ஆயுள் முழுவதும் செய்வதே அந்திமத்தில் வரும்

வாழ்நாள் பூராவும் ஏதாவது ஒன்றில் நம் மனஸ் அழுத்தமாக ஆழமாக ஈடுபட்டிருந்தால்தான் அந்த விஷயமே ப்ராணன் போகிற ஸமயத்திலும் கிளம்பி வந்து நம் மனஸ் முழுவதையும் ரொப்பி வியாபித்துக் கொள்ளும். நாம் அதை நினைக்கிறோம் என்பதில்லை. அதுவே முட்டிக்கொண்டு வந்து தன்னை நினைக்கும்படியாகப் பண்ணும்.

இப்போது ஸைகாலஜியில் சொல்கிறார்கள், நமக்கே தெரியாமல் நாம் எப்பொழுதோ ஆழமாக, அழுத்தமாக நினைத்த விஷயங்கள்தான் தாமாக மனஸின் மேல்மட்டத்துக்கு எழும்பி வருகிறது என்கிறார்கள். குறிப்பாக வெளி வியாபாரமில்லாமல் தூங்குகிறபோது இம்மாதிரி பழைய ஸ்டாக் கிளம்பி வந்து ஸ்வப்னமாகிறது என்கிறார்கள். தூக்கந்தான் என்றில்லை. கார்யமில்லாமல் இருக்கிற போதுகளிலெல்லாம், ஒரு த்யானம் என்று உட்கார்ந்தால்கூட, ஜலத்துக்கடியே கையினால் அழுத்தி வைக்கிற கார்க், கையை எடுத்தவுடன் மேலே கிர்ரென்று வருகிறமாதிரி, உள் நினைப்புகள் மேலே வந்து நம்மைப் பிடித்துக் கொள்கின்றன. சாஸ்த்ரங்களிலும் பூர்வ வாஸனை என்று இதுகளைச் சொல்லி, இவற்றை அடியோடு இல்லாமல் வாஸனாக்ஷயம் பண்ணிக் கொண்டால்தான் மனஸ் பரமதெளிவாகத் தெளிந்து நின்று அதில் ஆத்ம ஜ்யோதிஸ் பளீரென்று அடிக்கும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் நாம் ”போ, போ” என்று பிடித்துத் தள்ளினாலும் அது போகுமா? போகாது. அதைப் போகப் பண்ணுவதற்கு வழி நம்மால் எவ்வளவு முடியுமோ அத்தனை பாடும் பட்டு ஸ்த்விஷயங்களை, ஸத்துக்களிலெல்லாம் பரம ஸத்தான – ‘ஏகம் ஸத்’தான – பரமாத்மாவை நினைத்துக் கொண்டேயிருப்பதுதான். இந்த நல்ல வாஸனையை ‘வா, வா’ என்று-சொல்லிக் கொண்டேயிருந்து வரவழைத்து மனஸுக்குள் உட்கார்த்தி வைத்துக்கொண்டால்தான், கெட்ட வாஸனைகள் தங்களுக்கு இடமில்லை என்று ஓடிப்போகும். அமேத்யத்தை எவ்வளவு தேய்த்து அலம்பி விட்டாலும் நாற்றம் போகமாட்டேன் என்கிறது. ஒரு ஊதுவர்த்தியை ஏற்றிவைத்து விட்டால் அது இருந்த இடம் தெரியாமல் போகிறது.

கடைசியில் நல்ல வாஸனைகளும் போக வேண்டும்; மனஸே போக வேண்டும். அதெல்லாம் ரொம்பப் பின்னாடி வருகிற நிலை.

ஆவி பிரியும் காலத்தில்

உயிர் போனபிறகு உடம்புக்குப் பண்ண வேண்டிய கார்யத்தைச் சொன்னேன். உயிர் போகிற சமயத்தில் செய்யவேண்டிய பணி ஒன்றும் இருக்கிறது. இதைவிட ஒரு ஜீவனுக்குச் செய்யக்கூடிய பெரிய பரோபகாரம் எதுவுமில்லை. அது என்ன?

க்ருஷ்ண பரமாத்மா அர்ஜுனனிடம், ”உடம்பு போனாலும் ஆத்மா சாகிறதில்லை. அதனால் ஒரு பெரிய தர்மத்தை உத்தேசித்து நீ யுத்தம் பண்ணவேண்டிய கடமை, ஸ்வதர்மம் இருக்கிறபோது, ‘பந்துமித்ரர்களைக் கொல்லமாட்டேன்’ என்று பின் வாங்குவது ஸரியில்லை” என்று உபதேசம் பண்ணினார். அந்த உபதேசந்தான் பகவத்கீதை. ஸரி, ஆத்மா செத்துப்போகவில்லை. உடம்பு போன பிறகு அது என்ன ஆகிறது? எல்லா உ.யிர்களும் உடனே பரமாத்மாவிடம் ஐக்கியமாகி விடுகிறதா? க்ருஷ்ண பரமாத்மா அப்படிச் சொல்லவில்லை. அந்த உயிர் அதன் கர்மத்தைப் பொறுத்து இன்னோர் உடம்பில் புனர்ஜன்மம் எடுக்கிறது என்றுதான் சொல்கிறார். ‘மஹா புண்யசாலிகள் ஸ்வர்க்கத்துக்குப் போய்ப் புண்யப்பலனை அநுபவித்து விட்டு, அது தீர்ந்ததும் மறுபடியும் இந்த பூமியிலேயே மநுஷ்யர்களாகப் பிறக்கிறார்கள் (9.21); த்வேஷமும், க்ரூரமும் கொண்ட நர அதமர்களைத் திரும்பத் திரும்ப அஸுரப் பிறப்பெடுக்குமாறு நானே தள்ளுகிறேன்’ (16.19) என்றெல்லாம் சொல்கிறார். அப்படியானால் இந்த ஜனன மரண சக்கரத்திலிருந்து மீட்சியே இல்லையா? இருக்கிறது. அதையும் சொல்கிறார்.

பக்தி யோகத்தாலோ ஞான யோகத்தாலோ தன்னை உபாஸிப்பவர்களை மறுபடி இந்த லோகத்துக்குத் தள்ளாமல் பரமாத்மாவான தன்னிடமே அடக்கம் பண்ணிக்கொண்டு விடுவதாக பகவான் சொல்கிறார். பக்தன் ஞானியாகிவிட்டால் செத்துப்போன அப்புறம்தான் பரமாத்மாவிடம் ஐக்யமாகவேண்டும் என்றில்லை. அவன் இந்த லோகத்தில் இருக்கிற மாதிரி பிறத்தியாருக்குத் தோன்றும்போதே மோக்ஷத்தில்தான் இருந்து கொண்டிருப்பான். ஸகல துக்கங்களிலிருந்தும் விடுபட்ட ஸதானந்த நிலைதான் மோக்ஷம். இப்படி பக்தியோகம், ஞானயோகம் அப்யாஸம் பண்ணுவதற்கு பகவான் அத்யாயம் அத்யாயமாக வழி சொல்லிக் கொடுத்துக்கொண்டே போகிறார். ஆனால் இந்தமாதிரிப் பண்ணி ஜயித்து மீளுகிறவன் எங்கேயாவது கோடியில் ஒருத்தன்தான் இருப்பான். இதையும் அவரே சொல்கிறார். ‘மநுஷ்யர்களில் ஆயிரத்தில் ஒருத்தன்தான் ஸித்திக்கு முயற்சியே பண்ணுவான். அதிலும் அபூர்வமாக எவனோதான் முயற்சியில் ஜயித்து என்னை வந்தடைகிறான்’ என்கிறார் (7.3) .

இப்படியானால் என்ன பண்ணுவது? எல்லாவற்றுக்கும் ஒரு குறுக்குவழி இருக்கிறதே, அந்தமாதிரி ஸம்ஸாரத்திலிருந்து விடுபடுவதற்கு short-cut இல்லையா?

ஒன்றே ஒன்று இருக்கிற மாதிரி பகவானே சொல்லியிருக்கிறார் ‘ஒருத்தன் செத்துப்போகிற ஸமயத்தில் எதை நினைத்துக்கொண்டு உடலை விடுகிறானோ, அதையே மறுஜன்மாவில் அடைகிறான். என்னையே ஸ்மரித்துக்கொண்டு எவன் சரீரத்தை விடுகிறானோ. அவன் என்னை அடைந்துவிடுகிறான்’ என்று சொல்லி ”நாஸ்தி அத்ர ஸம்சய:” – ”இதில் ஸந்தேஹமே இல்லை” என்று ‘காரன்டி’ கொடுத்திருக்கிறார்!

