நிறைவு பெறுவோம்

வைகுண்ட ஏகாதசி, மஹா சிவராத்ரி, கோகுலாஷ்டமி, ராமநவமி முதலிய விசேஷ நாட்களில் கூட நாம் வாயைக் கட்டாமல், வயிற்றைச் கட்டாமலிருந்தால் அது இந்த தேசத்தில் பிறந்த நமக்கு ரொம்பக் குறைவாகும். வயிறு குறைந்தாலும் மனஸ் நிறையும்படிப் பண்ணிக் கொள்வதே நமக்கு நிறைவு. அப்படிப் பண்ணிக் கொள்வதற்கான ஸங்கல்ப பலத்தை பகவான் எல்லாருக்கும் அநுக்ரஹிக்க வேண்டும்.

வியாதிக்கு மருந்து மாதிரி பசிக்குச் சாப்பாடு ரொம்பவும் அளவாகத்தான் போட வேண்டும். அதாவது பசியைத் தீர்த்துக்கொள்ளத்தான் ஆஹாரமே தவிர ருசியைத் தீர்த்துக்கொள்ள அல்ல என்று ஆசார்யாள் சொல்லியிருப்பதாகச் சொன்னேன். மற்ற வியாதிகளுக்கும் இந்த ‘க்ஷுத் வியாதி’க்கும் ஒரு வித்யாஸம், தலைவலிக்கு மருந்து போட்டால் அது போய் விடுகிறது; மறுபடி என்றைக்கோ ஒரு நாள்தான் வருகிறது. ஜ்வரமும் இப்படித்தான். ஆனால் இந்தப் பசி வியாதி மட்டும் இப்போது மருந்து போட்டு ஸ்வஸ்தப்படுத்தி விட்டாலும், வேளை தப்பாமல் மறுபடி மறுபடி ‘அட்டென்டன்ஸ்’ கொடுத்துக்கொண்டேயிருக்கிறது! இப்படி இயற்கையை ஏவிவிட்டு ஈச்வரன் வேடிக்கை பார்க்கிறான். நமக்குப் பரீக்ஷை வைக்கிறான். நாம் பாஸ் பண்ணினால்தான் பெருமை. அவனுடைய அருள் துணையை நம்பி, நாம் ஸங்கல்பம் பண்ணிக்கொண்டு உறுதியாயிருந்தால், அவன் கைகொடுத்துப் பாஸ் பண்ண வைத்து, நல்லாரோக்யம், நல்ல ஆத்மாபிவிருத்தி முதலான ப்ரைஸ்களையும் கொடுப்பான்.

நம்முடைய த்ருட சித்தம் முக்யம். எங்கேயோ ஒரு இடத்துக்குப் போகிறோம். அவர்கள் விலக்கப்பட்ட பதார்த்தம் எதையோ உபசாரம் பண்ணிச் சாப்பிடச் சொல்கிறார்கள். அந்த ஸமயத்தில் தாக்ஷிண்யத்தாலோ, அவர்கள் தப்பாக நினைக்கப் போகிறார்களே என்றோ அதைச் சாப்பிட்டுவிடக் கூடாது. ப்ரின்ஸிபிளை விடக் கூடாது.

பெங்காலில் விதவைகள் எத்தனை கடுமையாக ஏகாதசி வ்ரதாநுஷ்டானம் பண்ணுகிறார்கள் என்பதைப் பார்த்து அதை நாமும் கொஞ்சமாவது ‘எமுலேட்’ பண்ண முயலவேண்டும். பெங்கால்காரர்கள் மத்ஸ்ய ப்ராம்மணர்கள்தான்; ஆனால் விதவைகளை அந்த ஸாமானைத் தொடமாட்டார்கள். அதோடு ஏகாதசியை அவர்களே மற்ற எவரையும் விடத் தீவிரப் பற்றுடன் அநுஷ்டிக்கிறார்கள். வாயில் சொட்டுப் பச்சைத் தண்ணி கூட விடாமல் அன்று வ்ரதமிருக்கிறார்கள். அங்கே கோடையில் கோட்டையடுப்பு மாதிரி ஊர் முழுக்க நெருப்புக் காற்று அடிக்கிற போதுகூட, வாய் அப்படியே உலர்ந்து வறண்டு ஒட்டிக் கொண்டாலும் அந்த விதந்துக்கள் சொட்டுத் தீர்த்தங்கூட விட்டுக் கொள்வதில்லை என்று பிடிவாதமாயிருப்பது வழக்கம். இதில் உஷ்ணம் தாங்காமல் அநேகம் பேர் செத்தே போனார்கள். இந்த மாதிரி விடக்கூடாது என்று பண்டிதர்களையெல்லாம் கூட்டி ஒரு ஸதஸ் நடத்தி சாஸ்த்ர ப்ரகாரமே கடுமையான உபவாஸ விதியைக் கொஞ்சம் இளக்கித் தர வழி இருக்கிறதா என்று பார்க்க முடிவு செய்தார்கள். ‘மிஞ்சிப் போனால் ஏதாவது பானம், கீனம் பண்ணாலமென்று சாஸ்திரத்திலேயே இருந்தால்கூட நாங்கள் அன்று வாயில் எதையும் விட்டுக்கொண்டு முழுங்க மாட்டோம்; செத்தாலும் சாவோம்’ என்று அந்த விதவைகள் சொல்லிவிட்டார்களாம். இதன்மேல் அந்தப் பண்டிதர்கள் சாஸ்திரங்களைப் பார்த்து, ‘ஸரி, ஏகாதசியன்று வாயில் தீர்த்தம் விட்டுக்கொள்ள வேண்டாம்; காதில் விட்டுக் கொள்ளட்டும். அதனால் பிழைக்கிறவர் பிழைக்கட்டும்’ என்று தீர்மானம் செய்தார்களாம். அத்தனை கடுமையான அநுஷ்டானம் அங்கே இருந்திருக்கிறது.

நாக்கை அடக்க முடியவில்லை என்று விடவே கூடாது. ஆப்பிளைச் சாப்பிட்டுத்தான் ஆடம் அடிமட்டத்துக்கு விழுந்துவிட்டான் என்கிறார்கள். Forbidden fruit மாதிரி நம் சாஸ்திரப்படி forbidden food எதையுமே சாப்பிடக் கூடாது. மீறினால் அது நம்மைக் கீழேதான் இறக்கும். இம்மாதிரி ஒரு ‘டெம்ப்டேஷன்’ உண்டாகிற சமயங்களில், ‘இப்போது இது உசந்த ருசி என்று சாப்பிட்டாலும், சாப்பிடுகிற இந்த ஐந்து, பத்து நிமிஷங்களுக்கு அப்புறம் ருசி நாக்கில் நிற்கிறதா என்ன? இது உசந்த பதார்த்தம் என்று சாப்பிட்டாலும் இது என்ன சாச்வதமாக வயிற்றிலே இருந்துகொண்டு மறுபடி பசிக்காமலே பண்ணப் போகிறதா என்ன?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டு, கண்ட்ரோல் பண்ணிக் கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு நல்லறிவு உண்டாவதற்கு மறுபடியும் பகவானையேதான் வேண்டிக் கொள்கிறேன்.

ஏகாதசிகளின் பெயர்கள்

ஒரு வருஷத்துக்கு 365 நாளல்லவா? இதனால் இருபத்தநாலு பக்ஷத்துக்குமேல் சில நாட்கள் வருஷத்தில் எஞ்சி நிற்கும். இது காரணமாகச் சில வருஷங்களில் இருபத்தைந்து ஏகாதசிகள் வந்துவிடும். பாத்ம புராணத்தில் உத்தர காண்டத்தில் இந்த இருபத்தைந்துக்கும் தனித்தனிப் பெயர் சொல்லி, அதை அநுஷ்டிக்க வேண்டிய முறை, அதனால் பயனடைந்தவர்களின் கதை, ஆகியவற்றை விவரமாகச் சொல்லியிருக்கிறது.

