இதுவே வேத தர்மம்

மேல் நாடுகளில் பெரிதாக ஸ்தாபன ரீதியில் institutionalise செய்து பரோபகாரப் பணிகள் செய்கிறார்கள். இப்படித் தனி ஸ்தாபனங்கள் இல்லாமலே தனி மனிதர்களாகவும், ஸங்கமாகவும் பொதுநலப்பணி புரிவது நமது வைதிக தர்மத்துக்கு ஆதாரமான ஓர் அம்சமாக ஆதியிலிருந்து இருந்து வந்திருக்கிறது.

‘இன்ஸ்டிட்யூஷனலைஸ்’ செய்யாமல் தன்னியல்பாக நம் வாழ்முறையிலேயே கண்ணுக்குத் தெரியாமல், ஒட்டிக்கொண்டு பரோபகாரம் நடைபெறுவ்தில் ஒரு உத்தமமான அம்சம் என்ன என்றால் இங்கேதான் அஹங்காரம் தலைதூக்கவே இடமில்லாமலிருக்கிறது. ‘இன்ஸ்டிட்யூஷன்’ என்றால் office-bearers (அதில் பதவி வகிப்பவர்கள்) எலெக்ஷ்ன், போட்டா போட்டி, ப்பளிஸிடி எல்லாமும் வந்துதான் சேரும். அதனால்தான் நான் ஸங்கமாகச் செய்ய வேண்டிய அநேகப் பணிகளைச் சொல்கிறபோதுகூட, இதற்காகத் தனி ஆர்கனைஸேஷனும் office-bearers-உம் வேண்டாம். ஏற்கனவே இருக்கிற வார வழிபாட்டுக் கழகம், பாவை கமிட்டி, பஜனை கோஷ்டி, ஸத்ஸங்கம் ஏதாவது ஒன்றின் மேற்பார்வையிலும் பொறுப்பிலும் இந்தப் பணிகளையும் கொண்டுவந்து விடுங்கள் என்கிறேன். ரொம்பப் பெரிசாக திட்டம் போடவேண்டாம், அவசியத்துக்கு அதிகமாக வசூல் பண்ணவேண்டாம் என்றெல்லாம் நான் எச்சரிப்பதற்கும் காரணம், இப்படிப் பெரிசாகக் கால் வைத்தால் முதலில் இதைச் செய்யும் நம் ஸ்தாபனத்துக்கு பப்ளிஸிடி தேடவேண்டிவரும். அது அப்படியே வழுக்கி விட்டு ஸ்தாபனத்தில் ஈடுபட்டிருக்கிற நமக்கும் self-publicity தேடிக்கொள்கிற சபலத்தில் கொண்டுவிடும். ஆண்டு விழாவில் நாம் வரவேற்பு சொல்ல மாட்டோமோ, வந்தனோபசாரம் சொல்ல மாட்டோமோ, வருகிற முக்கியஸ்தர்களுக்கு மாலையாவது போடமாட்டோமா, ஃபோட்டோவிலாவது தெரியும்படி நிற்கமாட்டோமா என்று இப்படியெல்லாம் மனஸை அலையச்செய்யும். அதாவது அஹங்காரத்தை அழித்துக்கொள்ளவே ஏற்பட்ட பொதுத்தொண்டு, நேர்மாறாக அஹங்காரத்தை விருத்தி செய்கிறதாக விபரீத ரூபம் எடுத்துவிடும். தான் இருக்கிற இடமே தெரியாமல், தன் காரியம் மட்டுமே தெரிவதுதான் தொண்டின் லக்ஷணம். இதனால்தான் ‘தர்மே க்ஷரதி கீர்த்தநாத்’ என்று சொல்கிறது. அதாவது, பாபம் பண்ணிவிட்டேன் என்று ஒருத்தன் வெளியில் சொன்னாலே எப்படி அவனுடைய பாபம் நசித்துவிடுமோ, அப்படி ”தர்மம் பண்ணுகிறேன்” என்று தண்டோரா போட்டுக்கொண்டால் அதனால் ஒருத்தனுக்குக் கிடைக்கிற புண்யமும் நசித்துவிடுமாம்!ஸம்ஸ்க்ருதத்தில் subtle -ஆக (நுட்பம் மிக்கதாக) ”தர்ம த்வஜன்” என்பார்கள். தர்ம த்வஜன் என்றால் தர்மக்கொடியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவன் என்று அர்த்தம். இது பாராட்டுகிற டைட்டில் மாதிரி தொனித்தாலும் இதற்கு உள்ளர்த்தம் ”போலி தர்மவான்” என்பதே! தன் தர்மத்தை உசத்திக் காட்டுவதாலேயே அதை இவன் போக்கிக் கொண்டுவிடுகிறான் என்பது தாத்பர்யம்!

‘இன்ஸ்டிட்யூஷனலைஸ்’ பண்ணுவதுபற்றிச் சொல்ல வந்தேன்.

மேல்நாடுகளில் Orphan-home (அநாதை இல்லம்) என்று தனியாக வைக்கிறார்களென்றால், நம் சாஸ்த்ரப்படி ஒவ்வொரு இல்லத்திலும் அநாதைக்கும் அதிதிக்கும் இடமுண்டு. மேல் நாட்டுக்காரர்களின் வீட்டுக்குள் அநாதைகளோ அதிதிகளோ நுழையக்கூட முடியாமல் நாய் கட்டியிருக்கும்! அவன் வாழ்க்கையோடு, ரத்தத்தோடு அதிதி ஸத்காரமும், அநாதை பராமரிப்பும் ஒட்டாமல் அவைபாட்டுக்கு மெகானிகலாக ஸ்தாபன ரீதியில் நடக்கும். (எல்லாரும் இப்படி என்று நான் சொல்லவில்லை. எந்த தேசத்திலும் உத்தமர்கள், பரோபகாரிகள், த்யாகிகள் உண்டு. அப்படியே ஸ்வயநலக்காரர்களும் உண்டு. பொதுவாகச் சொன்னேன்.) மேல்நாட்டானைக் காப்பியடித்து, ”அதிதி தேவோ பவ” என்ற கொள்கையைக் கொண்ட நம் தேசத்திலும் வீட்டு வாசல்களில் ”நாய் ஜாக்கிரதை!” போர்டு தொங்குவதைப் பார்த்தால் வேதனையாயிருக்கிறது. ”வா வா” என்று வழிப்போக்கர்களைக் கூப்பிட்டுப் படுக்க வைத்துக்கொள்ளவே ‘திண்ணை’ என்பது நம்முடைய வைதிகமான க்ருஹ சில்பத்தில் இருந்தது. இப்போது அதெல்லாம் போச்சு. இப்படியே அன்றன்றும் வைச்வதேவ பலியில் தெருவில் போகிற எவனோ பஞ்சமன் சாப்பிடக்கூட ஒரு பங்கு அன்னம் போடப்பட்டு வந்த இந்த தேசத்தில் இம்மாதிரி அநுஷ்டானங்களை ‘ஸூபர்ஸ்டிஷன்’ என்று தள்ளி வைத்து விட்டதும் மனஸுக்கு க்லேசமாயிருக்கிறது.

மேல்நாட்டு மோஸ்தரில் இங்கேயும் தனி மநுஷ்யனின் குடும்பம் தனக்கே என்று ஆனபிறகு, இங்கேயும் அங்கே மாதிரி ஸமூஹப் பணிகளை இன்ஸ்டிட்யூஷனலைஸ் செய்வதாகவும், ‘Welfare State’ என்பதாக ராஜாங்கமே அநாதையில்லம், வயஸானவர் பென்ஷன் என்றெல்லாம் நடத்துவதுமாக ஆகிவிட்டது. இன்றைய ‘ஸெட் அப்’ பில் இதுவுமில்லாவிட்டால் நிராதரவானவர்களின் பாடு ரொம்பவும் கஷ்டமாகத்தான் ஆகிவிடும். ஆனாலும் பூர்வத்தில் ஒவ்வொருவரும் ‘வஸுதைவ குடும்பகம்’ (லோகம் முழுக்க ஒரு குடும்பம்) என்ற அன்பான எண்ணத்தோடு தாங்களே ஆதரவற்றவர்களைத் தாங்கி தரித்த முறையோடு பார்த்தால் இப்போது ராஜாங்க ரீதியில் ஆபீஸாக ஸமூஹ காரியங்களை நடத்துவது இரண்டாம் பக்ஷம்தான்.

சுருக்கமாக வேத தர்மம் என்பது நம்மிடத்தில் இருக்கும்படியான எல்லா சக்திகளும் ஈச்வர சக்தியில் துளித்துளிதான். இந்த சக்திகளை ஈச்வரனுக்கே அர்ப்பணிக்க வேண்டும். நாவினாலே அவன் நாமாவைச் சொல்வது, மனஸினாலே த்யானம் பண்ணுவது, சரீரத்தாலே பூஜை பண்ணுவது என்று எல்லாம் ஈச்வர ஸம்பந்தமாக்க வேண்டும். பூஜை என்பதில் கர்மாவைச் செய்வதும், கடமையைச் செய்வதும் அடக்கந்தான். ஆசார்யாள் முடிவாக உபதேசித்த ’ஸோபான பஞ்சக’த்தில் கர்மாவைப் பண்ணுவதுதான் ஈச்வர பூஜை என்று நிர்த்தாரணம் செய்திருக்கிறார். ஸ்வதர்மப்படி அவரவருக்கு ஏற்பட்ட கர்மாவோடு, ஸர்வஜனங்களுக்கும் ஏற்பட்ட ஸாதாரண தர்மங்களைச் சேர்ந்த ஒரு முக்யமான கர்மா இந்தப் பரோபகாரம் என்பது.

