“அரியும் சிவனும் ஒண்ணு!”

புராணங்களைப் பார்த்தால் சிவனிடம் விஷ்ணு தோற்றுப் போனதாகச் சில இடங்களில் இருக்கிறது. சிவன் விஷ்ணுவிடம் தோற்றுப்போனதாகவும் வரலாறுகள் இருக்கின்றன. சிவன் விஷ்ணுவைப் பூஜித்தார் என்று ஓர் இடத்தில் பார்க்கிறோம். சிவனை விஷ்ணு பூஜித்தார் என்று இன்னோர் இடத்தில் காண்கிறோம். சிவனின் அடியைக் காண முடியாமல் விஷ்ணு தோற்றுப் போனார் என்பது திருவண்ணாமலை ஐதிஹ்யம். “விஷ்ணு சிவன் இவர்களில் யார் பலசாலி, என்பதற்காக தேவர்கள் வைத்த போட்டியில், சிவன் விஷ்ணுவிடம் தோற்றுப் போனார். அப்போது ஸ்தம்பித்துப் போன சிவதனுசுதான் ஜனகரிடம் வந்து, பிறகு அதை ராமர் முறித்துப் போட்டார்” என்று ராமாயணத்திலிருந்து தெரிகிறது. சிவனுக்கு விஷ்ணு பூஜை பண்ணும்போது ஒரு பூ குறைய, உடனே தம் கண்ணையே ஒரு கமலமாகக் கருதிப்பறித்தெடுத்து அர்ச்சித்தார் என்று திருவீழிமிழலைப் புராணம் சொல்கிறது. இங்கே சிவனுக்கு நேத்ரார்ப்பணேசுவரர் என்றே பெயர். சிவனுக்கு ப்ரம்மாவின் தலையைக் கிள்ளியதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட, அதைப் போக்கிக் கொள்ள விஷ்ணுவை அவர் பூஜை செய்து, விஷ்ணுவின் அநுக்கிரகத்தால் தோஷத்தைப் போக்கிக் கொண்டார் என்று திருக்கண்டியூரில் ஐதிஹ்யம் இருக்கிறது. இங்கே பெருமாளுக்கு ஹரசாப விமோசனர் என்றே பெயர். இப்படி ஏகப்பட்ட கதைகள் சிவ உத்கர்ஷத்தையும், விஷ்ணு உத்கர்ஷத்தையும் காட்டச் சொல்லலாம்.

‘சிவனும் விஷ்ணுவும் ஒன்றுதான் என்கிறீர்களே! ஒரே ஸ்வாமி தன்னுடனேயே சண்டை போட்டுக் கொள்ளமுடியுமா? தன்னையே பூஜித்துக் கொள்ள முடியுமா?” என்று கேட்பீர்கள்.

உங்களுக்கு சமாதானம் சொல்கிறேன்.

மேலே ராமன் முறித்த சிவதநுசைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? இந்தக் கதையை ராமனுக்கே சொன்னவர் பரசுராமர்தான். ஸீதா கல்யாணம் முடிந்து எல்லோரும் அயோத்திக்குத் திரும்பும்போது, ராமரைப் பரசுராமர் வழி மறிக்கிறார். “சிவ விஷ்ணு யுத்தத்தில் ‘மக்கார்’ செய்த ருத்ரதநுஸை உடைத்துப் பெரிய பேர் வாங்கி விட்டாயேடா! அப்போது அதை ஜயித்த விஷ்ணுவின் வில் இதோ என்னிடம் இருக்கிறது. இதை நாணேற்றிப் பார்” என்று ராமனிடம் சண்டைக்கு வருகிறார் பரசுராமர்.