தநுர்மாஸ (மார்கழி மாத) க்ருஷ்ணபக்ஷ ஏகாதசியன்று ஆரம்பித்திருக்கிறது. இதற்கு ‘உத்பத்தி ஏகாதசி’ என்று பெயர். அடுத்ததுதான் அந்த மாஸ சுக்லபக்ஷத்தில் வரும் பிரஸித்தமான வைகுண்ட ஏகாதசி. ‘மோக்ஷ ஏகாதசி’ என்று இதற்குப் பாத்ம புராணத்தில் பேர் கொடுத்திருக்கிறது. அம்ருதம் கடைந்தெடுத்தது அன்றுதான். க்ருஷ்ண பரமாத்மா கீதோபதேசம் என்று உபநிஷத்துக்களைக் கடைந்தெடுத்து ஞானாம்ருதமாகக் கொடுத்ததும் அன்றுதான் என்பதாலேயே அன்றைக்கு ‘கீதா ஜயந்தி’ என்று கொண்டாடுகிறார்கள். மூன்றாவது ஏகாதசி தை க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ‘ஸபலா’. நாலாவது அம்மாஸ சுக்ல பக்ஷத்தில் வருகிற ‘புத்ரதா’. ஐந்தாவது மாசி க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ‘ஷட்திலா’. ஆறாவது அம்மாஸம் சுக்லபக்ஷத்தில் வரும் ‘ஜயா’. இப்படியே வரிசையாக பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாஸங்களில் ‘விஜயா’, ‘ஆமலகீ’, ‘பாப மோசனிகா’, ‘காமதா’, ‘வரூதினீ’, ‘மோஹினி’, ‘அபரா’, ‘நிர்ஜலா’என்று எட்டு ஏகாதசிகள் வருகின்றன. பீமன் வருஷத்தில் ஒரே ஒரு தரம் சுத்தோபவாஸமிருந்தது ‘நிர்ஜலா’ என்ற இந்த ஆனி மாஸ சுக்லபக்ஷ ஏகாதசியன்றுதான். இதோடு பதினாலு ஏகாதசிகள் ஆகிவிட்டன. பதினைந்தாவதாக ஆடி க்ருஷ்ண பக்ஷத்தில், ‘யோகினி’ என்பது. அடுத்தது ஆடி சுக்ல பக்ஷத்தில் மஹாவிஷ்ணு சயனிக்க ஆரம்பிக்கிற சாதுர்மாஸ்ய ஆரம்பத்தில் வருகிற ஏகாதசி*. அதற்கு ‘சாயினி’ என்று பெயர். அப்புறம் ஆவணி, புரட்டாசி. ஐப்பசி மாஸங்களில் வரும் ‘சாமிகா’ ‘புத்ரதா’ (முன்னையே தையில் ஒரு ‘புத்ரதா’வந்து விட்டது. இங்கே மறுபடியும் அதே பெயர்தான் போட்டிருக்கிறது) , ‘அஜா’, ‘பத்மநாபா’, ‘இந்திரா’, ‘பாபாங்குசா’ என்ற ஆறு ஏகாதசிகளின் போதும், கார்த்திகையில் க்ருஷ்ண பக்ஷத்திலே வரும் ‘ரமா’என்ற ஏகாதசியின் போதும் பகவான் நித்திரை பண்ணிக் கொண்டேயிருக்கிறார். இருபத்து நாலாவதாக வருகிற கார்த்திகை சுக்லபக்ஷ ஏகாதசியன்று அவர் விழித்துக் கொள்கிறார். அதனால் அதற்கு ‘ப்ரபோதினி’ என்றே பெயர். மறுநாளோடு சாதுர்மாஸ்யம் பூர்த்தி.

அதிகப்படியாக வரும் இருபத்தைந்தாவது ஏகாதசிக்கு ‘கமலா’ என்று பெயர்.

இப்படி நம் மதத்தில் சிறப்பித்துச் சொல்லியிருக்கும் ஏகாதசியில் எல்லாரும் வ்ரதாநுஷ்டானம் பண்ண வேண்டும். சாப்பிடாமல் இருப்பது வெறும் ‘அநாசக’ மாக இல்லாமல், பகவானோடு சேர்ந்து வாழும் ‘உப-வாஸ’மாக ஆகவேண்டும். இதற்கு ஏகாதசியன்று நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகவன் நாமத்தை ஜபமாகவோ, பஜனையாகவோ உச்சரிக்க வேண்டும்; எவ்வளவு அதிக நாழிகை பகவத் த்யானம் செய்ய முடியுமோ அவ்வளவு செய்யவேண்டும்; அன்றைக்கு ஸத்கதா ச்ரவணமோ, பாராயணமோ, இரண்டுமோ அவசியம் செய்யவேண்டும். பகவான் அல்லது பாகவதோத்தமர்களின் புண்ய சரித்ராம்ருதம் அன்று காது வழியாகக் கொஞ்சமாவது உள்ளே இறங்க வேண்டும். இப்படிச் செய்து நல்லாரோக்யத்திலிருந்து பக்தி, ஞான, வைராக்யங்கள் வரையில் எல்லா நன்மைகளையும் அடைய வேண்டும்.


*அதற்கு மறுநாளான த்வாசியன்றே சாதுர்மாஸ்ய விரதத் தொடக்கம்.

எல்லா வகுப்பாரும் ஏற்றம் பெற்றது

ராஜபோகம் என்றே சொல்வது வழக்கம். ராஜாக்கள் மது, மாம்ஸாதிகள் உள்பட ஓரளவுக்குச் சாப்பிடுவதற்கு அதிகாரம் பெற்றவர்கள். ஆனால் அவர்களும் ஏகாதசி உபவாஸத்தை நியமத்தோடு அநுஷ்டித்திருக்கிறார்கள். ஏகாதசி என்றவுடனே நாம் நினைக்கிற அம்பரீஷன், ருக்மாங்கதன் இரண்டு பேருமே க்ஷத்ரிய ராஜாக்கள்தான்.

கார்த்தாலே எழுந்தவுடன் குளிர்ந்த வேளையில், குளிர்ந்த மனஸோடு நினைத்து நமஸ்காரம் பண்ண வேண்டிய பரம பாகவதர்களைப் பற்றி ஒரு ச்லோகம் உண்டு.

ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக

வ்யாஸ ()்பரீஷ சுக சௌநக பீஷ்ம தால்ப்யான் |

ருக்மாங்கத ()்ஜுந வஸிஷ்ட விபீஷணாதீன்

புண்யான் இமான் பரம பாகவதான் ஸ்மராமி ||

இதிலே அம்பரீஷனும், ருக்மாங்கதனும் இடம் பெற்றதற்குக் காரணமே அவர்களுடைய ஏகாதசி அநுஷ்டானந்தான்.

ருக்மாங்கதன் தன் ராஜ்யத்தில் அத்தனை பேரையும் ஏகாதசி விரதம் இருக்கும்படியாகப் பண்ணினான். அதனால் ப்ரஜைகள் எல்லோரும் பக்தி ஞானங்களில் முன்னேறியதோடு நல்ல ஆயுர்-ஆரோக்யங்களுடனும் இருந்தார்கள் என்று நாரத புராணத்தில் இருக்கிறது.

ரொம்பவும் உச்சத்திலுள்ள ராஜாக்கள் மட்டுமில்லை. கைசிகன் என்று தீண்டாதார் வகுப்பைச் சேர்ந்த பக்தர். இவரும் ஏகாதசி உபவாஸ நியமத்தால் உயர்வு பெற்றிருக்கிறார். ‘கைசிக ஏகாதசி’ என்றே ஒரு ஏகாதசிக்கு வைஷ்ணவர்கள் பெயர் சொல்வார்கள்.

மாத்வர்களின் தீவிர அநுஷ்டானம்

தர்ம சாஸ்த்ரமே விதித்த வ்ரதமாக ஏகாதசி இருப்பதால் மாத்வர், வைஷ்ணவர், ஸ்மார்த்தர் ஆகிய எல்லாருமே அதை அநுஷ்டித்தாலும் ரொம்பவும் தீவிரமாகக் கடைப்பிடிப்பது மாத்வர்தான்.

ஸாதாரணமாக வேத மந்திரங்களையே நேராகப் பிரயோஜனப்படுத்திச் செய்கிற கர்மாக்களுக்குத்தான் மதாநுஷ்டானங்களில் ப்ராதான்யம் [முதலிடம்] கொடுப்பது வழக்கம். நம் மதத்துக்கு மூல நூல் வேதம்தானே? அதோடு பித்ரு கர்மா, தேவ கர்மா என்ற இரண்டுக்குள் பித்ரு கர்மாவுக்குப் ப்ராதான்யம் கொடுத்து விட்டு அப்புறம்தான் தேவ கர்மாவைச் செய்ய வேண்டும். சிராத்தம் என்பது வேத மந்திரங்களாலேயே ஆகிற கர்மா. அதோடு அது பித்ரு கர்மாவும் ஆகும். ஏகாதசி உபவாஸத்தில் வேத மந்திரங்களுக்கு இடமில்லை. நாமஜபம், பஜனை ஆகியன பௌராணிகமும் தாந்த்ரிகமுமே ஆனவை. பூஜை பண்ணுவதில் மட்டுமே வேத மந்த்ரங்கள் கொஞ்சம் சேரும். ஏகாதசியை ஒரு உபவாஸமாக தர்ம சாஸ்த்ரம் சொன்னாலும் ச்ராத்தத்தைப் போல ஸ்மார்த்த கர்மாவாக விதிக்கவில்லை. அதோடு ஏகாதசி என்பது பித்ரு ஆராதனைக்கு அப்புறமே வருகிற தேவ ஆராதனைதான்.

ச்ராத்தம் என்பது ரொம்பவும் வைதிகமான ஸ்மார்த்த கர்மா. அதிலே பித்ரு சேஷமாக போஜனம் பண்ண வேண்டியதும் ஒரு அங்கம். ச்ராத்தம் பண்ணி விட்டுப் பித்ரு சேஷம் சாப்பிடாவிட்டால் தப்பு.

ஏகாதசியில் ச்ராத்தம் வந்தால் என்ன செய்வது? ‘ச்ராத்தம் பண்ணிப் பித்ரு சேஷம் சாப்பிடத்தான் வேண்டும். ஏனென்றால் ஏகாதசி எவ்வளவு முக்கியமானதாயிருந்தாலும், அதைவிட வைதிகமான ச்ராத்தத்துக்குத் தான் இன்னமும் அதிக முக்யத்வம் தரவேண்டும்’ என்று ஸ்மார்த்தர்களும், வைஷ்ணவர்களும் நினைக்கிறோம். அன்று ஏகாதசி உபவாஸ நியமத்தை விடுவதால் தோஷமில்லை; வேதக் கட்டளைப்படி பண்ணுவதால் நமக்குத் தப்பு வராது என்று நினைத்து ச்ராத்தம் பண்ணி போஜனம் செய்கிறோம்.