அதனால் நாக்கால் நாமா சொல்கிறதோடு ஜனங்களுக்கு நல்லதாக, மதுரமாக நாலு வார்த்தை சொல்லவேண்டும். மனஸால் த்யானம் பண்ணுவதோடு, ‘லோகமெல்லாம் க்ஷேமமாயிருக்கணும்’ என்று ஒவ்வொரு நாளும் நாலு க்ஷணமாவது அன்போடு நினைக்க வேண்டும். சரீரத்தால் பூஜை, ப்ரதக்ஷிணம், நமஸ்காரம் செய்வதோடு கொஞ்ச நேரமாவது வெட்டியோ கொத்தியோ வேறு தினுஸிலோ ஒரு பொதுத்தொண்டு பண்ணவேண்டும். திரவ்யத்தையும் இப்படியே தேங்காய், பழம், புஷ்பம் வாங்குவதோடு தான தர்மத்துக்கும் கொஞ்சமாவது செலவழிக்க வேண்டும். இவற்றையும் ஈச்வர ப்ரீதிக்காக ஈச்வர பூஜையாக நினைத்தே செய்ய வேண்டும். இதுவே நம் பூர்விகர்கள் போன வழி. அதாவது தெய்வகார்யம், ஸமூஹ கார்யம் இரண்டில் ஒன்றையும் விடாமல் பண்ண வேண்டும்.

பரோபகாரம் நம் மதத்தில் சொல்லப்படவில்லை என்ற தப்பான பிரசாரத்தை நம்பக்கூடாது. குழந்தையாக இருக்கிறபோதே ‘ஸுபாஷிதம்’, ‘நீதி சாஸ்திரம்’ என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். அதிலேயே பரோபகாரத்தைப் பற்றிய அநேக போதனையிருக்கிறது. ‘பரோபகாரார்த்தம் இதம் சரீரம்’ — ‘உலகத் தொண்டு பண்ணவே இந்த உடம்பு வாய்த்திருக்கிறது’ என்று அப்போதே கற்றுக் கொடுத்து விடுவார்கள். இன்னொன்றும் சொல்வதுண்டு, ‘பரோபகாராய ஸதாம் விபூதய:’ — ‘‘நன்மக்களின் ஸகல சக்திகளும், உடைமைகளும் பரோபகாரத்துக்காகவே ஏற்பட்டவைதான்’ என்று அர்த்தம். இதை இரண்டு விதத்தில் சொல்லி இளமனஸில் ஆழமாகப் பதிப்பிப்பார்கள். ஒன்று: பிறருக்குப் பிரயோஜனமாவதற்குத்தான் மரம் பழுக்கிறது — பரோபகாரார்த்தம் பலந்தி வ்ருக்ஷா: — பிறருக்குப் பிரயோஜனமாவதற்குத்தான் ஆறுகள் ஜலத்தைச் சுமந்து ஓடுகின்றன — பரோபகாரார்த்தம் வஹந்தி நத்ய:; பிறருக்குப் பயனாவதற்கேதான் பசுக்கள் பால் கொடுக்கின்றன — பரோபகாரார்த்தம் துஹந்தி காவ:; அப்படியே இந்த மநுஷ்ய காயம் ஏற்பட்டிருப்பதும் பிறருக்கு உதவும் பொருட்டே — பரோபகாரார்த்தம் இதம் சரீரம். இன்னொன்று : இப்போது சொன்னதையே இன்னும் கொஞ்சம் நயத்தோடு சொல்வது – மரம் தன் பழத்தைத் தானே சாப்பிட்டுக் கொள்வதில்லை — காதந்தி ந ஸ்வாது பலாநி வ்ருக்ஷா:; ஆறு தன் ஜலத்தைத் தானே குடித்துக் கொள்வதில்லை — பிபந்தி நத்ய: ஸ்வயமேவ நாம்ப:; மேகம் தன் மழையாலுண்டாகிற பயிரைத் தானே சாப்பிடுவதில்லை — பயோதரா: ஸஸ்யமதந்தி நைவ; இதேபோல ஸஜ்ஜனங்களின் (நல்லோரின்) எல்லாத் திறமைகளும், செல்வமும் பரோபகாரத்திற்குத்தான் — பரோபகாரய ஸதாம் விபூதய:.

படிக்கிற காலத்திலேயே, ”உன்னை சாச்வதமாக உயிர்வாழ்கிற தேவஜாதியாக நினைத்துக்கொண்டு கல்வியையும் பொருளையும் நிறுத்தாமல் மேலே மேலே ஸம்பாதித்துக்கொண்டே போ” என்று சொல்லிக் கொடுத்துவிட்டு, அதே மூச்சில், அந்த ஸ்லோகத்திலேயே, ”தர்மம் பண்ணுவதில் மட்டும் அப்புறம் என்று ஒத்திப்போடாமல், எப்போதும் யமன் உன் தலைமயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டேயிருக்கிறான் என்று நினைத்து, உடனுக்குடனே பண்ணிவிடு” என்று சொல்லிக் கொடுத்தார்கள்:

அஜராமரவத் ப்ராஜ்ஞ: வித்யாம் அர்த்தம் ச ஸாதயேத் |
க்ருஹீத இவ கேசேஷு ம்ருத்யுநா தர்மம் ஆசரேத் ||

வியாஸர் பதினெட்டு புராணங்களையும் பண்ணி முடித்தபின் சிஷ்யர்கள் அவற்றின் ஸாராம்சத்தை ஒன்றிரண்டு ச்லோகங்களில், ஸுலபமாக நினைவில் வைத்துக்கொள்ளும்படியாகச் சுருக்கித் தரும்படிப் பிரார்த்தித்தார்களாம். உடனே அவர் ”ஒன்றிரண்டு ச்லோகம் எதற்கு? இந்தப் பதினெட்டுப் புராணம் மட்டுமின்றி மொத்தமிருக்கிற கோடிப் புஸ்தகங்களின் ஸாரத்தையும் அரை ச்லோகத்திலேயே சொல்கிறேன்” ”ச்லோகார்தேந ப்ரவக்ஷ்யாமி யதுக்தம் க்ரந்தகோடிஷு |” என்று ஒரு ச்லோகத்தின் முதல் பாதியாகச் சொல்லிவிட்டு மற்ற பாதியில் அந்த ஸாரமான தத்துவத்தைச் சொன்னாராம்:

”பரோபகார: புண்யாய பாபாய பரபீடநம் ||”

இருக்கிற அத்தனைகோடி மத சாஸ்திர புஸ்தகங்களுக்கும் உயிர் நிலையான தத்வம் என்னவென்றால், ”புண்யம் ஸம்பாதிக்க வேண்டுமானால் பரோபகாரம் பண்ணு; பாபத்தை மூட்டை கட்டிக் கொள்வதனால் மற்ற ஜீவன்களுக்குக் கஷ்டத்தைக் கொடு” என்பதுதான் – என்று இதற்கு அர்த்தம்.

பாபம் எது என்று தெரிந்துகொண்டு அதை விலக்குவதற்கும், புண்யம் எது என்று தெரிந்துகொண்டு அதைப் பண்ணுவதற்குந்தான் மதம் என்பதே இருக்கிறது. இங்கே நம் மதத்துக்கு முக்யமான மூல புருஷர்களில் முதன்மையாயிருக்கிற வ்யாஸாசார்யாள் பர உபகாரம் தான் புண்யம், பர அபகாரம்தான் பாபம் என்று சொல்கிறாரென்றால், அதற்கப்புறம் நம் மதத்தில் பரோபகாரத்துக்கு இடமுண்டா என்ற வாதத்துக்கே இடமில்லை.

‘ஆத்மார்த்தமாக, ஒருத்தன் தனக்குப் பண்ணிக் கொள்வதைப்பற்றித்தான், வேத மதத்தில் நிறைய இருக்கிறது. பிறத்தியாருக்குப் பண்ணுவதைப்பற்றி இல்லை’ என்று சில பேர் criticise பண்ணினாலும் இப்படி இவன் ஸ்வய உபகாரம் பண்ணிக்கொண்டு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டாலன்றி இவன் செய்கிற பரோபகாரத்துக்கு effect இருப்பதில்லை என்பதால்தான், தன்னுடைய spiritual power (ஆத்ம சக்தி) -ஐக் கொண்டு ஒருத்தன் ‘ஸோஷல் ஸர்வீஸ்’ பண்ணணும்; அந்த ‘ஸோஷல் ஸர்வீஸா’லேயே இந்தப் ‘பவரை’ விருத்தி செய்து கொள்ளணும் என்பதாக இரண்டையும் கைகோர்த்துக் கொண்டு, ஒன்றால் மற்றது புஷ்டி பெறுகிற ரீதியில், நம்முடைய மதத்திலே அமைத்துக் கொடுத்திருக்கிறது.

வேத தர்மத்தைப் பூர்ண ஜீவசக்தியுடன் ப்ரகாசமாகத் தூண்டிவிட்ட ஆசார்யள் வினா-விடை ரூபத்திலே ‘ப்ரச்நோத்தர ரத்நமாலிகா’ என்று அநுக்ரஹித்திருக்கிறார் அதிலே ஒரு கேள்வி:

“கிம் மநுஜேஷு இஷ்டதமம்?”

“மநுஷ்யனாகப் பிறந்தவன் விரும்ப வேண்டியவற்றில் தலை சிறந்தது எது?” என்பது கேள்வி.

“ஸ்வ பர ஹிதாய உத்யதம் ஜந்ம” என்பது இதற்குப் பதில். ‘ஸ்வஹிதம்’ – தனக்கு நன்மையானது அதாவது ஸ்வயோபகாரம் இதோடு ‘பரஹிதம்’ என்கிற பரோபகாரம். இரண்டுக்காகவும் பாடுபடும் வாழ்க்கைதான் மநுஷ்யன் வேண்டத் தக்கவற்றில் உச்சியானது என்று பதில் சொல்கிறார். இங்கே ஆசார்யாள் நவீனர்களின் ‘க்ரிடிஸிஸ’த்துக்கு ஆணி அடித்தாற்போல் விடை சொல்லியிருக்கிறார்.

