நான் கற்ற பாடம்

மெட்றாஸுக்கு வந்ததில் நானும் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். மௌனத்தால் கிடைக்கிற சாந்த ஸெளக்யம் சாச்வதமாக நிலைத்து நிற்பது;அதாவது எத்தனை கஷ்டத்துக்கு நடுவிலும் கஷ்டம் தெரியாமல் ஆனந்தமாக இருக்கும்படிப் பண்ணுவது என்று சொல்கிறார்கள். கஷ்டமே இல்லாமலிருக்க வேண்டுமென்றால் முடியாது. கஷ்டம் இருக்கத்தான் வேண்டும். அப்போதுதான் கர்மா கழியும். ஆனாலும் அது கஷ்டமாகத் தெரியக்கூடாது. ஒரே ஒரு ‘அயிட்டத்’ திலாவது இதை நான் தெரிந்து கொண்டதற்கு மெட்றாஸ் வாஸம் ஸஹாயம் பண்ணியிருக்கிறது. இங்கே பூஜை பார்க்க வேண்டும் என்பதற்காக நீங்களெல்லாம் பக்தியோடு கும்பலில் நெரிந்து கஷ்டப்பட்டுக்கொண்டு மணிக் கணக்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். பூஜை பார்க்கிறபோது இத்தனை கஷ்டமும் மறந்து உத்ஸாஹம் உண்டாகி பாராயணம், பஜனை என்று ஆனந்தமாக ஆரம்பித்து விடுகிறீர்கள். மற்றவர்களுக்கும் இது நல்லதுதானே என்ற நல்லெண்ணத்தில்தான் இப்படிச் செய்கிறீர்கள். ஆனால் இதனாலேயே ரொம்பவும் சப்தமும், distraction-ம் (கவனச்சிதறலும்) ஏற்பட்டு விடுகிறது என்று சில பேருக்குத் தோன்றவே, “Silence Please!” என்று அட்டைகள் எழுதி மாட்ட ஆரம்பித்தார்கள். நான் அவற்றைக் கழற்றிவிடச் சொன்னேன் ஏன்?’ இப்போதுதான் நமக்கு ஒரு பாடம் படித்துப் பாஸ் பண்ண ஸந்தர்ப்பம் வந்திருக்கிறது. இதை நழுவவிடக் கூடாது’ என்று நினைத்துத்தான் கழற்றச் சொன்னேன். ஈச்வராநுக்ரஹத்தில், இப்போது எத்தனை சப்தமிருந்தாலும் நான் பாட்டுக்குப் பூஜையைப் பண்ணிக் கொண்டிருக்கப் பழகி விட்டேன்.

அதனால் இன்று மௌனத்தைப் பற்றிப் பேசினது எனக்கு ஸெளகர்யமாகப் பூஜையின்போது நீங்கள் பேசாமலிருக்கும்படிப் பண்ண வேண்டும் என்ற உத்தேசத்திலல்ல. உங்களுக்கே அதன் பிரயோஜனம் ஏற்படவேண்டுமென்றுதான் சொன்னேன். இத்தனை நாள் உங்கள் இஷ்டப்படி பாடி, பேசி, பஜனை செய்தாகிவிட்டபடியால், இப்போது உங்களைப் பூஜையின்போது மௌனமாக மானஸிகமாகப் பிரார்த்தனை பண்ணிக் கொள்ளச் செய்வதில் நியாயமிருக்கிறதென்று தோன்றிற்று. சும்மாயிருக்கும் ஸுகத்தின் லேசமாவது உங்களுக்கெல்லாம் தெரிய வேண்டும் என்ற ஆசையில் சொன்னேன்.

மௌனப் பிரார்த்தனை

இன்றைக்கு இதை விஷயமாக எடுத்துக்கொள்ள அரசாங்கத்தாருடைய ஒரு அபிப்ராயம்தான் ‘ப்ராவகேஷ’னாக (தூண்டுதலாக) இருந்தது. ஸமீபகாலமாக, பள்ளிக் கூடம் ஆரம்பிக்கும்போது மாணவர்களுக்கு ‘ப்ரேயர்’ இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதில் இரண்டுவித கருத்துக்கள் இருந்து வந்திருக்கின்றன. தலைவர்களில் சில பேர் தெய்வபக்தி உள்ளவர்களாகவும், சில பேர் அப்படியில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் அபிப்ராய பேதம். அப்புறம் தெய்வபக்தியில்லாதவர்களும் ‘ஸ்கூல் ஆரம்பத்தில் ‘ப்ரேயர்’ என்பது நீண்டகால வழக்கமாக இருந்து வந்துவிட்டதே; இதை எடுத்துவிட்டால் நான் ரொம்பப் பேரின் அதிருப்திக்குப் பாத்திரமாக வேண்டிவருமே!’ என்பதால், ப்ரேயர் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும், இஷ்டப்பட்ட பசங்கள் பண்ணட்டும், இஷ்டமில்லாதவர்களுக்குக் கட்டாயமாக்க வேண்டாம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் இதோடு பிரச்னை தீர்ந்து விடவில்லை. ‘ப்ரேயர்’ என்றால் எதை வைப்பது? இதுவோ மதச்சார்பில்லாத ஸெக்யூலர் அரசாங்கம். அநேக மதங்களைச் சேர்ந்த பசங்கள் சேர்ந்து படிக்கும்போது எந்த ஒரு மதத்தின் பிரார்த்தனையை மட்டும் வைத்தாலும் தப்பாகிவிடுமே என்று யோசித்தார்கள். முடிவாக இப்போது பசங்கள் எல்லாரும் பாடங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னால் இரண்டு நிமிஷமோ மூன்று நிமிஷமோ மௌனமாகப் பிரார்த்தனை பண்ணிக் கொள்ளட்டும் என்று தீர்மானம் பண்ணியிருக்கிறார்கள்.

சின்னக் குழந்தைகளுக்கே இப்படி மௌனத்தை அவர்கள் சொல்வதால், நாமுந்தான் பெரிய குழந்தைகளுக்கும் மௌனத்தைப் பற்றிச் சொல்லாமே என்று தோன்றிற்று.

அவர்கள் மட்டும்தான் மாணவர்களா என்ன? நீங்கள், நான் எல்லோரும் மாணவர்கள்தான். லோகம் என்கிற இந்த பெரிய ஸ்கூலில் வாழ்நாள் பூராவும் விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டிய வித்யார்த்திகளாகத்தான் நாம் எல்லாருமே இருக்கிறோம்.