ஆனால் மாத்வர்கள் ஏகாதசியன்று ச்ராத்தம் செய்வதில்லை. இந்த வ்ரதாநுஷ்டானந்தான் முக்கியமென்று நினைத்து உபவாஸமிருக்கிறார்கள். ஆனால் அதற்காக சிராத்தத்தை விட்டுவிடுவதில்லை. ஏகாதசியன்று வருகிற சிராத்தத்தை மறுநாள் த்வாதசியன்று செய்கிறார்கள். அதிலும் த்வாதசி ப்ராணை காலம்பறவே [இளங் காலையிலேயே] பண்ணிவிட வேண்டுமென்கிற புராண விதிக்காக, மத்யான்ன காலத்துக்கு அப்புறமே பண்ண வேண்டிய சிராத்தத்தை அன்று ரொம்ப முன்னதாகவே பண்ணி விடுகிறார்கள்.

தீட்டுக் காலத்தில்கூட ஏகாதசி உபவாஸமிருக்க வேண்டும் என்பதில் எல்லா ஸம்பிரதாயக்காரர்களும் ஒத்துப் போகிறார்கள். மற்ற எந்த உபவாஸத்துக்கும் இம்மாதிரி ஸுதக ஆசௌச* காலங்களில் பலனில்லாததால், அவற்றை அப்போது அநுஷ்டிக்க வேண்டியதில்லை என்றே விதி இருக்கிறது. ஏகாதசிக்கு மட்டும் விலக்கு.


* பிரஸவத் தீட்டு ஸுதகம், மரணத் தீட்டு ஆசௌசம்.

உபவாஸமும் உழைப்பும்

“ஏகாதசிக்கு லீவில்லையே! சாப்பிடாமல் எப்படி வேலை பண்ணுவது?” என்றால், இதற்கு இரண்டு விதமாகப் பதில் சொல்கிறேன். ஒன்று: எல்லாரும் ஏகாதசி விரதம் இருப்பதென்று வைத்துக்கொண்டு சர்க்காரிடம் வலியுறுத்திக் கோரிக்கை விட்டால் அன்றைக்கு லீவே விட்டு விடுவார்கள். இரண்டு: இப்படிப் பதினைந்து நாளுக்கு ஒரு நாள் சாப்பிடாததால் வாஸ்தவத்தில் தெம்பு குறையவே குறையாது. ஏதோ ‘ஸென்டிமென்டலா’கத்தான் ‘நாம் சாப்பிடவில்லையே, நமக்கு சக்தி இருக்காது’, என்று பயப்பட்டு அந்த பயத்தினாலேயே பலஹீனத்தை வரவழைத்துக் கொள்வதாயிருக்குமே தவிர வாஸ்தவத்தில் அன்றைக்கு நாம் மனஸைக் கொஞ்சம் உடம்பிலிருந்து விடுவித்துக் கொண்டு ஒதுங்கியிருந்தால், அன்றுதான் கூடுதலாக சக்தி, உத்ஸாஹம் எல்லாம் இருப்பதாகத் தெரியும். மற்ற தினங்களை விடவும் அன்று நறுவிசாக நிறைய வேலை செய்ய முடியும். மனமிருந்தால் வழியுண்டு. உடம்புக்குப் பல தோஷங்களிருந்தாலும் அதற்கு ஒரு பெரிய குணமுண்டு. அதாவது நாம் பழக்குகிறபடி கேட்கும். அதனால் ஆபீஸ் கார்யம் பண்ண முடியாதபடி ஏகாதசி உபவாஸம் எவரையும் அசக்தமாக்கி விடாமல் பழக்கிக் கொண்டு விடலாம். ஆனாலும் அன்று முழுக்க பகவத் பரமாகவே செலவழிக்க வேண்டுமென்பதற்காக வேண்டுமானாலும் எல்லாரும் சேர்ந்து டிமான்ட் பண்ணி லீவ் விடும்படியாகச் செய்யலாம்.

வருஷத்தில் எல்லா ஏகாதசியிலும் பூர்ண உபவாஸமிருக்க முடியாமல் ஒருவேளை பலஹாரம் பண்ணினாலும் ஒரே ஒரு ஏகாதசியாவது பூர்ண உபவாஸமாக முழுப் பட்டினி இருக்க வேண்டும். பீமனுக்குப் பசியே தாங்காதாம். அதனால் அவன் எல்லா ஏகாதசிகளிலும் சுத்த உபவாஸமிருக்க முடியாமல், வியாஸரைக் கேட்டு, இப்படி ஒரு ஏகாதசியில் பூர்ண உபவாஸம் இருப்பதற்கே பலன் உண்டு என்று வரம் வாங்கிக் கொண்டானாம். ஆனால் அந்த ஏகாதசி வைகுண்ட ஏகாதசி அல்ல.

இந்த தேசத்தில் எது எப்படியானாலும் வ்ரதோபவாஸங்களில் தலைசிறந்ததான ஏகாதசியை அநுஷ்டானத்தில் இருக்கப் பண்ண வேண்டும். ரொம்பவும் போற்றிப் பின்பற்றப்பட்டு வந்த இந்த மஹா தர்மம் இரண்டு மூன்று தலைமுறைகளில் கொள்ளை போயிருக்கிறது. இன்றைக்கும் எங்கேயோ இரண்டு மாத்வப் பாட்டிகள் ஏகாதசி சுத்தோபவாஸம் பண்ணுவதால்தான் இந்த மட்டுமாவது மழை கிழை பெய்து கொண்டிருக்கிறது.

ஏகாதசியின் ஏற்றம்

வ்ரதோபவாஸங்களில் உச்ச ஸ்தானத்தில் இருப்பது ஏகாதசி.

ந காயத்ர்ய: பரம் மந்த்ரம் மாது: பர தைவதம் |
ந காச்ய: பரமம் தீர்த்தம் நைகாதச்யா: ஸமம் வ்ரதம் ||

‘காயத்ரிக்கு மேலே மந்தரமில்லை; அம்மாவுக்கு மேலே தெய்வமில்லை (தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை); காசிக்கு மேலே தீர்த்தமில்லை’ என்று சொல்லிக் கடைசியில் ‘ஏகாதசிக்கு ஸமானமாக வ்ரதமெதுவுமில்லை’ என்று முடிகிறது. மற்றதற்கெல்லாம் ‘மேலே’ ஒன்றுமில்லை என்பதால் அவற்றுக்கு ‘ஸமமாக’ ஏதாவது இருந்தாலும் இருக்கலாம் என்று ஆகிறது. ஆனால் வ்ரதங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் ஏகாதசிக்கு ‘மேலே’ மட்டுமில்லாமல், அதற்கு ‘ஸமமாக’க் கூட எதுவுமில்லையென்று ரொம்பவும் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறது.

அஷ்ட வர்ஷாதி: மர்த்ய: அபூர்ணாசீதி வத்ஸர: |
ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷய: உபயோ: அபி ||

என்று தர்ம சாஸ்த்ரம் கூறுகிறது. அதாவது மநுஷ்யராகப் பிறந்தவர்களில் எட்டு வயஸுக்கு மேல் எண்பது வயகுக்கு உட்பட்ட எல்லோரும் இரு பக்ஷங்களிலும் வரும் ஏகாதசிகளில் உபவாஸம் இருக்க வேண்டும் என்று அர்த்தம். எந்த ஸம்ப்ரதாயக்காரன், எந்த ஜாதிக்காரன், ஆணா பெண்ணா என்ற வித்யாஸமில்லாமல், ‘மர்த்ய’, அதாவது மநுஷ்யராகப் பிறந்த எல்லோரும் ஏகாதசி உபவாஸம் அநுஷ்டிக்க வேண்டும் என்று இது சொல்கிறது. ரொம்பவும் கருணையோடு குழந்தைகளையும், தள்ளாத கிழவர்களையும் சிரமப்படுத்த வேண்டாமென்றுதான் எட்டு வயஸுக்குக் கீழே இருப்பவர்களுக்கும், எண்பது வயஸுக்கு மேலே போனவர்களுக்கும் விதிவிலக்குக் கொடுத்திருக்கிறது. அவர்கள் உபவாஸம் இருக்கக் கூடாது என்று கண்டிப்புச் செய்ததாக அர்த்தமில்லை. முடிந்தால் அவர்களும் இருக்கலாம். முடியவில்லை என்பதால் இல்லாவிட்டாலும் பாதகமில்லை என்று அர்த்தம். மஹாராஷ்டிரம் முதலிய இடங்களில் ஏகாதசியன்று பச்சைக் குழந்தைக்குக்கூட பால் கொடுக்காத தாய்மார்கள் இருந்திருக்கிறார்கள்; அந்தக் குழந்தைகளும் அவர்களுடைய நம்பிக்கையிலேயே நன்றாக இருந்திருக்கின்றன என்று சொல்வார்கள். இத்தனை ‘எக்ஸ்ட்ரீம் டிஸிப்ளி’னை தர்ம சாஸ்திரகாரகர்களே எதிர்பார்க்கவுமில்லை; ரூலாகப் போடவுமில்லை.

பகவான் கை கொடுப்பான் என்று நம்பி தைர்யமாகப் பூர்ண நியமத்தோடுதான் ஆரம்பிக்க வேண்டும். அப்படியும் முடியாவிட்டால் வீம்பாகப் பட்டினி கிடந்து தேஹ ச்ரமத்தையும் மனஸ் கஷ்டங்களையும் வரவழைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏகாதசி தவிர மற்ற உபவாஸ தினங்களில் ஒரே பொழுது பலஹாரம் (சாஸ்த்ரீய பலஹாரத்தைச் சொல்லாமல், தோசை-இட்லி பலஹாரத்தைத்தான் சொல்கிறேன்) செய்யலாம். இன்னொரு பொழுது சாஸ்தீரிய பலஹாரமான பழம், பால் மட்டும் சாப்பிடலாம். முடியாதவர்கள் ஒருபொழுது அன்னம், ஒருபொழுது தோசை-இட்லி மாதிரி பலஹாரம் பண்ணலாம். ஆனால் முழு நியமப்படி மாற்றிக் கொள்ள முயற்சி பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும்.