இதே க்ரந்தத்தில் இன்னோரிடத்தில் சந்திர கிரணத்துக்கு ஸமானமான மனிதர்கள் ஸஜ்ஜனங்களே என்கிறார். சந்திர கிரணம் லோகத்துக்கெல்லாம் தாப சமனம் தருகிறது. சந்திரனுக்கு இப்படி உலகத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆசை இருந்து, இதற்காக அது ப்ரயத்தனப்படவேண்டும் என்று இல்லை. தன்னியல்பாகவே அது லோக ஹிதத்தை உண்டாக்குகிறது. அதேபோல ஸஜ்ஜனங்கள் என்கிற ஸாதுக்கள் “ஸோஷல் ஸர்வீஸ் பண்ணணும்” என்று அரிப்புப் பட்டுக்கொண்டு, தண்டோரா போட்டுச் செய்யணும் என்றே இல்லை. அவர்கள் தங்களுடைய ‘நேச்சர்’ படி இருப்பதே, நடப்பதே லோகஹிதமாக, பரோபகாரமாகத்தானிருக்கும். இதையேதான் ஸஜ்ஜனங்களுக்கெல்லாம் சிகரமாகப் பரம சாந்தர்களாக, மஹாந்தர்களாக இருக்கப்பட்ட ஜீவன் முக்தர்களின் லக்ஷணமாகவும் (ஆசார்யாள்) “விவேக சூடாமணி”யில் சொல்கிறார். இங்கே ‘சந்திர கிரணம் மாதிரி’ என்றவர் அங்கே “வஸந்த காலம் மாதிரி” என்கிறார்.

வஸந்தவத் லோகஹிதம் சரந்த:

வஸந்தகாலம் போல உலக நலனைப் பண்ணியபடி உலாவுகிறார்களாம் மஹான்கள். வஸந்தம் என்று ஒன்று கண்ணுக்குத் தெரிகிறதோ? சந்திரனாவது தெரிகிறது. மஹான்கள் தங்களை இப்படிக் காட்டிக் கொள்வதுகூட இல்லை! ஆனாலும் வஸந்தம் வந்தால் தன்னால் தென்றல் ஹிதமாக வீசுகிறது. புஷ்ப ஜாதிகள், மல்லிகை முக்யமாக, எங்கே பார்த்தாலும் மலர்ந்து கம்மென்று வாசனை வீசுகின்றன. மா முதலான பழங்கள் குலுங்க ஆரம்பிக்கின்றன. சிசிர ருது என்கிற பின்பனிகாலத்தில் இலையை உதிர்த்துவிட்டு நின்ற மரமெல்லாம் வஸந்தம் வந்ததும், அதற்குப் பச்சைக்கொடி காட்டுகிறதுபோல பச்சைப்பசேல் என்று தளிர் விடுகின்றன இப்படித்தான் இந்த சரீரத்திலிருக்கும்போதே ‘தான் பிரம்மம்’ என்று தெரிந்துகொண்டுவிட்ட ஜீவன்முக்தனும்கூட unconscious-ஆக (தன்னுடைய புத்தி பூர்வமாக இல்லாமலே) , unnoticed ஆக (தன்னைக் காட்டிக் கொள்ளாமலே) லோக ஹிதத்தை உண்டாக்குகிறான் என்று இப்படி இருந்து காட்டிய ஆசார்யாளே, unself- conscious ஆக (தன்னைப்பற்றிச் சொல்லிக் கொள்கிறோம் என்ற நினைப்பேயில்லாமல்) சொல்லியிருக்கிறார்!

”பொதுவாகவே ஹிந்து மதத்தில் பரோபகாரம் கிடையாது. அதிலும் அந்த மதத்தில் உள்ள அத்வைதத்தில் லோகமே மாயை; ஆத்மாவைத் தவிரப் பிறத்தியானென்றே இல்லை’ என்று சொல்லித் துளிக்கூடப் பரோபகார ப்ரக்ஞைக்கு இடமேயில்லாமல் அடைத்து விட்டிருக்கிறது” என்று ஒரு criticism இருந்தாலும், அத்வைத ஆசார்யாளே அத்வைத ஸித்தியை அடைந்து விட்டவனும் லோக ஹிதத்துக்காகத்தான் உலகத்தில் உலாவிக் கொண்டிருக்கிறான் என்கிறார்.

பகவானும் (ஸ்ரீ கிருஷ்ணரும்) ஜீவன்முக்தர்களான ஜனகாதியர்கூட ‘லோக ஸங்க்ரஹ’த்துக்காக கார்யம் பண்ணிக்கொண்டு தானிருக்கிறார்கள் என்று (கீதையில்) சொல்கிறார். ‘ஸங்க்ரஹம்’ என்றால் அன்போடு வழிகாட்டி உசத்துவது. தன்னில்தானே ஸகல ஸாதனைகளுக்கும் லக்ஷ்ய ஸ்தானமாயிருந்தபோதிலும், தான் பண்ண வேண்டிய ஸாதனையோ, அடைய வேண்டிய லக்ஷ்யமோ எதுவும் இல்லாதபோதிலும், பகவானான தாமும் லோகத்தார் எப்படி வாழவேண்டும் என்ற ‘ஐடிய’லை அவர்களுக்குக் காட்டிகொடுப்பதற்காகவே ஓயாமல் ஒழியாமல் கார்யங்கள் பண்ணிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார். எதுவும் ஸாதிக்க வேண்டாத பகவானும் பரோபகாரத்தை ஸாதிக்கிறார்! இதையேதான் “ப்ரச்னோத்தர ரத்நமாலிகா”விலும் (ஆசார்யாள்) , “கிம் ஸாத்யம்?”— “ஸாதிக்கத் தக்கது என்ன?” என்று கேட்டு, “பூத ஹிதம்” — “உயிர்க்குலத்துக்கு நன்மை செய்வது” என்று பதிலாகக் கொடுக்கிறார்.

‘டாப் லெவ’லில் இருப்பவனுக்கே பரோபகாரத்தைச் சொன்ன அத்வைத ஆசார்யாள் ஸாதாரண மநுஷ்யனுக்கும் அந்த லெவலுக்கு ஏறுகிற வழியில் இதை அங்கமாகச் சொல்லித்தானிருக்கிறார். “பணம் ஸம்பாதிக்கிறாயா? ஸம்பாதித்துவிட்டுப்போ. ஆனால் அதை தார்மிகமாக ப்ரயோஜனப்படுத்தினாயானால் அதுவே உன் சித்தத்தைப் பரிசுத்தி பண்ண உதவும்” —

யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேந விநோதய சித்தம்

என்று ‘பஜகோவிந்த’த்தில் சொல்கிறார். அதிலேயே ஆத்ம ஸம்பந்தமாக, பகவத் ஸம்பந்தமாக, “கீதையைச் சொல்லு, ஸஹஸ்ரநாமம் சொல்லு, விடாமல் லக்ஷ்மிபதியான மஹாவிஷ்ணுவை த்யானம் பண்ணு, ஸத்ஸங்கத்திலேயே மனஸை ஈடுபடுத்து” என்றெல்லாம் சொல்லிவிட்டு, முடிவாக “ஏழை எளியவர்களுக்குத் தான தர்மம் பண்ணு” என்று பரோபகாரத்தோடு முடிக்கிறார்:

கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதிரூபம் அஜஸ்ரம் |
நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
தேயம் தீநஜநாய ச வித்தம் ||

ஆனதால் வேத தர்மம் (லோகம், ஜீவன் எல்லாம் மாயை என்கிற அத்வைதமும்கூட) ஜீவாத்ம கைங்கர்யங்களை ஈச்வர ஸம்பந்தத்துடனே சேர்த்துச் சேர்த்து எல்லாரும் பண்ணியாக வேண்டுமென்று கொடுத்திருப்பதைப் புரிந்து கொண்டு அப்படியே செய்ய வேண்டும். நம் பூர்விகர்கள் போனவழி அதுதான். அதிலேயே நாமும் போய் அத்வைத த்ருஷ்டியில் எல்லா உயிர்களையும் ஈச்வர ஸ்வரூபமாகப் பார்த்துத் தொண்டு செய்து ஈச்வர ப்ரஸாதத்தை அடைய வேண்டும்.

ஸர்வேஜநா: ஸுகிநோ பவந்து |
லோகா: ஸமஸ்தா: ஸுகிநோ பவந்து |

பணியற்ற நாள் பாழே!

தினமும் தூங்கப்போகுமுன்பு இன்று ஜன ஸமுதாயத்துக்கு நாம் ஏதாவது கைங்கர்யம் பண்ணினோமா என்று கேட்டுக்கொள்ள வேண்டும். ஈச்வரனைப் பற்றிப்  “பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்று தேவாரத்தில் சொல்லியிருக்கிறது. அந்த மாதிரி நாம் பரோபகாரம் பண்ணாமலே ஒருநாள் போயிற்று என்றால், அது நாம் பிறவா நாளே — அன்றைக்கு நாம் செத்துப் போனதற்கு ஸமம்தான் — என்று வருத்தப்பட வேண்டும். பந்துக்கள் செத்துப்போனால் நமக்கு தீட்டு என்று, ஒரு புண்ய கார்யத்துக்கும் உதவாமல் ஒதுக்கிவிடுகிறார்கள். நாமே செத்த மாதிரி என்றால் இதுதான் பெரிய தீட்டு; பரோபகாரம் செய்யாத ஒரு தினத்தில் புண்யத்தின் பக்கத்திலேயே நாம் போகவில்லை, தீட்டுக்காரர்களாகி விட்டோம் என்று feel பண்ணவேண்டும்.