இன்றைக்கு நீங்கள் கற்றுக்கொண்டது மௌன வித்யை. ‘மோனம் என்பது ஞான வரம்பு‘ என்று பிரம்ம வித்யையாகவே அதைச் சொல்லியிருக்கிறது. ஜன்மா எடுத்ததற்கு இந்த ஜன்மாவில் நாம் என்னென்ன செய்ய வேண்டுமென்று தெரிந்து கொள்ள வேண்டியது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் ஒன்றுமே செய்யாமல், பேசாமல், நினைக்காமல் இருக்க வேண்டுமென்று தெரிந்து கொள்வதுமாகும். மனஸ் போகிறபடியெல்லாம் நினைப்பது, வாயில் வந்தபடியெல்லாம் பேசுவது என்றால், பிற்பாடு ஜன்மாவின் பலனையே அடையவில்லை என்று துக்கப்படும்படியாகும். அதனால்தான் மனஸை அடக்கி மௌனமாயிருக்க வேண்டுமென்று தெரிந்து கொள்வதே (அப்படிச் செய்வது அப்புறம் இருக்கட்டும்) உங்களுக்கு ஒரு வித்யா லாபம் என்று நினைத்துச் சொன்னேன்.

ஸமூஹ நலனுக்கும் உதவுவது

இத்தனை நாள்* நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தேன். என்ன வைதிக கார்யங்கள் செய்ய வேண்டும், தர்மரக்ஷணத்துக்காக என்ன கர்மாநுஷ்டானங்கள் செய்ய வேண்டும், ஸமூஹத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாமே சொல்லிவந்தேன். இன்றைக்கு ஒரு மாற்றாக ஒன்றையுமே செய்யாமல் மௌனமாக இருக்கச் சொன்னாலென்ன என்று தோன்றிற்று. இதுவும் ஜீவனதர்மம்தான். கார்யங்களால் உண்டாகிற நன்மைகளைவிட இதுதான் பெரிய நன்மை. ஆத்மசாந்தி இதில்தானே கிடைக்கிறது? ஸமூஹத்துக்கும் இது பெரிய உபகாரந்தான். கெட்டதைப் பேசியும், பண்ணியும் ஸமூஹத்தைக் கெடுக்கமலிருக்கிறோமென்பதால் மட்டுமில்லை. இம்மாதிரி இந்திரியத்தைக் கட்டுப்படுத்துவதால் உண்டாகிற ஆத்மசக்திதான் ஸமூஹத்துக்கு மிகப்பெரிய க்ஷேமத்தை உண்டாக்குவது. அதனால், மக்களின் வாழ்க்கை முறையில் மௌனமாக, ஒரு கார்யமுமில்லாமல் அன்றன்றும் கொஞ்ச நாழி – அரைமணியாவது – உட்கார்ந்திருப்பதையும் சேர்த்துக் கொள்ளச் சொல்ல வேண்டுமென்று தோன்றியது.


* அதாவது 1957 அக்டோபரிலிருந்து 1958 ஏப்ரல் வரை சென்னையில் ஆற்றிய உரைகளில்.

ஈச்வர சிந்தனை

இது இரண்டுக்கும் நடுவே ஈச்வரனைக் கொண்டு வந்து விட்டேன். மனஸ் தன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டு காலியாகிறபோது இப்படி ஈச்வர ஸ்மரணம் என்பதாகச் செய்வது மறுபடி எண்ணங்களை உண்டாக்கிக் கொள்வதுதானே?’ ஒன்றையும் நினைக்க வேண்டாமென்று ஸாதனை செய்ய ஆரம்பித்து, அப்படி நினைக்காமலிருக்கிற நிலை வரும்போது, இது சூனியமாகத்தானிருக்கிறதே தவிர ஸுகாநுபவமாக இல்லை என்பதால், இதை மாற்றி ஈச்வரனை நினைக்க ஆரம்பிப்பதில், மறுபடி தப்பு நினைப்புகளும் வருமாறு மனஸ் இழுத்துக்கொண்டு போய்விட்டால் என்ன பண்ணுவது? பூர்ணத்வம், நித்ய ஸுகாநுபவம் வராவிட்டால் போகட்டும். சூன்யமாகவே இருந்தாலும் இருந்து விட்டுப் போகட்டும். சூன்யமாகவே இருந்தாலும் இருந்து விட்டுப் போகட்டும். இந்த மனஸின் கன்னா பின்னா இழுப்பும், கெட்ட நினைப்புகளும் உண்டாக இடங்கொடுக்காமலிருந்தாலே போதும்’என்று தோன்றலாம்.

ஓரளவுக்கு மைன்ட் ஸ்டெடியாகி, நினைப்பில்லாமலிருக்கிற பக்குவம் பெற்றபின் அப்பியஸிக்க வேண்டிய ஈச்வர ஸ்மரணையைப் பற்றி இப்படிக் கவலைப்படவே வேண்டாம். அந்த ஸ்டேஜுக்கு அப்புறம் மனஸ் கெட்ட எண்ணங்களில் போகவே போகாது. ஒரு ஜீவன் ரொம்பவும் பிரயத்தனப்பட்டு எண்ணங்களை நிறுத்தித் தன்னிடம் மனஸைக் கொடுத்தபின் ஈச்வரன் அவனைக் கெட்டுப் போகும்படி விடமாட்டான். ஈச்வர பக்தியும் பிரேமையுங்கூட மனஸின் காரியந்தான் என்றாலும் இதற்கப்புறம் ஒருநாளும் மனஸ் கெட்டதற்குப் போகாது; தன்னை அடியோடு கரைத்துக் கொள்கிற மௌனத்துக்கே போகும்.

துஷ்டர்களால் நமக்கு வழியில் ஆபத்து உண்டாகிறதென்று போலீஸ்காரனைக் கூப்பிடுகிறோம். அந்தப் போலீஸ்காரன் துஷ்டனை விரட்டிவிட்டு நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றியபின் நம்மையும் பயமுறுத்திக் தண்டிப்பானா என்ன? அல்லது தானும் நம்மோடோயே வீட்டுக்குள் வந்து இருந்து விடுவானா? நம்மை ஆபத்திலிருந்து ரக்ஷித்து வீட்டில் சேர்த்தபின் அவன் போய்விடுவான் அல்லவா? இம்மாதிரிதான் கெட்ட எண்ணம் போக ஈச்வரனை எண்ணுகிறோம். இந்த ஸ்மரணையாவது கெட்டதை விரட்டிவிட்டு, நம்மை அறம், பொருள் இன்பம், வீடு என்பதில் ‘வீடு’ என்கிறார்களே அதில் சேர்த்துவிட்டுத் தானும் போய்விடும். மனஸை வைத்துக்கொண்டு ஆரம்பிக்கும் பக்தி மனஸ் அற்றுப் போகும் ஞானத்தில் கொண்டு விட்டுவிடும்.

