கண் விழிப்பது

யிற்றுக்காக வாயைத் திறக்காத உபவாஸ நாட்களில் பேச்சுக்காகவும் வாயைத் திறக்கப்படாது என்பதோடு இன்னொரு நியமத்தையும் சேர்த்துக் கொள்வதுண்டு. வாயைத் திறக்கக்கூடாத அந்த நாளில் கண்ணை மட்டும் மூடக்கூடாது என்று நியமம்! இராப்பூராவும் கண் விழித்துக்கொண்டு, பகவத் சிந்தனை, கதை, கீர்த்தனை, பாராயணம் இதுகளிலேயே செலவழிக்க வேண்டும். வாயை மூடுவதாலேயே இப்படிக் கண்ணை மூடாமலிருக்கிற தெம்பு மன ஈடுபாடு இரண்டும் உண்டாகும். (‘கண்ணை மூடக்கூடாது’ என்பது ‘தூங்கக் கூடாது’ என்ற அர்த்தத்தில். நாள் முழுதும் கண்ணைத் திறந்துகொண்டே இருக்கணும் என்ற அர்த்தத்தில் இல்லை) , சிவராத்ரிக்கும் வைகுண்ட ஏகாதசிக்கும் ராக்கண் விழிப்பதை முக்யமாக வைத்துக் கொண்டிருக்கிறோம். விடிய விடிய ஸினிமா பார்த்து புண்யத்துக்கு (‘புண்யத்தை’ இல்லை) மூட்டை கட்டுவதாக வழக்கம் ஏற்பட்டிருக்கிறது! பிரதி ஏகாதசிக்குமே இந்த நியமம் சொல்வதுண்டு. ஏகாதசியில் செய்யவேண்டியது “போஜன த்வயம்” இல்லை, “போஜன த்ரயம்”; அதாவது உபவாஸம், பஜனை என்ற இரண்டோடு ‘ஜாகரணம்’ என்று மூன்றாவதாக ராக்கண் முழிப்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுண்டு.

கீதையில் ‘பட்டினி கிடக்கிறவனுக்கு யோகம் வராது’. தூங்காமலே இருக்கிறவனுக்கு யோகம் வராது (நாத்யச்னதஸ்து யோகோஸ்தி … ஜாக்ரதோ நைவ சார்ஜுந) என்று இருந்தாலும் அந்த ஜெனரல் ரூலுக்கு அநுகூலம் பண்ணுவதற்காகவே அதற்கு மாறாக ஒவ்வொரு புண்ய தினங்களில் பட்டினி கிடந்து கொண்டு, கண்ணைக் கொட்டாமல் விழித்துக்கொண்டு ஈச்வர ஸ்மரணம் பண்ண வேண்டும் என்று சாஸ்திரம் வைத்திருக்கிறது. கிருஷ்ண பரமாத்மாவும் சாஸ்திரந்தான் ப்ரமாணம் (தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே) என்றவர்தான்.

மௌனத்துக்குரிய நாட்கள்

வயிற்று உபவாஸம் மாதிரியே இதற்கும் தர்ம சாஸ்திரத்தில் அநேக காலங்களை விதித்திருக்கிறது. “மௌநேந போக்தவ்யம்” என்று கேள்விப்பட்டிரூப்பீர்கள். சாப்பிடுகிற காலங்களில் பேசப்படாது என்று அர்த்தம். வாய்க்கு உள்ள இரண்டு வேலைகளில் ஒன்றாகச் சாப்பிடும் போது, இன்னொரு வேலையான பேச்சையும் தரப்படாது. இப்படி விதித்தபோதே ருசியையும் கட்டுப்படுத்தியதாக ஆகிறது. மௌனமாக போஜனம் செய்யும் போது, ‘இது வேண்டும், அது வேண்டாம். இதற்கு உப்புப் போடு, அதற்கு நெய் விடு’ என்றெல்லாம் சொல்ல முடியாதல்லவா?

ஸோம வாரம், குருவாரம், ஏகாதசி முதலிய நாட்களில் ஒன்றில் மௌனம் அநுஷ்டிக்கலாம்.

ஸோமவாரம், குருவாரம் ஆஃபீஸ் இருப்பதால் ஞாயிற்றுகிழமைகளில் மௌனமிருக்கலாம். பாதி நாளாவது இருக்கலாம்.

எத்தனையோ கார்யங்களை வைத்துக் கொண்டிருந்தார் காந்தி. ஒரு வீட்டிலே அப்பா என்றாலே எவ்வளவோ கார்யம் இருக்கும். அவரை தேசபிதா, Father of the Nation என்கிறார்கள். அப்படியிருந்தும் வாரத்தில் ஒருநாள் மௌனம் வைத்துக் கொண்டிருந்தார். ‘மௌனமாயிருக்கக் கட்டுப்படி ஆகாது’ என்று எவரும் சொல்ல முடியாதபடி அவர் ஒரு எக்ஸாம்பிள்.

மௌனமும், பட்டினியும் சேர்ந்தால், அதாவது வாய்க்கு இரண்டு காரியமுமே இல்லாமலிருந்தால் அன்று மனஸ் பாரமார்த்திகத்திலே நன்றாக ஈடுபடுவதை அநுபவத்தில் தெரிந்துகொள்ளலாம். அதனால் அவரவர் இஷ்ட தெய்வத்துக்காக சிவராத்ரியோ, ஷஷ்டியோ, ஏகாதசியோ பட்டினி கிடக்கிறபோது மௌனமாகவும் இருக்கலாம். அம்பாளை உபாஸிக்கிறவர்கள் நவராத்ரி பூராவும் மௌனமிருப்பார்கள்.

நாம் பலவிதமான பேச்சுகளைப் பேசி கெட்ட விஷயங்களை விஸ்தாரம் பண்ணியும், பல பேரைத் திட்டியும் வாக்தேவியான ஸரஸ்வதிக்கு அபசாரம் பண்ணுகிறோம். இதற்குப் பிராயசித்தமாக ஸரஸ்வதியின் நஷத்ரமான மூலத்தில் மௌனம் இருப்பதுண்டு*.

தினமுமே அரைமணியாவது மௌனமாக த்யானம் பண்ண வேண்டும்.