நாம் எத்தனை சின்னவர்களாக இருந்தாலும் நம்மாலும் முடியக்கூடிய சின்னத் தொண்டு இல்லாமலில்லை. இப்படி அவரவரும் தனியாகவோ, ஸங்கமாகச் சேர்ந்தோ ஏதாவது பொது நலக்கைங்கர்யம் பண்ணியே ஆகவேண்டும். தண்ணீரில்லாத ஊரில் ஒரு பத்து பேர் சேர்ந்து கிணறு வெட்டுவது; ஏதோ ஒரு பிள்ளையார் கோயில் மதில் இடிந்திருந்தால் அதை நாலு பேராகச் சேர்ந்து கட்டுவது; பூஜை நின்று போன ஒரு க்ராமக் கோயிலில் ஒரு காலப் பூஜைக்காவது நாலு பேரை யாசித்து மூலதனம் சேகரித்து வைப்பது; பசுக்கள் சொறிந்து கொள்வதற்கு ஒரு கல்லேனும் நாட்டுவது; நாம் படித்த நல்ல விஷயங்களை நாலுபேருக்குச் சொல்லுவது, எழுதுவது; இரண்டு ஸ்லோகமாவது பாசுரமாவது நாமாவளியாவது பாடி நாலு பேர் மனஸில் பகவானைப் பற்றிய நினைப்பை உண்டாக்குவது; குப்பை கூளங்களைப் பெருக்குவது — இந்தமாதிரி ஏதாவது தொண்டு அன்றன்றும் செய்யவேண்டும். ஓசைப்படாமல் செய்ய வேண்டும் என்பது முக்யம்.

குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு ஸோஷல் ஸர்வீஸ் என்று கிளம்ப வேண்டியதில்லை. அதையும் விடாமலே, இதுவும் கடமை என்ற உணர்வோடு சேர்ந்துக்கொண்டு செய்ய வேண்டும்.

சரீர-சித்த பரிசுத்தி

ஏகப்பட்டதாகப் பரோபகாரங்களைச் சொல்லிக் கொண்டே போயிருக்கிறேன். பொதுவாகப் பரோபகாரம் என்றே நினைக்காத சில விஷயங்களைக்கூட இந்தப் பெரிய ‘லிஸ்ட்’டில் சேர்த்துச் சொல்லியிருக்கிறேன்.

இம்மாதிரி இன்னொன்று அவனவனும்: தன் உடம்பையும் புத்தியையும் சுத்தமாக வைத்துக்கொள்வதே பெரிய பரோபகாரம்தான். துர்ப்பழக்கங்களால் ஒருத்தன் வியாதியை ஸம்பாதித்துக் கொள்கிறான் என்றால், அப்புறம் அவனால் எப்படிப் பரோபகாரம் பண்ண முடியும்? இது மட்டுமில்லை. இவனுடைய வியாதி பிறத்தியாருக்குப் பரவக்கூடும். அதனால் நம் அஜாக்ரதையால், துர்ப்பழக்கத்தால் வியாதியை வரவழைத்துக்கொள்கிறபோது பர அபகாரமும் பண்ணிவிடுகிறோம். நம்மை மீறி வந்தால் அது வேறே விஷயம்.

இந்தக் காலத்தில் எல்லோரும் நோயும் நொடியுமாக அவஸ்தைப்படுகிற மாதிரி நாற்பது, ஐம்பது வருஷங்களுக்கு முந்தியெல்லாம் இல்லை. காரணம் என்னவென்றால் இப்போது அநேகருக்கு மனஸில் நெறியில்லாமல் இருப்பதும், அநேக துராசாரங்கள் வந்திருப்பதும்தான்.  ”சாஸ்த்ராய ச ஸுகாய ச” என்பார்கள் – அதாவது சாஸ்த்ர ப்ரகாரம் நெறியோடு, ஆசாரத்தோடு இருப்பதுதான் ஸெளக்யமாக, ஆரோக்கியமாக இருக்கவும் உதவுவது என்று அர்த்தம். இப்போது எச்சில் தீண்டல் பார்காததாலேயே அநேக வியாதிகள், தொத்து நோய்கள் பரவிக்கொண்டு வருகின்றன. இப்படி வியாதிக்குக் காரணமாயிருக்கிற அநாசாரத்தை ஃபாஷன் என்ற பெயரில் ஸ்வீகரித்துக்கொண்டிருக்கிறோம்!

சரீர வியாதிதான் தொத்துகிறது என்றில்லை. எண்ணங்களும் பிறத்தியாரை பாதிக்கவே செய்கின்றன. இப்போது ஸயன்ஸில்கூடச் சொல்கிறார்கள், ‘மூளை எண்ணங்களாக வேலை செய்வதுகூட ஒரு எலெக்ட்ரிக் கரென்ட்தான்; சிந்தனா சக்திக்குப் (thought-power) பிறரையும் பாதிக்கிற தன்மை இருக்கிறது’ என்று. அதனால் நாம் சரீரத்தையும், புத்தியையும் சுத்தமாக வைத்துக் கொண்டிருப்பதாலும் பிறரின் தேக மன ஆரோக்கயங்களுக்கு உபகாரம் பண்ணியவர்களாக (அபகாரம் பண்ணாதவர்களாகவாவது) ஆகிறோம்.

நேராக மூளையை சுத்தப்படுத்திக் கொள்கிறேன் என்று உட்காருவதைவிட, நான் சொன்ன அநேக தினுஸான பரோபகாரங்களை – எல்லாவற்றையுமோ, சிலவற்றையோ நிறையச்செய்து கொண்டிருந்தாலே, தானாகச் சித்தம் சுத்தமாகிவிடும்.

பரோபகாரம் சித்தசுத்திக்கு உதவ வேண்டுமானால் அதற்கு உயிர்நிலை அஹங்காரம் என்பது லவலேசங்கூட இல்லாமல் தொண்டு செய்வதுதான். ‘நாம் பெரியவர்; உபகாரம் பண்ணுகிறோம்’ என்ற நினைப்பை தலையெடுக்கவே விடக்கூடாது. கொஞ்சம் அப்படி நினைத்தாலும் அது உபகாரம் பண்ணுவதன் பலனை – சித்த சுத்தியை – சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடும். இரண்டாவது, (அதிலேயே இதுவும் அடக்கம்தான்) ப்ரதி ப்ரயோஜனத்தை துளிக்கூட எதிர்பார்க்கக்கூடாது. உபகாரம் செய்தால் நமக்கு ஸித்திக்கிற சித்த சுத்தியேதான் பெரிய ப்ரயோஜனம்.

அவரவரும் தம் நிலையில் தம் வருமானம், குணம், சரீர வசதி, ஆற்றல் இவைகளுக்கு ஏற்றபடி எவ்விதங்களில் பரோபகாரம் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்யவேண்டும். உடம்பிலே எந்த அவயவத்துக்குத் துன்பம் வந்தாலும் கண் அழுகிறது அல்லவா? அதைப்போல், உலகத்தில் எங்கே, யாருக்குத் துன்பம் உண்டானாலும் நாம் மனம் கசிந்து, ஒவ்வொருவரும் நம்மாலான உதவியைச் செய்ய வேண்டியது நம் கடமை. இதில் பெருமைக்காகச் செய்வது எதுவும் இல்லை. பிறத்தியாரின் வற்புறுத்தலுக்காகவும் செய்ய வேண்டியதில்லை. லோகம் முழுக்க பகவத் ஸ்வரூபம் என்று மனஸில் வாங்கிக்கொண்டால், தன்னால், ஸ்வபாவமாக, பிறர் துயரத்தை நிவ்ருத்தி செய்வதில் ஈடுபடுவோம். இதிலே நமக்கு ச்ரமம் வந்தால்கூட, அது ச்ரமமாகவே தெரியாது. எத்தனை த்யாகம் செய்தாலும் அதுவே பரமானந்தமாக இருக்கும். இப்படி த்யாகம் பண்ணுவதற்கு எல்லையே இல்லை. உபகரிக்கப்பட்டவன் முகத்தில் மகிழ்ச்சி தவழப் பார்க்கிறோமே, அந்த ஆனந்தத்துக்கு எத்தனை த்யாகமும் ஈடாகாது என்றுதான் தோன்றும்.

திவ்ய ஸ்மரணைக்குப் பின் திவஸம் ஏன்?

ஒரு ஜீவன் இருக்கும்போதும், இறக்கும்போதும், இறந்தபின்பும் செய்யவேண்டிய தொண்டுகளை நிறையச் சொல்லிக்கொண்டே போயிருக்கிறேன். ‘இறக்கும்போது நாம் செய்கிற பணியினால் அந்த ஜீவன் பகவத் ஸ்மரணையோடு உயிரை விட்டால் அது பகவானை அடைந்துவிடுமல்லவா? இதற்கப்புறம் அதற்கு இறந்தபின் செய்யவேண்டிய ஸம்ஸ்காரம், திவஸம், திங்கள் எல்லாம் எதற்குச் செய்யவேண்டும்?’ என்று கேட்டுவிடக்கூடாது. ஏனென்றால் நமக்குத் தெரிவது அந்த ஜீவனின் அந்திம காலத்தில் அது பகவானை நினைக்கும்படியான முயற்சியை நாம் பண்ணுகிறோம் என்பதுதான். அந்த முயற்சி எவ்வளவு பலித்தது என்பது நமக்குத் தீர்மானமாகத் தெரியாதது. நாம் கங்கா தீர்த்தம், விபூதி, துளஸி கொடுத்து நாமோச்சாரணம் பண்ணுவதை அந்த ஜீவன் எந்த அளவுக்கு மனஸுக்குள் வாங்கிக்கொண்டது என்பது நமக்குத் தெரியாது. அது பகவத் ஸ்மரணையோடுதான் உயிரை விட்டதா என்பது நமக்குத் தெரியாத விஷயம். ஆனதால், அது பகவானிடந்தான் போய்விட்டது என்று நாமாகத் தீர்மானம் பண்ணிக்கொண்டு அபரகார்யம், ச்ராத்தம் முதலானவைகளை நிறுத்திவிடக்கூடாது.

