பகவத்பாதர் தரும் பக்தி லட்சணம்

பக்தனாகி இருப்பவனும் பகவான்தான் என்ற உணர்வோடு, ஸாராம்ஸத்தில் அவன் வேறு, தான் வேறு அல்ல என்ற அநுபவ ஞானத்தோடு, ஈசுவரனை பக்தியோடு அநுபவித்த அத்வைத ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். மதுஸூதன ஸரஸ்வதி, அப்பைய தீக்ஷிதர், ஸதாசிவ பிரம்மேந்திராள், பகவந்நாம போதேந்திராள் ஆகிய பரம ஞானிகள் இவ்விதத்திலேயே பக்தி செய்திருக்கிறார்கள். நிர்குணமாக இருக்கிற பிரம்மத்துக்கும் அனந்த கல்யாண குணம் கொண்ட ஈஸ்வரனுக்கும் இடையே இவர்கள் எந்த பேதமும் காணவில்லை. நிர்குணமாக, நிஷ்களமாக எந்த வஸ்துவை யோகிகள் தியானத்தில் அநுபவிக்கிறார்களோ, அதையே யமுனா தீரத்தின் மணல் வெளியில் நீலஜோதி வெள்ளமாக ஓடி விளையாடும் கண்ணனாக நான் கண்டு மகிழ்கிறேன் என்கிறார் மதுஸூதன ஸரஸ்வதி. ஞானிகள் எல்லாத் தெய்வ வடிவங்களும் ஒன்றேயான பிரம்மம்தான் என்று கண்டு கொண்டவர்கள். என்றாலும் அவற்றில் பூர்வ காலத்தில் தங்கள் மனத்தைக் கவர்ந்த ஒரு ரூபத்தில் ஞானம் வந்த பின்னும் விசேஷ பக்தி செலுத்தினார்கள்.

அத்வைத ஞான சமுத்திரமான சங்கர பகவத்பாதர்கள் அத்தனை தெய்வங்களையும் பிரம்ம ஸ்வரூபமாகவே வைத்து ஸ்தோத்திரம் செய்திருக்கிறார்.

பக்தியின் லக்ஷணத்தையும் பகவத் பாதர்கள் ‘சிவாநந்த லஹரியில்’ வெகு அழகாக வர்ணித்திருக்கிறார். ஐந்து உதாரணங்களைக் கொடுத்து வர்ணித்திருக்கிறார். ‘அழிஞ்சில் விதை எப்படித் தாய் மரத்துடனேயே ஒட்டிக் கொள்கிறதோ, ஊசி எப்படி காந்தத்தால் கவரப்படுகிறதோ, பதிவிரதை எப்படித் தன் பதியின் நினைவிலேயே ஆழ்ந்திருக்கிறாளோ, கொடி எப்படி மரத்தைத் தழுவி வளர்கிறதோ, நதி எப்படி சமுத்திரத்தில் கலக்கிறதோ அப்படியே பசுபதியின் பாதார விந்தங்களில் ஸதா சர்வ காலமும் மனத்தை அமிழ்த்திருப்பது தான் பக்தி என்பது’ என்கிறார் ஸ்ரீ ஆசார்யாள். (“அங்கோளம் நிஜ பீஜ” என்கிற சுலோகம்.)