‘ரொம்ப ஸுலபமான வழியாக இருக்கே’ வாழ்க்கை முழுக்க எப்படிக் குட்டிச்சுவராக நடத்தினாலும் அந்திம ஸமயத்தில் மட்டும் பகவானை நினைத்துக் கொண்டால் போதுமாமே! அதனாலேயே இந்த ஜனன-மரணச் சக்கரத்திலிருந்து தப்பித்துக்கொண்டு விடமுடியுமாமே!’ என்று தோன்றுகிறது.

ஆனால் பகவான் இங்கே ‘பொடி’ வைத்துப் பேசுகிறார். ‘கடைசிக் காலத்தில் என்னை நினைத்துக் கொண்டு’ என்பதற்கு ‘அந்தகாலே மாம் ஸ்மரன்’ என்று சொன்னால் போதும். ஆனால் பகவான் அப்படிச் சொல்லவில்லை. ‘அந்த காலே ச மாம் ஏவ ஸ்மரன்’ என்று ஒரு ‘ச’வும் ‘ஏவ’வும் போட்டு ஸம்ஸார நிவ்ருத்தி இத்தனை ஸுலபமில்லையப்பா என்று ஆக்கியிருக்கிறார்! இந்த ‘ச’ வுக்கும் ‘ஏவ’ வுக்கும் என்ன அர்த்தம்? அந்த காலே ‘ச’ என்றால் ‘சாகிற ஸமயத்திலும்’ என்று அர்த்தம். ‘மாம் ஏவ‘ என்றால் ‘என்னை’ என்று மட்டும் அர்த்தமில்லை; ‘என்னை மட்டுமே’ என்று அர்த்தம்.

அவரை மட்டுமே அந்திமத்திலும் ‘ஸ்டெடி’யாக ஸ்மரிக்க வேண்டும். அப்போதுதான் மோக்ஷம்.

நம் மனஸ் லகான் இல்லாத குதிரையாக ஓடுகிற ஓட்டம் நமக்குத் தெரியும். ஏதோ இந்த க்ஷணம் அது அப்படியே பரமாத்மாவிலேயே தோய்ந்து விட்டாற்போல இருக்கும். பார்த்தால் அடுத்த க்ஷணமே அது பிய்த்துக் கொண்டு ஏதாவது குப்பைத் தொட்டிக்குப் போயிருக்கும். நமக்கே ஆச்சர்யமாக, தாங்கமுடியாத வ்யஸனமாக இருக்கும் – ‘அவ்வளவு நல்ல சாந்த நிலையில் இருந்தோமே; இது எப்படி அங்கேயிருந்து அறுத்துக்கொண்டு கிளம்பிற்று? என்று. இங்கிலீஷில் fraction of a second என்கிறார்களே, அதுமாதிரி, ஒரு ஸெகண்டில் வீசம் பாகங்கூட இந்த மனஸ் ஒன்றில் நிலைத்து நிற்க மாட்டேன் என்கிறது. எனவே, ‘மாம் ஏவ ஸ்மரன்’- பகவானை மாத்திரமே நினைப்பது – என்பது ரொம்பக் கஷ்டம்தான்.

சாகத்தான் போகிறோம் என்று முதலில் தெரியவேண்டும். அதற்கப்புறம் அதற்காக பயந்து நடுங்காமல், புத்தியை நன்றாகத் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட தெளிவோடு, இந்த க்ஷணம் உயிர் போகிறது என்றால்கூட அந்த ஒரு க்ஷணத்திலாவது ஐகாக்ரியத்தோடு (ஒரு முகமான சிந்தனையோடு) பகவானை மட்டுமே நினைக்க வேண்டும். அப்படி ஒரே க்ஷணத்தில் ப்ராணன் போய்விட்டால் நல்லது. பகவானை விட்டு ஸ்மரணை நகராதபோதே உயிரைவிட்டு, அவனிடமே போய்ச்சேரலாம். ஆனால் இப்படி யாரும் சாகக்காணோமே!குண்டு போட்டுச் சுட்டால்கூட ஒரு ஐந்து பத்து நிமிஷத்துக்கு அப்புறம்தானே உயிர் போகிறது அத்தனை நாழி -அந்த ஐந்து, பத்து நிமிஷமும் ப்ராண ப்ரயாணத்தின் மஹா அவஸ்தைகளை மறந்து பகவானை ஸ்டெடியாக நினைத்துக்கொண்டு அப்படியே ப்ராணனை அதன் மூலத்தில் கரைக்கிறது ஸாத்யமா?’ எலக்ட்ரிக் ஷாக்’ மாதிரி அடித்து உடனே instantaneous சாவு வருகிறது என்றால், அந்த ‘இன்ஸ்டன்ட்’டில் பகவான் நினைவு வந்துவிட்டால் போதும். ஆனால் வரவேண்டுமே! வராவிட்டால்? பயம் வரக்கூடாதே! அல்லது, அப்படியே உணர்ச்சி மரத்துப்போய் ப்ரக்ஞையில்லாமலும் சாகக்கூடாதே!

உடனே ப்ராணண் போகாமல் எந்த க்ஷணமும் போகலாம் என்று அது பாட்டுக்கு இழுத்துப் பறித்துக் கொண்டிருந்தால், அத்தனை நாழியும் (அது நாள் கணக்கில் கூட இருக்கலாம்) பகவானையே நினைத்தாக வேண்டும்; அல்லது நினைக்கிறதற்குக்கூட அவகாசம் தராத விதத்தில் மஹா பீதியையே துளியூண்டு நாழிகைக்குள் தருகிற விதத்தில் – எலெக்ட்ரிக் ஷாக் மாதிரி அடித்துச் சாவதானாலும், அந்த fraction of a second -லும் பகவத் ஸ்மரணை பூர்ணமாக ரொம்பிக்கொண்டு வந்து நிற்க வேண்டும்.

இது தானாக, அந்த ப்ராணாவஸ்தை ஸமயத்தில் கைகூடுகிற விஷயமா? இல்லை. அதனாலேதான் ‘அந்த காலே ச’ என்று ஒரு ‘ச’ போட்டார். இதைப்பற்றி மேலேயும் சொல்கிறார்.

சிலரது கஷ்டம் பலருக்குப் பரீக்ஷை

லோகத்தில் சிலபேர் ஏன் ரொம்பக் கஷ்டப்படுகிறார்கள் என்றால், மற்றவர்கள் அவர்களுக்குப் பரோபகாரம் செய்கிறார்களா என்று பார்ப்பதற்காகத்தான் ஈச்வரன் இப்படிப் பரீக்ஷை பண்ணுகிறான் என்று சொல்வதுண்டு. ‘அவனவன் தன் கர்மாவுக்காகக் கஷ்டப்படுகிறான்; நாம் உதவி பண்ணினாலுங்கூட அவன் பலன் அடைய முடியாதபடி கர்மா குறுக்கே நிற்கலாம்’ என்பதும் வாஸ்தவம்தான். ஆனால், நம் உபகாரத்தால் அவர் கர்மா தீருகிறதோ, தீரவில்லையோ, நம்மாலான ப்ரயாஸையை நாம் பண்ணுவதுதான் மநுஷ்ய தர்மம். ஒருத்தனைக் கர்மாவுக்காக தண்டிக்கிறபோதே ஈச்வரன் மற்றவர்களுடைய பரோபகார சித்தத்துக்கும் அதை ஒரு ‘டெஸ்ட்’டாக வைக்கிறான் என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உபகாரம் பண்ணியும் அது அவனுக்கு ப்ரயோஜனமாகாவிட்டால்தான், கஷ்டம் என்பது அவன் கர்மாவுக்குத் தண்டனை என்று சொல்லலாம். அநேக ஸமயங்களில் பரோபகாரத்தினால் பிறத்தியார் கஷ்டத்தைப் போக்கவும் முடிகிறதே! இப்படியானால் என்ன அர்த்தம்? நாம் பரோபகாரம் பண்ணி அவன் கஷ்டத்தைப் போக்குகிறோமா என்று பகவான் ‘டெஸ்ட்’ பண்ணியதாகத்தானே அர்த்தம்?