ஸஜ்ஜனங்களின் கூட்டுறவும் இப்படித்தான் எல்லா உறவும் அற்றுப்போகிற நிலைக்குக் கொண்டு விட்டு விடும். ஒரு விதமான பற்றும் இல்லாமலிருக்க வேண்டும் என்றால் அது உடனே ஸாத்யமாயில்லை. அதனால் கெட்ட ஸஹவாஸத்தை விட்டு ஸத்ஸங்கம் சேரவேண்டும். இதுவும் உறவுதான். ஆனால் ஒரு பழம் நன்றாகக் கனிந்தபின் தானாக இற்று விழுந்து விடுகிறமாதிரி , இது ஒருநாள் முடிந்துவிடும். இதைவிட உயர்ந்த ஏகாந்த அநுபவத்தில் சேர்த்துவிடும். ” ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் ” என்று ஆசார்யாள் (‘பஜகோவிந்த’த்தில்) சொல்கிறார்.

இப்படியே God-thoughtலிருந்து no-thought உண்டாகும். ஆனால் இது முதலிலிருந்த சூன்ய no-thought இல்லை;பரிபூர்ண ஸ்திதி; ‘தாட் ‘எழுப்புகிறதற்கு இடமேயில்லாமல் ஞானம் பூர்ணமாக ரொம்பிய நிலை.

‘ஸத்ஸங்கம்’ என்பதற்கு இன்னொரு அர்த்தம் சொல்லலாம். ஸத்வஸ்து என்பது எக்காலும் மெய்ப் பொருளாயிருக்கும் ஆத்மா ஒன்றுதான். தேஹாத்ம புத்தியை நீக்கி அந்த ‘ஸத்’ தான நிஜ ஆத்மாவில் சேர்வதுதான் ‘ஸத்ஸங்கம்’. ஸத்புருஷர்களின் ஸங்கத்தினால் ஏற்படும் நிஸ்ஸங்கத்வம் கடைசியில் இந்தப் பெரிய ‘ஸத்’தின் ஸங்கத்தைத்தான் உண்டாக்கித் தரவேண்டும். அப்போது “நான், நான்”என்று இப்போது நினைத்துக் கொண்டிருப்பது எதுவோ, நம்முடைய இத்தனை உபத்ரவங்களுக்கும் காரணம் எதுவோ, அது ஏக பரமாத்ம ஞானத்தில் அடிபட்டுப் போய், அந்த ஞான வஸ்துவின் பூர்ணானந்த ரூபமாகவே நாம் ஆகிவிடலாம. அது வேறே, நாம் வேறே என்று நினைக்கிறவரை ‘நான்’, ‘எனது’ என்கிற எண்ணங்கள் (அஹங்கார-மமகாரங்கள் என்பவை) இருந்து கொண்டேதான் இருக்கும். முதலில் ஸத்வஸ்துவை ஈச்வரன் என்று வேறேயாக வைத்தே அவன் கையில் இந்த அஹங்கார மமகார ‘நானை’ப் பிடித்துக் கொடுத்தால் இது உபத்ரவம் பண்ணுவதை விட்டுவிடும். அப்புறம் அவன் வேறேயாக இருக்க வேண்டாம் என்று இதைத் தானாகவே உயர்த்தி, உணர்த்திக் காட்டி விடுவான்.

அதனால் ஒன்றையும் நினைக்காமல் மௌனமாயிருப்பதென்று முதலில் வாயின் மௌனத்துடன் ஈச்வர ஸ்மரணை பண்ணுவதாக ஆரம்பிக்கப்பட வேண்டும். பரமாத்மாவை நம்முடைய இஷ்ட தேவதை எதுவோ அதுவாக பாவித்து இப்படி ஸ்மரிக்க வேண்டும். ஸாக்ஷாத் பராசக்தியாகவோ, உமாமஹேச்வரனாகவோ, லக்ஷ்மி நாராயணனாகவோ பாவித்து மௌனமாக த்யானம் பண்ண வேண்டும். அதற்கப்புறம் இந்த நினைப்பும் போவது அந்தப் பராசக்தியின் அநுக்ரஹத்தால் நடக்க வேண்டியபோது நடக்கட்டும். மௌனமாக ஈச்வர ஸ்வரூப த்யானமும், மனஸுக்குள்ளேயே நாம ஜபமும்தான் நாம் செய்ய வேண்டியது.

கண்டதை நினைத்துக் கொண்டிருப்பதிலிருந்து நேரே இப்படி ஈச்வர நினைப்புக்குப் போனாலும் போகலாம். அல்லது எந்த நினைப்பும் வராமலிருக்கும் படியாகக் கொஞ்சம் பழகிக் கொண்டுவிட்டு, அப்புறம் அது வெறும் ஜடஸ்திதியாக நின்று விடாமலிருப்பதற்காக அந்த கட்டத்தில் ஈச்வர பரமாக நினைக்க ஆரம்பிக்கலாம். இந்த கட்டத்தில் அது கொஞ்சம் பலமாகவே ஈச்வரனிடம் ஒட்டிக் கொள்ள ஆரம்பிக்கும்.

