரத்தைப் பொறுத்துத்தான் குணங்களும் மனப்பான்மையும் உண்டாகிறதால், சமய ஞானத்தில் பிடிப்பு உண்டாவதற்கே சமையல் ஞானத்தை உண்டாக்க வேண்டியாதாகிறது!

படிப்பிலே அடிப்படை Three R’s என்பார்கள். ‘ரீடிங்’ முதல் ‘ஆர்’, ‘ரைட்டிங்’ இரண்டாவது ‘ஆர்’, ‘ரித்மெடிக்’ (‘அரித்மெடிக்’என்பது பேச்சில் ‘ரித்மெடிக்’ என்றாகும்) மூன்றாவது ‘ஆர்’. நான் இதற்கெல்லாமும் அடிப்படையாக அடிப்படைக் கல்வியில் ஸ்வயம் பாகத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்கிறேன்.

நேரு “Kitchen religion” — “அடுப்பங்கரை மதம்”- என்று ஹிந்து மதத்தைப் பற்றி அடிக்கடி சொல்கிறார். அப்படிச் சொல்கிறபோது தாம் ஹிந்து மதத்தை ரொம்ப நன்றாகப் பரிஹாஸம் செய்கிறோம் என்று நினைக்கிறார். வாஸ்தவத்தில் அவர்தான் ஹிந்து மதத்தின் ஸாரத்தைப் புரிந்துகொண்டு அதற்கு ஸர்ட்டிஃபிகேட் தருகிறார்! நம் மதம் Kitchen religion -தான்; அடுப்பங்கரை மதம்தான்!

வேதம்தான் நம் மதத்துக்கு ப்ராமண நூல். வேதத்துக்கும் சிரஸில் இருப்பது உபநிஷத். அதிலே ஒரு உபநிஷத்திலே, ஆத்மா, பிரம்மம் என்று நமக்குப் புரியாத தத்வங்களைச் சொல்கின்றனவே, அந்த உபநிஷத்துக்களில் ஒன்றிலேயே* நம் மதத்தை அடுப்பங்கரையாகத்தான் ஆக்கி வைத்திருக்கிறது.

நாரதர் ஸநத்குமாரரிடம் போய் ஆத்ம வித்தையை உபதேசிக்கச் சொல்கிறார். அப்போது ஸநத் குமாரர், “ஆஹார சுத்தௌ ஸத்வ சுத்தி:” என்றுதான் முடிக்கிறார். உபநிஷத்திலேயே இந்த விஷயம் இருக்கிறது. “தூய உணவில் ஆரம்பி; அதுதான் குணம் தூய்மையாவதற்கு வழி. இப்படி சித்த சுத்தி ஏற்பட்ட பின்தான் படிப்படியாக ஈச்வர ஸ்மரணம், கட்டுக்கள் விடுபட்ட மோக்ஷம் எல்லாம் ஸித்திக்கும்” என்று ஸநத் குமாரரே Kitchen religion-ல்தான் உபதேசத்தைக் கொண்டுபோய் முடிக்கிறார். அந்த முடிவுதான் — ஆஹார சுத்திதான் — ஸாதனைக்கு ஆரம்பம் அடிப்படை.

அதனால், அடிப்படைக் கல்வி, ஆதாரக் கல்வி என்று பெரிசாகச் சொல்லிக்கொண்டு இப்போது செய்வதில் ஜீவாதாரமாக, எல்லாப் பண்புகளுக்கும் ஆதாரமாக இருக்கிற ஸ்வயம்பாக போதனையைச் சேர்த்து விட வேண்டும் என்கிறேன். அரசியல் தலைவர்களாகவும் ஸமூஹத் தலைவர்களாகவும் இருக்கப்பட்டவர்களும் ஆதாரக் கல்வியில் சமையல் திட்டத்தைச் சேர்க்க வேண்டுமென்கிறார்கள். ஆனால் எல்லாப் பசங்களுமாகச் சேர்ந்து எல்லாப் பசங்களுக்குமாகச் சமையல் பண்ணி, எல்லாருமாகச் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்கிறார்கள். இதிலே குணத்தின் அபிவிருத்திக்கு ஒன்றுமில்லை. ஒருவேளை கெடுதலே உண்டாகவும் இடமுண்டு என்பதால் நான் ஒவ்வொரு பையனும் தன் சாப்பாட்டைத் தானே பண்ணிச் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும் என்கிறேன். இது பெர்ஸனல் ப்யூரிடியால் ஸொஸைட்டியைக் காப்பாற்றுவதற்காகச் செய்ய வேண்டிய தர்மம்.

ஆதாரக் கல்வி மட்டுமில்லை, முதியோர் கல்வி என்று இன்னொரு பக்கம் நிறையச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே அதிலும் சரி, ரொம்ப ஸிம்பளிஃபை பண்ணி பாக சாஸ்திரம் [சமையற்கலை] சொல்லிக் கொடுத்துவிட வேண்டும்.

பிறர் உதவியின்றி அவரவர் கார்யத்தை அவரவர் செய்து கொள்ளும்படியாக் கல்வித் திட்டத்தில் கொண்டு வந்துவிட வேண்டும் என்றுதானே ஸமூஹத் தலைவர்கள் சொல்கிறார்கள்? ஆதலால் வாழ்க்கைக்கு முதலில் வேண்டிய அன்னத்தை அவனவனும் தயாரித்துக்கொள்ளும்படிச் சொல்லிக் கொடுக்க வேண்டும். எல்லோருக்கும் சேர்த்து ஒரே சமையல், ஜாதி வித்யாஸமில்லாமல் சமைத்து, எல்லாரையும் சேர்த்து உட்காரவைத்துப் போடுவதுதான் சீர்திருத்தம் என்று இவர்கள் சொன்னால், அதைவிட அவசியமான, முக்யமான சீர்திருத்தம் ஒவ்வொருவனும் தன் உணவைத் தானே தயாரித்துக் கொள்வதுதான். இவர்கள் ஸமூஹச் சீர்திருத்தம் என்று எதையோ நினைத்துப் போகிறார்கள். அந்த ஸமூஹம் என்பது பல தனி மநுஷ்யர்கள் கொண்டதுதானே? எனவே இந்தத் தனி மநுஷ்யர்களின் குணம் சீர்திருந்துவதுதானே எல்லாவற்றுக்கும் basic – ஆதாரம்? அதனால் ஆதாரக் கல்வியிலேயே ஸ்வயம்பாகம் சொல்லிக் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