செய்ய வேண்டிய பணி

தங்கள் க்ராமத்தில் அல்லது பேட்டையில் ஒருத்தன் சாகிற நிலையில் இருக்கிறான் என்று தெரிந்தால் அங்கே ஸங்கத்திலிருந்து ஒருத்தரோ சிலரோ போக வேண்டும். வீட்டிலே இல்லாமல் ஆஸ்பத்திரியிலோ ஜெயிலிலோ உயிரை விடுகிறவர்களும் உண்டு. எனவே இப்பேர்ப்பட்ட இடங்களுக்கும் தங்களை அனுமதிக்கும் படியாக அந்தந்த அதிகாரிகளிடம் பெர்மிஷன் வாங்கி வைத்திருக்க வேண்டும். அங்கே வெறும் கையோடு போகக்கூடாது. நாமம்தான் ஸர்வரோக நிவாரணி என்பது வாஸ்தவமே. அதற்கு வெளி வஸ்து ஒன்றும் வேண்டியதில்லைதான். ஆனால் ஸ்தூலமாக ப்ரஸாதம் என்று ஒன்றைக்கொண்டுபோய்க் கொடுத்தால் அதற்கும் ஒரு தனி உத்ஸாஹ சக்தி உண்டுதான்; அது சாகிற ஜீவனுக்கு ஜாஸ்தி ஆறுதலாக இருக்கும். ஆனதால், முதலிலேயே கையில் சிவன்கோவில் விபூதி, பெருமாள் கோயில் துளசி ‘ஸ்டாக்’ வைத்திருக்கவேண்டும். அம்பாள் கோயில் குங்குமம், முருகன் அல்லது பிள்ளையார் கோயில் விபூதி என்று எது இருந்தாலும் ஸரி. சிவபரமாகவும், விஷ்ணுபரமாகவும், ஏதாவது இரண்டு கோயில் ப்ரஸாதம் ஸ்டாக் இருக்கவேண்டும். கங்கா ஜலம் ஸர்வ பாப சமனம் ஆனதால் சங்கா தீர்த்தமும் வைத்திருக்க வேண்டும். மரணமடைகிற ஜீவன் சைவ மதமோ, வைஷ்ணவ மதமோ அதைப்பொறுத்து அந்தந்த ப்ரஸாதத்தை எடுத்துப்போக வேண்டும். கங்கா தீர்த்தம் எல்லோருக்கும் பொது. அநேக சைவர்கள் துளஸி ப்ரஸாதத்தையும் ஆக்ஷேபிக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் வைஷ்ணவர்கள்கூட, ஈசுவரன் கோயில் ப்ரஸாதம் என்றால் விபூதி ப்ரஸாதம் கேட்டு வாங்கிக்கொண்டு போகிறார்கள். ஆனால் நாம் அவரவர் அபிப்ராயத்துக்கு அநுகூலமாகத்தான் ப்ரஸாதத்தைத் தரவேண்டும். மரண ஸமயத்திலே ஓர் இடத்தில் போய் ஸித்தாந்தச் சண்டைகளைக் கிளப்பக் கூடாது. யாருக்கு எது ஹிதமாக இருக்குமோ, அப்படிப்பட்ட ப்ரஸாதமாக எடுத்துப்போக வேண்டும்.

விபூதிப்ரஸாதம் என்பது சிவன் கோயிலில் இருக்கும் தக்ஷிணாமூர்த்திக்கோ, அல்லது தனிக் கோயிலில் இருக்கிற பிள்ளையாருக்கோ, ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிக்கோ அபிஷேகம் பண்ணப்பட்ட விபூதியாக இருக்க வேண்டும். ஸாக்ஷாத் பராசக்தியான அம்பாள் பாதத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தமும் கங்கா ஜலத்துடனோ, கங்கா ஜலம் கிடைக்காவிட்டால் அதற்குப் பதிலாகவோ வைத்திருந்து, மரிக்கிறவனுக்குக் கொடுக்கலாம். இதேபோல் விஷ்ணுபரமாக, பெருமாளுக்கு அர்ச்சனை செய்த துளஸியைக்கொண்டு வந்து உலர்த்தி ஸ்டாக் வைத்துக்கொள்ள வேண்டும். பெருமாள் பாதத்தில் அபிஷேகமான தீர்த்தமும் கொடுக்கலாம். கங்கை கிடைக்காவிட்டால், அதற்கு பதில் வைஷ்ணவர்களுக்குப் பெருமாள் பாத தீர்த்தம் தரவேண்டும். பெருமாளுக்கு நித்யப்படி முழு அபிஷேகம் இராது. திருமஞ்சனம் என்று சில நாட்களில்தான் செய்வார்கள். அதனால் மூர்த்தியின் பாதத்தில் மட்டும் அபிஷேகம் பண்ணுவித்து அந்தத் தீர்த்தத்தை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ள வேண்டும். எதற்கும் கங்கை கைவசம் இருப்பது நல்லது.

சாவு என்றால் எவனுக்கும் பயம்தான். ஆயுஸ் முழுக்க நாஸ்திகனாக இருந்தவன்கூட அந்திம காலத்தில் ஏதோ ஒரு பெரிய சக்தியின்கையில் தானிருக்கிறோம் என்று கொஞ்சமாவது தெரிந்து கொள்ளாமலிருக்கமாட்டான். அந்த நேரத்திலே பயத்தைப்போக்க அந்த சக்திதான் கதி என்ற எண்ணம் எவனுக்கும் வராமல் இருக்காது. எவனுமே ஈசுவர த்யானத்தோடுதான் சாக விரும்புவான் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனதால், நாம் அவனுக்கு உபகரிப்பதை அவன் நிச்சயம் ஏற்றுக்கொள்வான். அவனுடைய பந்துக்களும் இந்தக் கைங்கர்யத்தை வரவேற்பார்கள். சில கிழம் கட்டைகள் போகாதா என்று இருக்கும்போது, வைத்யம் பார்க்கிறோம் என்று நாம் போனால் ஒருக்கால் பந்துக்கள் அசட்டை பண்ணக்கூடும் ஆனால் ‘புறப்பாடு’ நன்றாக நடப்பதற்கே நாம் உபகாரம் பண்ணுகிறோம் என்றால் எவரும் ஆக்ஷேபிக்கமாட்டார்கள்! அதிலும் நாம் அவர்களுக்குச் எந்தச் செலவும் சிரமமும் வைக்காததால் நிச்சயம் ஆக்ஷேபிக்கமாட்டார்கள் ஆனதால் நாம் இப்படிப்பட்ட தொண்டு செய்கிறோம் என்று தெரிந்துவிட்டால், அவர்களே நம்மைக் கூப்பிடுவார்கள். கூப்பிடாவிட்டாலும் நாம் போகவேண்டும். அவர்கள் கடும் நாஸ்திகர்களாக இருந்து ஆக்ஷேபித்தால் கொஞ்சம் எடுத்துச் சொல்லிப் பார்க்கலாம். அப்படியும் கேட்காவிட்டால் திரும்பிவிடலாம். ஆனால் அப்போதுகூடக் கோபம் இல்லாமல் சாகிற ஜீவனுக்கான ப்ராத்தனையை நமக்குள் செய்துகொள்ள வேண்டும். மொத்தத்தில் மான, அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டைச் செய்யப் பாடுபட வேண்டும். மான அவமானம் பார்க்க ஆரம்பித்துவிட்டால் அது தொண்டே இல்லை.

செய்யவேண்டியது என்னவென்றால், ப்ராணாவஸ்தையில் இருக்கிறவர்களிடம் கோயில் ப்ரஸாதத்துடன் போகவேண்டும். அவர்களுக்கு கங்கா தீர்த்தம் கொடுக்க வேண்டும். விபூதி இடவேண்டும். துளஸியை வாயில் போடவேண்டும். அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ‘சிவ சிவ சிவ சிவ’ என்றோ ‘ராம ராம ராம ராம’ என்றோ உரக்கச் சொல்ல வேண்டும். உரக்கச் சொல்லவேண்டியது அவசியம். ஜீவன் காதிலே அதுபட்டு மனஸைத் திருப்ப வேண்டுமாதலால், உயிர்போகும் வரையில் இப்படி நாம ஜபம் செய்வதுதான் ச்ரேஷ்டம். ஆனால் ப்ராணாவஸ்தையிலேயே ஒரு ஜீவன் மணிக்கணக்காக இழுத்துக் கொண்டிருந்தால் என்ன பண்ணுவது? நமக்கு மற்றக் கார்யம் இருக்கத்தானே செய்யும்? அதனால் பக்கத்திலே பந்துக்களில் யாராவது ஒருத்தர் முறைபோட்டுக்கொண்டு உட்கார்ந்து நாம ஜபம் பண்ணும்படியாக ஏற்பாடு செய்துவிட்டு நாம், ‘நம் கடமையைக் கொஞ்சமாவது செய்தோம்’ என்று புறப்பட வேண்டும். குறைந்த பக்ஷம் சிவநாமாவோ, ராமநாமாவோ 1008 தடவையாவது நாம் ஒரு ஜீவனுக்காகச் சொல்லவேண்டும். இப்படிப் பலபேர் சொன்னது அந்த ஜீவனுக்குள்ளே போய் தானாக அது உள்நினைவில் பகவானை நினைத்துக்கொண்டிருக்கும் படியாகப் பண்ணியிருக்கும் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் இது இரண்டாம் பக்ஷந்தான். நாம் கடைசிவரை இருக்கமுடியாமல் வந்துவிட்டாலும்கூட, ஒரு ஜீவன் பிரிகிறபோது அங்கு பகவந்நாம சப்தம் இருக்கும்படியாக அவனுடைய பந்துக்களையாவது ஜபிக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டு வருவதே ச்லாக்யம்.