இதே மாதிரிதான், தனி மனிதனுக்குக் கஷ்டம் வருகிறதுபோலவே, ஒரு ஜன ஸமுதாயத்துக்கே பஞ்சம், வெள்ளம், எரிமலை, பூகம்பம், தீவிபத்து முதலான உத்பாதங்கள் ஏற்படுவதிலும் மற்றவர்களுடைய பரோபகார சிந்தனைக்கு பகவான் வைக்கிற பரீக்ஷையும் சேர்ந்திருக்கும். இம்மாதிரி நிவாரணப் பணிகளைப்பற்றி நான் இதுவரை சொல்லவில்லை. விசேஷமாக இதைபற்றிச் சொல்லி வற்புறுத்த வேண்டியதுமில்லை. இப்படி ஒரு பெரிய கஷ்டம் பலபேருக்கு ஏற்படுகிறது என்றால், யாரும் சொல்லாமலே பணத்தாலோ, சரீரத்தாலோ உதவிபண்ண வேண்டும் என்ற எண்ணம் அவரவர்க்கும் பொங்கிக்கொண்டு வரவேண்டும். ஸர்க்கார், ரெட் க்ராஸ், ராமக்ருஷ்ணா மிஷன் முதலானவர்களோடோ, அல்லது தாங்களாகவே ஸங்கமாகச் சேர்ந்தோ, அல்லது தனிப்பட்ட முறையிலோ, எப்படியானாலும் இந்த மாதிரியான calamity-களில் ஒவ்வொருவரும் பணிசெய்ய வேண்டியது அவசியம்*. தனி மனிதனின் கஷ்டத்துக்கு மூலகாரணம் அவனுடைய பூர்வ கர்மா என்கிறாற்போலவே, இப்படிப்பட்ட விபத்துக்களையும் “Natural calamity”, ”இயற்கையின் சீற்றம்” என்று இந்த நாளில் எழுதினாலும், இதெல்லாம் பொதுவாக மநுஷ்ய ஸமூஹம் முழுதுமே பண்ணும் பாபத்துக்காக பகவான் தருகிற தண்டனைதான் என்று சாஸ்த்ரம் சொல்லும். தண்டனையாகப் பெற்று வருத்தப்பட்டுக்கொண்டேதான் அந்தப் பாபத்தை நாம் தீர்க்க வேண்டும் என்றில்லை. இம்மாதிரி ஸமயங்களில் நாம் பண்ணுகிற மனப்பூர்வமான கஷ்ட நிவாரணத் தொண்டாலும் பாபத்தில் பாக்கியிருப்பதைப் போக்கிக்கொண்டு விடலாம். இப்படித் தொண்டு செய்யாமல் கருங்கல் மாதிரி இருந்தால் அதுவே ஒரு பாபம். இன்றைக்கு ஜன ஸமூஹத்தின் பிரதிநிதியாக இன்னொருத்தன் வாங்கிக்கொண்ட தண்டனை, கல்மாதிரி இருக்கிற நமக்கே நாளைக்கு வரும்.

ஒருத்தனுடைய கஷ்டத்தில் இப்படி இன்னொருத்தனுக்கு டெஸ்ட் இருக்கிறது. அதிலே பாஸ் பண்ணினால் ப்ரைஸ் கிடைக்கும். சிலபேர் ரொம்பவும் பரிதாபகரமாக. கேட்பார் யாருமின்றி அநாதையாகச் சாவதிலேயே மற்றவர்களுக்கு ஒரு பரீக்ஷை வைக்கிறான் பகவான். ”இவர்கள் தன்னால் படைக்கப்பட்ட அந்த அத்புதமான சரீர மெஷினை அதற்குள்ள மரியாதை கொடுத்து, ஸம்ஸ்காரம் பண்ணித் தன்னிடம் சேர்க்கிறார்களா?” என்று பரமேச்வரன் பார்க்கிறான். பரீக்ஷைக்குப் பரிசு என்னவென்றால் பரதேவதையின் கடாக்ஷம்.

அநாத ப்ரேத ஸம்ஸ்காராத்
அச்வமேத பலம் லபேத்

என்கிறபோது, ஓர் அநாதை ப்ரேதத்துக்கு ஸம்ஸ்காரம் பண்ணுவிக்கிறவனுக்கு ஈச்வரன் ஓர் அச்வமேதம் பண்ணினால் எவ்வளவு புண்ணியமோ அவ்வளவு புண்யத்தை ப்ரைஸாகக் கொடுத்துவிடுகிறார் என்று நேர் அர்த்தமானாலும் இந்த அச்வமேதமே அம்பாளுக்கு ஆராதனை என்று ‘த்ரிசதி’சொல்லுவதால் அவளுடைய பரமகிருபையே பலனாகக் கிடைக்கிறது என்றும் அர்த்தமாகிறது.

நமக்கு வேண்டிய பெரிய ப்ரைஸ் ஸாக்ஷாத் அம்பாளின் அநுக்ரஹம்தான். அச்வமேத புண்யபலனாக தேவலோகத்துக்கோ ப்ரம்மலோகத்துக்கோ போய் நமக்கு ஒன்றும் ஆகவேண்டாம். அங்கெல்லாம் போனாலும் புண்யம் தீர்ந்த பின் — ரூபாய் செலவழிகிற மாதிரி, செலவழித்த பின் — பூலோகத்துக்குத் திரும்பி வந்துதான் ஆகவேண்டும். ஆனால் அம்பாளின் சரணார விந்தங்களுக்குப் போனோமானால் திரும்பவே வேண்டாம். நித்யானந்தம் என்ற சாஸ்வத ஸெளக்யம் அதுதான்.

அந்த அம்பாள் எப்படி இருக்கிறாள்? ‘த்ரிசதி’ வாக்கியபடி ‘ஹயமேத ஸமர்ச்சிதா’ வாக இருக்கிறாள். அதாவது அச்வமேதம் செய்தால் அதையே தனக்குப் பெரிய ஆராதனையாக எடுத்துக்கொண்டு அநுக்ரஹம் பண்ணுகிறவளாக இருக்கிறாள். நமக்குத்தான் ஸுலபமான அச்வமேதமாக அநாத ப்ரேத ஸம்ஸ்காரம் இருக்கிறதே! இதனால் கிடைக்கிற பலனை அம்பாளின் அநுக்ரஹமாக எக்ஸேசேஞ்ச் பண்ணிக்கொண்டால் அது ஒருநாளும் செலவழியாத புண்யக் கரன்ஸியாக, அக்ஷயமாக இருந்துகொண்டு நம்மை இந்த லோகத்துக்கு மறுபடியும் அனுப்பாமல் காப்பாற்றும். இன்னொருத்தனுக்குச் செய்கிற மரண ஸம்ஸ்காரமே நம்மை ஜனன மரணங்களிலிருந்து விடுவிக்கக் கை கொடுக்கும்.

ஆனதால், அநாத ப்ரேத ஸம்ஸ்காரத்தில் நாம் அலக்ஷ்யமாக இருக்கிறோமென்றால் நாம் அசடு என்று அர்த்தம். பரமாத்மா ரொம்ப ஸுலபமாக ஒரு பரீக்ஷை வைத்து அச்வமேத பலனை, அம்பாளின் ப்ரீதியை நாம் அடைவோமா என்று பார்க்கிறபோது, நாம் இதைக் கோட்டை விட்டுவிட்டு நின்றால் அசடு என்றுதானே அர்த்தம்?

ஆகையால் எந்த ஜாதியானாலும் அநாதை ப்ரேதங்களைப் பற்றி நமக்குத் தெரிய வந்தால், ”இந்தக் கைங்கர்யம் நமக்குக் கிடைத்ததே!” என்று அதற்குரிய ஸம்ஸ்காரத்தைப் பண்ணுவித்து, ஒரு பெரிய அச்வமேத யாக பலனை அடையும் ஸந்தர்ப்பத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இனிமேல் ஒரு ஹிந்து ப்ரேதத்தை ராஜாங்க ஸேவகர்கள் ஒரு சடங்குமில்லாமல் புதைத்தார்கள் என்ற அபக்யாதி நமக்கு இருக்கக்கூடாது. செத்துப்போன உடம்புக்கு என்ன முக்யம் என்றில்லாமல், இந்த ஸம்ஸ்காரமே எல்லாப் பரோபகாரத்துக்கும் அஸ்திவாரம் என்ற உணர்வோடு இதிலே அக்கறை காட்ட வேண்டும்.