ஆண்களில் முதியவர்களுக்கும் சமையல் தெரிந்திருக்க வேண்டுமென்பதற்கு சாஸ்திரமே ஆதரவாயிருக்கிறது. சாஸ்திர வாக்கியம் ஒன்று இருக்கிறது: “பஞ்சாசத் வத்ஸராத் ஊர்த்வம் ந குர்யாத் பாணி பீடநம் “. ‘பாணி பீடநம்’ என்றால் பாணிக்ரஹணம்; அதாவது கல்யாணம். ‘பஞ்சாசத்’ என்றால் ஐம்பது. ஐம்பது வயஸுக்கு மேலே கல்யாணம் பண்ணிக் கொள்ளக்கூடாது என்பது இந்த வாக்கியத்தின் அர்த்தம். முதல் பெண்டாட்டி தவறி விட்டால் ஐம்பது வயஸுக்கு அப்புறம்கூட இரண்டாம் கல்யாணம் செய்து கொள்கிறவர்கள், சமையலுக்கு ஆளில்லை என்ற காரணத்துக்காகவே அப்படிச் செய்வதுண்டு. ஸ்வயம்பாகம் தெரிந்து விட்டால் வானப்ரஸ்தத்துக்குத் போக வேண்டிய தசையில், சமையலை ஒரு காரணமாகச் சொல்லிக்கொண்டு, மறுபடி தாம்பத்தியத்துக்குத் திரும்புகிற ஆபாஸம் நடக்காமலிருக்கும். சாஸ்திரத்தை மீறின தோஷம் ஸம்பவிக்காமலிருக்கும். இப்படியேதான் பிரம்மச்சாரியாகவே இருக்க வேண்டுமென்று நினைக்கிறவர்களிலும் சிலபேர் ஓடி ஆடி அலைகிற மத்யம வயஸுவரை வீட்டில் அம்மா சமைத்துப் போட்டோ, ஹோட்டலிலோ சாப்பிட்டுக் கொண்டிருந்து விட்டு ஓய்ந்து உட்காருகிறபோது, ‘அம்மா போயிட்டாளே, இப்போ முன்மாதிரி ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்கமாட்டேனென்கிறதே’ என்று சமையலுக்காகவே (‘ஸஹ தர்ம’ இல்லை; தர்மத்துக்காக இல்லை; வயிற்றுக்காக, நாக்குக்காக) பிரம்மசர்யத்தை விட்டு விட்டுப் பெண் தேடிப் போகிற அஸங்கியமும் ஸ்வயம்பாக அநுஷ்டானம் இருந்துவிட்டால் ஏற்படாது.

முன்னெப்போதையும்விட, இப்போது அவனவன் ஊரோடு கிராமத்தோடு வேலை என்றில்லாமல், பக்ஷிகள் மாதிரி பூலோகத்திலே எங்கெங்கே வேலை உண்டோ அங்கேயெல்லாம் போகிறதென்று ஆகியிருக்கும் நிலையில் ஸ்வயம்பாகம் அத்யாவசியமாகிறது. சுத்தத்துக்குச் சுத்தம், ஸத்வத்துக்கு ஸத்வம்; அதோடு வெந்ததும் வேகாததுமாக ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டுச் சின்ன வயஸிலேயே அல்ஸர், அது, இது என்று அவஸ்தைப் படாமலும் இருக்கலாம். பொங்கல், சின்னதாக ரொட்டி, இதைவிட லேசாக அடுப்புத் தணலிலே கோதுமை மாவுருண்டையைக் காய்ச்சி அதை அப்படியே வேகப் பண்ணுவது – என்று அவனவனும் பண்ணிக் கொண்டால் வியாதியே வராது. இப்போது கணக்கு வழக்கில்லாமல் வியாதிகள்தான் ஸர்வ வியாபகமாக இருக்கின்றன.


* சாந்தோக்ய உபநிஷத் – 7.26.2.

வடதேச வழக்கின் உயர்வு

நாம் நம்மைவிட அநாசாரக்காரர்கள் என்று நினைக்கும் வடக்கத்திக்காரர்கள்தான் அநேக விஷயங்களில் நம்மைவிட நல்ல சாஸ்திர வழக்குகளை அநுஸரிப்பவர்களாயிருக்கிறார்கள். ‘ஸ்வதந்திரம்’ வந்த பிற்பாடு அங்கேயும் ரொம்ப க்ஷீண தசை என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் ஸமீப காலம் வரையில் நான் தெரிந்து கொண்டதில் அவர்களிடம் பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஆஹார விஷயம் அதில் ஒன்று. இத்தனை புளி, மிளகாய், பெருங்காயம் என்று நாம் வைத்துக் கொண்டிருப்பது போல அங்கேயில்லை. இதெல்லாம் ராஜஸத்தில் சேர்ப்பதுதான்.

இதில் பெங்காலை குறிப்பாகச் சொல்ல வேண்டும். “மத்ஸய்ப் பிராம்மணாள்” உள்ள ஊராச்சே என்றால் அது [மத்ஸ்யம் உண்ணும் பழக்கம்] முன்னேயே சொன்னாற்போல் ஒரு நிர்ப்பந்தத்தில் ஏற்பட்டது.

நாங்கள் பெங்கால் போயிருந்தபோது அவர்கள் ஆஹார வசதிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது பெரிய முகாமாக மடத்து ஜனங்கள் போயிருந்தோம். அவர்களும் சளைக்காமல் நாநூறு ஐநூறு பேர் சமைத்துச் சாப்பிடுவதற்கு வேண்டிய சாமான்கள் கொண்டு வந்து வைத்திருந்தார்கள். ஆனால் அதில் புளி இல்லை. புளி இல்லாமல் நமக்கு ஏது சாப்பாடு? குழம்பு, ரஸம் எதுவானாலும் அதுதானே முக்யம்? அவர்களுக்கோ கோதுமையும், டாலுக்குப் பருப்பும் இருந்தால் போதும், பெங்காலிகள் அரிசிச் சாதம் சாப்பிடுபவர்கள் தானென்றாலும் ரஸம், குழம்பு போட்டுக் கொள்ளாதவர்கள். அதனால் அவர்களுக்குப் புளியே தேவையில்லை.