சிந்தனையை நிறுத்துவது

வாய் மௌனத்தோடு, தினமும் கொஞ்ச நேரமாவது எதையும் நினைக்காமல், சிந்தனை தாரையை அடக்கி வைக்க வேண்டும். என்று சாஸ்திரம் சொல்கிறது “தூஷ்ணீம் கிஞ்சித் அசிந்தயேத்“. ஸாதிப்பது கஷ்டந்தான். இதற்கென்றே உட்கார்ந்தாலும், “எப்படி ஒன்றையும் நினைக்காமலிருப்பது?’ ஒன்றையும் நினைக்காமலிருக்க வேண்டும்’ என்ற நினைவுதானே இப்போதும் வந்து கொண்டிருக்கிறது?” என்று தோன்றும். மனஸ் எதையும் நினைக்காமலிருக்க வேண்டுமென்று பிரயாஸைப்படுவதும் மனஸின் ஒரு காரியம்தான். ‘சிந்தையை அடக்கியே சும்மா இருக்கும் திறம் அரிது‘ என்று சொன்னது இதனால்தான். ஆனாலும் இப்படிப் பண்ண வேண்டும் என்ற பூர்ண ஈடுபாட்டோடு விடாமுயற்சியுடன் இதற்காக உட்கார்வது என்று ஆரம்பித்தால், ஈச்வர க்ருபையில் அந்த லக்ஷ்யம் கொஞ்சங் கொஞ்சமாகக் கைகூட ஆரம்பிக்கும். நாம் பண்ணக்கூடியது யத்தனம்தான். பலன் ஈச்வரன்தான் தரவேண்டும். அதனால் ‘சும்மா’ என்று தாயுமானவர் சொன்னபடி ஒரு சிந்தையும் இல்லாமல் உட்கார வேண்டும் என்ற தாபத்தோடு முயற்சியைத் தொடர்ந்து கொண்டே போனால், என்றைக்கோ ஒருநாள் அவன் ஸித்தியை அநுக்ரஹிப்பான்.

ஒன்றையும் நினைக்காமலிருக்க வேண்டும் என்பதற்காக ஸாதனை பண்ணும்போது ஒரு ஸ்டேஜில் சிலபேருக்கு மனஸ் சிறிது நேரம் காலியாகப் போய்விடுவதுண்டு. அதாவது அதில் எண்ணம் எழும்பாதுதான். ஆனாலும் அது ஆத்மாநுபவமாக இல்லாமல், வெறும் சூன்யமாக இருக்கும். மனஸின் ஓட்டம் நின்று விட்டாலும் ஆத்ம ஜ்யோதிஸ்ஸின் ப்ரகாசம் தெரியாத நிலையாயிருக்கும். இது ஞானம் இல்லாத நிலை. ஆத்மாநுபவம் என்பதோ பூர்ண ஞான நிலை. ஆத்ம ‘ஜ்யோதிஸ்’ என்றேனே, அப்படியானால் அது அக்கினி மாதிரி ஒரு ரூபத்தில் இருக்கும் என்றா அர்த்தம்? இல்லை. ஞானத்தைத்தான் இங்கே ‘ஜ்யோதிஸ்’ என்பது. அறிவொளி என்பது இதுதான். இங்கிலீஷிலும் ஞானம் வருவதை enlightenment,illumination என்றே சொல்கிறார்கள். இந்த அறிவு இன்னொன்றை ஆராய்ச்சி பண்ணித் தெரிந்து கொள்ளும் அறிவில்லை. இது இன்னொன்றாக எதுவுமே இல்லாத தன்னைத் தானே தெரிந்து கொள்வதுதான். இப்படிப்பட்ட ஞானாநுபவம் இல்லாமலே, நல்ல தூக்கத்தில் ஒரு தினுஸு மாதிரி, ஒரு எண்ணமும் இல்லாமல் புத்தி வெறிச்சாகிவிடுகிற நிலை கொஞ்சம் நாழி ஏற்படலாம். அதற்காக பயப்படக் கூடாது. இது தாற்காலிகமாயிருப்பதுதான். ஆத்மாவோ, ஈச்வரனோ, அந்த எதுவோ ஒன்று தெரிய வேண்டும். என்ற தாபத்தை விடாமல், பிரார்த்தனை பண்ணிக்கொண்டு, தொடர்ந்து இந்தப் பிரயாஸையில் உட்கார்ந்து வந்தால் இந்த சூன்ய நிலையிலிருந்தே ஈச்வர பரமாக, ஆத்ம ஸம்பந்தமாக மாத்திரம் நினைக்கிற நிலைக்குப் போய் விடுவோம். From no-thought to God-thought. நினைப்பு இருக்கும்; ஆனால் இப்போதுள்ளதுபோல் இந்திரியப் பிடுங்கல் உள்ள நினைப்பாக இல்லாமல் துன்பக் கலப்பே இல்லாத பேரின்பமான ஈச்வர நினைப்பாக இருக்கும். அதற்கப்புறம் அந்த ஈச்வரனும் வேறேயாயில்லாத பரம ஞான நிலையில் எல்லா நினைப்புகளும், அவற்றுக்கு மூலமான மனஸும் கரைந்துபோய், நிறைந்த நிறைவான மௌனம் ஸித்திக்கும்.

பரப்பிரம்மத்தை மனஸாலும் வாக்காலும் பிடிக்க முடியாது. மனஸும் வாக்கும் அற்றுப்போன மௌனம் தான் அதை விளக்குவது!

மௌந வ்யாக்யா ப்ரகடித பரப்ரஹ்ம தத்வம்*

பாஷா வ்யாக்யானத்தால் நெருங்க முடியாத பிரம்ம தத்துவத்துக்கு மௌனமேதான் பாஷையாகி வியாக்யானம் செய்கிறதாம்!

இப்போது நானா தினுஸான நினைப்பு, இப்படியில்லாமல் ஆக்கிக்கொள்ள மௌன அப்பியாஸம், அதிலே ஒரு நினைப்பும் இல்லாமல் சூன்யமாகப் போகிற நிலை, அப்புறம் ஈச்வரன் ஒருத்தனைப் பற்றியே நினைப்பு, முடிவிலே அவனையும் வெளியேயிருந்து நினைப்பதாக இல்லாமல் அவனாகவே ஆகிவிடுகிற நினைப்பற்ற பூர்ணத்வம்.

முதலிலிருந்தே அந்த சூன்யநிலை அதோடு முடிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாயிருந்து விட்டால் எல்லாம் ஸரியாகிவிடும். பூர்ண நிலைக்குப் போய்விடலாம். முதலில் உண்டாகும் சூன்யத்தை ‘லயம்’என்றும் முடிவில் உண்டாகும் பூர்ணத்தை ‘ஸமாதி’என்றும் சொல்வார்கள்.


* ஆசார்யாளின் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்

தொடக்க நிலையும் முடிவு நிலையும்

மௌனம் என்றால் எந்த விதத்திலும் அபிப்ராயம் தெரிவிக்காமலிருக்க வேண்டும். வாயை மட்டும் மூடிக் கொண்டு ஏதாவது ஜாடை காட்டித் தெரிவித்துக் கொண்டிருந்தால் பிரயோஜனமில்லை. அவசியமானதற்கு மட்டும் எழுதி வேண்டுமானால் காட்டலாம். ‘காஷ்ட மௌனம்’என்று மரக்கட்டை மாதிரி இருப்பதாக ஸங்கல்பித்துக் கொண்ட ஸமயங்களில் ஜாடை காட்டுவது, எழுதிக் காட்டுவது எதுவுமே நிச்சயமாகக் கூடாது.