‘ஹயமேத ஸமர்ச்சிதா’ என்று ‘த்ரிசதி’ யில் அம்பாளுக்குப் பெயர் இருப்பதுபோல் ‘ஸஹஸ்ர நாம’த்தில் “வர்ணாச்ரம விதாயினீ” என்று ஒரு பேர் இருக்கிறது. இதன்படி அந்தந்த ஜீவனின் குலதர்மப்படி அதன் சரீரம் ஸம்ஸ்காரம் ஆகும்படி செய்தாலே அம்பாளின் ப்ரீதிக்குப் பாத்திரமாவோம். ஸ்ரீமாதாவின் க்ருபையால் அவளுடைய குழந்தைகளான எல்லா ஜாதி, வர்ண, குல, ஆச்ரமங்களைச் சேர்ந்த ஜீவகோடிகள் எல்லோருக்கும் பரஸ்பரம் உண்மையான ஸஹோதர மனப்பான்மை ஏற்பட்டு அதன் மூலம் உலகத்தில் அன்பும், பொருளும், அருளும் குறையாது வளரவேண்டும்.


*இம்மாதிரிப் பெரிய உத்பாதங்களில் ஸ்ரீபெரியவர்களின் திருஉளப்படி காஞ்சி ஸ்ரீமடம் ஆற்றி வந்துள்ள அரும்பணிகள் அனந்தம். 1924லேயே காவிரி வெள்ளம் ஏற்பட்டபோது கஷ்ட நிவாரணப்பணியில் நமது மடம்தான் முன் நின்றது. 1961–ல் ஏற்பட்ட காவிரி வெள்ளத்தின்போது மடம் அற்புதப்பணி புரிந்தது மட்டுமின்றி, இப்பணியில் உதவிய மற்ற ஸ்தாபனங்களுக்கு ஆசி வழங்கிய ஆசாரியர்கள், இதிலே பங்குகொண்ட தி.க., திமுக.வையும் குறிப்பிட்டு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்கள். பாலி பூகம்பத்திலும் ‘உடுக்கை இழந்தவன் கை’யாக உடனுக்குடன் ஸ்ரீமடத்தின் உதவியை அளித்திருக்கிறார்கள்.

ராமனும் கண்ணனும் காட்டிய வழி

தர்மத்தை நமக்கெல்லாம் நடத்திக்காட்ட வந்த ஸ்ரீராமசந்த்ரமூர்த்தியே இந்த ப்ரேத ஸம்ஸ்காரத்தை விசேஷமாகச் செய்து காட்டியிருக்கிறார். ஜடாயு மாதிரியான ஒரு பக்ஷிக்குக்கூட அவரே ஸம்ஸ்காரம் செய்திருக்கிறார். அதுமட்டுமில்லை, வாலியையும் பரம வைரியான ராவணனையுங்கூட அவர் வதைத்தவுடன் அங்கதனையும் விபீஷணனையும் கொண்டு அவர்களுக்கு ஒரு குறைவுமில்லாமல் தஹனம் பண்ணச் செய்திருக்கிறார். ஏனென்றால் அந்த சரீரங்களுக்குள் இருந்த மனஸ்தான் அவற்றை துஷ்டத்தனமாக நடத்திற்று. உயிரோடுகூட அந்த மனஸ் வெளியேறிய அப்புறம் ஸ்வயமாகக் கெடுதல் இல்லாத, பகவானுடைய அத்புத ஸ்ருஷ்டியான அந்த உடம்புகளுக்கும் உரிய மரியாதையைச் செய்வதில் ராமரே கண்ணும் கருத்துமாக இருந்து, யதோக்தமாக ஸம்ஸ்காரம் பண்ணுவித்திருக்கிறார். க்ருஷ்ண பரமாத்மாவும் கௌரவர்கள் உள்பட எல்லாருக்கும் குருக்ஷேத்ரத்தில் அந்திம ஸம்ஸ்காரம் பண்ணுவித்து, அப்புறம் த்ருதராஷ்ட்ரனையும் பாண்டவர்களையும் கங்காதீரத்துக்கு அழைத்துக் கொண்டு போய் தர்ப்பணாதிகள் செய்வித்திருக்கிறார்.

ஆனதால், அநாதை ப்ரேத ஸம்ஸ்கார விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பது நம்முடைய ஹிந்து ஸமூஹத்துக்கு உள்ள பெரிய தோஷம் — மன்னிக்க முடியாத தோஷம். இனிமேலாவது இதற்கு ஒரு ஏற்பாடு பண்ணிப் பிராயச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும்.

அநாதையாக ஒருவன் செத்துப்போனதாகத் தெரிந்தால், அவன் என்ன ஜாதியாக இருந்தாலும், தீண்டாதவனாக இருந்தாலும், அவனுடைய குலாசாரப்படி, அவனுடைய குலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு, யதோக்தமாக ஸம்ஸ்காரம் செய்வதற்குப் பொருளுதவி பண்ண வேண்டும். இதற்காகப் பலர் சேர்ந்து பணம் போட்டு மனஸாரப் பணி புரிய வேண்டும். ஏகதேசமாகச் செய்ய சக்தியுள்ள தனிகர்கள் இதைப் பெரிய தர்மம் என்று புரிந்துகொண்டு விசேஷமாக உதவி செய்ய வேண்டும். அநேக தர்ம ஸ்தாபனங்கள், ட்ரஸ்ட்டுகள் நம் ஹிந்து ஸமூஹத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவர்களும் அநாதை ப்ரேத ஸம்ஸ்காரம் உத்தமமான கைங்கர்யம் என்று ‘ஸ்பெஷல் இன்டரெஸ்ட்’ எடுத்துக்கொண்டு, இதற்காக தாராளமாகப் பொருளுதவி செய்ய வேண்டும்.

இது தான் அச்வமேதம்

பரோபகாரத்தைப் பற்றி லெக்சர் அடிக்க ஆரம்பித்தபோது, ‘நம் எல்லோராலும் அச்வமேத யாகம் பண்ணமுடியுமா?’ என்று ஒரு கேள்வி கேட்டேன். அப்புறம் ‘எதற்காக அச்வமேதம்?’ என்று கேட்டேன். ” ஹயமேத ஸமர்ச்சிதா” – ”அச்வமேதத்தால் விசேஷமாக வழிபடப்படுபவள்” என்று அம்பாளுக்கு ஒரு பெயர் இருக்கிறது. ஆனதால் அம்பிகையின் பூர்ண அநுக்ரஹத்தைப் பெறுவதற்காகவே அச்வமேதம் செய்யவேண்டும் என்று பதில் சொன்னேன். .ஆனால் இந்தக் கலிகாலத்தில், ரொம்பவும் நியமங்கள் தேவைப்படும் அச்வமேதம் செய்வது அஸாத்யமாயிற்றே, இதற்கு என்ன பண்ணுவது என்று கேட்டேன். பரோபகாரங்களில் ஒன்றை பண்ணினால் அதுவே அச்வமேதத்துக்கு ஸமானம் என்று சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது என்றும் ஆகையால் இந்தப் பரோபகாரத்தைப் பண்ணிவிட்டால் நாம் அம்பாளின் பூர்ணாநுக்ரஹத்தைப் பெற்றுவிட முடியும் என்று இதற்கு பதில் சொன்னேன். அப்புறம் பரோபகாரங்கள், ஜீவகாருண்யப் பணிகள் பலவற்றைப் பற்றிக் கதை அளந்துகொண்டே போனேன். ஆனால் இதுவரை அச்வமேதத்துக்கு ஸமமான பலனைத் தருகிற அந்த ஒரு பணியைச் சொல்லவில்லை. மற்ற எல்லாவற்றையும்விட உயர்ந்ததான அந்தப் பணி என்னவென்றால் அதுதான் அநாதை ப்ரேத ஸம்ஸ்காரம்.

அநாத ப்ரேத ஸம்ஸ்காராத்
அச்வமேத பலம் லபேத்

என்பது சாஸ்த்ர வசனம்.

பர-உபகாரமாக, செத்துப்போன இன்னொரு ஜீவனுக்கு இதனால் உதவி பண்ணும்போதே, நமக்குப் பாபம் வராமல், கடமையைச் செய்து, நமக்கும் உபகாரம் பண்ணிக்கொள்கிறோம்.