நாங்கள் புளி வேண்டுமென்று கேட்டோம். உடனே எங்கேயோ நாலைந்து மைல் போய் அங்கேயிருந்த புளிய மரத்திலிருந்து கொஞ்சம் பச்சைக் காயைப் பறித்துக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அவர்கள் கொண்டு வந்த ஸ்வல்பப் புளியங்காய் இங்கே மடத்திலே வைக்கிற அண்டா சாம்பாருக்கு ஸமுத்திரத்தில் பெருங்காயம் கரைக்கிற மாதிரிதான் ஆகியிருக்கும்.

“இத்தனூண்டை வைத்துக்கொண்டு என்ன பண்ணுவது? இன்னும் ரொம்ப வேணுமே!” என்றோம்.

உடனே அவர்கள் பரிஹாஸமாக, “க்யா ஆப் இம்லீ காதே ஹை, யா சாவல் காதே ஹை?” (நீங்கள் புளியைச் சாப்பிடுகிறீர்களா, அல்லது அரிசி சாப்பிடுகிறீர்களா?) என்று கேட்டார்கள்!

பெங்கால் மாதிரி மத்ஸ்ய ஸம்பந்தங்கூட இல்லாமல் ராஜஸ்தானம், குஜராத், ஸெளராஷ்ட்ர, கட்ச் மத்யப் பிரதேஷ் ஆகிய ராஜ்யங்களில் எல்லா ஜாதியாரிலுமே மரக்கறி உணவுக்காரர்கள் ஏராளமாயிருக்கிறார்கள்.

டேராடன் மாதிரி இடங்களில் பிராம்மண கூலிக்காரன் முதுகிலே பெட்டி கட்டிக்கொண்டு அதில் வெள்ளைக்கார துரையை உட்கார்த்தி வைத்துக்கொண்டு போவான். ஆனால் வழியில் வாயிலே பச்சைத்தண்ணி விடமாட்டானாம். போக வேண்டிய இடத்துக்குப் போய் விட்டு, ஸ்நானம் பண்ணித் தன் ஆஹாரத்தைத் தானே சமைத்துத்தான் சாப்பிடுவான்.

தர்வான், வேலைக்காரி முதலியவர்கள்கூட யஜமான் வீட்டில் நாயாக உழைத்தாலும், அந்த வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிடுவது கிடையாது என்பதே வடதேசத்து வழக்கம் ஜாதியில் உசத்தி, தாழ்த்தி சொல்லிக் கொண்டு “தாழ்ந்தவன் வீட்டில் உசந்தவன் சாப்பிட்டாலென்ன?” என்று கேட்டுக்கொண்டு எல்லாவற்றையும் குழப்பிப் பல பட்டடை பண்ணுவதுதான் சீர்திருத்தம் என்று இங்கே நாம் நினைக்கிறோமென்றால், அங்கே தாழ்ந்த நிலையில் உள்ள வேலைக்காரன்கூட உயரந்த நிலையிலுள்ள முதலாளி வீட்டில் சாப்பிடுவதில்லை என்றிருக்கிறான்! இப்படி ஜாதிக்காக இல்லாமல் ‘ஸ்வயம்பாகம்’ என்ற நியமத்துக்காக என்று வைத்துக் கொள்ளும்போது, சண்டையும் இல்லாமலிருக்கிறது.

வடக்கே ஸம்பந்திகள் வீட்டில்கூட ஜன்மத்திலேயே ஒரு நாளாகக் கல்யாண தினத்தன்று மட்டுந்தான் சாப்பிடுவார்கள்.

அவனவனும் தன்னை pure -ஆக வைத்துக் கொள்ளப் பாடுபட்டுக் கொண்டிருந்தாலே எல்லாருக்கும் க்ஷேமம். இதிலே ஒரு அங்கம்தான் பிறத்தியாரால் அந்த purity -க்கு கெடுதல் வந்துவிடப் போகிறதே என்று ஜாக்கிரதையாக, அவர்களுடைய ‘ரேடியேஷன்’ ஆஹாரத்தில் ஏற்படாமல், தன் சாப்பாட்டைத் தானே பண்ணிக் கொள்வது. சாப்பாட்டு விஷயத்திலே ஜாதி முதலான அம்சங்களுக்கு இடமேயில்லை. இந்த ஸமத்வத்துக்காக யார் சமைத்தாலும் எல்லாரும் சாப்பிட்டாக வேண்டுமென்று பண்ணி ஜனங்களின் personal purity -ஐ பாதிக்க வேண்டாம். “ஜாதி கூடாது” என்று ஆரம்பத்திலிருந்து இப்படி ஸம்பந்தமில்லாத விஷயங்களிலெல்லாங்கூட ஜாதியைக் கொண்டு வந்து அதில் அபேத வாதத்தை நிலை நாட்டுவதே எல்லாவற்றையும்விட முக்யம் என்பதாக விஷயம் தெரிந்துகொள்ளாமல் செய்து வருகிறார்கள்.

ஒருத்தர் சமைத்து இன்னொருத்தர் சாப்பிடுவது என்கிறபோது சாஸ்திரத்தைப் பார்த்தால் ஒரு விதமாயிருக்கிறது; சீர்திருத்தக்காரர்கள் சொல்வது இன்னொரு விதமாயிருக்கிறது. மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று தப்பாக நினைத்துக்கொண்டு, “நீ சாப்பிடலாம், நீ சாப்பிடக்கூடாது” என்று வித்யாஸம் பார்த்தால் சிலருக்குக் கஷ்டமாயிருக்கிறது. “இதிலே மேலும் இல்லை; கீழும் இல்லை அவரவர் காரியம் ஒழுங்காக நடப்பதற்காக அந்தந்தக் காரியத்துக்கு அநுகூலமாக நியமங்களை வித்யாஸம் செய்திருக்கிறது. வித்யாஸத்தை எடுத்தால் எல்லாம் கலந்து குழம்பிப் போய்விடும்” என்று நினைக்கிறவர்களுக்கோ ‘ஸமத்வம்’ என்று சொல்லப்படுகிறதைப் பின்பற்றினால் கஷ்டமாயிருக்கிறது. அதாவது எவர் பண்ணிப் போட்டாலும் எல்லாரும் சாப்பிடலாம் என்றால் சிலருக்குக் கஷ்டமாயிருக்கிறது. சாப்பிடக் கூடாது என்றால் சிலருக்குக் கஷ்டமாயிருக்கிறது. கஷ்டம் என்கிறது சண்டையாக ஆகிறது.