ஆரம்பத்தில் எல்லாக் காரியத்தையும், எண்ண ஓட்டத்தையும் விட்டு மௌனமாயிருப்பதென்றால் முடியாதுதான். அந்த நிலையில் சைகை, எழுதிக் காட்டுவது இவற்றோடாவது மௌனம் இருக்க ஆரம்பித்துவிட வேண்டியதுதான். என்ன ஜாடை காட்டினாலும், எழுதினாலும் பேசுகிற அளவுக்கு வளவளப்பும் வ்ருதாவும் இருக்காதல்லவா?ஸதா அரித்துக் கொண்டிருக்கிற நாக்கை எப்படியும் அன்றைக்குக் கட்டிப் போடுகிறோமல்லவா? அந்த மட்டுக்கும் நல்லதுதான். இப்படி ஆரம்பித்து, அப்புறம் கொஞ்சங் கொஞ்சமாகச் சித்த ஆட்டங்களை விட்டு விட்டு, மௌனம் என்றால் மனஸுக்குப் பரம சாந்தி என்று ஆக்கிக் கொண்டு, அப்படியே அலையில்லாத ஸமுத்ரம் மாதிரி ஆகிவிட வேண்டும். குறைபாட்டுடனாவது ஏதோ ஒரு இடத்தில் ஆரம்பித்து விட வேண்டும். அப்யாஸத்தினால் குறைகள் குறைந்து கொண்டேபோய் பூர்ண நிலை வரும்;நிஜ மௌனம் ஸித்திக்கும்.

இப்போது ஆரம்பிக்கிற மௌனம் ஈச்வர ஆராதனைக்கு ஒரு ஸாதனம். பிற்பாடு பூர்த்திஸ்தானத்தில் அந்த மௌனமே, ‘ஈச்வரன் வேறேயாக இல்லை. அவனுக்குத் தனியாக ஆராதனை என்று பண்ணவேண்டியதில்லை’ என்ற ஸாத்ய லக்ஷ்யமாக நிஜ ரூபத்தில் பிரகாசிக்கும். வாய் பேசவில்லை என்பது மட்டுமின்றி, கண் பார்க்கவில்லை, காது கேட்கவில்லை, எல்லாவற்றுக்கும் மேலே மனஸில் ஒரு எண்ணங்கூட எழும்பவில்லை என்று ஆகிவிடுவதுதான் அந்த லக்ஷ்ய ஸ்திதியான நிஜ மௌனம்.

நாம் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும்போதுகூட ஒரு எறும்பு மேலே ஊறினால் அதை அப்படியே தேய்த்து விடுகிறோம்; கொஞ்சம் குளிர்காற்று அடித்தால் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்கிறோம்; பக்கம் மாறிப் படுக்கிறோம். காலமே (காலையில்) எழுந்திருக்கிற போது நமக்கே இது எதுவும் ஞாபகமிருப்பதில்லை. அதாவது இந்த விஷயங்கள் பூர்ணமாக நம் ப்ரக்ஞைக்கு எட்டாமலே இப்படியெல்லாம் பண்ணியிருப்போம். ஆனாலும் அந்தத் தூக்க நிலையில்கூட சரீராபிமானம் போகாததால்தான் சரீர ரக்ஷணைக்காக இந்தக் கார்யங்களைப் பண்ணியிருக்கிறோம். எந்தக் கார்யமானாலும் அதை மூளையின் டைரக்ஷ்னின் கீழே நரம்பு மண்டலம்தான் பண்ணுகிறது. அது உள்ளே இத்தனை சரீராபிமானம் ஊறியதாக இருக்கிறது. நம் இச்சையின் பேரில் ‘வாலன்டரி’யாக இல்லாமல், தன்பாட்டுக்கு நரம்புகள் அநேக கார்யங்களைப் பண்ணுகின்றன. கழுத்து, இடுப்புப் பக்கங்களில் ஏதாவது நிமிண்டுகிற மாதிரிப்பட்டால் ‘குறு குறு’ என்று பண்ணிச் சிரிப்பாக வருகிறது. பயமாயிருந்தால் ‘அல்ப ஸங்க்யை’ வருகிறது;பெரிய கஷ்டம் வந்தாலோ வயிற்றையே கலக்குகிறது. ஒருத்தன் கொட்டாவி விட்டால் மற்ற பேரும் கொட்டாவி விடுகிறோம். இதெல்லாம் நரம்புகளின் ‘இன்வாலன்டரி’க் கார்யங்கள்.

நிஜ மௌனத்தில் எப்படியிருக்கும்? உடம்பின் மேல் மலைப் பாம்பே போனாலும் தெரியாது. ஒரு reflex-ம் இருக்காது. குளிரோ, வெயிலோ எதுவானாலும் தெரியாமல் அடித்த சிலையாக நிஷ்டையில் இருப்பான். தேஹாத்ம புத்தி அடியோடு போய்விட்டதால், தேஹரக்ஷணை பண்ணிக்கொள்ள வேண்டுமென்று உள்ளூர இருக்கும் அபிமானம் இன்வாலன்ட்ரியாகக்கூட இல்லாமற்போய், அவனுடைய நரம்பு சலிக்கவே சலிக்காது. அவன்தான் எல்லாப் புலன்களையும் அடக்கி வெற்றி கண்ட ‘ஜிதேந்திரியன்’.