*ஸ்ரீசரணர்களே இவ்வாறு மூல நக்ஷத்ரம் தோறும் மௌனம் அநுஷ்டிப்பவர்கள்தாம்.

முனிவன் இயல்பு மௌனம்

மனஸை அடக்கினவன்தான் முனி. ‘முனிவனின் குணம் எதுவோ அதுதான் மௌனம்’ என்பதே அந்த வார்த்தைக்கு அர்த்தம். முனிவனின் குணத்தில் பேசாமலிருப்பதுதான் தலை சிறந்தது என்று பொதுக் கருத்து இருந்திருப்பதால்தான் ‘மௌனம்’ என்றால் ‘பேசாமலிருக்கிறது’ என்று ஆகிவிட்டிருக்கிறது. மனஸை அடக்கினவனின் தன்மை என்றாலும், அதுவே நம் மாதிரி மனஸ் அடங்காதவர்கள் அந்த நிலையை அடைவதற்க்கு உதவுவதாகவுமிருக்கிறது.

பிரம்மஞானியான முனிவன் மௌனம், மௌனமாயில்லாமலிருப்பது என்ற இரண்டையும் விட்டு விடுகிறான் என்று உபநிஷத் சொல்கிறது*. முதலில் படித்துப் பண்டிதனாகி, ரொம்பவும் வாதங்கள் சர்ச்சைகள் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்கிறான். அப்புறம் பாண்டித்யம், பேச்சு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரே நிஷ்டையில் போய்விடுகிறான். அப்புறம் பிரம்ம ஞானியாகிறபோது மௌனத்தையும் விட்டு விடுகிறான், மௌனமில்லாமையையும் விட்டுவிடுகிறான் என்று உபநிஷத் சொல்கிறது. இப்படிச் சொன்னால் அது எப்படி ஸாத்யம்? ஒன்று பேச்சை விட்டு மௌனமாக வேண்டும்; அல்லது மௌனத்தை விட்டுப் பேச வேண்டும். இரண்டையுமே விடுவது என்றால் எப்படி முடியும்? அந்த ஞானியின் நிலைக்குப் போனால்தான் இது புரியும். அவனுக்குப் பேச வேண்டும் என்றோ, பேச வேண்டாமென்றோ எந்த சொந்த அபிப்ராயமும் ஆசையும் இருக்காது. லோகாநுக்ரஹத்துக்காக அவன் மூலம் உபதேசமாகப் பேச்சு வந்தாலும் அவன் தான் பேசுவதாக நினைக்க மாட்டான். அதைவிடப் பெரிய மௌன உபதேசத்தில் தக்ஷிணாமூர்த்தி மாதிரி அவனைப் பராசக்தி உட்கார்த்தி வைத்திருந்தாலும் ‘நாம் மௌன வ்ரதம் என்று ஒன்று அநுஷ்டிக்கிறோம்’ என்று அவன் நினைக்க மாட்டான். இதைத்தான் மௌனம், அமௌனம் இரண்டையும் விட்ட நிலை என்பது.

அது நமக்கு ரொம்ப தூரத்தில் இருக்கிற லக்ஷ்யம்.

நடைமுறையில் நாம் கொஞ்சம் மௌன உபவாஸத்தை அநுஷ்டிக்க ஆரம்பிக்க வேண்டும்.


* ப்ருஹதாரண்யகம் 3.5.1

வாய் வேலை குறைய*

வெளியிலே உள்ள விஷயங்களை நமக்குத் தெரிவிப்பவை ஞானேந்திரியங்கள். வெளியிலே உள்ள வஸ்துவைக் கண் பார்க்கிறது; சப்தத்தைக் காது கேட்கிறது;வாஸனையை மூக்கு மோந்து பார்க்கிறது;அனேக வஸ்துக்களை த்வக் (சர்மம்) ஸ்பர்சித்து அது கெட்டியா, கொள கொளவா, சொர சொரப்பா, வழவழப்பா என்றெல்லாம் தெரிவிக்கிறது; ருசியை வாய் (நாக்கு) அறிவிக்கிறது. இப்படி ஐந்து. இவ்வாறு வெளியில் உள்ள வஸ்துக்களின் ஒவ்வொரு தன்மையை அறிவிப்பதாக இல்லாமல், புதுக் காரியமாகத் தானே செய்கிற ஐந்து இந்திரியங்கள் கர்மேந்திரியங்கள் என்று இருக்கின்றன. கை அநேக கார்யத்தைப் பண்ணுகிறது. கால் நடக்கிறது. பாயுவும், உபஸ்தமும் மலம், சிறுநீர் ஆகியவற்றை விஸர்ஜனம் பண்ணுகின்றன. வாய் பேசுகிறது.

இதிலே என்ன பார்க்கிறோம்? வாய் ஒன்றுதான் கர்மேந்திரியமாகவும் இருக்கிறது, ஞானேந்திரியமாகவும் இருக்கிறது. ருசி பார்த்துப் பதார்த்தங்களின் சுவையை அறிவிக்கிற காரியம், பேசிப் பாடிச் சிரிக்கிற காரியம் இப்படி இரண்டு வேலைகள் இந்த இந்திரியம் ஒன்றுக்குத்தான் இருக்கிறது. ஞானேந்திரியமாக இருக்கிறபோதேகூட அதற்கு மற்ற ஞானேந்திரியங்களைவிட வேலை ஜாஸ்தி. பார்ப்பது, கேட்பது முதலான கார்யங்களுக்குக் கண், காது முதாலன இந்திரியங்கள் ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்கொண்டு வேலை செய்வதில்லை. வாய் ருசி பார்ப்பது மட்டும் அதோடு நின்றுவிடாமல், பார்த்த வஸ்துவைக் கடித்து மென்று உமிழ் நீரைச் சுரந்து முழுங்குகிற வேலையையும் செய்கிறது. (ருசி பார்க்கிற ஜிஹ்வாவை (நாக்கை) மட்டும் எடுத்துக் கொள்ளாமல், அதோடு பல், உதடு எல்லாம் சேர்ந்த வாயையே ஞானேந்திரியமாகச் சொல்லிக் கொண்டு போகிறேன்.)