கார்யத்துக்குத்தான் ஜாதியே தவிர சண்டைக்கா வைத்திருக்கிறது? அதுவும் சாப்பாட்டிலே சண்டை என்றால் வேதனையாயிருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே ஸொல்யூஷன் ஸ்வயம்பாகம்தான் என்று தெரிகிறது. மேல் ஜாதியா, கீழ் ஜாதியா என்ற கேள்விக்கே இடமில்லாமல், “The question does not arise” என்கிறாற்போல், இந்த விஷயங்கள் எழும்புவதற்கே இடமே தராமல், அந்தந்த ஜாதிக்காரனே சமைத்தாலும் சாப்பிடுவதில்லை, அம்மாவோ, அகமுடையாளோ பண்ணினால்கூடத் தொடுவதில்லை, அவனவனும் தன் கையால்தான் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று வைத்து விடுகிற நியமமே ஸொல்யூஷன்.

எவன் தொட்டுச் சாப்பிடலாம், எவன் பார்த்துச் சாப்பிடலாம், எவனோடு சாப்பிடலாம் என்கிற கேள்விகள் இருக்கிறவரையில் சாஸ்திரம் ஒன்றாகவும் சீர்திருத்தம் இன்னொன்றாகவும் இருந்துகொண்டு சண்டைதான் வரும். அதனால் எவனுமே தொடாமல் அவனவனே சமைத்துக் கொண்டு, எவனுமே பார்க்காமல், எவனோடும் சேர்ந்து உட்காராமல் தனித்தனியாகப் போஜனம் பண்ணி விடுவது உத்தமம். ‘காகம் கரைந்துண்ணக் கண்டீர்‘ என்கிறாற்போல் சேர்ந்து சாப்பிட வேண்டுமென்றிருந்தால் பழங்கள், பானங்களைச் சேர்ந்து சாப்பிடலாம். மற்றவர்கள் சமைத்துக் கொள்ள உணவுப் பண்டங்களாகக் கொடுப்பதே விருந்துபசாரந்தான்; அப்படிப் பண்ணலாம்.

இதுவரை தக்ஷிணத்தில் நம்மைவிடக் கடும் குலாசாரமுள்ளவர்களின் கையில், அல்லது பெர்ஸனலாக நம்மைவிட சுத்தமானவர்களின் கையிலிருந்து வாங்கிச் சாப்பிடலாம் என்று இருந்து வந்திருக்கிறது. வடக்கேயோ இதுவும் கூடாது. கிஸான் [குடியானவன்] ஆனாலும் பணடிட் ஆனாலும் அவனவனே சமைத்துக்கொள்ள வேண்டுமென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலேயும் ஒரு நல்ல அம்சம் இருக்கிறது. நம்மைவிட சுத்தர்கள் கையில் சாப்பிடலாம் என்பதனாலேயே நாம் அவ்வளவு சுத்தியாவதற்கு பிரயத்தனப்படாமலே இருந்து கொண்டிருக்கலாம் என்பதற்கும் இடம் கொடுத்துப் போகிறது. ஸ்வயம்பாகம் என்று வைத்து, நம்முடைய அசுத்தி நாமே பண்ணிக் கொள்கிற சாப்பாட்டினால் நமக்குள் மேலே மேலே போய்க்கொண்டேயிருக்கிறபோது தான், இப்படி நம்மைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்று நினைத்து நம்மை சுத்தப்படுத்திக் கொள்வதற்குப் பிரயத்னம் செய்வோம். “சாப்பாடு பண்ணிப் போடுகிறவனின் சுத்தம் சாப்பிடுகிறவனுக்குள் போகிறது; நாம் சுத்தனாக வேண்டும்; அதே ஸமயத்திலே நம் சாப்பாட்டை நாமே பண்ணிக்கொள்ள வேண்டும்” என்றால் அப்போது நாம் சுத்தமாக ஆவதற்கு முயற்சி பண்ணத்தானே செய்வோம்?

ஸ்வாமி பிரஸாதம், குருப் பிரஸாதம் தவிர ஸ்வயம்பாகம்தான் என்று ஆக்கிக் கொண்டுவிட வேண்டும்.

இதனால் ஒரு டிஸிப்ளினும் உண்டாகிறது. சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கவோ, அரட்டை, சீட்டு, ஸினிமா என்று போகவோ விடாமல் சமையல் வேலை என்று ஒன்று ஒருத்தனைக் கட்டிப் போடுகிறதல்லவா? இதில் தானே பண்ணிக் கொள்வதால் நிறைய தினுசு வேண்டாம் என்று நாக்கு டிஸிப்ளினும் வருகிறது. சமைத்ததில் ஸத்வ ரஸம் இருக்க வேண்டுமென்பதை உத்தேசித்து அப்போது நாமஜபம் செய்கிற டிஸிப்ளின் வேறு. தானே பொங்கிப் போட்டுக் கொள்வது என்கிற, அல்பமாகத் தோன்றுகிற தர்மாசாரத்துக்கு இத்தனை நல்ல பலன்கள்!

“எப்படிக் கற்றுக் கொள்வது?” என்று புருஷர்களாய் பிறந்தவர்கள் பிரமிக்க வேண்டியதில்லை. “இப்படித்தான் இருக்கணும்” என்ற எண்ணம் வந்துவிட்டால், ஈஸியாக கற்றுக் கொண்டு விடலாம். பொம்மனாட்டிக் குழந்தைகள் சூட்டிகையாயிருந்தால், அரைத்துக் கரைத்து இத்தனை தினுஸோடும் சமைப்பதற்குப் பன்னிரண்டு வயஸுக்குள் கற்றுக் கொண்டு விடவில்லையா? ‘வெரைய்டி’ இல்லாமல் ஸிம்பிளாக ஒரு சப்பாத்தி அல்லது ஒரு பொங்கல், ஒரு தயிர் என்று ஆஹாரத்தை ஆக்கிக் கொண்டு விட்டால், நாலே நாளில் கற்றுக்கொண்டு விடலாம். என் அபிப்ராயம், பதினைந்தே நிமிஷத்தில் தயாரிக்கக்கூடியதாக ஏதாவது ஒரு ஸிம்பிள் ஆஹாரத்தைப் புருஷர்கள் அத்தனை பேரும் தெரிந்து கொண்டு தாங்களே அதைப் பண்ணிப் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டுமென்பது.