உயிர்பிரிகிறவனுக்கு உயர் உதவி

இங்கேதான் சாகிற ஸ்திதியில் இருக்கிற ஒரு ஜீவனுக்கு மற்றவர்கள் பண்ணுகிற பெரிய பரோபகாரம் வருகிறது; அந்த ஜீவனைப் பரமாத்மாவிடம் அனுப்பி வைக்கிற பரம உத்க்ருஷ்டமான பரோபகாரம்!

இயற்கையாக ஒருத்தனுக்கு அந்திமத்தில் ஏதாவது கன்னாபின்னா நினைப்புகளே வரலாம். ரொம்பப் பேருக்கு அப்படித்தான் வருகிறது-அல்லது ஸ்மரணையே தப்பிப் போய்விடலாம். ஆனால் இந்த மாதிரி சமயத்தில் பக்கத்தில் இருக்கிறவர்கள் பகவந்நாமாவையே கோஷித்துக் கொண்டிருந்தால் அது அவனை மற்ற நினைப்பிலிருந்து இழுத்துக்கொண்டே இருக்கும். ஸ்மரணை ஏதோ லவலேசம் ஒட்டிகொண்டிருந்தால்கூட, அந்த உள் பிரக்ஞையில் ஒருவேளை ஈச்வர நாமா சுரீல் என்று ஒரு தைப்பு தைத்தாலும் தைக்கும். அவனுக்குத் தானாக பகவான் நினைவு வராமல், வாழ்நாள் முழுதும் நினைத்த விஷயங்கள்தான் அந்திமத்திலும் நினைவுக்கு வந்தாலும், மற்றவர்கள் இப்படி நாமோச்சாரணம் பண்ணினால் அதனாலேயே அவனுக்கு மற்ற நினைவுகள் அமுங்கி பகவானின் நினைப்பு ஏற்படும்படிப் பண்ணலாம்.

நாம் எங்கேயோ ஒரு பீச்சுக்குப் போகிறோம்; அல்லது ஸினிமாவுக்குப் போகிறோம். கண்டதை நினைத்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டுதான் போகிறோம். ஆனால் போகிற வழியில் ஏதாவது ஒரு ஸத்ஸங்கத்திலிருந்து “ஹர ஹர மஹாதேவா”, “ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே” என்கிற மாதிரி ஒரு கோஷம் வந்தால் சட்டென்று நம்முடைய கன்னாபின்னா நினைப்புப்போய், பகவந்நாமா க்ஷணகாலம் மனஸுக்குள் போய் நம்மைக் கொஞ்சம் உருக்கிவிடுகிறது. நாமாவுக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஆனதால் வாழ்க்கைப் போராட்டத்தின் முடிவிலே ஒரு ஜீவாத்மா உயிருக்காகப் போராடிக் கொண்டு மனஸ் நாலா திசையிலும் அலைபாய்கிறபோது, அல்லது ஸ்மரணை தப்பிக் கொண்டிருக்கிறபோது பக்கத்திலே இருக்கிறவர்கள் பகவந்நாமாவை கோஷித்துக்கொண்டிருந்தால் அது அந்த ஜீவாத்மாவை அதன்மூலமான பரமாத்மாவிடம் இழுப்பதற்கு ரொம்பவும் சக்திகரமான (effective) வழியாக இருக்கும். ஒருத்தன் எத்தனை துன்மார்க்கத்தில் போனவனாயிருந்தாலும், அந்தக் கடைசி நாழியில் இந்த ஸம்ஸாரத்திலிருந்து தப்புவதற்கு பகவானைப் பிடித்துக் கொள்ளத் தவிக்கத்தான் செய்வான். அவனுக்குத் தானாக அந்தத் தாபம் வராவிட்டால்கூட நாம் உண்டாக்கிச் தந்து விட்டால் பிடித்துக்கொண்டு விடுவான். இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.

உற்றார் ஆர் உளரோ? உயிர்கொண்டு போம் பொழுது?
குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்(கு) உற்றார் ஆர்உளரோ?*

என்ற மாதிரி, அந்த அந்திம ஸமயத்தில் எல்லா பந்துமித்ரர்களையும் விட்டுவிட்டுப் புறப்பட்டேயாகவேண்டும் என்னும்போது அவன் ஒருத்தனே பந்து என்று எந்த ஜீவனும் புரிந்துகொள்ளத்தான் செய்யும். புரிய வைக்காமல் கர்ம வாஸனை அதை நாலா தினுஸில் பிய்த்துப் பிடுங்கலாம். ஆனால் அந்த ஸமயத்தில், சுற்றியிருப்பவர்கள் பகவந்நாமாவைச் சொல்லிக் கொண்டிருந்தால், சட்டென்று அது ஒரு லகான் போட்டு அநதச் சாகிற ஜீவனின் நினைப்பை பகவானிடம் திரும்பும்படிப் பண்ணலாம். அந்த ஸமயத்திலேயே ப்ராணன் ஒடுங்கிவிட்டால் அவனை பரமாத்மா எடுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். கீதையில் அவர் அப்படி வாக்குக்கொடுத்திருக்கிறார். வாழ்நாள் முழுவதும் நினைக்கிறானா, நினைக்கவில்லையா என்பதைப் பாராட்டாமல் irrespective -ஆக ”கடைசியில் எதெதை நினைத்தாலும் அததை அடைகிறான்” என்று அவர் சொல்லி விட்டதால், இந்த ஜீவன் எப்படி வாழ்க்கை நடத்தியிருந்தாலும், கடைசியில் அவரை நினைத்துவிட்டதற்காக அதை அவர் எடுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். கடைசி நேரத்தில் அடியோடு நிராதரவான ஒரு ஜீவனுக்கு உண்டாகிற தாபத்தோடு, சுற்றியிருக்கிற நமக்கும் அது கடைத்தேற வேண்டுமே என்பதில் ஹ்ருதய பூர்வமான கவலை இருந்து பகவானை ப்ரார்த்தித்துக்கொண்டு நாமாவைச் சொன்னால் அதற்குப் பலன் இராமல் போகாது.

எல்லா பரோபகாரங்களையும்விட உத்தமமானது ஒரு ஜீவனைப் பரமாத்மாவிடம் சேர்க்கிறதுதான். ஆகையால் நாம் செய்கிற நாம உச்சாரணத்தால் அந்திமத்தில் ஒரு ஜீவன் பகவானை நினைக்கும்படியாகப் பண்ணி, அதனால் பகவான் அந்த ஜீவனை எடுத்துக்கொள்ளச் செய்துவிட்டால் அதைப்போன்ற உபகாரம் வேறே எதுவும் இல்லை.

கடைசிகால ஈச்வர ஸ்மரணை ஜன்மாவை அப்படியே அழித்துவிடாவிட்டால்கூடப் பரவாயில்லை. நிச்சயம் அது பாபத்தைப் பெரிய அளவுக்கு அலம்பி விட்டுவிடும். இதைப்பற்றி ஸந்தேஹமில்லை. பகவந்நாமா மனஸுக்கு உள்ளே ஊறிவிடுகிறபோது பாபத்தை நிச்சயம் கழுவிவிடும். ஆனதால், பகவந்நாமாவோடு கண்ணை மூடுகிறவன் ஜன்மாவே இல்லாமல் விடுபட்டு விடுகிறான் என்று வைத்துக்கொள்ளாவிட்டாலும், மறுபடியும் பாபஜன்மா எடுக்கவே மாட்டான்;நல்ல புண்ய ஜன்மாவாக எடுப்பான் என்பது நிச்சயம்.

புண்ய ஜன்மா என்றால் பணம், காசு, அழகு, உசந்த ஜாதி, இதுகளா?இல்லை இந்த ஜன்மா முடிவிலே வந்த பகவத் ஸ்மரணை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து அடுத்த ஜன்மாவிலும் எப்போது பார்த்தாலும் இருக்கும்படியான சூழ்நிலையும் மனநிலையும் கொண்டதுதான் புண்யஜன்மா. அப்படி எடுத்து அடுத்த ஜன்மத்தோடாவது சொந்த முயற்சியினாலேயே ஸம்ஸார நிவர்த்தியை ஸம்பாத்தித்துக்கொள்ள ஒரு ஜீவனுக்கு இந்த ஜன்மத்திலேயே அந்திம நேரத்தில் நாம் நம்மாலான ஸஹாயத்தைப் பண்ண வேண்டும்.

இந்த மஹா பெரிய தர்மத்தை, ஈடில்லாத உபகாரத்தை, முதலில் சொன்னேனே, வாரவழிபாடு, ஜீவாத்ம கைங்கர்யம், மற்ற பரோபகாரங்களுக்காக ஸங்கமாகச் சேரவேண்டும் என்று, இந்த ஸங்கத்துக்காரர்கள் தவறாமல் செய்ய வேண்டும்.