டாக்டர் ஒருத்தர் கேட்டார், “Unclaimed bodies ஆகச் சில அநாதைப் பிரேதங்கள் கிடைப்பதிலும் ஒரு உபகாரம் இருக்கிறது. இந்தமாதிரிப் பிணங்களைத்தான் நாங்கள் போஸ்ட்-மார்ட்டம் பண்ணி, பரிசோதனைக்காக உறுப்புக்களை எடுத்துக்கொள்ள முடிகிறது. மெடிகல் காலேஜ், மெடிகல் எக்ஸிபிஷன் முதலானவற்றில் anatomy (தேக இயல்) -ஐ விளக்க இந்தப் பிரேதங்கள்தான் உதவுகின்றன. இவற்றையும் உங்கள் ஜீவாத்ம கைங்கர்யக்காரர்கள் வாங்கிக்கொண்டு போய்விட்டால் மெடிகல் ஸயன்ஸ் அபிவிருத்தி என்ன ஆவது?” என்று கேட்டார். அப்படியானால் டாக்டர்கள் வேண்டுமானால் தாங்கள் போன பிற்பாடு தங்கள் சரீரத்தைப் போஸ்ட் மார்டத்துக்குக் கொடுத்துவிடலாம் என்று பதில் சொன்னேன். சாஸ்த்ரோக்தமாக இதில் கொஞ்சம் தோஷமிருந்தாலும், இதிலே ஒருத்தன் மனமறிந்து, மனப்பூர்வமாகச் செய்கிற தியாகம் இருப்பதால் தோஷ நிவ்ருத்தி என்று வைத்துக்கொள்ளலாம். அதோடுகூட, முன்னே, அவனவன் தன் தொழிலில் ஏற்படுகிற தோஷம் போக அந்தத் தொழிலாலேயே தியாக ரூபமாக உதவி செய்ய வேண்டுமென்றேனே, அதில் மேலும் ஒருபடியாக, தொழிலால் பிறருக்கு உபகரித்தது மட்டுமில்லாமல், சாவிலும் தன் தொழிலுக்கு மூலமான வித்யைக்கே உபகரித்ததாகவும் இது இருக்கும்.

‘இதர மதஸ்தர்கள் ஜெயிலிலும், ஆஸ்பத்திரியிலும், நடுத்தெருவிலும் ஸம்பவிக்கும் அநாதை மரணங்களில் ஒன்றுகூட விட்டுப்போகாமல், தங்கள் தங்கள் மதப்படி ஸம்ஸ்காரம் செய்கிறார்கள்; இப்படிப்பட்ட ஹிந்து ப்ரேதங்கள் மாத்திரம் பெரும்பாலும் ஸர்க்கார் சிப்பந்திகளாலேயே ஒருவிதமான சடங்கும் இல்லாமல் புதைக்கப்படுகின்றன’ என்கிற பாபமும், அவமானமும் நம்மைச் சேராமலிருக்க இப்போதாவது எல்லா ஊர்களிலும் தகுந்த ஏற்பாடு பண்ணியாக வேண்டும்.

ஹிந்து ஸமூஹத்தின் தோஷம்

எந்த கட்டுப்பாடும் இல்லாத ஹிந்து ஸமூஹந்தான் இந்தப்பெரிய தோஷத்துக்குப் பாத்திரமாகிக் கொண்டிருக்கிறது. மற்ற மதஸ்தருக்கு சக்தி வாய்ந்த ஆர்கனைஸேஷன்கள் இருக்கிறமாதிரி நம் ஸமூஹத்தை கவனிக்க யார் இருக்கிறார்கள்? மடம் என்று வைத்துக் கொண்டு உங்கள் பணத்தையெல்லாம் வாங்கிக்கொண்டு, குரு ஸ்தானம் கொண்டாடிக் கொண்டிருக்கிற என்னால்தான் என்ன ப்ரயோஜனம்? ஆஸேது ஹிமாசலம், இந்த தேசத்தில் எங்கே ஒரு அநாதை ஹிந்து செத்துப்போனாலும் அவன் சரீரத்தை சாஸ்த்ரப்படி ஸம்ஸ்காரம் பண்ணுவதற்கு ஒரு ஏற்பாடு செய்ய எனக்குக் கையாலாகவில்லை. ஆனாலும், இதில் குரு ஸ்தானம் என்ற பெத்த பேர் எனக்கு இருப்பதால், பொறுப்பு எனக்குத்தான் ஜாஸ்தி என்றாவது தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்தது, நம் ஸமூஹத்தின் நிலைமை இப்படி இருக்கிறதே என்று நிஜமாக துக்கப்படுகிறேன். என் வார்த்தையைக் கேட்கக்கூடியவர்கள் என்று தோன்றுகிற உங்களிடம் என்னால் முடிந்தமட்டும் சொல்கிறேன்.

நீங்கள் பாபம் பண்ணினால், அது உங்களைத் திருத்தாமலே ‘குரு’ என்று பேர் மட்டும் வைத்துக் கொண்டிருக்கிற என்னைத்தான் சேரும். எனக்கு நீங்கள் நமஸ்காரம் பண்ணுகிறீர்கள் அல்லவா? அதனால் உங்கள் பாபத்தைப் போக்குகிற பொறுப்பையும் என்னிடந்தான் ஒப்படைக்கிறீர்கள்.

‘அநாதை ப்ரேதம்’ ஒரு பக்கம் இருக்கட்டும் — ஹிந்து ஸமூஹமே அநாதையாக இருக்கிற இப்போது, இந்த ஸமூஹத்தை நாதனுள்ளதாக்கி, அது சாஸ்த்ரப்படி புனிதமாக விளங்கும்படிப் பண்ணவேண்டிய கடமையை நான்தான் கண்ணும் கருத்துமாக ஆற்றியாக வேண்டும்.

இந்த அநாதை ப்ரேத ஸம்ஸ்காரத்துக்காகத்தான் ஒவ்வோர் ஊரிலும் ‘ஹிந்துமத ஜீவாத்ம கைங்கர்ய ஸங்கம்’ என்று ஆரம்பிக்கச் சொல்லி வந்தேன். அநேக ஊர்களில் அப்படி ஏற்பாடு பண்ணி நன்றாக உருவாகியும் இருக்கிறது. முக்யமாக கும்பகோணத்தில் இந்த ஸங்கம் ரொம்பவும் நன்றாக நடந்து வருகிறது. ஆஸ்பத்திரிக்காரர்களும், முனிஸிபாலிடிகாரர்களும், ஜெயில் அதிகாரிகளுமே இந்த ஸங்கத்துகாரர்களைக் கூப்பிட்டுத் தங்களிடம் சேரும் அநாதை ப்ரேதத்தை ஒப்பிக்கிற அளவுக்கு அங்கே இந்த உத்தமமான தொண்டு வேர் பிடித்துவிட்டது.

இதற்காகத் தனி ஸங்கம் இல்லாவிட்டாலும், அந்தந்த ஊர் பஜனை கோஷ்டிகளே வாரவழிபாடும், மற்ற பொதுநலப்பணிகளும் பண்ணுவதோடு அநாதை ப்ரேத ஸம்ஸ்காரத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நூறோடு நூற்றியொன்று என்று இல்லாமல், தாங்கள் செய்கிற மற்ற எல்லாப் பணிகளையும்விட இதுவே உத்க்ருஷ்டமானது என்ற உணர்வோடு செய்ய வேண்டும்.

அநாதைப் பிரேதம்

உறவுக்காரர்கள் என்றால் அபர கார்யம் ஏதோ ஒரு தினுஸில் செய்துவிடுகிறோம். செய்வதில் குறையிருக்கலாம். ஆனால் அடியோடு செய்யாமலே விடுவதில்லை அமாவாஸைத் தர்ப்பணம், ச்ராத்தம் முதலியவற்றை நிறுத்திவிட்டவர்களாக இருந்தாலும், ஹிந்துக்களாகப் பிறந்தவர்களில் நாஸ்திகர்களைத் தவிர எவரும் பந்துக்களுக்கு ப்ரேத ஸம்ஸ்காரம் (அவரவர் குலாசாரப்படி தஹனமோ, அடக்கமோ) செய்ய மட்டும் தவறுவதில்லை.

ஸரி, உறவுக்காரர்கள் இல்லாமல் நிராதரவாக இருக்கிறவர்களின், இறக்கிறவர்களின் கதி என்ன? அநாதைகள் செத்துப்போகும்போது, அவர்களுடைய சரீரம் என்கிற பகவான் படைத்த மெஷினின் கதி என்னவாகிறது? ஸமூஹமேதான் இவர்களுடைய ப்ரேத ஸம்ஸ்காரத்துக்கு ஏற்பாடு பண்ணவேண்டும் என்பது சாஸ்த்ரம்.