ஆக, மற்ற எந்த அவயவத்தையும்விட வாய்க்குத் தான் வேலை ஜாஸ்தி. ருசி பார்ப்பது, அதாவது சாப்பிடுவது, பேசுவது என்று அதற்கு இரண்டு காரியம் இருப்பதாலேயே, இரண்டையும் பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் பரமேச்வரன் அபிப்ராயமாக இருக்க வேண்டும். ‘வயிற்றைக் கட்டி, வாயைக்கட்டி’ என்கிறபோது சாப்பாடு, பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்துவதுதான் தாத்பர்யம். ஆனால் நேர்மாறாகப் பண்ணுகிறோம். இரண்டு வேலையும் தேவைக்கு அதிகமாகக் கொடுக்கிறோம். வாய்தான் ரொம்ப over-worked! அமித போஜனமாக ஓயாமல் ஏதாவது சாப்பாடு, நொறுக்குத் தீனி, பானம் என்று உள்ளே தள்ளிக் கொண்டேயிருக்கிறோம். எப்போது பார்த்தாலும் வெட்டியாக ஏதாவது பேசிக்கொண்டேயிருக்கிறோம்.

இந்த இரண்டையும் ரொமபக் குறைத்துக் கொள்ள வேண்டும். ‘கண்டதைத் தின்று கெடுதலை வரவழைத்துக் கொள்ளாதே;ஸாத்விக ஆஹாரம் மட்டும் மிதமாகச் சாப்பிடு; அதுவுங்கூட இல்லாமல் அவ்வப்போது உபவாஸமிரு’என்கிறது சாஸ்திரம். இதேபோல, ‘வாயில் வந்ததைப் பேசிக்கொண்டே போகாதே; அதனால் பிறத்தியானையும் கெடுக்காதே, பகவத் விஷயமாகப் பேசு, பாடு, பஜனை பண்ணு’என்று சொல்லிவிட்டு, உபவாஸத்தில் ஸாத்விகாஹாரம் கூடப் பண்ணப்படாது என்று வைத்திருக்கிற மாதிரியே, ‘பகவத் பரமான பேச்சும் கீர்த்தனமுங்கூட இல்லாமல் அவ்வப்போது வாயை மூடிக் கொண்டு மௌனமாக இரு’ என்று பெரியோர்கள் உபதேசித்திருக்கிறார்கள்.

இப்போது எங்கே பார்த்தாலும் பேச்சுத்தான். ‘பேச்சாளார்கள்’ என்றே பலர். ஒலிபெருக்கி வைத்து மீட்டிங்குகள். கல்யாணம், கார்த்திகை, வேறே விழாக்கள் என்று எங்கே பார்த்தாலும் ‘லௌட் ஸ்பீக்கர்’ வைத்து சத்தம். இந்த அவஸ்தையைப் பார்க்கிறபோது, மௌனம் அதை அநுஷ்டிக்கிறவனுக்குச் செய்கிற நல்லது ஒரு பக்கம் இருக்கட்டும், இது ஸமூஹத்துக்கே செய்கிற தொண்டு என்று தோன்றுகிறது.

இத்தனை வாதப் பிரதிவாதச் சண்டையும் பேச்சால் தானே? மௌனம் அநுஷ்டித்தால் அன்றைக்காவது சண்டை சச்சரவு இராது. “மௌனம் கலஹம் நாஸ்தி” இதுவும் ஒரு ஸமூஹ ஸேவைதான்.

சண்டை வராது என்பதாக ஒரு கெடுதலை இல்லாமல் பண்ணுவது மட்டுமில்லை; நல்லதுகளையும் உண்டாக்கிக் கொடுக்கிற சக்தி மௌனத்துக்கு உண்டு. ஸகல புருஷார்த்தங்களையும் பெற்றுத்தர அது உபாயம் என்பதால்தான் “மௌனம் ஸர்வார்த்த ஸாதகம்” என்று சொல்வது.

மனஸைக் கட்டுப்படுத்துவதற்கு வழியாக ஒவ்வோர் இந்த்ரியத்தையும் கட்டுப்படுத்தி வைக்கப் பழக வேண்டும். வாயைக் கட்டவேண்டும். அதாவது சாப்பாட்டிலும் கட்ட வேண்டும்; பேச்சிலும் கட்ட வேண்டும். ஏதாவது சொல்லி, நம்மை ‘எக்ஸ்ப்ரெஸ்’ பண்ணிக்கொண்டேயிருக்கவேண்டுமென்று இருக்கும் அரிப்பைக் கட்டுப்படுத்துகிற நெறிதான் மௌனம். இதை ஸாதித்தால் மனஸை அடக்குகிறதும் கொஞ்சங் கொஞ்சமாக ஸுலபமாகிவிடும்.


*இவ்விஷயமாக “தெய்வத்தின் குரல்” : முதற்பகுதியில் “கணக்காயிருக்கணும்” என்ற உரையும் பார்க்க.

நிறைவு பெறுவோம்

வைகுண்ட ஏகாதசி, மஹா சிவராத்ரி, கோகுலாஷ்டமி, ராமநவமி முதலிய விசேஷ நாட்களில் கூட நாம் வாயைக் கட்டாமல், வயிற்றைச் கட்டாமலிருந்தால் அது இந்த தேசத்தில் பிறந்த நமக்கு ரொம்பக் குறைவாகும். வயிறு குறைந்தாலும் மனஸ் நிறையும்படிப் பண்ணிக் கொள்வதே நமக்கு நிறைவு. அப்படிப் பண்ணிக் கொள்வதற்கான ஸங்கல்ப பலத்தை பகவான் எல்லாருக்கும் அநுக்ரஹிக்க வேண்டும்.