பிக்ஷையும் ஸ்வயம்பாகமும்

ப்ரம்மசாரிகள் பிக்ஷாசர்யம் பண்ண வேண்டும் (பிக்ஷை எடுத்துச் சாப்பிட வேண்டும்) என்று நான் சொல்லி வருவதற்கு1* இது [மாணவன் ஸ்வயம்பாகம் செய்து சாப்பிட வேண்டுமென்பது] விரோதமாயிருக்கிறதே என்று தோன்றலாம். வித்யாப்யாஸ காலம் பூராவும் ஒரு பையன் பிக்ஷை எடுத்துச் சாப்பிடுவான், சாப்பிட வேண்டும் என்று நான் இந்தக் கால நிலைமையில் எதிர் பார்க்கவுமில்லை, நிர்பந்திக்கவுமில்லை. அப்படி ஒருத்தன் பண்ணினால் அது எனக்கு ரொம்ப ஸந்தோஷந்தான். ஆனால் அபூர்வமாய் எவனோதான் அப்படிப் பண்ண முடியும். பொதுவில் எல்லா மாணவர்களும் ஒரு வருஷமாவது பிக்ஷாசர்யத்துடன் குருகுல வாஸம் பண்ண வேண்டுமென்பதுதான் நான் சொல்வது. மீதி வருஷங்களில் அவனும் ஸ்வயம்பாகம் பண்ணிக் கொள்வது என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

க்ருஹஸ்தனான பிராம்மணன் பிறத்தியாருக்கு போதனை பண்ணி அதற்குத் தக்ஷிணை வாங்கும்போது தான்யமாகவும் கறிகாயாகவும் பச்சையாகத்தான் (raw-ஆகத்தான்) வாங்கலாமே தவிர, பக்வம் பண்ணினதாக [சமைத்ததாக] வாங்கக் கூடாது; ஆனால் ஸந்நியாஸிக்கும் பிரம்மசாரிக்கும் மாத்திரம் பக்வ அன்னமே பிக்ஷையாக வாங்க ரைட் இருக்கிறது – யதிச்ச ப்ரஹ்மசாரிச்ச பக்வான்ன ஸ்வாதீனௌ உபௌ – என்று விதி இருக்கிறது. இதனால் யதி [ஸந்நியாஸி] யைப் போலவே பிரம்மசாரியும் பிக்ஷை வாங்கித்தான் சாப்பிட்டாக வேண்டுமென்று ஒரே தீர்மானமாக வைத்துவிட்டதாக அர்த்தமில்லை. இவர்கள் இரண்டு பேருக்கும் பிக்ஷை எடுக்க வேண்டும் என்று வைத்ததற்குக் காரணம் வேறு வேறாகும். யதி எப்போதும் ஆத்ம விசாரம் பண்ண வேண்டியவனாதலாலும், உடைமையே அவனுக்குக் கூடாதாகையாலும் சமையற்கட்டைக் கட்டிக்கொண்டு அழ விடமால் அவனுக்குப் பிக்ஷா நியமம் வைத்தார்கள். குறிப்பாக எவரோ ஒருத்தர் இரண்டு பேர் அவனுக்கு ஆஹாரம் கொடுப்பது என்று வைத்துக் கொண்டால் அவர்களுக்கு இவன் obliged-ஆகிவிடுவான் [கட்டுப்பட்டு விடுவான்] என்பதால் அப்படிக் கூடாது என்று ஏதோ நாலு ஐந்து வீடாக இன்றைக்குப் போன இடத்துக்கு நாளைக்குப் போகாமல், ஸமூஹம் பூராவிலிருந்தும் பிக்ஷை வாங்கிச் சாப்பிட வேண்டுமென்று வைத்தார்கள். தனியாக எவருக்கும் இவனைப் பராமரிக்கிற பொறுப்புப் பளுவைத் தராமல், ஸமூஹம் முழுவதற்கும் அதைப் பகிர்ந்து தரும் உத்தேசமும் இதில் அடங்கியிருக்கிறது. அதோடு கூட இவனுக்கு அக்னி ஸம்பந்தமேயிருக்க கூடாது. [ஸந்நியாஸ] ஆச்ரமம் வாங்கிக் கொண்டவுடனேயே அக்னி ஹோத்ரம், ஒளபாஸனம் முதலான எல்லா அக்னி கார்யமும் நின்று விடுகின்றன. சமையல் செய்வதென்றால் அக்னியில்லாமல் முடியுமா? இவன் அடுப்பு மூட்டிச் சமைக்கும்போது ஏதோ பூச்சிப் பொட்டு விழுந்து செத்துப் போனால், இவனுடைய ஆச்ரமத்தின் பரமதர்மமான அஹிம்ஸைக்கு ஹானியாய் விடும். இந்தக் காரணங்களை உத்தேசித்தே இவன் சமைத்த ஆஹாரத்தை பிக்ஷை வாங்க வேண்டும் என்று வைத்திருப்பது2*.

பிரம்மசாரிக்குப் பிக்ஷை வைத்ததற்குக் காரணம் வேறு. விநயம் ஏற்பட வேண்டும், அப்போதுதான் வித்யை பலன் தரும் என்பதற்காகத்தான் வீடு வீடாகப் போய் அவனை பிச்சைக் கேட்கும்படியாக விதித்திருப்பது. அப்புறம் இவனுக்குச் சமைத்துப் போடுவதற்காக குருபத்தினியைச் சிரமப்படுத்த வேண்டாமென்றுதான், சமைத்த அன்னமாகவே பிக்ஷை வாங்கி வரலாம் என்று அநுமதித்திருப்பதும். அக்னி ஸம்பந்தமே கூடாது என்று ஸந்நியாஸிக்குக் கட்டுப்பாடு இருப்பது போல் பிரம்மசாரிக்குக் கிடையாது. அவன் தினமும் இரண்டு வேளையும் பண்ண வேண்டிய ஸமிதாதானம் என்பது அக்னி வளர்த்து அதில் ஸமித்தைப் போடுகிற சடங்குதான்.

ஆகையால் வித்யாப்யாஸ காலம் பூராவும் பிக்ஷாசர்யம் பண்ணுவது என்பது ஸாத்யமாகத் தெரியாத நம் காலத்தில், ஏதோ ஒரு வருஷமாவது அப்படி ஒரு பாடசாலை மாணவன் பண்ணிவிட்டு, மற்ற காலத்தில் ஸ்வயம்பாக நியமம் வைத்துக்கொள்ளலாமென்று என் அபிப்ராயம். எத்தனை மூலதனமிருந்தும் வேதப் படிப்புக்குப் போதவில்லை என்பதால் பாடசாலைகளை மூடி விடுகிற நிலைமை மாற வேண்டுமானால் செலவில்லாத ஸிம்பிள் ஆஹார வழக்கத்தை வித்யார்த்திகள் மேற்கொள்ளும்படி செய்ய வேண்டி இருக்கும்போது, ஸ்வயம்பாகம் என்று வைத்தாலே தன்னால் இப்படி ஏற்பட்டு விடுகிறது என்று பார்க்கிறேன்.