இவ்விஷயத்தில் நம் ஹிந்து மதத்தின் அவல நிலைமை எனக்கு வேதனையாக இருக்கிறது. இப்போது நான் சொல்லிச் சொல்லிக் கொஞ்சம் வேதனை தணியும்படியான ஏற்பாடுகள் அங்கங்கே நடந்தாலும், இது போதாது. முன்னெல்லாம் எனக்கு இன்னமும் ரொம்ப வேதனையாக இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் ஆஸ்பத்திரியிலோ, ஜெயிலிலோ அல்லது நடுத்தெரு ஒன்றிலோ ஒரு ஹிந்து அநாதை செத்துப்போனான் என்றால், எடுத்து ஸம்ஸ்காரம் செய்ய எந்த ஏற்பாடும் இல்லாமல் இருந்தது. இப்போதுகூட அநேக ஊர்களில் இப்படித்தான் இருக்கிறது. ஆஸ்பத்திரிக்காரர்களே போஸ்ட் மார்டம் பண்ணி, ஆராய்ச்சிக்காகப் பண்ண வேண்டியதைப் பண்ணிப் புதைத்துவிடுவது, முனிஸிபாலிடி அல்லது பஞ்சாயத்துக்காரர்கள் கொண்டுபோய்ப் புதைத்துவிடுவது என்றுதான் நடந்துவருகிறது. சாஸ்த்ர ப்ரகாரமான ஸம்ஸ்காரமில்லாமல் இப்படி ஒரு சரீரத்தை விடுவது நம் ஸமூஹத்துக்கே களங்கம், பாபம்.

இதர மதஸ்தர்கள் இந்த விஷயத்தில் தக்க ஏற்பாடுகள் பண்ணியிருக்கிறார்கள். அவர்களுடைய சாஸ்த்ரப்படி பகவானிடம் ஒரு சரீரத்தை ஒப்பிக்காமல் விடுகிற தோஷம் அந்த ஸமூஹங்களுக்கு வருவதேயில்லை.

ப்ரேத ஸம்ஸ்காரம் : சரீரத்தின் சிறப்பு

ஒரு கேள்வி தோன்றும், உடம்பை விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம் முதலானவை செய்வது பரோபகாரம் என்றால் ஸரிதான். ஆனால் ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் உடம்புக்கு எதற்கு ஸம்ஸ்காரம் என்று தோன்றலாம்.

”உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது? ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்துவிட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருப்பதால் அவாளவாள் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேத ஸம்ஸ்காரம் பண்ணத்தான் வேண்டியிருக்கிறது. இது போதாதென்று, யாரோ அநாதை போய்விட்டானென்றால், அவன் உடம்பை முனிஸிபாலிடிக்காரர்கள் அடக்கம் செய்யப் போகும்போது, நாமெதற்கு வலுவிலே தடுத்து, ‘ஸம்ஸ்காரம்’ பண்ணுகிறேன் என்று இழுத்து விட்டுக்கொள்ள வேண்டும்? பிரேதமென்றாலே ஒரு பயம், கூச்சம் இருக்கிறது. இதில் ஸம்பந்தமில்லாததை எதற்காக நாமாக எடுத்துப்போட்டுக் கொள்ளவேண்டும்? உயிர்போன வெறும் கட்டையான உடம்புக்கு என்ன பரோபகாரம் வேண்டியிருக்கிறது?” என்று கேட்கலாம்.

சாஸ்திரங்களைக் கூர்ந்து பார்த்தால் ஒரு ஜீவன் சரீரத்தை விட்டுப் போய்விட்டாலும், அதன் அங்கங்களில் கண்ணில் ஸூர்யன், வாயில் அக்னி, கையில் இந்திரன் என்றெல்லாம்மிருக்கும் தேவாம்சங்கள் உடனே அதனதன் மூலஸ்தானத்துக்குப் போய்விடவில்லை என்று தெரிகிறது. பிரேத ஸம்ஸ்காரத்தின் மூலம்தான் அவற்றை அதனதன் ஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அபர மந்த்ரங்களைப் பார்த்தால் தெரியும்.

ஜீவாத்மா என்கிற புருஷன் பதினாறு கலை உள்ளவன் என்பார்கள். இதில் பதினைந்து கலைகள் மட்டுமே உயிராக இருப்பது என்றும், உடம்பும் ஒரு கலை என்றும், எனவே உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த உடலை ஈச்வரார்ப்பணமாக்கவே பிரேத ஸம்ஸ்காரம் தேவைப்படுகிறது என்றும் ஒரு அபிப்ராயம் உண்டு.

சாஸ்த்ரங்களில் தஹனம் பண்ணுவதை ‘அந்த்யேஷ்டி’- அந்திய இஷ்டி – அதாவது ‘இறுதியான வேள்வி’ என்றே ரொம்பவும் உயர்த்திச் சொல்லியிருக்கிறது. கர்ப்பம் தரிப்பிலிருந்து ஒரு ஜீவனை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி சுத்தி பண்ண வேண்டும் என்பதற்காக சாஸ்த்ரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்களைச் சொல்லியிருக்கிறது.*1 ‘ஸம்ஸ்காரம்’ என்றால் ‘நன்றாக ஆக்குவது’ என்று அர்த்தம். (‘நன்றாக ஆக்கப்பட்ட’ பாஷைதான் ‘ஸம்ஸ்க்ருதம்’.) உபநயனம், விவாஹம் ஆகிய எல்லாமே ஜீவனை அந்தந்த நிலையில் பக்குவப்படுத்துவதற்காக ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள்தான். வாழ்நாள் கர்மா முழுவதையும் வேள்வியாக ஈச்வரனிடம் ஆஹுதி செய்துகொண்டே இருக்கிற ரீதியில் இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இப்படி வாழ்க்கையையே யாகமாகச் செய்த ஒருத்தனுக்கு, வாழ்க்கை முடிந்தபிறகு கடைசியில் மற்றவர்கள் செய்கிற யாகம்தான் – அதாவது அந்திய இஷ்டியே ப்ரேத ஸம்ஸ்காரமாகும். எந்த உடம்பை வைத்துக்கொண்டு பாக்கி யஜ்ஞங்களை ஒருத்தன் பண்ணினானோ, அந்த உடம்பையே சிதாக்னி [சிதைத் தீ] யில் ஹோமம் பண்ணிவிடுவதுதான் இது. ப்ரேத ஸம்ஸ்கார மந்த்ரங்களில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது. ஹோமத்துக்குரிய மற்ற வஸ்துக்களை நெய்யினால் சுத்தி செய்து அக்னியில் போடுகிற மாதிரித்தான் ப்ரேதத்தையும் சுத்தம் பண்ணி, தஹனம் செய்யச் சொல்லியிருக்கிறது. உடம்பு ஈச்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. மண்ணில் அடக்கம் பண்ணுவதானாலும் ஈச்வரார்ப்பணமே ஆகிறது.

இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.