* அப்பர் சுவாமிகள், ‘திரு அங்க மாலை’

மோக்ஷத்துக்குக் குறுக்கு வழி

ஆக வாழ்நாள் பூராவும் எதிலே ரொம்பவும் ஈடுபாடு இருக்கிறதோ, அதுதான் அந்திமத்திலும் ஒருத்தனை இழுக்கும். வாழ்நாள் முழுவதும் பகவத் சிந்தனையோடு இருந்தால்தான் கடைசியிலும் அது ஸித்திக்கும். ஸரி, அது தானாகவே ஸித்தித்துவிட்டுப் போகிறது. ஒருவன் ஜீவியகாலம் முழுவதும் ஈச்வர பக்தி பண்ணிக்கொண்டேயிருந்தால், கடைசியில் இவன் படுக்கையில் விழும்போதும் தானே, ‘ஆடோமாடிக்’-ஆக அதே ஸ்மரணந்தான் இருக்கப்போகிறது. ஆனதால் ”ஸர்வகாலத்திலும் என்னை நினை” என்று சொன்ன க்ருஷ்ண பரமாத்மா ”அந்திமத்திலும் என்னை நினை” என்று ஒன்றைச் சேர்த்திருக்க வேண்டாமே? ஸர்வகால ஸ்மரணை தானாக அந்திமத்திலும் வந்துவிட்டுப் போகிறது!

இங்கேதான் மோக்ஷத்துக்குக் கொஞ்சம் குறுக்கு வழி (short-cut) சொன்னமாதிரி இருக்கிறது. ‘ஒருத்தன் அந்திமத்தில் எதை எதை நினைத்துக்கொண்டு உடம்பை விட்டாலும் அதையே போய் அடைகிறான்’ என்று கீதையில் ஸ்பஷ்டமாகச் சொல்கிறார் [8.6]:

யம் யம் வாபி ஸ்மரன் பாவம் த்யஜத்யந்தே களேவரம் |
தம் தம் ஏவைதி கௌந்தேய ஸதா தத்பாவ பாவித: ||

இப்படிச் சொல்கிறபோது, வாழ்நாள் முழுக்க நினைக்காத ஒன்றை ஒருத்தன் அந்திமத்தில் நினைத்துவிட்டாலும் ஸரி, அந்திமத்தில் நினைத்த அதையே மரணத்துக்குப்பின் அடைந்து விடுவான் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ள இடம் இருக்கிறது.

வாழ்நாள் முழுதும் நினைப்பதுதான் அந்திமத்தில் நினைவுவரும் என்பது பொதுவாக வாஸ்தவம். ஆனால் இப்படியில்லாமல், அஸாதாரணமாக, வாழ்நாள் பூரா நினைக்காத ஒன்று ப்ராணன் போகிறபோது நினைப்புக்கு வந்துவிட்டால்? இப்படியானாலும் அந்தக் கடைசி நேரத்தில் எதை நினைத்தானோ அதை இவனுக்கு ஸ்வாமி கொடுத்துவிடுகிறார். ‘இதற்கு முன்னாடி நீ அதை நினைக்கவில்லையே!’ என்று இவனைக் கேட்பதில்லை. கீதா வாக்யத்திலிருந்து இப்படித்தான் அர்த்தமாகிறது.

வாழ்க்கையில் அவ்வளவாக பக்தி பண்ணாவிட்டாலும் கூட, சாகிற ஸமயத்திலே ஈச்வர ஸ்மரணத்தோடு மூச்சை விட்டால்போதும்; அவனை அடைந்துவிடலாம் என்று கீதை சொல்வதாக ஏற்படுகிறது. இது ரொம்ப ‘ஷார்ட்-கட்’ தானே?

ஆனால் வாழ்நாள் முழுக்க நினைத்ததுதானே அந்திமத்தில் வரும்? அதெப்படி வேறு ஒரு நினைப்பு அப்போது வரும்? இது எப்படி ‘ஷார்ட்-கட்’? சும்மாவுக்காக ‘ஷார்ட்-கட்’ மாதிரி பகவான் ஏமாற்றுகிறாரா?

தெய்வ நினைப்புடன் தூக்கம்

வாழ்நாள் முழுக்க எதன் நினைப்பு ஒருத்தன் மனஸில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப்பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும். இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணம் வருமா என்று நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு ஒரு பரீ்ஷை வைத்துக் கொள்ளலாம் அதாவது:

அன்றன்றைக்கும் நாம் தூங்குகிறோம் அல்லவா? இதையும் ஒரு சாவு மாதிரி என்றுதான் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. தூங்குகிறபோது கட்டைபோல ஒன்றும் தெரியாமல், ஞானமே இல்லாமல்தானே கிடக்கிறோம்? இதனால்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது. ‘நித்யப் பிரளயம்’ என்று தூக்கத்தைச் சொல்வார்கள். இப்படி தினமும் நாம் ‘சாகிற’ போது பகவானையே ஸ்மரித்துக்கொண்டு ‘சாக’ முடிகிறதா என்று அப்யாஸம் பண்ணிப் பார்க்கலாம். தூங்குகிறதற்கு முன்னால் நம் இஷ்ட தேவதையையே ஸ்மரித்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்போடேயே தூக்கத்தில் ஆழ்ந்துவிட வேண்டும். வேறே நினைப்பு வரக்கூடாது. சொல்லும்போது ஸுலபமாக இருக்கும். ஆனால் பண்ணிப் பார்த்தால் எத்தனை கஷ்டம் என்று தெரியும். காமாக்ஷியோ, நடராஜாவோ, தக்ஷிணாமூர்த்தியோ, வேங்கடரமண ஸவாமியோ, முருகனோ – எந்தத் தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த இஷ்ட தெய்வத்தையே அல்லது தெய்வத்துக்கு ஸமானமாக நமக்கு சாந்தியும் ஸந்துஷ்டியும் தருகிற ஒரு குரு, அல்லது மஹானையோ வேறே நினைப்பு வராமல் ஸ்மரிப்பதென்றால், ‘இதிலே என்ன கஷ்டம் இருக்கிறது? மனஸுக்கு ரம்யமாகவும் ஆறுதலாகவும் இருக்கப்பட்ட இந்த ரூபங்களை நினைப்பதில் என்ன ச்ரமம்?’ என்றுதான் தோன்றும். ஆனால் எதனாலோ, சிறிது நேரமானால் இத்தனை நல்ல, திவ்யமான ஸ்மரணையை விட்டுவிட்டு மனஸ் வேறேங்கேயாவதுதான் போய் விழும்; அப்படியே கண்ணை அசக்கித் தூக்கத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். இப்படி ஏமாறாமல் பழக்கிக் கொண்டால் சாகிற ஸமயத்திலும் பகவானை விடாமல் நினைக்க முடியும் என்ற நிச்சயத்தைப் பெறலாம். எல்லாம் அப்யாஸத்தில், விடாமுயற்சில்தான் இருக்கிறது. நம்முடைய ச்ரத்தையைப் பொறுத்து பரமாத்மாவே கை கொடுப்பார்.

அந்திம நினைப்பின் முக்யத்துவம்

ஆனாலும் அந்திமத்தில் நினைப்பதற்கு ஏன் இந்த முக்யத்வம்? இப்படி அந்திமத்தில் பகவானை ஸ்மரிப்பதற்கும் நான் இங்கே எடுத்துக்கொண்ட பரோபகாரம் என்ற விஷயத்துக்கும் என்ன ஸம்பந்தம்?

‘மரணம் என்பது ஆத்மாவைக் கொஞ்சங்கூட பாதிப்பதில்லை. உடம்புக்குத்தான் சாவு உண்டு, ஆத்மாவுக்குக் கிடையாது. ஒரு சட்டை கிழிந்தால் அதோடு சட்டைப் போட்டுக் கொள்கிறவனும் அழிந்து போய்விடுகிறானா என்ன? இல்லை. ஒரு சட்டை போனால் அவன் இன்னொரு சட்டையை எடுத்துப்போட்டுக் கொள்கிறமாதிரி ஒரு சரீரம் அழிந்து போனாலும், ஆத்மா அழியாமல் இன்னொரு சரீரச் சட்டைக்குள் புகுந்து கொள்கிறது’ என்று பகவான் கீதையில் (2.22) சொல்லியிருக்கிறார். ‘இப்படி எத்தனை சட்டைகள் கிழிந்து கிழிந்து, இன்னொன்று, அதற்கப்புறம் இன்னும் ஒன்று என்று இந்த ஆத்மா புகுந்து புகுந்து அல்லாடிக்கொண்டிருக்க வேண்டும்? இதற்கு ஒரு முடிவு கிடையாதா?’ என்று கேட்டால், ‘ஞானியாகிவிட்டால் ப்ரம்ம நிர்வாணம் அடைந்து விடலாம். என்னிடமே பக்திபண்ணிக் கொண்டிருந்தால் என்னை நினைத்துக் கொண்டே உயிரை விட்டால்கூடப் போதும். அப்புறம் இன்னொரு சட்டை போட்டுக்கொள்ள வேண்டாம்’ என்கிறார்.

‘சாவு ஒன்றும் பெரிய விஷயமில்லை; சட்டை கிழிகிற மாதிரிதான்’என்றுசொல்லிவிட்டு, ‘சாகிற ஸமயத்தில் என்னை நினைத்தால் என்னிடமே வந்து அடுத்த ஜன்மா இல்லாமல் ஆக்கிக் கொள்ளலாம்’ என்று சொன்னால், சாவு ஒரு பெரிய விஷயம் மாதிரிதானே இருக்கிறது? அந்த ஸமயத்தில் நினைப்பதற்கு என்ன இத்தனை முக்யத்வம்!