1.* பார்க்க: “தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதியில், “குருகுல வாஸம்” என்னும் உரை.

2.*தீவிரமான துறவறத்தில் சமைத்த உணவாயின்றி, தானே விழுகிற பழம், பத்திரம் ஆகியவற்றை மாத்திரம் உண்ண வேண்டும் என்று ஸ்ரீபெரியவர்கள் ‘மரக்கறியில் ஹிம்ஸை இல்லையா?‘ என்ற பிரிவில் கூறியிருப்பதும் கருதற்பாலது.

வேத வித்தை வளரவும் வழி

வேத வித்யாப்யாஸமே ஸ்வயம்பாகத்தால் வளரும். இதற்கும் அதற்கும் என்ன ஸம்பந்தம் என்று தோன்றலாம். சொல்கிறேன்: வடக்கே நான் போயிருக்கும் போது பார்த்திருக்கிறேன். ஒரிஸ்ஸா, பெங்கால், யு.பி. முதலிய இடங்களில் நம்மூர் மாதிரி வேத பாடசாலை என்றில்லாவிட்டாலும் ஸம்ஸ்க்ருத பாடசாலை என்று இருக்கும். நம்மூரில், தமிழ்நாட்டில் மொத்தம் ஏதாவது முப்பது நாற்பது பாடசாலைகள் நல்ல ‘ஸ்ட்ரெங்க்த்’தோடு இருக்குமா என்கிறதே ஸந்தேஹமாயிருக்க, அங்கேயெல்லாம் இப்படிப்பட்ட ஸம்ஸ்க்ருத பாட சாலைகள் நூற்றுக்கணக்கில் இருந்தன. பாடசாலை என்பதே அங்கே ‘டோல்’ என்பார்கள். இந்த விஷயத்தில் ரொம்ப backward -ஆக இருக்கும் என்று நாம் நினைக்கிற அஸ்ஸாமிலேயே சுமார் இருநூறு டோல் இருக்கிறதென்று கவர்னர்* சொன்னார். இதிலே இன்னும் வேடிக்கை என்னவென்றால் நம் பாடசாலைகளுக்கு நிறைய மூலதனம் இருக்கிறாற்போலவும் வடக்கத்திப் பாடசாலைகளுக்குக் கிடையாது.

ஆசாரம், ஸம்பிரதாயம் என்பதிலெல்லாம் நாம்தான் ரொம்ப மேல் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்த போதிலும், நம் பக்கத்தில் நிறைய மூலதனமிருந்தும் வேதபாடசாலைகள் தினக்ரமேண க்ஷீணித்துப் போகிறதேன், வடக்கே இத்தனை ‘டோல்’கள் இப்படி நல்ல ‘ஸ்ட்ரெங்கத்’தோடு இருப்பதேன் என்று எனக்கு ரொம்ப நாள் புரியாமலிருந்தது. அப்புறம்தான் அவர்களையே கேட்டதில் புரிந்தது.

“மூலதனம் இல்லை என்கிறீர்கள். இத்தனை மாணவர்கள் எப்படியிருக்கிறார்கள்?” என்று கேட்டேன்.

“மாணவர்கள் இருப்பதற்கு மூலதனம் என்னத்துக்கு?” என்று எதிர்கேள்வி கேட்டார்கள்.

“ஃப்ரீயாக சாப்பாடாவது போட்டால்தானே வித்யார்த்திகள் சேர்வார்கள்?” என்றேன்.

“ஆமாம், சாப்பாடு போடவேண்டியதுதான். அதற்கு மூலதனம் வைப்பானேன்? கிரானாக்கார பனியாவோ, மார்வாரியோ இருக்கிறான். (கிரானா என்றால் பலசரக்குக் கடை.) ஸம்ஸ்க்ருதம் படிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு பசங்கள் போய்க் கேட்டால் அவன் ஆட்டாமாவும் மக்கனும் கொடுத்து விடுகிறான். (மக்கன் என்றால் வெண்ணெய்.) அந்தந்த மாணவனே அந்த மாவைப் பிசைந்து தவ்வாவிலே போட்டு சுட்டு ரொட்டி பண்ணித் தின்று கொள்கிறான். அவ்வளவுதானே? ‘மக்கன்’ கிடைக்காவிட்டால் கூடச் சரி. அப்படியே நெய்யுமில்லாமல் சுக்கான் ரொட்டியாக வாட்டித் தின்று விடுவது எங்களுக்குப் பழக்கந்தான். தவ்வா கூட வேண்டுமென்பதில்லை. ரொட்டி மாவுருண்டையையே கொஞ்சம் தட்டி அப்படியே சுள்ளியிலே போட்டுவிட்டால் அது உப்பிக்கொண்டு வெந்துவிடும். அதைத் எடுத்துத் தின்பதும் வழக்கம்தான். கொஞ்சம் ஜாஸ்தி வசதியிருந்தால் பருப்பை வேகவைத்து ஒரு டாலும் பண்ணிக்கொண்டு விடுவோம். எத்தனையோ கிரானாக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கடைக்காரனும் ஒரு பையனுக்கு மாவு முதலானது கொடுக்க யோசிப்பதில்லை” என்று ரொம்பவும் ஸிம்பிளாகச் சொல்லி விட்டார்கள்.

இங்கே நம்மூரிலானால் பாடசாலை வைக்கிறோம் என்றாலே உக்ராணம், வெங்கலப் பானை, வாணலி, அண்டா, குண்டான், அரிசி மூட்டை, புளிப்பானை, அப்புறம் அஞ்சறைப் பெட்டி இத்யாதி வேண்டியிருக்கின்றன. நிர்வாஹம் பண்ண மணியக்காரன், காவலுக்கு ஆள் இதெல்லாம் வேறே. எத்தனைதான் மூலதனமிருந்தாலும் இப்போதிருக்கிற இன்ஃபளேஷனிலும் விலைவாசி நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருப்பதிலும், சாப்பாட்டுக் செலவுக்கே கட்ட மாட்டேனென்று ஆகிறது. அப்புறம்தானே வாத்தியார் சம்பளம், பசங்களுக்கு ‘ஸ்டைபென்ட் இதெல்லாம்? இந்தக் காரணத்தால்தான் பாடசாலைகளையே மூட வேண்டியிருக்கிறது.