‘தேஹம் ரொம்ப இழிவானது. இதிலிருந்து விடுபடவேண்டும்’ என்று பெரியவர்கள் பாடி வைத்திருப்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இன்னொரு நிலையில் பார்த்தால் இந்த தேஹம் என்பது ஒரு மஹா அத்புதமான மெஷினாக இருக்கிறது. ஒரே மெஷினில் ஒவ்வொரு பாகம் ஒவ்வொரு தினுஸான கார்யத்தைச் செய்கிறது. கண் என்று ஒன்று வெளிச்சத்தையும், வர்ணங்களையும் பார்க்கிறது. காது என்று ஒன்று சப்தங்களைக் கேட்கிறது. இருக்கிறதெல்லாம் ஒரே ஆத்மா – இத்தனை அவயவங்களுக்குள்ளேயும் ஒரே ஜீவன்தான் இருக்கிறது என்றாலும், கண்ணும், காதும் கிட்டக்கிட்ட இருந்துங்கூட கண்ணால் கேட்க முடிவதில்லை; காதால் பார்க்க முடிவதில்லை! பக்கத்திலேயே வாய் என்று ஒன்று அதற்குத்தான் ருசி தெரிகிறது. பேசுகிற சக்தியும் அதற்கே இருக்கிறது. தொண்டையில் பல தினுஸாகக் காற்றைப் புரட்டி அழகாக கானம் செய்ய முடிகிறது. பல வஸ்துக்களைப் பிடிப்பதற்கு ஏற்றமாதிரி கையும் விரல்களும் அமைந்திருக்கின்றன. இந்த அமைப்பு கொஞ்சம் வேறுவிதமாக இருந்தாலும் இப்போது நாம் பண்ணுகிற கார்யங்களைப் பண்ண முடியாது. அடி எடுத்து வைத்து மேலே போவதற்கு வசதியாகக் காலின் அமைப்பு இருக்கிறது. நடக்கிறபோது கூடியமட்டும் ஜீவராசிகள் நசுங்காதபடி, பூரான் மாதிரியானவற்றின் மேலேயே நாம் பாதத்தை வைத்தால்கூட அவை நெளிந்துகொண்டு ஓட வசதியாக உள்ளங்கால்களில் குழித்தாற்போன்ற ஏற்பாடு, சப்பணம் கூட்டி உட்கார வசதியாக முழங்காலில் எலும்பு நரம்புகளின் அமைப்பு — என்று இப்படி ஒவ்வொன்றைப் பார்த்தாலும் பராசக்தி எத்தனை ஸூக்ஷ்மமான கல்பனையோடு ஒரு சரீரத்தைப் பண்ணியிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருக்கிறது! ஆஹாரத்தை ஜெரிக்க ஒரு அங்கம், ஜெரித்ததை ரத்தமாக்க ஒரு அங்கம். மூச்சுவிட ஒன்று, ரத்தத்தை ‘பம்ப்’ பண்ண ஒன்று –எல்லாவற்றுக்கும் மேலே ஸகல கார்யங்களையும் டைரக்ட் பண்ணி கன்ட்ரோல் பண்ணும் மூளை — என்றெல்லாம் விசித்ர விசித்ரமாக பகவான் சரீரத்தைக் கல்பித்திருக்கிறான். சதை, ரத்தம், மஸில்ஸ், நரம்பு, எலும்பு என்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு ‘பர்பஸ்’இருக்கிறது. எலும்புக்குள்ளேகூட மஜ்ஜை என்ற ஜீவஸத்து ஓடுவது ஒரு அதிசயம். மனித சரீரத்தில் இருக்கும் கோடிக்கணக்கான ஸெல்களில் ஒவ்வொன்றும் ஒரு அத்புத லோகம். இப்படித் தனித்தனியாக ஒவ்வொரு பாகமும் ஒரு அத்புதமான மெஷினாக இருப்பதோடு மட்டுமல்லாமல், எல்லாமாக ஒன்றுக்கொன்று இசைவாக ஸஹாயம் செய்து போஷித்துக் கொள்வதும் மஹா அதிசயமாக இருக்கிறது. ஆனபடியால், எவனோ லக்ஷத்தில் ஒருவன் தேஹம் பொய், மனஸ் பொய் என்று புரிந்துகொள்ளும் ஞானியாக ஆனாலும், பாக்கி எல்லாரும் பகவான் தந்திருக்கிற இந்த அத்புதமான மெஷினை வைத்துக்கொண்டு தர்மமாக வாழத்தான் முயற்சி பண்ண வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த தர்ம வாழ்க்கையிலிருந்துதான் அப்புறம் ஞானத்துக்குப்போக வேண்டியவர்களாயிருக்கிறோம்.

யோசித்துப்பார்த்தால், சரீரத்தை ஏன் மட்டம் என்று திட்டவேண்டும்? அது என்ன பண்ணுகிறது? அது மனஸின் கருவி மட்டும்தானே? கையையும் காலையும் கண்ணையும் வாயையும் மனஸ் நல்லபடி ஏவினால் சரீரம் நல்லதே செய்யும். கை பரோபகாரம் பண்ணும்; அல்லது அர்ச்சனை பண்ணும். கால் கோயிலுக்குப் போகும். கண் ஸ்வாமி தர்சனம் பண்ணும், வாய் ஸ்தோத்ரம் சொல்லும், அல்லது எல்லோருக்கும் ப்ரிய வசனம் சொல்லும். ஆனதால் ‘நிஷித்தம்’ என்று சரீரத்தைக் திட்டுவதுகூட தப்புத்தான். ”தர்மத்தைச் செய்ய சரீரம்தானே ஸாதனமாயிருக்கிறது?”– சரீரம் ஆத்யம் கலு தர்ம ஸாதனம் — என்று வசனமே இருக்கிறது. ”தேஹோ தேவாலய: ப்ரோக்த:” உள்ளே இருக்கிற பரமாத்மாவுக்கு இந்த உடம்பே ஆலயம் என்கிறோம். ‘காயமே கோயிலாக‘ என்று அப்பரும் சொன்னார். திருமூலரும் இப்படியே, ”முன்னே உடம்பு ரொம்ப நிஷித்தம் என்று மட்டமாக நினைத்தேன். அப்புறம் அதற்குள்தான் ஈச்வரன் குடிகொண்டிருக்கிறான் என்று தெரிந்துகொண்டதும், உடம்பை ஓம்பலானேன்” என்று திருமந்திரத்தில் சொல்கிறார்*2.

ஆனதால் இப்படிப்பட்ட அத்புதமான, பகவான் கொடுத்த மெஷினை விட்டு உயிர் போனதும் அதைக் கன்னாபின்னா என்று ‘டிஸ்போஸ்’ பண்ணக்கூடாதுதான். மஹா ச்மாசானவாஸியான பரமேச்வரனுக்குத்தான் அதை ஆஹுதி பண்ண வேண்டும். எவன் இந்த உடம்பைக் கொடுத்தானோ அவனுக்கே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். உலகத்தில் எந்த தேசத்திலுமுள்ள காட்டுக்குடிகள் உள்பட எல்லோரும் ஏதோ ஒரு தினுஸில் இதைத்தெரிந்து கொண்டிருப்பதால்தான் எங்கே பார்த்தாலும் ப்ரேத ஸம்ஸ்காரம் என்பது ஒரு பெரிய ஸமயச் சடங்காக இருக்கிறது.

செத்துப்போனபின் ஒரு உடம்புக்குள் தேவதாம்சங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதாக நம்பாவிட்டாலுங்கூட ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தனை நாள் அதற்குள் இருந்த ஜீவன் ஈச்வர சைதன்யத்தின் ஒரு திவலையல்லவா? எப்போதோ ஸ்வாமி விக்ரஹம் வைத்த புறை என்றால்கூட, இப்போதும் அதில் கண்ட கண்டதுகளை வைக்காமல் ஒரு அகலை ஏற்றிவைக்க வேண்டும் என்று தானே தோன்றுகிறது? அப்படியிருக்க ஈச்வர சைதன்யத்தின் அம்சம் இருந்த body-ஐ மரியாதை தந்து மந்த்ரபூர்வமாகதானே dispose செய்ய வேண்டும்?

ஒருத்தன் தன்னுடைய சரீரத்தால் அநேக நன்மைகளைச் செய்தானென்றால், உயிர்போன பின்னும் அந்த சரீரத்துக்கு மரியாதை பண்ணத்தான் வேண்டும். நாஸ்திகர்கள்கூடத் தங்கள் தலைவர்களின் ம்ருத சரீரத்துக்கு மலர்வளையம் வைக்கிறார்களே! ஒருவன் சரீரத்தைக் கெட்டத்திற்கே பயன்படுத்தினான் என்றாலும்கூட, அவனுக்கு அந்த சரீரத்தை இயக்கியது ஈச்வர சக்தி என்று தெரியாவிட்டாலும் நமக்குத் தெரிவதால் அதற்குரிய ஸம்ஸ்கார மரியாதையைப் பண்ணத்தான் வேண்டும். ”அவனாக இந்த சரீரத்தைக் கொண்டு ஈச்வரார்ப்பணமாக எந்த நல்லதும் செய்யாமல் போய்விட்டாலும், அதற்கும் ஈடாக, ப்ராயச்சித்தமாக இப்போது நாமாவது இதையே ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்வோம்” என்ற எண்ணத்துடன் ஸம்ஸ்காரம் பண்ணவேண்டும்.