நிஜ மௌனத்துக்கு நம்மைப் பழக்கிக் கொண்டோமானால், அப்படிச் செய்யும்போது நம்முடைய மநுஷ்ய வேகங்கள், பாவங்கள் எல்லாம் போய்விடும். உள்ளுக்குள்ளே இருக்கிற பொறி, பரமாத்ம ஜ்யோதிஸ்ஸின் பொறி, இப்போது நம்முடைய இந்திரிய ஜீவனத்திலே சாம்பலில் மூடிப்போனதுபோல் மங்கி இருக்கிற பொறி, மௌன ஸாதனையில் கண கண வென்று ஜ்வலிக்க ஆரம்பிக்கும். எந்தப் பரமாத்ம ஜ்யோதிஸ்ஸிலிருந்து இந்தப் பொறி வந்ததோ அதை நோக்கிப் போய் அதிலே கலந்து அதுவாகவே ஆகிவிடுவதற்காக அது மேலே மேலே ப்ராகசித்துக்கொண்டு போகும். இப்படி நடக்க நடக்க இப்போது நம்மிடம் பற்றியெரிகிற இந்திரிய வேகங்கள் தணிந்து மங்கி அணைந்து கொண்டே வரும். கடைசியில் ஏக ஜ்யோதிஸ்ஸாக, ‘நிவாத தீபம்‘ என்கிறபடி, காற்றடிக்காத இடத்தில் உள்ள தீபமாக ஆத்மா மட்டுமே ப்ரகாசிக்கும். ஜீவாத்மா, பரமாத்மா என்ற பேதமில்லாத ஏக ஜ்யோதிஸ். அதுதான் மௌனத்தின் பூர்த்தி ஸ்தானம்.

ஜலத்தை கலக்குக் கலக்கு என்று கலக்கிக் கொண்டிருந்தால் அதற்குள்ளே இருக்கிற ஒரு முத்து எப்படித் தெரியும்? நாம் அநேக எண்ணங்களால் மனஸைக் கலக்கிக் கொண்டிருப்பதால்தான் உள்ளேயிருக்கும் ஆத்மா என்ற முத்து தெரியவில்லை. எண்ண அலைகளையெல்லாம் நிறுத்திவிடுவதுதான் நிஜ மௌனம். அதற்கு உபாயமாயிருப்பது இப்போது நாம் அநுஷ்டிக்க வேண்டிய வாய் மௌனம். யோக ஸாம்ராஜ்யத்துக்குள்ளே பிரவேசிப்பதற்கு முதல் வாசலே மௌனம்தான் என்று ஆசார்யாள் “விவேக சூடாமணி” யில் சொல்லியிருக்கிறார்: யோகஸ்ய ப்ரதமம் த்வாரம் வாங்நிரோத : (ச்லோ.367) .

கண் விழிப்பது

யிற்றுக்காக வாயைத் திறக்காத உபவாஸ நாட்களில் பேச்சுக்காகவும் வாயைத் திறக்கப்படாது என்பதோடு இன்னொரு நியமத்தையும் சேர்த்துக் கொள்வதுண்டு. வாயைத் திறக்கக்கூடாத அந்த நாளில் கண்ணை மட்டும் மூடக்கூடாது என்று நியமம்! இராப்பூராவும் கண் விழித்துக்கொண்டு, பகவத் சிந்தனை, கதை, கீர்த்தனை, பாராயணம் இதுகளிலேயே செலவழிக்க வேண்டும். வாயை மூடுவதாலேயே இப்படிக் கண்ணை மூடாமலிருக்கிற தெம்பு மன ஈடுபாடு இரண்டும் உண்டாகும். (‘கண்ணை மூடக்கூடாது’ என்பது ‘தூங்கக் கூடாது’ என்ற அர்த்தத்தில். நாள் முழுதும் கண்ணைத் திறந்துகொண்டே இருக்கணும் என்ற அர்த்தத்தில் இல்லை) , சிவராத்ரிக்கும் வைகுண்ட ஏகாதசிக்கும் ராக்கண் விழிப்பதை முக்யமாக வைத்துக் கொண்டிருக்கிறோம். விடிய விடிய ஸினிமா பார்த்து புண்யத்துக்கு (‘புண்யத்தை’ இல்லை) மூட்டை கட்டுவதாக வழக்கம் ஏற்பட்டிருக்கிறது! பிரதி ஏகாதசிக்குமே இந்த நியமம் சொல்வதுண்டு. ஏகாதசியில் செய்யவேண்டியது “போஜன த்வயம்” இல்லை, “போஜன த்ரயம்”; அதாவது உபவாஸம், பஜனை என்ற இரண்டோடு ‘ஜாகரணம்’ என்று மூன்றாவதாக ராக்கண் முழிப்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுண்டு.

கீதையில் ‘பட்டினி கிடக்கிறவனுக்கு யோகம் வராது’. தூங்காமலே இருக்கிறவனுக்கு யோகம் வராது (நாத்யச்னதஸ்து யோகோஸ்தி … ஜாக்ரதோ நைவ சார்ஜுந) என்று இருந்தாலும் அந்த ஜெனரல் ரூலுக்கு அநுகூலம் பண்ணுவதற்காகவே அதற்கு மாறாக ஒவ்வொரு புண்ய தினங்களில் பட்டினி கிடந்து கொண்டு, கண்ணைக் கொட்டாமல் விழித்துக்கொண்டு ஈச்வர ஸ்மரணம் பண்ண வேண்டும் என்று சாஸ்திரம் வைத்திருக்கிறது. கிருஷ்ண பரமாத்மாவும் சாஸ்திரந்தான் ப்ரமாணம் (தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே) என்றவர்தான்.

மௌனத்துக்குரிய நாட்கள்

வயிற்று உபவாஸம் மாதிரியே இதற்கும் தர்ம சாஸ்திரத்தில் அநேக காலங்களை விதித்திருக்கிறது. “மௌநேந போக்தவ்யம்” என்று கேள்விப்பட்டிரூப்பீர்கள். சாப்பிடுகிற காலங்களில் பேசப்படாது என்று அர்த்தம். வாய்க்கு உள்ள இரண்டு வேலைகளில் ஒன்றாகச் சாப்பிடும் போது, இன்னொரு வேலையான பேச்சையும் தரப்படாது. இப்படி விதித்தபோதே ருசியையும் கட்டுப்படுத்தியதாக ஆகிறது. மௌனமாக போஜனம் செய்யும் போது, ‘இது வேண்டும், அது வேண்டாம். இதற்கு உப்புப் போடு, அதற்கு நெய் விடு’ என்றெல்லாம் சொல்ல முடியாதல்லவா?

ஸோம வாரம், குருவாரம், ஏகாதசி முதலிய நாட்களில் ஒன்றில் மௌனம் அநுஷ்டிக்கலாம்.

ஸோமவாரம், குருவாரம் ஆஃபீஸ் இருப்பதால் ஞாயிற்றுகிழமைகளில் மௌனமிருக்கலாம். பாதி நாளாவது இருக்கலாம்.

