ஏகாதசிக்கு இரட்டை போஜனமா?

ஏகாதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம் போஜன த்வயம் |

—இது ஒரு ச்லோகத்தின் முதல் பாதி. இதற்கு என்ன அர்த்தம்? “ஏகாதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம்” என்றால் “ஸகல ஜனங்களாலும் ஏகாதசியன்று இன்னவாறு செய்யப்பட வேண்டும்” என்று அர்த்தம்.

என்ன செய்யப்பட வேண்டும்?

“போஜன த்வயம்” என்று ‘ஆன்ஸர்’ வருகிறது.

அர்த்தம் புரிகிறதோல்லியோ? ‘த்வயம்’ என்றால் இரண்டு. ‘போஜன த்வயம்’— இரண்டு தரம் சாப்பாடு.

“எல்லாரும் ஏகாதசியன்று இரண்டு தடவை போஜனம் செய்ய வேண்டியது” என்று அர்த்தமாகிறது.

இதென்ன? ஏகாதசி என்றால் பட்டினி, தண்ணீர்கூட இல்லாமல் நிர்ஜலமாயிருக்க வேண்டும் என்பார்கள். இங்கேயானால் ஒரு தடவை மட்டுமில்லை, இரண்டு தடவை — போஜன த்வயமாக – சாப்பிட்டாக வேண்டுமென்று சொல்லியிருக்கிறது?

இது விசித்ரமாக வார்த்தை விளையாட்டுப் பண்ணியிருக்கும் ச்லோகம். இதில் “போஜன” என்று வருகிறதே அதை “போ”, “ஜன” என்று இரண்டு வார்த்தைகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஸரியான அர்த்தம் கிடைக்கும்.

“போ” என்றால் “ஓய்!” என்று கூப்பிடுவதாக அர்த்தம்.

“போ! ஜன!” என்றால் “ஓ, ஜனங்களே!” என்று எல்லா மக்களையும் கூப்பிடுவது.

இப்போது நான் சொன்ன ச்லோகத்துக்கு (பாதி ச்லோகத்துக்கு) என்ன அர்த்தமாகிறதென்றால்

“ஹே ஜனங்களே! ஏகாதசியில் எல்லாராலும் இரண்டு செய்யத் தக்கன – அதாவது இரண்டு கார்யம் செய்யத் தக்கன”.

இரண்டு போஜனம் என்று அர்த்தம் இல்லை. இரண்டு காரியம் என்று ஆகிறது.

ஏகாதசியில் ஸகல ஜனங்களும் செய்யவேண்டிய தான அந்த இரண்டு காரியங்கள் என்ன?

அதைச் ச்லோகத்தின் பின் பாதி சொல்கிறது:

சுத்தோபவாஸ: ப்ரதம: ஸத்கதா ச்ரவணம் தத:

முதல் காரியம் உபவாஸம். இரண்டாவது காரியம் பகவத் கதைகளைக் கேட்பது.

ஏகாதச்யாம் து கர்த்வ்யம் ஸர்வேஷாம் போஜந த்வயம் |
சுத்தோபவா: ப்ரதம: ஸத்கதா ச்ரவணம் தத: ||

சகல ஜனங்களும் ஏகாதசியன்று சுத்த உபவாஸமிருக்க வேண்டும்; ஈச்வர மஹிமைகளைக் கேட்க வேண்டும்.