ஏகாதசியில் நிர்ஜலமாயிருந்தால் ரொம்பவும் ச்ரேஷ்டம். அது ரொம்பவும் கஷ்டமும். ஸாத்விகமான பானங்கள் மட்டும் பண்ணுவது அடுத்தபடி. அதற்கும் அடுத்தப்படி நிஜப் பலஹாரமாகப் பழத்தோடு பால் சாப்பிடுவது. அப்புறம் ஒருவேளை மட்டும் பற்றுப்படாத ஸத்துமா, பூரி மாதிரியானவற்றைச் சாப்பிட்டு இன்னொரு வேளை பழம், பால் ஆஹாரம் செய்வது. இன்னம் ஒருபடி கீழே, ஒருவேளை பக்வமான, புஷ்டியான இட்லி, தோசை, பொங்கல், உப்புமா இத்யாதியும் இன்னொரு வேளை பால் பழமும சாப்பிடுவது.

இதற்கும் கீழே போகப்படாது. அதாவது ஒரு வேளைகூட அன்னம் சாப்பிடுவதாக இருக்கப்படாது. மற்ற உபவாஸங்களில் அதமபக்ஷமாக ஒரு வேளை அன்னம், ஒரு வேளை இட்லி தோசை என்று வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஏகாதசியைக் கொண்டு வந்துவிடக் கூடாது. ஏகாதசியில் அன்னத்தைச் சாப்பிட்டால் பிராயச்சித்தமே கிடையாது என்றிருக்கிறது. சிலவிதமான நோயாளிகள், பலஹீனர்கள், அன்னம் தவிர எதுவுமே ஜெரித்துக் கொள்ள முடியவில்லையென்று நிர்பந்தம் ஏற்பட்டால் சாதத்தை கஞ்சி வடிக்காமல் ஹவிஸ்ஸாகப் பண்ணி அதில் உப்பு, புளி, காரம் எதுவுமே சேர்க்காமல் ஒருவேளை மட்டும் ஸ்வல்பம் ஏகாதசியன்று சாப்பிடலாம். ரொம்பவும் அசக்தமானவர்களுக்குத்தான் இந்த relaxation. மற்றவர்களுக்கில்லை. அன்று ஒருவன் சாப்பிட்டால் அதில் ஒவ்வொரு பிடியிலும் நாயின் அமேத்யத்துக்கு ஸமமான பாவத்தைச் சாப்பிடுகிறான் என்று மிகவும் கடுமையாகவே சொல்லியிருக்கிறது: ப்ரதிக்ராஸம் அஸௌ புங்க்தே கிஷ்பிஷம் ச்வாந விட் ஸமம்.

பண்டிகை, வ்ரதம்; ஏகாதசிச் சிறப்பு

பகவத் பரமாகவே பண்டிகைகள் என்று சிலதை வைத்திருப்பதோடு வ்ரதங்கள் என்றும் சிலவற்றை வைத்திருக்கிறது. பண்டிகை என்பது நாம் ஆடை ஆபரணங்களுடன் அலங்காரம் பண்ணிக்கொண்டு, பகவானுக்கு அலங்காரம் பண்ணிப் பூஜை செய்து, அவன் ப்ரஸாதமாக அறுசுவை உணவு சாப்பிட்டு ஆனந்தமாயிருப்பது — போகிப்பண்டிகை, தீபாவளிப் பண்டிகை மாதிரி. புது வஸ்த்ராதிகள், அலங்காரம், பஞ்சபக்ஷ்ய போஜனம் முதலியன இல்லாமல், வழக்கமாகச் சாப்பிடுகிற மாதிரிக்கூட இல்லாமல், நியமத்தோடு உபவாஸமிருந்து பூஜை பண்ணுவது வ்ரதம். க்ருத்திகை வ்ரதம், ஷஷ்டி வ்ரதம், சதுர்த்தி வ்ரதம், ரிஷிபஞ்சமி வ்ரதம், ப்ரதோஷ வ்ரதம், ஸோமவார வ்ரதம், ச்ரவண வ்ரதம், பயோவ்ரதம், இது எல்லாவற்றையும்விட ஸர்வஜன அநுஷ்டானமாக ஏகாதசி வ்ரதம் என்று பல ஏற்பட்டிருக்கின்றன. எல்லா மதங்களிலுமே feasting, fasting என்று இந்த இரண்டும் இருக்கின்றன.

மற்ற வ்ரத தினங்களிலோ பூஜைக்கு அப்புறம் ஒரு பொழுதாவது பலஹாரம் பண்ணலாமென்றிருக்கிறது. ஏகாதசியில்தான் பூர்ண உபவாஸம்.

மற்ற வ்ரதங்களைப் புராண, ஆகமங்கள் சொல்கின்றன. அதில் சிவபரமான புராணாகமங்கள் சொல்பவைகளை வைஷ்ணவர்கள் அநுஷ்டிக்க மாட்டார்கள்; வைஷ்ணவ கிரந்தங்களில் சொல்லியுள்ளதை சைவர்கள் செய்ய மாட்டார்கள். ஏகாதசியோவென்றால் ஒவ்வொரு sect மட்டும் எடுத்துக்கொள்ளும் புராண ஆகமங்களில் மட்டுமின்றி ஹிந்து என்று பெயர் இருக்கிற அத்தனை பேருக்கும் பொதுவான தர்ம சாஸ்திரங்களிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் இதை ஸர்வஜன அநுஷ்டானமான வ்ரதம் என்று சொன்னேன்.

விஷ்ணு நித்ரை செய்து கொண்டிருந்தபோது லோகத்தை ஹிம்ஸை பண்ணிய ஒரு அஸுரனைக் கொல்வதற்காக அவருடைய சரீரத்திலிருந்தே ஸ்த்ரீ ரூபமாக ஒரு சக்தி வெளியே போய் ஸம்ஹாரம் செய்துவிட்டு வந்ததாகவும், விழித்துக் கொண்ட பகவான் அவளுக்கே ஏகாதசி என்று பேர் கொடுத்து இந்த ஏகாதசி வ்ரதத்தை ஏற்படுத்தினாரென்றும் பாத்ம புராணத்தில் கதை வருகிறது. மஹாவிஷ்ணு கூர்மமாகவும், தன்வந்திரியாகவும், மோஹினியாகவும் அவதாரங்கள் எடுத்து, க்ஷீராப்தியில் அம்ருதம் கடையப் பண்ணி அதை எடுத்துக் கொடுத்த நாளே ஏகாதசி என்பதாலும் அதைப் பொதுவில் விஷ்ணு ஸம்பந்தமுள்ளதாக நினைக்கிறோம். ஆனால் இந்த அம்ருத மதன ஸமயத்தில் முதலில் உண்டான காலகூட விஷத்தைப் பரமேச்வரன் புஜித்ததை முன்னிட்டுத்தான் அன்று எவரும் சாப்பிடக் கூடாது என்று ஏற்பட்டிருப்பதாக சைவர்கள் சொல்வதுண்டு.

இப்படி சைவம், வைஷ்ணவம் இரண்டுக்கும் ஏற்கத் தக்கதாயிருப்பதோடு ஹிந்துவாகப் பிறந்தவனில் எந்த இஷ்ட தெய்வத்தைக் கொண்டவனாயினும், எந்த ஜாதியைச் சேர்ந்தவாயினும் ஸகலருக்குமான வாழ்க்கை விதிகளைப் போடுகின்ற தர்மசாஸ்த்ரமும் ஏகாதசி உபவாஸத்தை விதித்திருப்பது அதன் விசேஷத்தைக் காட்டுகிறது.

தர்ம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் உபவாஸ நாட்களைச் சொல்கிறேன். ஒவ்வொரு பக்ஷத்திலும் வரும் ஏகாதசியன்று முழுப்பட்டினி கிடக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமை, அமாவாஸ்யை, பௌணர்மி ஆகிய நாட்களில் பகலில் மட்டும் போஜனம் செய்து இரவில் உபவாஸமிருக்க வேண்டும். ஒவ்வொரு பக்ஷத்திலும் அஷ்டமியிலும் சதுர்த்தசியிலும் பகலில் சாப்பிடாமல், ராத்திரி மட்டும் ஆஹாரம் பண்ண வேண்டும்.

ராமநவமி, கோகுலாஷ்டமி, சிவராத்திரி ஆகியனவும் பூர்ண உபவாஸ தினங்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் சிவராத்ரியில்தான் இதை ஓரளவுக்கு விதிப்படிச் செய்வதாகவும் மற்ற இரண்டு தினங்களில் பூஜைக்கு அப்புறம் சாப்பிடுவதாகவும் (கிருஷ்ண ஜயந்தி பூஜை ராத்ரியில் செய்யப்படுவதால் பலஹாரம் செய்வதாகவும் — இதில் ஏகப்பட்ட பக்ஷண தினுஸுகள் சேர்ந்துவிடும்) நடந்து விடுகிறது.

குருவார வ்ரதம் என்பது நடைமுறையில் பரவியிருக்கிறது.