வியாதிக்கு மருந்து மாதிரி பசிக்குச் சாப்பாடு ரொம்பவும் அளவாகத்தான் போட வேண்டும். அதாவது பசியைத் தீர்த்துக்கொள்ளத்தான் ஆஹாரமே தவிர ருசியைத் தீர்த்துக்கொள்ள அல்ல என்று ஆசார்யாள் சொல்லியிருப்பதாகச் சொன்னேன். மற்ற வியாதிகளுக்கும் இந்த ‘க்ஷுத் வியாதி’க்கும் ஒரு வித்யாஸம், தலைவலிக்கு மருந்து போட்டால் அது போய் விடுகிறது; மறுபடி என்றைக்கோ ஒரு நாள்தான் வருகிறது. ஜ்வரமும் இப்படித்தான். ஆனால் இந்தப் பசி வியாதி மட்டும் இப்போது மருந்து போட்டு ஸ்வஸ்தப்படுத்தி விட்டாலும், வேளை தப்பாமல் மறுபடி மறுபடி ‘அட்டென்டன்ஸ்’ கொடுத்துக்கொண்டேயிருக்கிறது! இப்படி இயற்கையை ஏவிவிட்டு ஈச்வரன் வேடிக்கை பார்க்கிறான். நமக்குப் பரீக்ஷை வைக்கிறான். நாம் பாஸ் பண்ணினால்தான் பெருமை. அவனுடைய அருள் துணையை நம்பி, நாம் ஸங்கல்பம் பண்ணிக்கொண்டு உறுதியாயிருந்தால், அவன் கைகொடுத்துப் பாஸ் பண்ண வைத்து, நல்லாரோக்யம், நல்ல ஆத்மாபிவிருத்தி முதலான ப்ரைஸ்களையும் கொடுப்பான்.

நம்முடைய த்ருட சித்தம் முக்யம். எங்கேயோ ஒரு இடத்துக்குப் போகிறோம். அவர்கள் விலக்கப்பட்ட பதார்த்தம் எதையோ உபசாரம் பண்ணிச் சாப்பிடச் சொல்கிறார்கள். அந்த ஸமயத்தில் தாக்ஷிண்யத்தாலோ, அவர்கள் தப்பாக நினைக்கப் போகிறார்களே என்றோ அதைச் சாப்பிட்டுவிடக் கூடாது. ப்ரின்ஸிபிளை விடக் கூடாது.

பெங்காலில் விதவைகள் எத்தனை கடுமையாக ஏகாதசி வ்ரதாநுஷ்டானம் பண்ணுகிறார்கள் என்பதைப் பார்த்து அதை நாமும் கொஞ்சமாவது ‘எமுலேட்’ பண்ண முயலவேண்டும். பெங்கால்காரர்கள் மத்ஸ்ய ப்ராம்மணர்கள்தான்; ஆனால் விதவைகளை அந்த ஸாமானைத் தொடமாட்டார்கள். அதோடு ஏகாதசியை அவர்களே மற்ற எவரையும் விடத் தீவிரப் பற்றுடன் அநுஷ்டிக்கிறார்கள். வாயில் சொட்டுப் பச்சைத் தண்ணி கூட விடாமல் அன்று வ்ரதமிருக்கிறார்கள். அங்கே கோடையில் கோட்டையடுப்பு மாதிரி ஊர் முழுக்க நெருப்புக் காற்று அடிக்கிற போதுகூட, வாய் அப்படியே உலர்ந்து வறண்டு ஒட்டிக் கொண்டாலும் அந்த விதந்துக்கள் சொட்டுத் தீர்த்தங்கூட விட்டுக் கொள்வதில்லை என்று பிடிவாதமாயிருப்பது வழக்கம். இதில் உஷ்ணம் தாங்காமல் அநேகம் பேர் செத்தே போனார்கள். இந்த மாதிரி விடக்கூடாது என்று பண்டிதர்களையெல்லாம் கூட்டி ஒரு ஸதஸ் நடத்தி சாஸ்த்ர ப்ரகாரமே கடுமையான உபவாஸ விதியைக் கொஞ்சம் இளக்கித் தர வழி இருக்கிறதா என்று பார்க்க முடிவு செய்தார்கள். ‘மிஞ்சிப் போனால் ஏதாவது பானம், கீனம் பண்ணாலமென்று சாஸ்திரத்திலேயே இருந்தால்கூட நாங்கள் அன்று வாயில் எதையும் விட்டுக்கொண்டு முழுங்க மாட்டோம்; செத்தாலும் சாவோம்’ என்று அந்த விதவைகள் சொல்லிவிட்டார்களாம். இதன்மேல் அந்தப் பண்டிதர்கள் சாஸ்திரங்களைப் பார்த்து, ‘ஸரி, ஏகாதசியன்று வாயில் தீர்த்தம் விட்டுக்கொள்ள வேண்டாம்; காதில் விட்டுக் கொள்ளட்டும். அதனால் பிழைக்கிறவர் பிழைக்கட்டும்’ என்று தீர்மானம் செய்தார்களாம். அத்தனை கடுமையான அநுஷ்டானம் அங்கே இருந்திருக்கிறது.

நாக்கை அடக்க முடியவில்லை என்று விடவே கூடாது. ஆப்பிளைச் சாப்பிட்டுத்தான் ஆடம் அடிமட்டத்துக்கு விழுந்துவிட்டான் என்கிறார்கள். Forbidden fruit மாதிரி நம் சாஸ்திரப்படி forbidden food எதையுமே சாப்பிடக் கூடாது. மீறினால் அது நம்மைக் கீழேதான் இறக்கும். இம்மாதிரி ஒரு ‘டெம்ப்டேஷன்’ உண்டாகிற சமயங்களில், ‘இப்போது இது உசந்த ருசி என்று சாப்பிட்டாலும், சாப்பிடுகிற இந்த ஐந்து, பத்து நிமிஷங்களுக்கு அப்புறம் ருசி நாக்கில் நிற்கிறதா என்ன? இது உசந்த பதார்த்தம் என்று சாப்பிட்டாலும் இது என்ன சாச்வதமாக வயிற்றிலே இருந்துகொண்டு மறுபடி பசிக்காமலே பண்ணப் போகிறதா என்ன?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டு, கண்ட்ரோல் பண்ணிக் கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு நல்லறிவு உண்டாவதற்கு மறுபடியும் பகவானையேதான் வேண்டிக் கொள்கிறேன்.