அவர்கள் சொன்னதிலிருந்துதான், ‘ஓஹோ! தக்ஷிணத்தில் வேதவித்யை க்ஷீணித்துப் போகிறதற்கே நம்முடைய அஞ்சறைபெட்டிச் சமையல்தான் காரணமா? நாக்கு ருசிக்காகவா நம் மதத்தின் வேரான வேதத்தை அறுத்திருக்கிறோம்?’ என்று தெரிந்தது.

இத்தனை தினுஸு, காரமும் புளிப்புமாகச் சாப்பிட்டாலே பிரம்மசாரியாக இருக்கவேண்டியவனுக்கு நல்லதில்லை. “நீயே சமைத்துச் சாப்பிட்டுக்கொள்” என்று விட்டுவிட்டால் அவன் இந்த ‘அஞ்சறை பெட்டி ஆஃபீஸ்’ நடத்தவே மாட்டான். படிக்கணும், அநுஷ்டானம் பண்ணணும் என்பதால் அவனாகவே வடக்கே செய்கிற மாதிரி ஏதோ ஒரு தினுஸு, இரண்டு தினுஸு லேசான ஆஹாரமாக, ஸத்வப் பிரதானமானதாக, பண்ணிச் சாப்பிட்டுவிட்டுத் திருப்தியாயிருந்து விடுவான். பாடசாலைக்குப் பெரிய மூலதனம் வேண்டாம் என்றால், வேத வித்யையும் தன்னால் இப்போதிருப்பதைவிட நன்றாக வளரும்.


*1958 எப்ரலில் அப்போது கவர்னராயிருந்த அஸ்ஸாமியரான ஸ்ரீ விஷ்ணுராம் மேதி ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளை தரிசித்து உரையாடினார்.

உடன் உண்பவர்கள்

இதைப்பற்றிச் சொல்லும்போது ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேனென்று ஞாபகம் வருகிறது. ஆஹாரத்தோடு ஸம்பந்தப்பட்டவர்களைப்பற்றிச் சொல்லும்போது அதைச் சமைத்தவர்கள், பரிமாறுகிறவர்கள் ஆகிய இரண்டு பேரோடுகூட, கூடச் சாப்பிடுகிறவர்களையும் சொல்லியிருக்க வேண்டும்.

போஜனம் பண்ணும்போது நம்மோடு சாப்பிடுகிறவர்களுடைய குண தோஷங்களின் பரமாணுக்களும் நாம் சாப்பிடும் அன்னத்தில் ஓரளவுக்குச் சேர்கிறது. பரம சுத்தமாக இருக்கப்பட்டவர்களைப் ’பங்க்தி பாவன’ர்கள் என்று சொல்லியிருக்கிறது – அதாவது அவர்கள் உட்கார்ந்திருப்பதாலேயே அந்தப் பந்தி (பங்க்தி) யைச் சுத்தப்படுபடுத்தி விடுகிறார்களாம். அவர்களோடு நாம் போஜனம் பண்ணினால் அந்த ஆஹாரம் உள்ளே போய் நம் மனஸைத் தூயதாக்கும். இதே மாதிரி ‘பங்க்தி தூஷக’ர்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறது. ரொம்பவும் தோஷமுள்ள இவர்கள் உட்கார்ந்திருப்பதாலேயே பந்தி முழுதும் அசுத்தி ஆகிவிடுகிறதாம்.

இது மட்டுமில்லை. சைவ போஜனமே பண்ண வேண்டிய ஜாதிக்காரன் அசைவ போஜனம் அநுமதிக்கப்பட்ட ஜாதியாருடன் சேர்ந்து சாப்பிட்டால் என்ன ஆகும்? அந்நிய பதார்த்தத்தில் இவனுக்கு ஒரு ஆசை உண்டானாலும் உண்டாகக் கூடுமல்லவா? நியமம் தப்ப இடமுண்டாகிவிடும் அல்லவா? ‘ஸம பங்க்தி’யினால் ஸமத்வம் கொண்டு வருவதாகச் சொல்லிக்கொண்டு, கிழங்கையும், பழத்தையும் தின்றுகொண்டு கிடக்க வேண்டிய ஒரு ஸந்நியாசியை, முள்ளங்கி வெங்காய வாஸனை சபலப்படுத்துகிற பொதுப் பங்க்தியில் கொண்டு உட்கார்த்தி வைத்தால் அவனுடைய பெரிய லக்ஷ்யத்துக்கே அல்லவா ஹானி வந்துவிடும்? இம்மாதிரி ஒரு ஜாதிக்காரன், அல்லது ஆச்ரமக்காரனின் தர்மம் கெட்டுப் போவதால் பாதிக்கப்படுவது அவன் மட்டுமில்லை; இதனால் அவன் செய்கிற கார்யம் கெட்டு அவனால் ஸமூஹத்துக்கு கிடைக்கிற நன்மையே போய்விடுகிறது என்பதைச் சீர்திருத்தக்காரர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

ஸம பங்க்தி, ஹாஸ்டல்களின் காமன் மெஸ், கான்டீனில் ஒரே சமையற்கட்டிலேயே சைவ பதார்த்தம், அசைவ பதார்த்தம் இரண்டையும் சமைத்து அந்தப் பரமாணுக்கள் கலப்பது என்றெல்லாம் பண்ணியிருப்பது எல்லாரையும் பக்குவ ஸ்திதியில் ஒரேபோல் இறக்குகிற ஸமத்வத்தை சாதித்திருக்கிற அநேக சீர்திருத்தங்களில் ஒன்றாகத்தான் ஆகும்!