எத்தனையோ கார்யங்களை வைத்துக் கொண்டிருந்தார் காந்தி. ஒரு வீட்டிலே அப்பா என்றாலே எவ்வளவோ கார்யம் இருக்கும். அவரை தேசபிதா, Father of the Nation என்கிறார்கள். அப்படியிருந்தும் வாரத்தில் ஒருநாள் மௌனம் வைத்துக் கொண்டிருந்தார். ‘மௌனமாயிருக்கக் கட்டுப்படி ஆகாது’ என்று எவரும் சொல்ல முடியாதபடி அவர் ஒரு எக்ஸாம்பிள்.

மௌனமும், பட்டினியும் சேர்ந்தால், அதாவது வாய்க்கு இரண்டு காரியமுமே இல்லாமலிருந்தால் அன்று மனஸ் பாரமார்த்திகத்திலே நன்றாக ஈடுபடுவதை அநுபவத்தில் தெரிந்துகொள்ளலாம். அதனால் அவரவர் இஷ்ட தெய்வத்துக்காக சிவராத்ரியோ, ஷஷ்டியோ, ஏகாதசியோ பட்டினி கிடக்கிறபோது மௌனமாகவும் இருக்கலாம். அம்பாளை உபாஸிக்கிறவர்கள் நவராத்ரி பூராவும் மௌனமிருப்பார்கள்.

நாம் பலவிதமான பேச்சுகளைப் பேசி கெட்ட விஷயங்களை விஸ்தாரம் பண்ணியும், பல பேரைத் திட்டியும் வாக்தேவியான ஸரஸ்வதிக்கு அபசாரம் பண்ணுகிறோம். இதற்குப் பிராயசித்தமாக ஸரஸ்வதியின் நஷத்ரமான மூலத்தில் மௌனம் இருப்பதுண்டு*.

தினமுமே அரைமணியாவது மௌனமாக த்யானம் பண்ண வேண்டும்.


*ஸ்ரீசரணர்களே இவ்வாறு மூல நக்ஷத்ரம் தோறும் மௌனம் அநுஷ்டிப்பவர்கள்தாம்.

முனிவன் இயல்பு மௌனம்

மனஸை அடக்கினவன்தான் முனி. ‘முனிவனின் குணம் எதுவோ அதுதான் மௌனம்’ என்பதே அந்த வார்த்தைக்கு அர்த்தம். முனிவனின் குணத்தில் பேசாமலிருப்பதுதான் தலை சிறந்தது என்று பொதுக் கருத்து இருந்திருப்பதால்தான் ‘மௌனம்’ என்றால் ‘பேசாமலிருக்கிறது’ என்று ஆகிவிட்டிருக்கிறது. மனஸை அடக்கினவனின் தன்மை என்றாலும், அதுவே நம் மாதிரி மனஸ் அடங்காதவர்கள் அந்த நிலையை அடைவதற்க்கு உதவுவதாகவுமிருக்கிறது.

பிரம்மஞானியான முனிவன் மௌனம், மௌனமாயில்லாமலிருப்பது என்ற இரண்டையும் விட்டு விடுகிறான் என்று உபநிஷத் சொல்கிறது*. முதலில் படித்துப் பண்டிதனாகி, ரொம்பவும் வாதங்கள் சர்ச்சைகள் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்கிறான். அப்புறம் பாண்டித்யம், பேச்சு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரே நிஷ்டையில் போய்விடுகிறான். அப்புறம் பிரம்ம ஞானியாகிறபோது மௌனத்தையும் விட்டு விடுகிறான், மௌனமில்லாமையையும் விட்டுவிடுகிறான் என்று உபநிஷத் சொல்கிறது. இப்படிச் சொன்னால் அது எப்படி ஸாத்யம்? ஒன்று பேச்சை விட்டு மௌனமாக வேண்டும்; அல்லது மௌனத்தை விட்டுப் பேச வேண்டும். இரண்டையுமே விடுவது என்றால் எப்படி முடியும்? அந்த ஞானியின் நிலைக்குப் போனால்தான் இது புரியும். அவனுக்குப் பேச வேண்டும் என்றோ, பேச வேண்டாமென்றோ எந்த சொந்த அபிப்ராயமும் ஆசையும் இருக்காது. லோகாநுக்ரஹத்துக்காக அவன் மூலம் உபதேசமாகப் பேச்சு வந்தாலும் அவன் தான் பேசுவதாக நினைக்க மாட்டான். அதைவிடப் பெரிய மௌன உபதேசத்தில் தக்ஷிணாமூர்த்தி மாதிரி அவனைப் பராசக்தி உட்கார்த்தி வைத்திருந்தாலும் ‘நாம் மௌன வ்ரதம் என்று ஒன்று அநுஷ்டிக்கிறோம்’ என்று அவன் நினைக்க மாட்டான். இதைத்தான் மௌனம், அமௌனம் இரண்டையும் விட்ட நிலை என்பது.

அது நமக்கு ரொம்ப தூரத்தில் இருக்கிற லக்ஷ்யம்.

நடைமுறையில் நாம் கொஞ்சம் மௌன உபவாஸத்தை அநுஷ்டிக்க ஆரம்பிக்க வேண்டும்.


* ப்ருஹதாரண்யகம் 3.5.1

வாய் வேலை குறைய*

வெளியிலே உள்ள விஷயங்களை நமக்குத் தெரிவிப்பவை ஞானேந்திரியங்கள். வெளியிலே உள்ள வஸ்துவைக் கண் பார்க்கிறது; சப்தத்தைக் காது கேட்கிறது;வாஸனையை மூக்கு மோந்து பார்க்கிறது;அனேக வஸ்துக்களை த்வக் (சர்மம்) ஸ்பர்சித்து அது கெட்டியா, கொள கொளவா, சொர சொரப்பா, வழவழப்பா என்றெல்லாம் தெரிவிக்கிறது; ருசியை வாய் (நாக்கு) அறிவிக்கிறது. இப்படி ஐந்து. இவ்வாறு வெளியில் உள்ள வஸ்துக்களின் ஒவ்வொரு தன்மையை அறிவிப்பதாக இல்லாமல், புதுக் காரியமாகத் தானே செய்கிற ஐந்து இந்திரியங்கள் கர்மேந்திரியங்கள் என்று இருக்கின்றன. கை அநேக கார்யத்தைப் பண்ணுகிறது. கால் நடக்கிறது. பாயுவும், உபஸ்தமும் மலம், சிறுநீர் ஆகியவற்றை விஸர்ஜனம் பண்ணுகின்றன. வாய் பேசுகிறது.