ஏகாதசிகளின் பெயர்கள்

ஒரு வருஷத்துக்கு 365 நாளல்லவா? இதனால் இருபத்தநாலு பக்ஷத்துக்குமேல் சில நாட்கள் வருஷத்தில் எஞ்சி நிற்கும். இது காரணமாகச் சில வருஷங்களில் இருபத்தைந்து ஏகாதசிகள் வந்துவிடும். பாத்ம புராணத்தில் உத்தர காண்டத்தில் இந்த இருபத்தைந்துக்கும் தனித்தனிப் பெயர் சொல்லி, அதை அநுஷ்டிக்க வேண்டிய முறை, அதனால் பயனடைந்தவர்களின் கதை, ஆகியவற்றை விவரமாகச் சொல்லியிருக்கிறது.

தநுர்மாஸ (மார்கழி மாத) க்ருஷ்ணபக்ஷ ஏகாதசியன்று ஆரம்பித்திருக்கிறது. இதற்கு ‘உத்பத்தி ஏகாதசி’ என்று பெயர். அடுத்ததுதான் அந்த மாஸ சுக்லபக்ஷத்தில் வரும் பிரஸித்தமான வைகுண்ட ஏகாதசி. ‘மோக்ஷ ஏகாதசி’ என்று இதற்குப் பாத்ம புராணத்தில் பேர் கொடுத்திருக்கிறது. அம்ருதம் கடைந்தெடுத்தது அன்றுதான். க்ருஷ்ண பரமாத்மா கீதோபதேசம் என்று உபநிஷத்துக்களைக் கடைந்தெடுத்து ஞானாம்ருதமாகக் கொடுத்ததும் அன்றுதான் என்பதாலேயே அன்றைக்கு ‘கீதா ஜயந்தி’ என்று கொண்டாடுகிறார்கள். மூன்றாவது ஏகாதசி தை க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ‘ஸபலா’. நாலாவது அம்மாஸ சுக்ல பக்ஷத்தில் வருகிற ‘புத்ரதா’. ஐந்தாவது மாசி க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ‘ஷட்திலா’. ஆறாவது அம்மாஸம் சுக்லபக்ஷத்தில் வரும் ‘ஜயா’. இப்படியே வரிசையாக பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாஸங்களில் ‘விஜயா’, ‘ஆமலகீ’, ‘பாப மோசனிகா’, ‘காமதா’, ‘வரூதினீ’, ‘மோஹினி’, ‘அபரா’, ‘நிர்ஜலா’என்று எட்டு ஏகாதசிகள் வருகின்றன. பீமன் வருஷத்தில் ஒரே ஒரு தரம் சுத்தோபவாஸமிருந்தது ‘நிர்ஜலா’ என்ற இந்த ஆனி மாஸ சுக்லபக்ஷ ஏகாதசியன்றுதான். இதோடு பதினாலு ஏகாதசிகள் ஆகிவிட்டன. பதினைந்தாவதாக ஆடி க்ருஷ்ண பக்ஷத்தில், ‘யோகினி’ என்பது. அடுத்தது ஆடி சுக்ல பக்ஷத்தில் மஹாவிஷ்ணு சயனிக்க ஆரம்பிக்கிற சாதுர்மாஸ்ய ஆரம்பத்தில் வருகிற ஏகாதசி*. அதற்கு ‘சாயினி’ என்று பெயர். அப்புறம் ஆவணி, புரட்டாசி. ஐப்பசி மாஸங்களில் வரும் ‘சாமிகா’ ‘புத்ரதா’ (முன்னையே தையில் ஒரு ‘புத்ரதா’வந்து விட்டது. இங்கே மறுபடியும் அதே பெயர்தான் போட்டிருக்கிறது) , ‘அஜா’, ‘பத்மநாபா’, ‘இந்திரா’, ‘பாபாங்குசா’ என்ற ஆறு ஏகாதசிகளின் போதும், கார்த்திகையில் க்ருஷ்ண பக்ஷத்திலே வரும் ‘ரமா’என்ற ஏகாதசியின் போதும் பகவான் நித்திரை பண்ணிக் கொண்டேயிருக்கிறார். இருபத்து நாலாவதாக வருகிற கார்த்திகை சுக்லபக்ஷ ஏகாதசியன்று அவர் விழித்துக் கொள்கிறார். அதனால் அதற்கு ‘ப்ரபோதினி’ என்றே பெயர். மறுநாளோடு சாதுர்மாஸ்யம் பூர்த்தி.

அதிகப்படியாக வரும் இருபத்தைந்தாவது ஏகாதசிக்கு ‘கமலா’ என்று பெயர்.

இப்படி நம் மதத்தில் சிறப்பித்துச் சொல்லியிருக்கும் ஏகாதசியில் எல்லாரும் வ்ரதாநுஷ்டானம் பண்ண வேண்டும். சாப்பிடாமல் இருப்பது வெறும் ‘அநாசக’ மாக இல்லாமல், பகவானோடு சேர்ந்து வாழும் ‘உப-வாஸ’மாக ஆகவேண்டும். இதற்கு ஏகாதசியன்று நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகவன் நாமத்தை ஜபமாகவோ, பஜனையாகவோ உச்சரிக்க வேண்டும்; எவ்வளவு அதிக நாழிகை பகவத் த்யானம் செய்ய முடியுமோ அவ்வளவு செய்யவேண்டும்; அன்றைக்கு ஸத்கதா ச்ரவணமோ, பாராயணமோ, இரண்டுமோ அவசியம் செய்யவேண்டும். பகவான் அல்லது பாகவதோத்தமர்களின் புண்ய சரித்ராம்ருதம் அன்று காது வழியாகக் கொஞ்சமாவது உள்ளே இறங்க வேண்டும். இப்படிச் செய்து நல்லாரோக்யத்திலிருந்து பக்தி, ஞான, வைராக்யங்கள் வரையில் எல்லா நன்மைகளையும் அடைய வேண்டும்.


*அதற்கு மறுநாளான த்வாசியன்றே சாதுர்மாஸ்ய விரதத் தொடக்கம்.