கேட்டால் இப்படியெல்லாம் சீர்திருத்தம் பண்ணினால்தான் ஒற்றுமை உண்டாகுமென்கிறார்கள். எனக்குச் சிரிப்புதான் வருகிறது – எல்லாரையும் சேர உட்கார வைத்து, நியமமில்லாத ஆஹாரதிகளைப் போட்டுவிட்டால், ஒற்றுமை உண்டாகிவிடும் என்பதைக் கேட்க! உலகத்தின் எல்லா தேசங்களையும் யுத்தத்தில் இழுத்துவிட்டு ஜன ஸமுதாயத்துக்கே பெரிய சேதம் விளைவித்த World War -க்குக் காரணமாயிருந்த ராஜாங்கங்களெல்லாம் யுத்தப் பிரகடனம் செய்ததற்கு முதல் நாள் வரையில் பரஸ்பரம் விருந்து கொடுத்துக் கொண்டு, இவருக்கு அவர் ‘டோஸ்ட்’, அவருக்கு இவர் ‘டோஸ்ட்’ என்று சேர்ந்து சாப்பிட்டுவிட்டுத்தான் மறுநாளே ஒருத்தர் தேசத்தை இன்னொருத்தர் நாசம் பண்ண ஆரம்பித்தார்கள் – ராணுவம், ஸிவிலியன் பாபுலேஷன் என்ற வியவஸ்தை இல்லாமலே! அப்படியும் ‘ஒற்றுமை’ ஸஹபோஜனத்தால் வந்துவிடும் என்று உபதேசம் செய்கிறார்கள்! ஏதோ தாற்காலிகமாக ஏற்படக்கூடிய அல்ப திருப்திக்காகவே இப்போது நடக்கும் இந்த தேக் கச்சேரிகளும், சிற்றுண்டி விருந்துகளும், கலப்பு போஜனங்களும் பிரயோஜனப்படுகின்றனவே தவிர இதனால் ஒற்றுமையோ, ஸெளஜன்யமோ உண்டாகி விடவில்லை என்பது இந்தப் புதுப் பழக்கங்கள் நம் தேசத்தில் ஏற்பட்டு பல வருஷங்களாகி, இன்னமும் தினந்தினம் ஸமூஹச் சண்டைகள் ஜாஸ்தியாகிக் கொண்டு தானிருக்கின்றன என்பதிலிருந்தே தெரிகிறது. பட்டம் பெறுவது மாதிரி ஸ்வய லாபத்தை உத்தேசித்து ஒரு ஏமாற்று வித்தையாகத்தான் இந்த விருந்து உபசாரங்கள் நடக்கின்றன. இதோடு போனால் கூடப் பரவாயில்லை. இந்த நவ நாகரிக விருந்துகள் தர்ம நூல்களிலிருந்தும் வெகுதூரம் எட்டிப் போய்க் கொண்டிருப்பதால் ஆத்மார்த்தமாகவும் பெரிய நஷ்டத்தை உண்டாக்குகின்றன.

சாச்வத ஒற்றுமைக்கு வழி, சேர்ந்து உண்டு காட்டுவதல்ல; சேர்ந்து தொண்டு காட்டுவதேயாகும். நான் பல ஸமயங்களில் சொன்னதுபோல ஜாதி என்கிற பேச்சுக்கே இடமில்லாமல், ஸகல ஜனங்களும் சேர்ந்து ஸகல ஜனங்களுக்குமான தொண்டுகளைச் செய்வதால் தான் ஒற்றுமை வளரும். இந்தப் பொது ஸேவை பரிசுத்தமாக நடக்க முடியாதபடி அதிலும் அரசியலைக் கொண்டுவந்து விட்டு விட்டு, ஆசார சாஸ்திரத்தைச் சேர்ந்த ஆஹாராதி விஷயங்களில் அரசியல் அபேத வாதங்களைக் கலந்து தர்மங்கள் கெடும்படிச் செய்து வருகிறார்கள்.

அவனவன் தானே சமைத்துக் கொள்வதோடு, சாப்பிடும்போதும் பிறரின் பரமாணு எதுவும் சேராமல் தனியாகவே சாப்பிடுவது ச்லாக்கியம். ஸ்வயம்பாகம் பண்ணிக் கொள்கிறவர்களே சாப்பிடும்போது ஒருத்தருக்கு மேல் சேர்ந்தால், ‘நீ என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய்?’ என்று ஒருத்தரையருத்தர் கேட்டுக் கொண்டு நாக்குச் சபலத்துக்கு இடங்கொடுக்க வேண்டிவரும். ஆகையால் தனித்தனியாய்ப் பண்ணிக்கொள்வதைத் தனித்தனியாகவே சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஸமத்வமும் ஸோஷலிஸமும் வேறு துறைகளினால் ஏற்பட்டால் போதும்.

பொதுச் சமையல், ஸமபந்தி என்று ‘சீர்திருத்தம்’ பண்ணியதால் பிராணி ஹிம்ஸைதான் ஜாஸ்தியாயிருக்கிறது. தலைமுறை தத்வமாக மரக்கறி உணவையே கடைப்பிடித்த பலர் நான்-வெஜிடேரியன்கள் ஆகியிருக்கிறார்களென்றால் அதற்கு இந்த ‘சீர்திருத்தம்’ தான் காரணம்.

பஹுகாலமாக நான்-வெஜிடேரியன்களாகவே இருந்து வருகிற தேசங்களிலும் அங்கங்கே ஏதோ பத்து இருபது பேர் கஷ்டப்பட்டு வெஜிடேரியன்ஸாக இருந்து கொண்டு வெஜிடேரியனிஸத்தைப் பிரசாரப்படுத்தப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புதிசாக எதை ஏற்படுத்த முயல்கிறார்களோ அது ஏற்கெனவே நம்மிலே எத்தனையோ கோடிப் பேருக்குப் பாரம்பர்யமாக வந்திருந்தும், நாம் இருக்கிறதையும் அழித்துவிட்டு, லோகத்துக்கே வழிகாட்டியாகச் செய்கிற லாபத்தை நஷ்டப்படுத்தி, ‘சீர்திருத்தம்’ செய்கிறோம்! மநுஷ்யர்களாகப் பிறந்தவர்கள் தங்களுடைய status (அந்தஸ்து) என்கிறதை அதற்கு ஸம்பந்தமேயில்லாமல் சாப்பாட்டில் கொண்டு வந்து அதற்காக ஏற்படுத்துகிற ஸமத்வத்துக்காகப் பசு பக்ஷிகளாகப் பிறந்த அநேக ஜந்துக்கள் உயிரையே இழக்கும்படிப் பண்ணி வருகிறார்கள். காந்தீயத்தில் இந்த ஸமத்வம், அந்த அஹிம்ஸை இரண்டுமே இருக்கின்றன என்கிறார்கள்!

தானே தன் சாப்பாட்டைத் தயாரித்துக் கொள்வதிலுள்ள அநேக நல்ல பலன்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அதிலே எதிர்பார்க்க முடியாத இன்னொரு பிரயோஜனத்தைச் சொல்கிறேன்.