ஏறு அழிஞ்சில் என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஓர் ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக் கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளே மறைந்துவிடும் என்கிறார்கள். பகவானிடமிருந்து பிரிந்து வந்திருக்கிற நாம் இப்படியே எப்போதும் அவன் பக்கமாக நகர்ந்து நகர்ந்துபோய் முடிவில் அவனிடம் ஒட்டிக் கொண்டு ஒன்றாகிவிட வேண்டும். ஊசி காந்தத்தை நோக்கிப் பாய்ந்து ஒட்டிக் கொள்வது அடுத்த உதாரணம். காந்தத்தில் சேர்ந்த ஊசிக்கும் காந்த சக்தி உண்டாகி அது மற்ற இரும்புப் பொருட்களை இழுப்பதுபோல், பக்தனுக்கும் பகவானின் குணங்களும் சக்திகளும் உண்டாகும் என்று இந்த உதாரணத்தால் காட்டுகிறார். அடுத்தது பதிவிரதையின் உதாரணம். பதிவிரதையின் நினைவு, பேச்சு, காரியம் அனைத்தும் பதியைச் சுற்றியே இருப்பதுபோல நம் மனோ, வாக்கு, காரியங்கள் பகவானையே பற்றி இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது. பதியை மூல சுலோகத்தில் ‘விபு’ என்கிறார். சர்வ வியாபகன் என்பது இதன் பொருள். இதனால் பகவானையே ஏதோ ஓர் இடத்தில் மட்டும் இல்லாமல், எங்குமாக எல்லாமாக இருப்பதாக பாவிக்க வேண்டும் என்று உணர்த்துகிறார். அடுத்தபடியாக கொடியின் உதாரணம். கொழு கொம்பைச் சுற்றிக் கொள்கிற கொடியை நாம் சிறிது விலக்கிப் பிரித்துவிட்டால்கூட அது படாத பாடு பட்டுக் கொஞ்ச நேரத்திலேயே மறுபடியும் கொம்பை வளைத்துச் சுற்றிக் கொண்டு விடும். நம் மனசை ஈசுவர ஸ்மரணையிலிருந்து அலைக்கழிக்கிற இடைஞ்சல்கள் எத்தனை வந்தாலும் நம் லக்ஷியத்தைப் பிடிவாதமாகப் பிடித்திருக்க வேண்டும் என்பதை இந்த திருஷ்டாந்தம் உணர்த்துகிறது. கடைசியில் நதி-சமுத்திர உபமானம். இதுவே பரம அத்வைதம். கடல்தான் மழையாக விழுந்து பிறகு ஆறாகியிருக்கிறது. இரண்டும் வேறு வேறு அல்ல. ஒரு நதியானது எந்த மலை உச்சியில் பிறந்தாலும், அலுக்காமல் சளைக்காமல் ஓடி ஓடி வந்து கடைசியில் கடலில் கலந்து தன்னுடைய தனிப் பெயரையும் உருவத்தையும் இழந்து கடலாகவே ஆகிவிடுகிறது. கடல் அதை எதிர்கொண்டு அழைத்துக் கொள்கிறது. இதனால்தான் நதி சங்கமங்களுக்கு சிறிது தூரம் இப்பாலே அந்த ஆற்றின் ஜலம் உப்புக் கரிக்கிறது. இப்படியே நாமும் நிஜமான பக்தி செலுத்தினால் கருணாசமுத்திரமான பகவான் முன்னே வந்து நம்மை ஆட்கொண்டு தானாக்கிக் கொள்வான்.

முதலில் பொருள் வேண்டும், பவிஷு வேண்டும் என்று வியாபார ரீதியில் பக்தி செய்ய ஆரம்பித்தாலும், பகவானின் குணவிசேஷம் காரணமாக அவனுக்காகவே அவனிடம் அன்பு செலுத்துகிற பக்குவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெறுவோம். கடைசியில் குண விசேஷம் எதுவும் இல்லாத பரமாத்மா ஸ்வரூபமாகவே நாமும் அவனில் கரைந்து அவனாகவே ஆவோம்.

லோக ரீதியில் நன்றாக வாழ்க்கை நடத்துவதற்கும் சரி, த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் முதலிய ஸித்தாந்தங்களின் அநுபவத்துக்கும் சரி, பக்தி என்பது இன்றியமையாததாகிறது. மோக்ஷம் அடையப் பின்பற்றும் உபாயங்களில் தலைசிறந்தது பக்தியே என்கிறார் ஸ்ரீ பகவத்பாதர். ஆத்ம ஸ்வரூபத்தை உணர்வதுதான் பக்தி என்றும் அதையடுத்துச் சொல்கிறார்.

மோக்ஷஸாதன ஸாமக்ர்யாம் பக்திரேவ கரீயஸீ |
ஸ்வஸ்வரூபாநுஸந்தானம் பக்திரித்யபிதீயதே ||

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s