எல்லா வகுப்பாரும் ஏற்றம் பெற்றது

ராஜபோகம் என்றே சொல்வது வழக்கம். ராஜாக்கள் மது, மாம்ஸாதிகள் உள்பட ஓரளவுக்குச் சாப்பிடுவதற்கு அதிகாரம் பெற்றவர்கள். ஆனால் அவர்களும் ஏகாதசி உபவாஸத்தை நியமத்தோடு அநுஷ்டித்திருக்கிறார்கள். ஏகாதசி என்றவுடனே நாம் நினைக்கிற அம்பரீஷன், ருக்மாங்கதன் இரண்டு பேருமே க்ஷத்ரிய ராஜாக்கள்தான்.

கார்த்தாலே எழுந்தவுடன் குளிர்ந்த வேளையில், குளிர்ந்த மனஸோடு நினைத்து நமஸ்காரம் பண்ண வேண்டிய பரம பாகவதர்களைப் பற்றி ஒரு ச்லோகம் உண்டு.

ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக

வ்யாஸ ()்பரீஷ சுக சௌநக பீஷ்ம தால்ப்யான் |

ருக்மாங்கத ()்ஜுந வஸிஷ்ட விபீஷணாதீன்

புண்யான் இமான் பரம பாகவதான் ஸ்மராமி ||

இதிலே அம்பரீஷனும், ருக்மாங்கதனும் இடம் பெற்றதற்குக் காரணமே அவர்களுடைய ஏகாதசி அநுஷ்டானந்தான்.

ருக்மாங்கதன் தன் ராஜ்யத்தில் அத்தனை பேரையும் ஏகாதசி விரதம் இருக்கும்படியாகப் பண்ணினான். அதனால் ப்ரஜைகள் எல்லோரும் பக்தி ஞானங்களில் முன்னேறியதோடு நல்ல ஆயுர்-ஆரோக்யங்களுடனும் இருந்தார்கள் என்று நாரத புராணத்தில் இருக்கிறது.

ரொம்பவும் உச்சத்திலுள்ள ராஜாக்கள் மட்டுமில்லை. கைசிகன் என்று தீண்டாதார் வகுப்பைச் சேர்ந்த பக்தர். இவரும் ஏகாதசி உபவாஸ நியமத்தால் உயர்வு பெற்றிருக்கிறார். ‘கைசிக ஏகாதசி’ என்றே ஒரு ஏகாதசிக்கு வைஷ்ணவர்கள் பெயர் சொல்வார்கள்.

மாத்வர்களின் தீவிர அநுஷ்டானம்

தர்ம சாஸ்த்ரமே விதித்த வ்ரதமாக ஏகாதசி இருப்பதால் மாத்வர், வைஷ்ணவர், ஸ்மார்த்தர் ஆகிய எல்லாருமே அதை அநுஷ்டித்தாலும் ரொம்பவும் தீவிரமாகக் கடைப்பிடிப்பது மாத்வர்தான்.

ஸாதாரணமாக வேத மந்திரங்களையே நேராகப் பிரயோஜனப்படுத்திச் செய்கிற கர்மாக்களுக்குத்தான் மதாநுஷ்டானங்களில் ப்ராதான்யம் [முதலிடம்] கொடுப்பது வழக்கம். நம் மதத்துக்கு மூல நூல் வேதம்தானே? அதோடு பித்ரு கர்மா, தேவ கர்மா என்ற இரண்டுக்குள் பித்ரு கர்மாவுக்குப் ப்ராதான்யம் கொடுத்து விட்டு அப்புறம்தான் தேவ கர்மாவைச் செய்ய வேண்டும். சிராத்தம் என்பது வேத மந்திரங்களாலேயே ஆகிற கர்மா. அதோடு அது பித்ரு கர்மாவும் ஆகும். ஏகாதசி உபவாஸத்தில் வேத மந்திரங்களுக்கு இடமில்லை. நாமஜபம், பஜனை ஆகியன பௌராணிகமும் தாந்த்ரிகமுமே ஆனவை. பூஜை பண்ணுவதில் மட்டுமே வேத மந்த்ரங்கள் கொஞ்சம் சேரும். ஏகாதசியை ஒரு உபவாஸமாக தர்ம சாஸ்த்ரம் சொன்னாலும் ச்ராத்தத்தைப் போல ஸ்மார்த்த கர்மாவாக விதிக்கவில்லை. அதோடு ஏகாதசி என்பது பித்ரு ஆராதனைக்கு அப்புறமே வருகிற தேவ ஆராதனைதான்.

ச்ராத்தம் என்பது ரொம்பவும் வைதிகமான ஸ்மார்த்த கர்மா. அதிலே பித்ரு சேஷமாக போஜனம் பண்ண வேண்டியதும் ஒரு அங்கம். ச்ராத்தம் பண்ணி விட்டுப் பித்ரு சேஷம் சாப்பிடாவிட்டால் தப்பு.

ஏகாதசியில் ச்ராத்தம் வந்தால் என்ன செய்வது? ‘ச்ராத்தம் பண்ணிப் பித்ரு சேஷம் சாப்பிடத்தான் வேண்டும். ஏனென்றால் ஏகாதசி எவ்வளவு முக்கியமானதாயிருந்தாலும், அதைவிட வைதிகமான ச்ராத்தத்துக்குத் தான் இன்னமும் அதிக முக்யத்வம் தரவேண்டும்’ என்று ஸ்மார்த்தர்களும், வைஷ்ணவர்களும் நினைக்கிறோம். அன்று ஏகாதசி உபவாஸ நியமத்தை விடுவதால் தோஷமில்லை; வேதக் கட்டளைப்படி பண்ணுவதால் நமக்குத் தப்பு வராது என்று நினைத்து ச்ராத்தம் பண்ணி போஜனம் செய்கிறோம்.

ஆனால் மாத்வர்கள் ஏகாதசியன்று ச்ராத்தம் செய்வதில்லை. இந்த வ்ரதாநுஷ்டானந்தான் முக்கியமென்று நினைத்து உபவாஸமிருக்கிறார்கள். ஆனால் அதற்காக சிராத்தத்தை விட்டுவிடுவதில்லை. ஏகாதசியன்று வருகிற சிராத்தத்தை மறுநாள் த்வாதசியன்று செய்கிறார்கள். அதிலும் த்வாதசி ப்ராணை காலம்பறவே [இளங் காலையிலேயே] பண்ணிவிட வேண்டுமென்கிற புராண விதிக்காக, மத்யான்ன காலத்துக்கு அப்புறமே பண்ண வேண்டிய சிராத்தத்தை அன்று ரொம்ப முன்னதாகவே பண்ணி விடுகிறார்கள்.