தக்ஷிணத்தில் எல்லாவற்றையும்விட அதிக வழக்கிலிருப்பது சனிக்கிழமை வ்ரதம்தான். ரொம்பப் பேர் அன்று ராத்ரி போஜனம் பண்ணுவதில்லையென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வேங்கடரமண ஸ்வாமியை உத்தேசித்து இந்த வ்ரதம் ஏற்பட்டிருக்கிறது. “கலௌ வேங்கடநாயக:” [கலியுகக் கடவுள் ஏழுமலையானே] என்பதற்கேற்க, அவரது வ்ரதமே வெகுவாக அநுஷ்டானத்திலிருக்கிறது — சாஸ்த்ரத்தில் அது இல்லாவிட்டாலும்.

இதேபோல ஸோமவார வ்ரதமும் இங்கே சைவர்களிடையேயும், ஸ்மார்த்தகளிடையேயும் ஓரளவு நிறையவே வழக்கிலிருக்கிறது. வடக்கேயோ சைவ வைஷ்ணவ வித்யாஸமில்லாமல் எல்லோருமே ஸோமவார விரதமிருக்கிறார்கள். அதனால்தான் லால்பஹாதூர் சாஸ்திரிகூட ரொம்பவும் உணவு நெருக்கடி ஏற்பட்டபோது எல்லாரும் திங்கட்கிழமை உபவாஸமிருப்பது என்று வைத்துக்கொள்ள வேண்டுமென்று சொன்னார். திங்கட்கிழமை ராத்ரி ராஜாங்க விருந்துகள் நடத்துவதில்லை என்றேகூட நிறுத்தி வைக்கப்பட்டது.

இப்படி ராஜாங்க ரீதியிலேயே ஸோமவார ‘ஒரு பொழுது’ விதிக்கப்பட்டதிலிருந்து, உபவாஸங்களுக்கு சாஸ்த்ரத்தில் சொன்ன பலன்களோடு உணவுப் பிரச்னையை குறைப்பதில் பங்கு இருக்கிறதென்பதும் புதிதாகத் தெரிய வந்திருக்கிறது. சாஸ்த்ரப் பிரகாரம் எல்லோரும் உபவாஸாதிகளை அநுஷ்டித்தால் உணவிலே நமக்கு எப்போதும் ‘ஸர்ப்ளஸ்’, ஏற்பட்டு, ‘எக்ஸ்போர்ட்’ பண்ணி ‘எக்ஸ்சேஞ்ச்’ கூட நிறைய ஸம்பாதித்து விடலாம்!

சாந்த்ராயணம் என்னும் ஒரு வ்ரதம் உண்டு. உடம்பைப் போட்டு ரொம்ப வருத்திக் கொள்ளப்படாது தான் என்பது நம் மதக் கொள்கையானாலும், எத்தனை ஸாதனைகள் பண்ணியும் சித்த சுத்தி வராதவர்கள், தங்களுக்கு மற்றவர்களைவிட ஜாஸ்தியாயிருக்கிற பூர்வ பாப கர்மாதான் இப்படிப் பழி வாங்குகிறதென்று புரிந்து கொண்டு அதைக் கழிப்பதற்காக உடம்பை வருத்திக் கொண்டு சில அநுஷ்டானங்களைப் பண்ணும்படி சாஸ்த்ரம் விதிக்கிறது. இதற்கு ‘க்ருச்ரம்’ என்று பெயர். இப்படிப் பண்ணினால் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் அதற்குப் பதில் ‘க்ருச்ர ப்ரதிநிதி’யாக இத்தனை ஆயிரம் காயத்ரி பண்ண வேண்டும் என்றும் இருக்கிறது. இப்படி ‘ஸ்ப்ஸ்டிட்யூட்’டைச் சொல்லிவிட்டதால், இந்த ‘ஸப்ஸ்டியூட்’டுக்கும் ‘ஸப்ஸ்டிட்யூட்’, அதற்கும் ‘ஸப்ஸ்டியூட்’ என்று போய், ஒரு கோதானம் பண்ணிவிட்டால் அது க்ருச்ரத்துக்கு ஸமானம் என்று ஆகி பசுவுக்குப் பதில் அதன் விலையைத் தக்ஷிணையாகத் தருவதாக ஆரம்பித்து, இந்தத் தக்ஷிணையையும் குறைத்துக் கொண்டே போய், தற்போது பரிஹாஸத்துக்கு இடமாக, ஒரு பிராம்மணனுக்கு ஆறே காலணா தக்ஷிணை கொடுத்துவிட்டால் க்ருச்ரம் அநுஷ்டித்தாகி விட்டது என்று வைத்துக் கொண்டிருக்கிறோம்! பாப பரிஹாரமாக உடம்பை வருத்திக் கொள்வதற்காகவே சாந்த்ராயண விரதம் ஏற்பட்டிருக்கிறது. சந்திரகலை வளர்வது தேய்வதைப் பொறுத்து போஜனம் செய்யும் அன்ன கவளத்தின் எண்ணிக்கையை அமைத்துக் கொள்வதுதான் சாந்த்ராயணம்.

இதை ஆரம்பிக்கிற திதியையொட்டி இரண்டு தினுஸுகள். ஒன்றை ‘கட்டெறும்பு சாந்த்ராயணம்’ என்றும், மற்றதை ‘கோதுமை சாந்த்ராயணம்’ என்றும் வேடிக்கையாகச் சொல்லலாம். கட்டெறும்பு எப்படியிருக்கிறது? தலை பெருத்து ஆரம்பிக்கிறது; அப்புறம் நடுவில் சிறுத்துத் தேய்ந்துவிடுகிறது; மறுபடி பின்பாதி பெருத்துக் கொண்டு போகிறது. இதே மாதிரி ஒரு தினுஸு சாந்த்ராயணத்தைப் பௌர்ணமியன்று ஆரம்பித்து, அன்று பதினைந்து கவளம் சாப்பிடவேண்டும். மறுநாளான க்ருஷ்ணபக்ஷப் பிரதமையன்று பதினாலு கவளம், அதற்கு மறுதினமான த்விதியை பதின்மூன்று கவளம் என்று இப்படியே குறைத்துக்கொண்டே போய் அமாவாஸ்யையன்று முழுப்பட்டினி கிடக்க வேண்டும்; அப்புறம் மறுதினமான சுக்லபக்ஷப் பிரதமையன்று ஒரு கவளம், த்விதியைக்கு இரண்டு கவளம் என்று ஏற்றிக் கொண்டே போய் பௌர்ணமியில் பதினைந்து கவளம் என்று முடிக்க வேண்டும்.

கோதுமை எப்படியிருக்கிறது? ஊகமுள் மாதிரி சிறுத்து ஆரம்பிக்கிறது. நடுவிலே பெருத்து மறுபடி சிறுத்து முடிகிறது. இதேபோல் சாந்த்ராயண நியமத்தை சுக்லபக்ஷப் பிரதமையில் ஆரம்பித்து, அன்றைக்கு ஒரே ஒரு கவளம் போஜனம் செய்யவேண்டும். அப்புறம் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு கவளம் கூட்டிக்கொண்டே போக வேண்டும்.பௌர்ணமியன்று பதினைந்து கவளமாகும். அதற்கு மறுநாளிலிருந்து கிருஷ்ணபக்ஷம் பூராவும் ஒவ்வொரு கவளமாகக் குறைத்துக் கொண்டே வந்து அமாவாஸ்யையன்று சுத்த உபவாஸத்துடன் முடிக்க வேண்டும்.

சாந்த்ராயணத்தில் முழுப்பட்டினி கிடக்கும் நாள் தவிர மற்ற தினங்களில் ஒரே வேளைதான் சாப்பிட வேண்டும் — அன்றைக்கு எத்தனைக் கவளமோ அந்தக் கணக்குப்படி.

விரதங்களைப் பொதுஜனங்கள் ‘ஒரு பொழுது’ என்பார்கள். அநேகமாக பகலில், அன்னம் சேர்த்துக் கொண்டு சாப்பிடுவதையும் இரவில் இட்லி, தோசை போன்வற்றைச் சாப்பிடுவதையும் வ்ரதாநுஷ்டானமாக நினைக்கிறார்கள். சாஸ்திரப் பிரகாரம், அன்னத்துக்கு பதில் இப்படி வயிறு நிறைய, நல்ல புஷ்டியுள்ள இட்லி, தோசை இத்யாதிகளைச் சாப்பிடுவது உபவாஸமாகாது. “பல (ஆ)ஹாரம்” என்று அதில் சொல்லியிருக்கிறபடி வெறும் பழங்களை மட்டும் சாப்பிடுவதுதான் நிஜமான உபவாஸம்.

ஆசார்யாள், கண்ணனின் மிதவாதம்

இதற்கு ஆசார்யாள் ரொம்பவும் ஃபிலஸாஃபிகலாக பாஷ்யம் செய்துவிட்டார். “சாப்பாடு இல்லாமலிருப்பதென்றால் போஜன நிவ்ருத்தி என்று அர்த்தமில்லை. வெறுமே போஜனத்தை விட்டால் பிராணன்தான் போகுமே தவிர ஆத்ம ஞானம் வந்தவிடாது. அதனால் இங்கே ‘அசனம்’ (சாப்பாடு) என்று சொன்னது ஆசையநுபோகங்களைத்தான். காம நுகர்ச்சியை விடுமாறே இந்த மந்திரம் சொல்கிறது” என்று பாஷ்யம் பண்ணியிருக்கிறார்.