இந்தப் பரசுராமர் யார்? விஷ்ணுவின் அவதாரம். இவர் சண்டைக்கு அழைத்த ராமர் யார்? அவரும் அதே விஷ்ணுவின் அவதாரம்தான். ஒரே விஷ்ணுவின் அவதாரங்கள் இங்கே சண்டை போட்டுக் கொள்ளவில்லையா? இதில் ஒர் அவதாரம் (பரசுராமர்) இன்னோர் அவதாரத்திடம் (ராமர்) தோற்றுப் போகிறது. சிவனை ஜயித்த விஷ்ணுவின் வில்லை நாணேற்றி, அதை விஷ்ணுவின் அவதாரமான பரசுராமரை ஒட்டிய இன்னோர் அவதாரமான ராமசந்திர மூர்த்தி, பிறகு இதே சிவனுக்கு லிங்கம் வைத்துப் பூஜை செய்து, ராமேசுவரத்தை உண்டாக்கியிருக்கிறார்.

ஜனங்களுக்கு பக்தி உண்டாக்க வேண்டுமானால், அதற்கும், பகவானே வழிகாட்டுகிறார். எப்படி? தாமே பக்தனாக இருந்து வழிகாட்டுகிறார். இதற்காகத்தான் சில இடங்களில் சிவன், பக்தராக இருந்து விஷ்ணுவைப் பூஜிக்கிறார். சில இடங்களில் விஷ்ணு, பக்தனாக இருந்து சிவனைப் பூஜிக்கிறார்.

இரண்டும் ஒன்றுதான். ஹரன்-ஹரி என்ற பெயர்களே ஒன்றாகத்தான் இருக்கின்றன. இரண்டும் சேர்ந்தே ஹரிஹரன், சங்கர நாராயணன் என்றெல்லாம் ஸமரஸ பாவத்தை வளர்க்கிற மூர்த்திகளாக இருக்கின்றன. ஆழ்வார்கள் பெருமானையே ஹரிஹரனாகத்தான் கண்டார்கள்.

தாழ்சடையும் – நீண்முடியும்; ஒண்மழுவும் – சக்கரமும்
சூழ்அரவும் – பொன் நாணும் தோன்றுமால் – சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து

என்று இரண்டிரண்டாக, அதிலும் முதலில் சிவ அம்சங்களையும், இரண்டாவதாக விஷ்ணு அம்சங்களையும் சொல்லி வேங்கடரமண ஸ்வாமியைப் பாடுகிறார் பேயாழ்வார். ‘வெவ்வேறு உருவம் இருந்தாலும் ஒருவன் இன்னொருத்தனில் இருக்கிறான்’ என்று சொல்லி, இங்கும் முதலில் சிவனையே பாடுகிறார் பொய்கை ஆழ்வார்:

பொன்திகழு மேனிப் புரிசடையம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் – என்றும்
இருவரங்கத்தால் திரிவரேனும் ஒருவன்
ஒருவன் அங்கத்தென்றும் உளன்.

பெரிய கவி கம்பனோ, “அரன் அதிகன் உலகளந்த அரி அதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்க்குப் பரகதி சென்று அடைவது அரிய பரிசு” என்று சொல்லிவிட்டார்.

மகா பெரியவர்கள் சொன்னது இருக்கட்டும். சின்னக் குழந்தைகள்கூட, ‘அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு’ என்கிறது. இந்தக் குழந்தை வாக்கு ஆயிரம் பதினாயிரம் வருஷமாக இருந்து வந்திருக்கிறது. குடிசை போட்டால் ஒரிரண்டு வருஷத்தில் பாழாகிறது. செங்கல் வீடானால் நூறு வருஷம் இருக்கிறது. பாறாங்கல்லில் கட்டினால் ஆயிரம் வருஷம் நிற்கிறது. அப்படியே உள்பலம் இல்லாத வார்த்தைகளும் கால வெள்ளத்தில் அடிபட்டுப் போகின்றன. ஆனால் இந்தக் குழந்தைச் சொல் காலத்தைக் கடந்து நிற்கிறது. இதில் இருக்கிற ஸாரத்தினால்தான் தத்துவத்தினால்தான் நிற்கிறது.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s