தீட்டுக் காலத்தில்கூட ஏகாதசி உபவாஸமிருக்க வேண்டும் என்பதில் எல்லா ஸம்பிரதாயக்காரர்களும் ஒத்துப் போகிறார்கள். மற்ற எந்த உபவாஸத்துக்கும் இம்மாதிரி ஸுதக ஆசௌச* காலங்களில் பலனில்லாததால், அவற்றை அப்போது அநுஷ்டிக்க வேண்டியதில்லை என்றே விதி இருக்கிறது. ஏகாதசிக்கு மட்டும் விலக்கு.


* பிரஸவத் தீட்டு ஸுதகம், மரணத் தீட்டு ஆசௌசம்.

உபவாஸமும் உழைப்பும்

“ஏகாதசிக்கு லீவில்லையே! சாப்பிடாமல் எப்படி வேலை பண்ணுவது?” என்றால், இதற்கு இரண்டு விதமாகப் பதில் சொல்கிறேன். ஒன்று: எல்லாரும் ஏகாதசி விரதம் இருப்பதென்று வைத்துக்கொண்டு சர்க்காரிடம் வலியுறுத்திக் கோரிக்கை விட்டால் அன்றைக்கு லீவே விட்டு விடுவார்கள். இரண்டு: இப்படிப் பதினைந்து நாளுக்கு ஒரு நாள் சாப்பிடாததால் வாஸ்தவத்தில் தெம்பு குறையவே குறையாது. ஏதோ ‘ஸென்டிமென்டலா’கத்தான் ‘நாம் சாப்பிடவில்லையே, நமக்கு சக்தி இருக்காது’, என்று பயப்பட்டு அந்த பயத்தினாலேயே பலஹீனத்தை வரவழைத்துக் கொள்வதாயிருக்குமே தவிர வாஸ்தவத்தில் அன்றைக்கு நாம் மனஸைக் கொஞ்சம் உடம்பிலிருந்து விடுவித்துக் கொண்டு ஒதுங்கியிருந்தால், அன்றுதான் கூடுதலாக சக்தி, உத்ஸாஹம் எல்லாம் இருப்பதாகத் தெரியும். மற்ற தினங்களை விடவும் அன்று நறுவிசாக நிறைய வேலை செய்ய முடியும். மனமிருந்தால் வழியுண்டு. உடம்புக்குப் பல தோஷங்களிருந்தாலும் அதற்கு ஒரு பெரிய குணமுண்டு. அதாவது நாம் பழக்குகிறபடி கேட்கும். அதனால் ஆபீஸ் கார்யம் பண்ண முடியாதபடி ஏகாதசி உபவாஸம் எவரையும் அசக்தமாக்கி விடாமல் பழக்கிக் கொண்டு விடலாம். ஆனாலும் அன்று முழுக்க பகவத் பரமாகவே செலவழிக்க வேண்டுமென்பதற்காக வேண்டுமானாலும் எல்லாரும் சேர்ந்து டிமான்ட் பண்ணி லீவ் விடும்படியாகச் செய்யலாம்.

வருஷத்தில் எல்லா ஏகாதசியிலும் பூர்ண உபவாஸமிருக்க முடியாமல் ஒருவேளை பலஹாரம் பண்ணினாலும் ஒரே ஒரு ஏகாதசியாவது பூர்ண உபவாஸமாக முழுப் பட்டினி இருக்க வேண்டும். பீமனுக்குப் பசியே தாங்காதாம். அதனால் அவன் எல்லா ஏகாதசிகளிலும் சுத்த உபவாஸமிருக்க முடியாமல், வியாஸரைக் கேட்டு, இப்படி ஒரு ஏகாதசியில் பூர்ண உபவாஸம் இருப்பதற்கே பலன் உண்டு என்று வரம் வாங்கிக் கொண்டானாம். ஆனால் அந்த ஏகாதசி வைகுண்ட ஏகாதசி அல்ல.

இந்த தேசத்தில் எது எப்படியானாலும் வ்ரதோபவாஸங்களில் தலைசிறந்ததான ஏகாதசியை அநுஷ்டானத்தில் இருக்கப் பண்ண வேண்டும். ரொம்பவும் போற்றிப் பின்பற்றப்பட்டு வந்த இந்த மஹா தர்மம் இரண்டு மூன்று தலைமுறைகளில் கொள்ளை போயிருக்கிறது. இன்றைக்கும் எங்கேயோ இரண்டு மாத்வப் பாட்டிகள் ஏகாதசி சுத்தோபவாஸம் பண்ணுவதால்தான் இந்த மட்டுமாவது மழை கிழை பெய்து கொண்டிருக்கிறது.

ஏகாதசியின் ஏற்றம்

வ்ரதோபவாஸங்களில் உச்ச ஸ்தானத்தில் இருப்பது ஏகாதசி.

ந காயத்ர்ய: பரம் மந்த்ரம் மாது: பர தைவதம் |
ந காச்ய: பரமம் தீர்த்தம் நைகாதச்யா: ஸமம் வ்ரதம் ||

‘காயத்ரிக்கு மேலே மந்தரமில்லை; அம்மாவுக்கு மேலே தெய்வமில்லை (தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை); காசிக்கு மேலே தீர்த்தமில்லை’ என்று சொல்லிக் கடைசியில் ‘ஏகாதசிக்கு ஸமானமாக வ்ரதமெதுவுமில்லை’ என்று முடிகிறது. மற்றதற்கெல்லாம் ‘மேலே’ ஒன்றுமில்லை என்பதால் அவற்றுக்கு ‘ஸமமாக’ ஏதாவது இருந்தாலும் இருக்கலாம் என்று ஆகிறது. ஆனால் வ்ரதங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் ஏகாதசிக்கு ‘மேலே’ மட்டுமில்லாமல், அதற்கு ‘ஸமமாக’க் கூட எதுவுமில்லையென்று ரொம்பவும் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறது.