சைவ ஸித்தாந்தத்தில் ஈச்வரன்தான் ஜீவனுக்குத் தநு, கரண, புவன, போகங்களைத் தருகிறான் என்பார்கள். லோகத்தை (புவனத்தை) படைத்து, அதிலுள்ள போகங்களை அநுபவிப்பதற்காகவே மநுஷ்ய சரீரத்தை (தநுவை) ஸ்ருஷ்டிசெய்து அதில் கரணங்கள் என்ற இந்திரியங்களை அவன் வைத்திருக்கிறான். கர்மாவைத் தீர்த்துக்கொள்ளும்வரை போகங்களை அநுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று இப்படி வைத்திருக்கிறான். எனவே அவனுடைய பிரஸாதமான தநுவைக் கரணங்கள் ஓய்ந்த பிற்பாடும் அதற்குரிய கௌரவத்தைக் கொடுத்து ஸம்ஸ்கரித்துத்தான் அவனிடம் வேள்விப்பொருளாகத் திரும்பக்கொடுக்க வேண்டும்.

இதிலே ஒரு வித்யாஸம். மற்ற வேள்விகளை, இஷ்டிகளை ஒரு ஜீவன், தானே பண்ணுகிறான். ஆனால் செத்துப்போன பிறகு உடம்பை பகவானுக்குக் கொடுக்கிற இந்த அந்திய ‘இஷ்டி’யை அவன் பண்ணமுடியாது. மற்ற ஸம்ஸ்காரங்களைப் பண்ணுவதும், பண்ணாததும், அதனால் புண்ய பாபங்களை ஸம்பாதிப்பதும் அந்தந்த ஜீவனுடைய கார்யந்தான். இவற்றில் மற்றவர்களுக்கு பொறுப்பு இல்லை. ஆனால் ப்ரேத ஸம்ஸ்காரம் மற்றவர்களே செய்ய வேண்டியது அல்லவா? அதனால் அதில் பொறுப்பு மற்றவர்களுக்குத்தான். எனவே இதை ஸரியாகச் செய்யாவிட்டால் நமக்குத்தான் பாபம்.

‘உயிரோடு இருக்கிறவரையில் உபகாரம் பண்ண வேண்டியதுதான்; போன உயிரும் வேறு எங்கோ இருக்குமாதலால் அதற்கு ச்ராத்தாதிகள் பண்ண வேண்டியதுதான்; ஆனால் உயிர்போன உடலுக்கு எதற்கு ஸம்ஸ்காரம்?’ என்று முதலில் கேட்டுக்கொண்டோம். இப்போது அலசிப் பார்த்துக் கொண்டதிலோ பகவானின் பராமத்புத ஸ்ருஷ்டியான சரீரம் உயிரற்ற பிறகுங்கூட அதற்கான மரியாதையைப் பெற்று பகவானிடமே சேர்ப்பிக்கப்பட வேண்டும்; உடம்புக்குச் செய்கிற இந்த ஸம்ஸ்காரந்தான் முழுக்க நம் பொறுப்பில் இருப்பது; அதனால் இதைச் செய்யாவிட்டாலே நமக்குப் பெரிய தோஷம் என்று தெரிகிறது!


*1“தெய்வத்தின் குரல்”, இரண்டாம் பகுதியில் “நாற்பது ஸம்ஸ்காரம்” என்றே மகுடமிட்ட கட்டுரையில் விவரங்கள் காணப்படும்.

*2உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்(று)
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே.

நீத்தார் கடன்

திவஸம், தர்ப்பணம் முதலான பித்ரு காரியங்களும் பரோபகாரத்தைச் சேர்ந்தவைதான் என்று நிறையச் சொல்லியாயிற்று. சிராத்தம் முதலானவை பித்ருக்கள் எங்கே, எப்படிப்பட்ட ஜன்மா எடுத்திருந்தாலும் அங்கே அவர்களுக்கு த்ருப்தி உண்டாக்கும் என்று சொன்னேன்.

ஒருத்தர் செத்துப் போனவுடனேயே பித்ரு லோகம்போய் விடுவதில்லை; இன்னொரு ஜன்மா எடுத்து விடுவதில்லை; இறந்து போனவனின் ஜீவன் ஒரு வருஷம் பிரயாணம் பண்ணித்தான் பித்ரு ஸ்தானத்தை அடைகிறது. இதை நம் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிற மாதிரியே க்ரீக் மைதாலஜி முதலான மதாந்தரங்களிலும் சொல்லியிருக்கிறது. ஜீவன் வைதரணி நதியைக் கடந்து யம பட்டணம் போகவேண்டும் என்று நாம் சொல்கிற மாதிரியே அவர்களும் ஒரு நதியை (Styx) சொல்லி அதைத் தாண்டி மறுலோகத்துக்கு (Hades) போக வேண்டும் என்கிறார்கள். நாம் சொல்கிற மாதிரியே யம பட்டணத்தில் இருக்கிற காவல் நாய்போல அவர்களும் ஒன்றை [Cerberus] சொல்கிறார்கள். ஒரு ஜீவன் பரலோகம் செல்வதற்குப் பிடிக்கிற இந்த ஒரு வருஷத்தில்தான் அதன் த்ருப்திக்காக மாஸா மாஸம் சில சடங்குகளைச் செய்வது. இம்மாதிரி பரலோக யாத்திரையில் வழிக்குணவு தருவதைக்கூட இதர மதங்களிலும் சொல்லியிருப்பதாகக் கேட்டிருக்கிறேன். Viaticum என்று கிறிஸ்துவர்கள் சொல்வது இதுதான் போலிருக்கிறது. பிள்ளை குட்டி இல்லாதவர்களுக்கும் நாம் கயை, பதரி போன்ற இடங்களில் பிண்டம் போடுவது போலவே, கிறிஸ்துவர்கள் All-Souls’ Day என்று ஒரு நாளில் எல்லா ஆத்மாக்களின் த்ருப்திக்காகவும் வழிபாடு நடத்துகிறார்கள். லோகம் பூராவும் இப்படி ஒரு நம்பிக்கை, அபிப்ராயம் இருக்கிறது என்றால் அது ஸத்யமாகத்தான் இருக்க வேண்டும்.

பித்ரு காரியங்கள், ‘உத்தரக்ரியை’ என்ற பேரில் எல்லா ஜாதிக்காரர்களும் செய்யும் அபர காரியங்கள் ஆகியன யதோக்தமாக நடக்க ஸெளகர்யம் செய்து தரவேண்டும். இதிலே முதலில் வருவது ப்ரேத ஸம்ஸ்காரம். அதாவது இறந்து போனவரின் உடலை அவரவர் குலாசாரப்படி தஹனமோ, அடக்கமோ செய்வது. இது ரொம்பவும் அவச்யமான கர்மா.

வைதிக முறைகள் வளர உபகாரம்

கல்யாணம், உபநயனம் முதலியவற்றில் குறைவில்லாமல் தக்ஷிணை தருவது மட்டுமின்றிப் பொதுவாகவே வைதிகர்களுக்கு உபகாரம் செய்கிற எண்ணம் வளர வேண்டும். இது இல்லாததால்தான் அடுத்த தலைமுறைக்கு வைதிக கார்யம் செய்து வைக்கவே ஆள் கிடைக்காத மாதிரிச் செய்திருக்கிறோம். வேத ஸம்பந்தமான கார்யங்கள் லோகத்தில் கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது இருந்து கொண்டிருக்கும்படி பண்ணுவதைவிட ஜன ஸமூஹத்துக்குப் பெரிய பரோபகாரம் எதுவும் இல்லை. இப்போது விநோபா ‘பூதான்’ என்று சொல்வதற்கு முன்னோடி பழைய காலத்தில் ராஜாக்களும், பிரபுக்களும் வேத வித்துக்களுக்கு நிலம் மானியம் பண்ணினதுதான்.

பரம தரித்ரர்களும் சாஸ்தரப் பிரகாரம் சுபாசுபங்களைச் செய்ய நாம் உபகரிக்க வேண்டும். ‘ஷோ’ இல்லாமல் சாஸ்த்ரப்படி மட்டும் செய்வதற்கு நிறையச் செலவே இராது.

என் பரோபகார லிஸ்ட் நீண்டுக்கொண்டே வருகிறது. அதிலே ஒவ்வொரு ‘லொகாலிடி’யிலும் பரம ஏழைகளும் சொற்ப வாடகையில் பெறுமாறு ஒரு கல்யாண மண்டபம், ஒரு அபர காரிய ஸ்தலம் [உத்ர க்ரியைகள் செய்யுமிடம்] ஏற்படுத்துவதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.