ஆனால் இம்மாதிரி ஆசை அற்று போவதற்கும் பட்டினி கிட்டினி கிடந்து வ்ரத உபவாஸமிருப்பது உதவத்தான் செய்கிறது. அதுவும் ஆசார்யாளுக்குத் தெரியாததில்லை. நம் மதத்தை மற்ற மதங்கள் அடித்துக் கொண்டுபோக இருந்தபோது மீட்டுக் கொடுத்தது அவர்தான். ஞான மார்க்கம் என்று த்யான விசாராதிகள் பண்ணுவதை மட்டுந்தான் அவர் மீட்டு ரக்ஷித்துத் தந்தார் என்றில்லை. நம்முடைய பூஜா பத்ததிகள், கோயில், குளம், உத்ஸவம், பண்டிகை, வ்ரதம் எல்லாவற்றுக்குமே புனர்ஜீவன் தந்தவர் அவர்தான். அதனால் இன்றைக்கு நாம் ஏகாதசி வ்ரதம் என்று ஒன்று இருக்கிறோமென்றால் அதற்குக் காரணமே அவர்தான். “புராணானாம் ஆலயம்” என்பதாக ஸகல புராணங்களுக்குமே உறைவிடமாக இருந்த ஆசார்யாள், புராணங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடும் ஏகாதசி வ்ரதத்தை அவசியமில்லாதது என்று சொல்லவே மாட்டார்.

இங்கே அவர் சொல்வது என்னவென்றால், ஏகாதசி மாதிரி பக்ஷத்துக்கு ஒருநாள் சுத்தப் பட்டினி போடுவதையல்ல. “இனிமேலே சாப்பிடுவதேயில்லை” என்று உண்ணாவிரதம் இருந்து ஸாதனை பண்ணுவதைத் தான் சொல்கிறார். அந்த மாதிரி ஒரே தீவிரமாகப் போகிறதில் ஒன்றும் பிரயோஜனமில்லை. அவ்வப்போது ஒருவேளை, அல்லது ஒரே ஒரு நாள் பட்டினி போடுவது என்பது ‘நேச்ச’ருக்கே அநுகூலமாக இருப்பது. ஒரேயடியாக ‘சாகிற மட்டும் உண்ணாவிரதம்’ என்றால் அது ‘நேச்ச’ரை எதிர்த்துக்கொண்டு போவதாகும். அப்போது ‘நேச்ச’ரும் பழி வாங்கும். உடம்பைச் சித்ரவதை பண்ணும். அந்த வதையை நினைத்துக்கொண்டு அதைச் சமாளிக்க யத்தனிப்பதிலேயேதான் மனஸ் போகுமே தவிர, ஸாதனா லக்ஷ்யத்தில் ஈடுபட்டு நிற்காது. இம்மாதிரி தன்னைத்தானே க்ரூரமாக வருத்திக் கொள்கிற வழிகளை ஆசார்யாள் ஒப்புக் கொள்ளாததால்தான் இப்படிச் சொல்கிறார்.

கிருஷ்ண பரமாத்மாவும் எக்ஸ்ட்ரீம்களை வேண்டாம் என்றுதான் சொல்கிறார். ‘நாத்யச்நதஸ்து யோகோஸ்தி ந சைகாந்தம் அநச்நத: … யுக்தாஹார … ஸ்ய யோகோ பவதி து:கஹா  — பெருந்தீனி தின்கிறவனுக்கும் யோகம் வராது, ஒரேயடியாகப் பட்டினி கிடக்கிறவனுக்கும் யோகம் வராது, யுக்தமான அளவு மிதமாய் சாப்பிடுகிறவனுக்கே யோகம் ஸித்தித்துத் துக்கத்தைப் போக்கும்” என்கிறார்1.

ஒரேயடியாகப் பல நாள் சேர்ந்தாற்போல் உண்ணாவிரதம் கிடப்பது நம் சாஸ்த்ர ஸம்மதமல்ல. அது ஒரே ஓய்ச்சலில் கொண்டுவிட்டு, மனஸையும் சுத்தி பண்ணுவதற்குப் பதில் ஒரேயடியாகப் பலஹீனமாக்கிப் பைத்தியத்திலோ ஸ்மரணை தப்புவதிலோதான் கொண்டுவிடும். பகவத் ஸ்மரணையில் ஸ்டெடியாக நிற்கப் பண்ணாது. ஆனால் சாஸ்த்ரங்களில் சொன்னாற்போல் அவ்வப்போது ஒருபொழுதும், பதினைந்து நாளுக்கு ஒருமுறை சுத்தோபவாஸமும் இருப்பது மனஸை சுத்தமாக்கி, திவ்ய ஸ்மரணத்தில் பலப்படுத்தி நிறுத்தி வைக்கும்.

ரொம்பவும் தீவிரமாகவும், ‘ forced’ ஆகவும் [வலுக்கட்டாயமாகவும்] உபவாஸாதிகளை அநுஷ்டித்தால் எல்லாம் சிதறிப் பிரயோஜனமில்லாமல் போய்விடும்; அதனால் gradual-ஆக (படிப்படியாக)ப் போக வேண்டும் என்பதுதான் நம் ஆசார்யாள், கீதாசார்யனான பகவான் இவர்களின் அபிப்ராயம். அவர்கள் சொன்ன context-ல் அடியோடு நிராகரிப்பது போல அழுத்திச் சொல்லும்படியாகிவிட்டது.

அதியாகப் போகக்கூடாது என்பதாலேயே போஜன நிவ்ருத்தியால் ப்ரயோஜனமில்லை என்று கொஞ்சம் அடித்தே ஆசார்யாள் சொல்லிவிட்டார்.

‘பூணூல் ஒருத்தனை பிராம்மணனாக்கி விடவில்லை; ஒழுக்கம்தான் அப்படி ஆக்குகிறது’ என்று சொன்னால், உடனே உபநயன ஸம்ஸ்காரத்தை நிறுத்தி விட வேண்டும் என்று அர்த்தம் பண்ணிக்கொள்வதா? ஒன்று சிலாக்யமானது, ஆனால் அதைவிட சிலாக்யமாக இன்னொன்று இருக்கிறது என்றால் அப்போது இரண்டாவதை வலியுறுத்துவதற்காக முதலாவதைக் கழித்துக் கட்டுவது போல exaggerate பண்ணியே பேசுவது வழக்கம். ‘பாயின்ட்’ நன்றாக நம் மனஸில் தைப்பதற்காக இப்படிச் சொல்கிறது. பிராம்மணனுக்குப் பூணூல் முக்யமானாலும், அதைவிட ஒழுக்கம் முக்யம் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் பூணூலே வேண்டாம், ஒழுக்கம் போதும் என்பது. திருக்குறளில் ஆயிரம் யாகத்தைவிட ஒரு பிராணிக்குக்கூட ஹிம்ஸை செய்யாமலிருப்பது உசத்தி என்று சொல்லியிருப்பதும் இப்படித்தான்2 கீதையில் இனனோரிடத்திலும் ஒரு ஆசாரத்தின் முக்யத்வத்தை வலியுறுத்துவதற்காகவே இன்னொரு ஆசாரத்தை மட்டம் தட்டிக் கழித்துக் கட்டிப் பேசியிருக்கிறார். ‘அக்னியை விட்டு விட்டதால் ஒருத்தன் ஸந்நியாஸி இல்லை; கர்மாவை விட்டுவிட்டதால் ஒருத்தன் ஸந்நியாஸி இல்லை; என்று அங்கே (பகவான்) சொல்கிறார்:

ஸந்ந்யாஸீ யோகீ நிரக்நிர் சாக்ரி:3

ஸந்நியாஸிக்கு அக்னி ஹோத்ரம், ஒளபாஸனம், யஜ்ஞம் முதலான அக்னிகார்யம் எதுவும் கிடையாது. அவனுக்கு மற்ற பூஜை முதலான கர்மாக்களும், ஸமூஹக் கடமைகளுங்கூடக் கிடையாது. இது ஸகல சாஸ்திரங்களாலும் ஏற்படுத்தப்பட்ட ஸந்நியாஸாச்ரம தர்மமாகும். அப்படியிருக்க ‘நிரக்னி’ (அக்னியை விட்டவன்), ‘அக்ரியன்’ (கர்மா இல்லாதவன்)  என்பதால் ஒருத்தன் ஸந்நியாஸி ஆகிவிடமாட்டானென்றால் எப்படி ஸரியாகும்?

இதற்கு ச்லோகத்தின் இன்னொரு வரியை, இதற்கு முந்தி வருகிற முதல் வரியைப் பார்க்க வேண்டும். அதிலே, “அநாச்ரித: கர்ம பலம் கார்யம் கர்ம கரோதி ய:” என்கிறார். தானாக எந்தக் கார்யம் வந்து வாய்த்தாலும் அதைத் ‘தான் பண்ணுகிறோம்’ என்ற உணர்ச்சியில்லாமல் பண்ணிக் கொண்டு, அந்தக் கர்மாவின் பலனைக் கொஞ்சங்கூடக் கருதாமல் இருப்பதுதான் உண்மையான ஸந்நியாஸ லக்ஷணம் என்பது பகவான் அபிப்ராயம். அதைத்தான் இந்த வரியில் சொல்லியிருக்கிறார். இப்படிக் கர்ம பலனில் அனாச்ரிதனாக இருந்துகொண்டு, எவன் வாய்த்த கர்மாவைப் பண்ணுகிறானோ ‘அப்படிப் பட்டவனே ஸந்நியாஸி அவனே யோகி – “ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ ச” என்று முத்தாய்ப்பு வைத்துவிட்டு, அப்புறந்தான் அதற்கு இன்னம் வலுக்கொடுப்பதற்காக, “ந நிரக்நிர் ந சாக்ரிய:” — நெருப்பை விட்டவனோ கர்மாவை விட்டவனோ இல்லை” என்கிறார்.