அஷ்ட வர்ஷாதி: மர்த்ய: அபூர்ணாசீதி வத்ஸர: |
ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷய: உபயோ: அபி ||

என்று தர்ம சாஸ்த்ரம் கூறுகிறது. அதாவது மநுஷ்யராகப் பிறந்தவர்களில் எட்டு வயஸுக்கு மேல் எண்பது வயகுக்கு உட்பட்ட எல்லோரும் இரு பக்ஷங்களிலும் வரும் ஏகாதசிகளில் உபவாஸம் இருக்க வேண்டும் என்று அர்த்தம். எந்த ஸம்ப்ரதாயக்காரன், எந்த ஜாதிக்காரன், ஆணா பெண்ணா என்ற வித்யாஸமில்லாமல், ‘மர்த்ய’, அதாவது மநுஷ்யராகப் பிறந்த எல்லோரும் ஏகாதசி உபவாஸம் அநுஷ்டிக்க வேண்டும் என்று இது சொல்கிறது. ரொம்பவும் கருணையோடு குழந்தைகளையும், தள்ளாத கிழவர்களையும் சிரமப்படுத்த வேண்டாமென்றுதான் எட்டு வயஸுக்குக் கீழே இருப்பவர்களுக்கும், எண்பது வயஸுக்கு மேலே போனவர்களுக்கும் விதிவிலக்குக் கொடுத்திருக்கிறது. அவர்கள் உபவாஸம் இருக்கக் கூடாது என்று கண்டிப்புச் செய்ததாக அர்த்தமில்லை. முடிந்தால் அவர்களும் இருக்கலாம். முடியவில்லை என்பதால் இல்லாவிட்டாலும் பாதகமில்லை என்று அர்த்தம். மஹாராஷ்டிரம் முதலிய இடங்களில் ஏகாதசியன்று பச்சைக் குழந்தைக்குக்கூட பால் கொடுக்காத தாய்மார்கள் இருந்திருக்கிறார்கள்; அந்தக் குழந்தைகளும் அவர்களுடைய நம்பிக்கையிலேயே நன்றாக இருந்திருக்கின்றன என்று சொல்வார்கள். இத்தனை ‘எக்ஸ்ட்ரீம் டிஸிப்ளி’னை தர்ம சாஸ்திரகாரகர்களே எதிர்பார்க்கவுமில்லை; ரூலாகப் போடவுமில்லை.

பகவான் கை கொடுப்பான் என்று நம்பி தைர்யமாகப் பூர்ண நியமத்தோடுதான் ஆரம்பிக்க வேண்டும். அப்படியும் முடியாவிட்டால் வீம்பாகப் பட்டினி கிடந்து தேஹ ச்ரமத்தையும் மனஸ் கஷ்டங்களையும் வரவழைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏகாதசி தவிர மற்ற உபவாஸ தினங்களில் ஒரே பொழுது பலஹாரம் (சாஸ்த்ரீய பலஹாரத்தைச் சொல்லாமல், தோசை-இட்லி பலஹாரத்தைத்தான் சொல்கிறேன்) செய்யலாம். இன்னொரு பொழுது சாஸ்தீரிய பலஹாரமான பழம், பால் மட்டும் சாப்பிடலாம். முடியாதவர்கள் ஒருபொழுது அன்னம், ஒருபொழுது தோசை-இட்லி மாதிரி பலஹாரம் பண்ணலாம். ஆனால் முழு நியமப்படி மாற்றிக் கொள்ள முயற்சி பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும்.

ஏகாதசியில் நிர்ஜலமாயிருந்தால் ரொம்பவும் ச்ரேஷ்டம். அது ரொம்பவும் கஷ்டமும். ஸாத்விகமான பானங்கள் மட்டும் பண்ணுவது அடுத்தபடி. அதற்கும் அடுத்தப்படி நிஜப் பலஹாரமாகப் பழத்தோடு பால் சாப்பிடுவது. அப்புறம் ஒருவேளை மட்டும் பற்றுப்படாத ஸத்துமா, பூரி மாதிரியானவற்றைச் சாப்பிட்டு இன்னொரு வேளை பழம், பால் ஆஹாரம் செய்வது. இன்னம் ஒருபடி கீழே, ஒருவேளை பக்வமான, புஷ்டியான இட்லி, தோசை, பொங்கல், உப்புமா இத்யாதியும் இன்னொரு வேளை பால் பழமும சாப்பிடுவது.

இதற்கும் கீழே போகப்படாது. அதாவது ஒரு வேளைகூட அன்னம் சாப்பிடுவதாக இருக்கப்படாது. மற்ற உபவாஸங்களில் அதமபக்ஷமாக ஒரு வேளை அன்னம், ஒரு வேளை இட்லி தோசை என்று வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஏகாதசியைக் கொண்டு வந்துவிடக் கூடாது. ஏகாதசியில் அன்னத்தைச் சாப்பிட்டால் பிராயச்சித்தமே கிடையாது என்றிருக்கிறது. சிலவிதமான நோயாளிகள், பலஹீனர்கள், அன்னம் தவிர எதுவுமே ஜெரித்துக் கொள்ள முடியவில்லையென்று நிர்பந்தம் ஏற்பட்டால் சாதத்தை கஞ்சி வடிக்காமல் ஹவிஸ்ஸாகப் பண்ணி அதில் உப்பு, புளி, காரம் எதுவுமே சேர்க்காமல் ஒருவேளை மட்டும் ஸ்வல்பம் ஏகாதசியன்று சாப்பிடலாம். ரொம்பவும் அசக்தமானவர்களுக்குத்தான் இந்த relaxation. மற்றவர்களுக்கில்லை. அன்று ஒருவன் சாப்பிட்டால் அதில் ஒவ்வொரு பிடியிலும் நாயின் அமேத்யத்துக்கு ஸமமான பாவத்தைச் சாப்பிடுகிறான் என்று மிகவும் கடுமையாகவே சொல்லியிருக்கிறது: ப்ரதிக்ராஸம் அஸௌ புங்க்தே கிஷ்பிஷம் ச்வாந விட் ஸமம்.