இதிலே என்ன பார்க்கிறோம்? வாய் ஒன்றுதான் கர்மேந்திரியமாகவும் இருக்கிறது, ஞானேந்திரியமாகவும் இருக்கிறது. ருசி பார்த்துப் பதார்த்தங்களின் சுவையை அறிவிக்கிற காரியம், பேசிப் பாடிச் சிரிக்கிற காரியம் இப்படி இரண்டு வேலைகள் இந்த இந்திரியம் ஒன்றுக்குத்தான் இருக்கிறது. ஞானேந்திரியமாக இருக்கிறபோதேகூட அதற்கு மற்ற ஞானேந்திரியங்களைவிட வேலை ஜாஸ்தி. பார்ப்பது, கேட்பது முதலான கார்யங்களுக்குக் கண், காது முதாலன இந்திரியங்கள் ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்கொண்டு வேலை செய்வதில்லை. வாய் ருசி பார்ப்பது மட்டும் அதோடு நின்றுவிடாமல், பார்த்த வஸ்துவைக் கடித்து மென்று உமிழ் நீரைச் சுரந்து முழுங்குகிற வேலையையும் செய்கிறது. (ருசி பார்க்கிற ஜிஹ்வாவை (நாக்கை) மட்டும் எடுத்துக் கொள்ளாமல், அதோடு பல், உதடு எல்லாம் சேர்ந்த வாயையே ஞானேந்திரியமாகச் சொல்லிக் கொண்டு போகிறேன்.)

ஆக, மற்ற எந்த அவயவத்தையும்விட வாய்க்குத் தான் வேலை ஜாஸ்தி. ருசி பார்ப்பது, அதாவது சாப்பிடுவது, பேசுவது என்று அதற்கு இரண்டு காரியம் இருப்பதாலேயே, இரண்டையும் பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் பரமேச்வரன் அபிப்ராயமாக இருக்க வேண்டும். ‘வயிற்றைக் கட்டி, வாயைக்கட்டி’ என்கிறபோது சாப்பாடு, பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்துவதுதான் தாத்பர்யம். ஆனால் நேர்மாறாகப் பண்ணுகிறோம். இரண்டு வேலையும் தேவைக்கு அதிகமாகக் கொடுக்கிறோம். வாய்தான் ரொம்ப over-worked! அமித போஜனமாக ஓயாமல் ஏதாவது சாப்பாடு, நொறுக்குத் தீனி, பானம் என்று உள்ளே தள்ளிக் கொண்டேயிருக்கிறோம். எப்போது பார்த்தாலும் வெட்டியாக ஏதாவது பேசிக்கொண்டேயிருக்கிறோம்.

இந்த இரண்டையும் ரொமபக் குறைத்துக் கொள்ள வேண்டும். ‘கண்டதைத் தின்று கெடுதலை வரவழைத்துக் கொள்ளாதே;ஸாத்விக ஆஹாரம் மட்டும் மிதமாகச் சாப்பிடு; அதுவுங்கூட இல்லாமல் அவ்வப்போது உபவாஸமிரு’என்கிறது சாஸ்திரம். இதேபோல, ‘வாயில் வந்ததைப் பேசிக்கொண்டே போகாதே; அதனால் பிறத்தியானையும் கெடுக்காதே, பகவத் விஷயமாகப் பேசு, பாடு, பஜனை பண்ணு’என்று சொல்லிவிட்டு, உபவாஸத்தில் ஸாத்விகாஹாரம் கூடப் பண்ணப்படாது என்று வைத்திருக்கிற மாதிரியே, ‘பகவத் பரமான பேச்சும் கீர்த்தனமுங்கூட இல்லாமல் அவ்வப்போது வாயை மூடிக் கொண்டு மௌனமாக இரு’ என்று பெரியோர்கள் உபதேசித்திருக்கிறார்கள்.

இப்போது எங்கே பார்த்தாலும் பேச்சுத்தான். ‘பேச்சாளார்கள்’ என்றே பலர். ஒலிபெருக்கி வைத்து மீட்டிங்குகள். கல்யாணம், கார்த்திகை, வேறே விழாக்கள் என்று எங்கே பார்த்தாலும் ‘லௌட் ஸ்பீக்கர்’ வைத்து சத்தம். இந்த அவஸ்தையைப் பார்க்கிறபோது, மௌனம் அதை அநுஷ்டிக்கிறவனுக்குச் செய்கிற நல்லது ஒரு பக்கம் இருக்கட்டும், இது ஸமூஹத்துக்கே செய்கிற தொண்டு என்று தோன்றுகிறது.

இத்தனை வாதப் பிரதிவாதச் சண்டையும் பேச்சால் தானே? மௌனம் அநுஷ்டித்தால் அன்றைக்காவது சண்டை சச்சரவு இராது. “மௌனம் கலஹம் நாஸ்தி” இதுவும் ஒரு ஸமூஹ ஸேவைதான்.

சண்டை வராது என்பதாக ஒரு கெடுதலை இல்லாமல் பண்ணுவது மட்டுமில்லை; நல்லதுகளையும் உண்டாக்கிக் கொடுக்கிற சக்தி மௌனத்துக்கு உண்டு. ஸகல புருஷார்த்தங்களையும் பெற்றுத்தர அது உபாயம் என்பதால்தான் “மௌனம் ஸர்வார்த்த ஸாதகம்” என்று சொல்வது.

மனஸைக் கட்டுப்படுத்துவதற்கு வழியாக ஒவ்வோர் இந்த்ரியத்தையும் கட்டுப்படுத்தி வைக்கப் பழக வேண்டும். வாயைக் கட்டவேண்டும். அதாவது சாப்பாட்டிலும் கட்ட வேண்டும்; பேச்சிலும் கட்ட வேண்டும். ஏதாவது சொல்லி, நம்மை ‘எக்ஸ்ப்ரெஸ்’ பண்ணிக்கொண்டேயிருக்கவேண்டுமென்று இருக்கும் அரிப்பைக் கட்டுப்படுத்துகிற நெறிதான் மௌனம். இதை ஸாதித்தால் மனஸை அடக்குகிறதும் கொஞ்சங் கொஞ்சமாக ஸுலபமாகிவிடும்.


*இவ்விஷயமாக “தெய்வத்தின் குரல்” : முதற்பகுதியில் “கணக்காயிருக்கணும்” என்ற உரையும் பார்க்க.