இதற்கு சரியாக அர்த்தம் பண்ணிக் கொண்டால், “ஸந்நியாஸ ஆச்ரமத்திலிருக்கிற ஒருவன் வெறுமே ‘நெருப்பை விட்டேன், கர்மாவை விட்டேன்’ என்று சொல்லிக்கொண்டே சொந்தப் பலனை உத்தேசித்து வேலைகள் பண்ணிக் கொண்டிருந்தால் அது ஸந்நியாஸமே இல்லை” என்று பகவான் சொல்வதாகவே ஆகும். இவன் அக்னியை விடத்தான் வேண்டும். தான் கர்த்தா என்ற எண்ணத்தோடு கர்மா செய்வதை விடத்தான் வேண்டும்; ஆனாலும் இதைவிட முக்யம் பலனை எதிர்பார்க்காமல் பட்டுக் கொள்ளாமல் வாய்த்த கர்மாவைப் பண்ண வேண்டும் என்பதே அர்த்தம்.

உபநிஷத்திலே சொல்லியிருக்கிற “அநாசகேன” என்பதற்கு “போஜனத்தை விட்டு விட்டு” என்றும் அர்த்தந்தான். ஆனால் அதைவிட முக்யமான அர்த்தம் “இந்த்ரிய இச்சைகளைப் பூர்த்தி பண்ணிக் கொள்வதை விட்டுவிட்டு” என்பதேயாகும். இந்த அபிப்ராயத்துக்கு அழுத்தங் கொடுப்பதற்காகவே ஆசார்யாள், “போஜனத்தை விடுவது இங்கே தாத்பரியமில்லை” என்கிறார்.

அவ்வப்போது ஆஹாரத்தை நிறுத்துவது சரீரத்துக்கும் நல்லது. மனஸுக்கும் நல்லது.

ஆஹார நியமங்களில் இதனால்தான் ஸத்வ போஜனம் என்று சாப்பிடத்தக்கதான உணவு முறையை வைத்ததோடு, அந்த ஸத்வ போஜனமுமில்லாத பட்டினி தினங்களாக வ்ரத உபவாஸங்களையும் சொல்லியிருக்கிறது.


1பகவத்கீதை – 6.16-17

2” தெய்வத்தின் குரல்”முதல் பகுதியில் “பரோபகாரம்“என்ற உரையும், இரண்டாம் பகுதியில் “வேதம்”என்ற உரையில் “ஜீவஹிம்ஸை செய்யலாமா?“என்ற உட்பிரிவும் பார்க்க.

3கீதை – 6.1

உபநிஷத்தில் உபவாஸம்

உபநிஷத்திலேயே பட்டினி போட்டு வ்ரதம் இருப்பதைச் சொல்லியிருக்கிறது*. ஆத்மாவை அடைவதற்கு பிராம்மணன் அத்யயனம், யஜ்ஞம், தானம், தபஸ், உபவாஸம் முதலியவற்றை அநுஷ்டிக்கிறான் என்கிற இடத்தில் அது உபவாஸமிருப்பதைச் சொல்லியிருக்கிறது. “அநாசகேந” என்று உபநிஷத்தில் உபவாஸத்தைக் குறித்திருக்கிறது. ‘அசனம்’ என்றால் சாப்பாடு. ‘ஆச’ என்றால் சாப்பிடுவது. ‘அநாசகேந’ என்றால் ‘சாப்பிடாமலிருப்பதால்’. ‘சாப்பிடாமல் உபவாஸம் இருப்பதால் ஆத்மாவை அடைய முயல்கிறார்கள்’ என்று உபநிஷத் சொல்கிறது.


* ப்ருஹதாரண்கம் – 4.4.22

உபவாஸம் எதற்காக?

சுத்த உபவாஸம் என்றால் முழுப் பட்டினி என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ‘உபவாஸம்’ என்றால் ‘கூட வஸிப்பது’. பகவனோடுகூட, அவனுக்குப் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு வஸிப்பதுதான் உபவாஸம். அன்றைக்கு வயிற்றில் ஒன்றையும் தள்ளாவிட்டால்தான் அப்படி அவனோடுகூட, கிட்டக்க வஸிக்க முடியும். மனஸ் அவன் கிட்டக்கவே கிடக்க வேண்டுமானால் அதற்கு முதலில் வயிறு வெறுமனே கிடக்கணும். சாப்பிட்டால் வயிற்றிலே ‘கடாபுடா’. வேலைசெய்ய முடிவதில்லை. மனஸையும் எதிலேயும் நிறுத்த முடிவதில்லை. வயிறு அடைசலில்லாமலிருந்தால்தான் நன்றாகப் பிராணாயாமம் பண்ணி, மனஸை சுத்தி செய்துகொண்டு ஒருமுகமாக நிறுத்த முடியும். பெரிசாக மூச்சடக்கிக் கும்பகம் பண்ணவேண்டுமென்றில்லா விட்டாலும், தடைப்படாமல் தீர்க்கமாக ச்வாஸம் விடும்படியிருந்தால்தான் மனஸ் தியானத்தில் நிற்கும். வயிற்றில் கனம் இருந்தால் இப்படி ஃப்ரீயாக ச்வாஸிக்க முடியவில்லை. இதற்காகத்தான் உடம்பை நெற்றுப்போல ஆக்கிக்கொண்டு அதனால் ச்வாஸத்தை ஃப்ரீயாகவும் மனஸை லைட்டாகவும் பண்ணிக் கொண்டு நன்றாக ஈச்வர தியானத்தில் ஈடுபடும் பொருட்டு எப்போதுமே ஆஹாரத்தை லகுவாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றும், பக்ஷத்துக்கு ஒருநாள் சுத்தோபவாஸம் அநுஷ்டிக்க வேண்டுமென்றும் சாஸ்திரம் விதிக்கிறது.

இந்த உடம்புதான்  ‘நான்’ என்று நினைத்துக் கொண்டிருப்பதால்தான் ஸதா இதற்கு ஸவரக்ஷணை பண்ணுவதையே கார்யமாக வைத்துக்கொண்டு, ஆத்மாவைக் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த தேஹாத்ம புத்தி போகணும். இதற்காகத்தான் சரீரத்துக்கு சிரமத்தை தருகிற உபவாஸங்களை சாஸ்திரம் விதித்திருக்கிறது. உபவாஸங்களால் சரீரத்துக்கு ஏற்படுகிற சிரமங்களைச் சிரமமாகத் தெரியாமல் பழக்கிக் கொள்கிறோமென்றால், அப்போது தேஹத்தையே பிரதானமாக மதித்து அதன் ஸெளகர்யத்தையே கவனிக்கும் அபிமானத்தை விடுகிறோம் என்றுதானே அர்த்தம்?

‘பசி எடுத்தாலும் பட்டினி கிடந்து பழகு; வம்பும் வீணும் பேசுவதில் ஸுகமிருந்தாலும் மௌனம் அநுஷ்டி; கண்ணை இழுத்துக் கொண்டு போனாலும் தூங்குவதில்லை என்று ராத்திரி பூரா விழித்துக்கொண்டு ஈச்வர ஸம்பந்தமாக ஏதாவது பண்ணிக்கொண்டிரு. இப்படியெல்லாம் பழகப் பழக தேஹாத்ம புத்தி போகும். சரீரம் எப்படியானாலும் சித்தம் பரமாத்மாவிடம் நிற்கும். இப்போது பிடித்தே பழக்கிக் கொள்ளாவிட்டால் மரண யாதனை என்று சொல்லுகிறார்களே, அந்தப் பெரிய ஹிம்ஸை சரீரத்துக்கு வரும்போது மனஸை எப்படிப் பரமாத்மாவிடம் செலுத்த முடியும்?’ என்றுதான் சாஸ்த்ரங்கள் வ்ரத உபவாஸங்களை வைத்திருப்பது.

ஜீவிப்பதற்கு சாப்பாடு அவசியம்தான். இல்லாவிட்டால் உயிர் போய்விடும். ஆனால் சாப்பாடு கொஞ்சம் ஜாஸ்தியாகிவிட்டால்கூட உடம்புக்கு வியாதி வக்கைகள்தான். ஆரோக்கியத்துக்குக் காரணமான ஆஹாரமே லிமிட் தாண்டிவிட்டால் நோய்க்குக் காரணமாகிவிடும்.

மெஷின்கள்கூட விடாமல் வேலை செய்தால் கெட்டுப் போய் விடுகின்றன என்று அவ்வப்போது ரெஸ்ட் கொடுக்கிறார்கள். இப்படி வயிற்றுக்கும் ரெஸ்ட் கொடுத்தால் ஆரோக்யத்துக்கு ரொம்ப நல்லது.