ஆத்மா என்ற மாறாத ஸத்யத்தின் நிலையிலிருந்து பார்க்கிறபோது சரீரமும் சாவும் துச்சம்தான்; அவை ஒன்றுமே இல்லை. ஆனால் நாம் மாறாத ஆத்மா என்பதைத் தெரிந்து கொள்ளாதவர்களாகத்தானே இருக்கிறோம்? நமக்குத் தெரிந்தது மாறிக்கொண்டே இருக்கிற இந்த மனஸும், மாறிக்கொண்டே இருக்கிற இந்த ப்ரபஞ்சமும்தானே? சாவு உண்டாகி அடுத்த ஜன்மா ஏற்படுகிறபோது இந்த ஜன்மாவிலே இந்த ப்ரபஞ்சத்திலே நமக்கு இருந்த தொடர்புகளெல்லாம் துண்டித்துப்போய், வேறு புதுத் தொடர்புகள் உண்டாகின்றன. இதே இடத்தில் இதே குடும்பத்தில் நாம் மறுபடியும் பிறந்தால்கூட நமக்கு அது தெரியப்போவதில்லை. ஆனால் இப்படி இங்கேயேதான் பிறப்போம் என்று சொல்ல முடியாது. வேறே சூழ்நிலையில், வேறு தினுஸான மதத்தில், நாகரிகத்தில், ஸம்ப்ரதாயத்தில் போய்ப் பிறந்தாலும் பிறப்போம்.

ஆத்மா மாறாதது என்றாலும் நமக்கு அது தெரியாத விஷயம். மனஸின் ஆட்டங்கள்தான் நமக்குத் தெரிந்ததெல்லாம். அந்த மனஸின் வளர்ச்சி – அது நல்ல வளர்ச்சியாக இருந்தாலும் ஸரி, கெட்ட வளர்ச்சியாக இருந்தாலும் ஸரி – பெரிய அளவுக்கு சூழ்நிலையினால் உருவாக்கப்படுகிறது. இந்த ஆயுஸ் பூராவும் நாம் ஒருமாதிரி சூழ்நிலையில் பழகி வளர்ந்து விட்டோம். குறிப்பிட்ட ஸம்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டு விட்டோம். குறிப்பிட்ட ஸம்ப்ரதாயங்களை அநுஸரித்து அவற்றில் ஒட்டிக் கொண்டு விட்டோம். இதெல்லாம் சாவோடு கத்தரித்துப் போகிறது என்பதைப் பார்க்கிறபோது, (சாவு ஆத்மாவைக் கொஞ்சம்கூட பாதிப்பதில்லை என்றாலும்) ஆத்மாவாக இருக்கத் தெரியாத நம்மை ரொம்பவும் பாதிக்கத்தானே செய்கிறது?’ அடுத்த ஜன்மாவில் எந்த மாதிரிப்பிறவி ஏற்படுமோ? எந்த மாதிரிச் சூழ்நிலையில் பிறப்போமோ?’ என்று பெரிய கேள்வியாகத்தானே இருக்கிறது? ‘இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?‘* என்று பெரிய பெரிய மஹான்களே பயப்பட்டிருக்கிறார்களே!

இதனால் பகவான் ஒரு ஜீவனுடைய தொடர்புகள் அடியோடு மாற இருக்கிற அந்த மரண ஸமயத்தில் ”ஐயோ, பாவம்! இந்த ஜீவன் மறுபடியும் ஜன்மா இல்லாமல் பண்ணிக்கொள்ளாமலேயே உயிரை விடுகிறது. இப்பொழுது முழுக்க வேறு தினுஸான சூழ்நிலையில் பிறந்து, ‘அடியைப் பிடிடா பாரதபட்டா’ என்று ஆத்மாபிவிருத்திக்கான கார்யத்தை இது ஆரம்பித்தாக வேண்டும். இந்த ஜன்மாவின் கர்மாதான் அடுத்த ஜன்மாவிலும் துரத்திக்கொண்டு வரும் என்பது வாஸ்தவமானாலும், அடுத்த ஜன்மாவில் சூழ்நிலை வேறுதானே? அதிலே இது பழைய கர்மாவைக் கழித்துக்கொண்டு மேலே போகுமா அல்லது இன்னும் கெட்ட கர்மாவைப்பண்ணி வீணாகுமோ?’ என்று பரம கருணையோடு நினைப்பான் போலிருக்கிறது. இப்படி பகவானே இரக்கப்பட்டுத்தான் ரொம்பவும் பெரிய மனஸோடு, ”ஸரி, இந்தச் சாகிற ஸமயத்தில் இது நம்மை நினைத்துவிடட்டும். அது போதும். இதற்கு மறுபடியும் ஜன்மா இல்லாமல் நாமே எடுத்துக்கொண்டு விடலாம்” என்று பெரிய ‘கன்ஸெஷன்’ தந்திருக்கிறான் என்று தோன்றுகிறது.


* தாயுமானவரின் ‘சித்தர் கணம்’. பாடல் 4.

பகவத் ஸ்மரணம்

இப்போதும், எப்போதும் — இதுவரை செய்யாவிட்டாலும் இப்போதிருந்தாவது — நாம் செய்ய வேண்டியது பகவத் ஸ்மரணையை அழுத்தமாக, ஆழமாக ஏற்படுத்திக் கொள்வதுதான். அப்படி வாழ்நாள் பூரா, வெளியில் எத்தனை கார்யம் செய்து கொண்டிருந்தாலும், உள்ளூர ஓர் இழை பரமாத்மாவிடமே சித்தம் ஒட்டிக் கொண்டிருந்தால்தான் அந்திம காலத்தில் கன்னாபின்னா நினைப்புகள் வராமல் அவன் நினைவு மட்டும் — மாம் ஏவ என்ற மாதிரி அது மாத்திரமே — இருந்து கொண்டிருக்கும். இழுத்துப் பறித்துக்கொண்டு கிடந்தாலும் அத்தனை இழுபறியிலும் விடாமல் பகவத் ஸ்மரணமே இருக்கும். அல்லது அநாயாஸ மரணமாக இயற்கையாக ஸம்பவிக்கும்போதும் அவனையே நினைக்கத் தோன்றி அந்த ஒரு சில க்ஷணங்களானாலும் அதிலேயே ஐகாக்ரியத்தோடு முழுகிவிட முடியும். அல்லது திடீரென்று ஒரு புலி வந்து அடித்துப் போட்டாலோ, அல்லது கரென்ட் ஷாக் அடித்தாலோ அப்போதுகூட பயமோ, அதிர்ச்சியோ இல்லாமல், ப்ரக்ஞை போய்விடாமல், ‘டாண்’ என்று பகவத் ஸ்மரணம் வந்து நிற்கும்.

‘ப்ராண ப்ரயாண ஸமயே கபவாத பித்தை:’ — உயிரின் நெடும் ப்ரயாண ஸமயத்தில் கபாவத பித்தங்கள் கட்டியிழுக்கிறபோது உன்னை எப்படி நினைப்பேனோ?1 என்று குலசேகரர் மாதிரிப் பெரியவர்களே பயப்படுகிறார்கள். பகவத் பாதாளும் இந்த ‘ப்ராண ப்ரயாண’ பதப்பிரயோகம் பண்ணியிருக்கிறார்.

ப்ராண ப்ரயாண பவபீதி ஸமாகுலஸ்ய
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்2

உயிர் கிளம்புகிற ஸமயத்தில் ஏற்படுகிற பயத்தைப் போக்க, ஸகல பயத்தையும் நிவ்ருத்தி பண்ணும் லக்ஷ்மிநரஸிம்ம மூர்த்திதான் கைப்பிடிப்பாக (கர அவலம்பம்) வந்து ரக்ஷிக்க வேண்டும் என்கிறார். இதேமாதிரி ஸுப்ரஹ்மண்ய புஜங்கத்திலும், ‘ப்ரயாணேன்முகே மயி அநாதே’— ‘அநாதையான நான் நெடும் பயணம் கிளம்பும்போது, அப்பா குஹனே! தயாளுவே! நீ முன்னே வந்து நிற்கவேண்டும்’ என்கிறார். இதையே அச்சடித்த மாதிரி ‘திருப்புகழி’லும் சொல்லியிருக்கிறது. அது மஹான்கள் எப்போதும் பகவத் ஸ்மரணம் அல்லது ஆத்மாநுஸந்தானத்தில் இருந்தவர்கள். அதனால் நிஜமாக அவர்களுக்கு இந்த பயம் இல்லை. நம்மை உத்தேசித்து, நமக்குப் பிரார்த்திக்கக் கற்றுக்கொடுக்கத்தான் இப்படியெல்லாம் பாடி வைத்திருக்கிறார்கள்.

பெரியாழ்வார் இன்னும் கொஞ்சம் ஸ்வாதீனமாகக்கூட பகவானிடம் சொல்கிறார்: “அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன்” . ”சாகிற ஸமயத்தில் உன்னை நான் நினைக்காமலும் போகலாம். அதற்காக நீ என்னை விட்டுவிடாதே. இப்போது உன்னை என்னால் நினைக்க முடிகிறது. அதனால் இப்போது செய்கிற இந்த ‘ஸ்மரணை’யையே அப்போதைக்கென்று ‘ரிஸர்வ்’ பண்ணினதாக வைத்துக்கொள்” என்கிறார்!

ஆனால் கீதா வாக்யத்தைப் பார்த்தால், இப்படி என்றைக்கோ செய்த ஸ்மரணத்தை பகவான் ‘ரிஸர்வேஷ’னாக நினைக்கவில்லை; கடைசிக் காலத்தில் நினைக்கத்தான் சொல்லுகிறார். ‘ச’ போட்டு ‘கடைசிக் காலத்திலும்‘ என்கிறார். அதாவது வாணாள் பூராவும் என்னை நினைத்துக் கடைசியிலும் நினை என்று இந்த ஸ்லோகத்தில் சொல்லாமல் சொல்கிறார். மேலே இரண்டு ஸ்லோகம் தள்ளி, ஸ்பஷ்டமாகவே சொல்கிறார்.

“தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு மாம் அநுஸ்மர”

ஆனபடியால் என்னை ஸர்வகாலங்களிலும், எப்போதும் நினைத்துக்கொண்டே இரு என்கிறார். இப்படி எப்போதும் நினைத்தால்தான் முடிவில் அந்த நினைவு வரும்.


1‘முகுந்தமாலா’

2லக்ஷ்மீந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம்.