உடம்பு என்று முழுசாக ஒன்றை எடுத்துக் கொண்டால் அதற்கு ஆறு நாள் வேலை கொடுத்தால் ஒருநாள் லீவ் தருவது என்று ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த உடம்புக்கு உள்ளே வயிறு முதலான உறுப்புக்கள் தனியாக வேலை பண்ணிக்கொண்டேயிருக்கின்றனவே! இவற்றில் ஹ்ருதயத்தையும் லங்க்ஸையும் கொஞ்சங்கூட ‘ரெஸ்ட்’ கொடுத்து வைக்க முடியாது. வயிற்றுக்குக் கொடுக்க முடியும்; கொடுக்கவும் வேண்டும். ஏனென்றால் ஸ்தூலமாக வெளியிலிருந்து வஸ்துக்களை வாங்கிக் கொண்டு அரைத்துக் கரைத்து ரொம்பவும் உழைப்பது அதுதான். எப்போது பார்த்தாலும் வேலை செய்யும் கருவி அதுதான். எப்போது பார்த்தாலும் வேலை செய்யும் கருவி கெட்டு விடுவதுபோல் ஒரு வேளை மாற்றி இன்னொரு வேளை என்று ஓயாமல் வேலை பண்ணினால் ஜீர்ணக் கருவிகள் கெட்டுவிடும். ஆஹாரம்தான் ரத்தமாகி, பம்ப் ஆகும் போது மூளைக்குப் பாய்கிறது. அந்த மூளை ரொம்ப நுட்பமான அவயம். அதனால், அதற்கு இந்த ரத்த ஓட்ட ‘வெய்ட்’டை அவ்வப்போது குறைக்க வேண்டும். இதற்கெல்லாம் உபவாஸம் உறுதுணை செய்கிறது.

ஆகவே உபவாஸமிருந்தால் ஆரோக்யம் போய்விடும் என்று தோன்றினாலும் உண்மையில் இதுதான் இருக்கிற ரோகங்களையும் போக்கும் பெரிய மருந்து; லங்கனம் பரம ஒளஷதம் என்றே வைத்ய சாஸ்த்ர வசனம்.

லங்கனம் என்றால் பட்டினி என்று ஏன் அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம் தெரியுமா? அந்த வார்த்தைக்கு நேர் அர்த்தம் “தாண்டுவது” என்பதாகும். ஒரு வேளை சாப்பாடு இல்லாமல் அதைத் தாண்டிப் போய்விட்டால், skipping a meal என்று சொல்கிறது இதுதான், அதுவே லங்கனம்.

வைத்ய சாஸ்த்ரம் சொல்கிற லங்கனத்தையே மத நூல்களும் சொல்கின்றன திருவள்ளுவரும் இதைச் சொல்லியிருக்கிறார். அவ்வப்போது ஒரு வேளை, இரண்டு வேளை சாப்பிடாமலிருந்தால்தான் வயிற்றிலே ஏற்கனவே போட்டதில் துளிக்கூட ஜீரணமாகாமலில்லை என்று நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். இப்படி ஏற்கனவே சாப்பிட்டது முழுதும் ஜெரித்துப்போனதை (‘அற்றதை’) த் தெளிவாகத் தெரிந்துகொண்ட பிறகே ஒருவன் மறுபடி உண்பானானால் அப்படிப்பட்டவனுடைய உடம்புக்கு மருந்து எதுவும் வேண்டாம் என்று திருவள்ளுவர் சொல்கிறார்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

சாப்பாட்டினால்தான் ஆரோக்யம் என்று நாம் நினைத்தாலும் வியாதிக்கும் அதுதான் முதல் தோழன் என்பதற்கு ஒன்று சொல்கிறேன். ஜ்வரம் வந்தால் டாக்டர் முதல் கார்யமாக என்ன பண்ணச் சொல்கிறார்? ‘சாப்பாட்டை நிறுத்து; கஞ்சி குடி; இல்லாவிட்டால் இன்னபானம் சாப்பிடு’ என்றுதானே சொல்கிறார்? எந்த நோயானாலும் அதற்குப் பத்தியமாக என்னென்ன சாப்பிடக் கூடாது என்றுதான் முக்யமாகக் கண்டிப்புப் பண்ணுவதிலிருந்தே வியாதிக்கு ஆதாரம் ஆஹாரம்தானென்று தெரிகிறது.

இப்படி சரீர ரீதியில் ஆரோக்யத்துக்கு நன்மை செய்கிற பட்டினியே அதைவிட ஆத்ம ஸம்பந்தமாக நல்லது செய்கிறது.

ஆஹாரங்களில் பல வகைகள் உடம்புக்குப் புஷ்டி தந்தாலும் மனஸைக் கெடுப்பவையாயிருக்கின்றன. ஸத்வ பதார்த்தமே சாப்பிட்டு வந்தாலுங்கூட உடம்புக்குள்ளே கெட்டியான சாப்பாடு ஒன்று போய் விழுந்தால் அது மனசை லேசாக்கி மேலே கிளம்ப விடாமல் கனமாகக் கீழே இழுத்துக்கொண்டுதானிருக்கும். இதனால்தான் நடு நடுவே சுத்தப் பட்டினி விதித்திருக்கிறது.

பட்டினி கிடக்கிறபோது மனசுக்குப் பரமார்த்திகமாகவும், பகவத் விஷயமாகவும் போய்த் தோய்ந்து நிற்கிற தன்மை உண்டாகிறது. இதனால்தான் பகவத் ஸ்மரணம் விசேஷமாக இருக்கவேண்டிய தினங்களில் பூர்ண உபவாஸமோ, ஒருபொழுதோ வைத்திருக்கிறது.

காந்திகூட ஆத்ம சுத்திக்காகவேதான் உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லி அடிக்கடி பட்டினி கிடந்தார். அந்தச் சமயங்களில் தமக்குப் புத்தியிலே ஒரு தெளிவு ஏற்பட்டதாகவும் மனஸில் சுத்தி உண்டானதாகவும் சொல்லியிருக்கிறார்.

இப்படியாக உடல் நலத்தோடு உயிர் நலத்தையும் இம்மையோடு மறுமையையும் சேர்த்து ஆன்றோர்கள் உபவாஸ விதிகளைத் தந்திருக்கிறார்கள்.

அதோடு இப்படிப்பட்ட உபவாஸங்கள் எல்லா ஜனங்களாலும் அநுஷ்டிக்கப்பட்டால் உணவுத் தட்டுப்பாடு என்ற பிரச்னையே வராது.

முதலில் கஷ்டமாயிருந்தாலும் அப்யாஸத்தினால் சமாளித்து விடலாம். பக்தி பலத்தோடு, சங்கல்ப பலத்தோடு ஆரம்பித்தால் அதிலே தெரிகிற நல்ல பலனைப் பார்த்தே நாளுக்கு நாள் உபவாஸ நியமத்தில் ஈடுபாடு வலுக்கும்.

ஆரம்பத்தில் உடம்பை வாட்டுவது சிரமமாயிருந்தாலும் பிற்பாடு ஏற்படுகிற பெரிய இன்பத்துக்காக இதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

வ்ரதோபவாஸ நியமை: க்லேசித: ஸுகம் அச்நுதே |
இக்ஷு க்லேசாத் யதா (ஆ)நந்தம் ததா ப்ராப்நோதி தத் ஸுகம் ||

அதாவது, கரும்பைக் கசக்கிக் கிலேசப்படுத்துவதால்தான் கருப்பஞ்சாற்றை எடுத்துப் பானம் பண்ணுகிற இன்பம் கிடைப்பது போல, உடம்பைக் கிலேசப்படுத்துவதால்தான் உள்ளத்துக்கு ஸுக ரஸம் கிடைக்கிறது.

வியாபாரி முதலில் கையிலிருப்பதைச் செலவழித்துத்தான் பண்டங்கள் வாங்குகிறான். அப்புறம் அதை விற்று அதிகப் பொருள் சம்பாதிக்கிறான். அப்படியே உடம்பை முதலில் செலவழித்து, அப்புறம் அந்தச் செலவுக்கு மேல் பெரிய வரவு ஆத்மாவுக்கு சம்பாதித்துக் கொள்வதற்கே உபவாஸமிருப்பது.

சாப்பிடுகிற நாட்களிலும் பகவத் த்யானம் பண்ணுங்கள்; உபவாஸ நாளில் சாப்பிடாமலிருந்தும் த்யானம் பண்ணிப் பாருங்கள். தனக்கே வித்யாஸம் தெரியும். அந்த லாபத்துக்காக இந்த நஷ்டப் படலாம் என்று தெரிந்துகொள்வீர்கள். நான் நிறையச் சொல்வதைவிடப் பிரத்யக்ஷமாகப் பண்ணிப் பார்த்து விட்டாலே உபவாஸத்தின் அவச்யமும் பெருமையும் விளங்கிவிடும்.

வயிற்றை வற்றப் போடுகிற நாட்களில் மனசுக்கு த்யானாம்ருத போஜனத்தைக் கொடுத்துக் கொண்டால் எது பெரிய இன்பம் என்று தெரியும்.

சாப்பாடு இல்லாத வாய்க்கு அதைவிட ரஸம் சொட்டுகிற அவனுடைய நாமாமிருதத்தை, லீலாமிருதத்தை ஜபமாக, பஜனையாக, ஸ்தோத்ரமாக, பாராயணமாகக் கொடுத்துக் கொள்ள வேண்டும். காதுக்கு அம்ருத போஜனமாகக் கீர்த்தனையும், ஹரிகதையும் கிடைக்கப் பண்ணணும். ஏகாதசி புராண படநம்-ச்ரவணம் [படிப்பதும் கேட்பதும்] ரொம்ப விசேஷம்.

இதற்கெல்லாம் basic-ஆக, preliminary-யாகப் பண்ணவேண்டியது பட்டினி. அதைப் பண்ணினால்தான் இவற்றின் effect பூர்ணமாய்க் கிடைக்கும். அதனால்தான், ஆரம்பத்தில் சொன்ன ச்லோகத்தில் முதலில் ‘சுத்தோபவாஸ’த்தை ‘ப்ரதமம்’ என்று சொல்லிவிட்டு அதற்கப்புறமே ‘தத:’ என்று இரண்டாவதாக ‘ஸத்கதா ச்ரவண’த்தைச் சொல்லியிருக்கிறது.