“பகவான் யார்?”பகவத் பாதர் பதில்

பரமேசுவரனும் ஸ்ரீமந் நாராயணனும் ஒரே வஸ்து; இரண்டல்ல. பெயர் வேறு. உருவம் வேறு, வேலை வேறு. ஆனால் உள்ளேயிருக்கப்பட்ட வஸ்து ஒன்றேதான். ஸ்ரீசங்கர பகவத் பாதர்களின் அபிப்பிராயம் இதுதான். கேள்வியும் பதிலுமாக ‘ப்ரச்னோத்தர ரத்னமாலிகா’ என்று அவர் ஒரு கிரந்தம் செய்திருக்கிறார். ப்ரச்னம் – கேள்வி. (இப்போது அந்தப் பிரச்னை இந்தப் பிரச்னை என்கிறோமே. ‘பிரச்னை’ என்பது ‘ப்ரச்னம்’ தான்) உத்தரம் – பதில். ப்ரச்னம் உத்தரம் (கேள்வி பதில்) இரண்டும் சேர்த்து ப்ரச்னோத்தரம். மாலை மாதிரி கேள்வியையும் பதிலையும் தொடுத்துக் கொடுக்கிறார் ஆசார்யாள். ‘பண்டிதர்களுக்கு இது ரத்னமாலை’ என்று பிரச்னோத்தர ரத்னமாலிகாவை அநுக்கிரகித்திருக்கிறார்.

அதில் ஒரு கேள்வி: பகவான் யார்?

அதற்குப் பதில்: சங்கரனாகவும் நாராயணனாகவும் இருக்கிற ஒருவன். சங்கர நாராயணாத்மா ஏக:

இதிலிருந்து ஆசார்யாள் மனஸில் சிவன், விஷ்ணு என்ற பேதபாவம் கொஞ்சம்கூட இல்லை என்றாகிறது.

இதே மனோபாவத்தில்தான் அவரது சம்பிரதாயத்தைப் பின்பற்றும் ஸ்மார்த்தர்கள் எல்லோரும், ஒவ்வொரு காரியத்தையும் ‘பரமேசுவரப் பிரீதிக்காக’ என்ற சங்கல்பத்துடன் ஆரம்பித்து, முடிவில் ‘கிருஷ்ணார்ப்பணம்’ என்று பூர்த்தி பண்ணுகிறோம். ‘பரமேச்வர பிரீத்யர்த்தம்’ என்று தொடங்கி, ‘ஜனார்த்தன: ப்ரீயாதாம்’ என்று முடிக்கிறோம். ஒருத்தன் பிரீதிக்கு என்று ஆரம்பித்ததை இன்னொருத்தன் பிரீதிக்கு என்று எப்படி இருக்க முடியும்? இரண்டும் ஒன்றாகவே இருப்பதால்தான் முடிகிறது. பேர்தான் வேறு வேறு.

தீவிர வைஷ்ணவர்களைக் கேட்டால், விஷ்ணுதான் கடவுள்; சிவன் மற்ற ஜீவராசிகளைப் போல் என்பார்கள். இதே மாதிரி வீர சைவர்களைக் கேட்டால், சிவன் முழு முதல் தெய்வம். விஷ்ணு ஜீவகோடியைச் சேர்ந்தவர்தான் என்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரது சித்தாந்தப்படியும் சிவன் அல்லது விஷ்ணுதான் எல்லா ஜீவராசிகளின் இருதயத்துக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறார். இப்படி வைத்துக் கொண்டாலும் ஒன்று சிவன் விஷ்ணுவின் இருதயத்தில் இருக்கிறார்; அல்லது விஷ்ணு சிவனின் இருதயத்தில் இருக்கிறார். எப்படிப் பார்த்தாலும் தங்கள் ஸ்வாமியை இருதயத்தில் வைத்துக் கொண்டிருக்கிற அந்த இன்னொருவரையும் பூஜிக்கத்தானே வேண்டும்?

சித்தாந்தம் எனறு கட்சி பேசாமல் நடுநிலையிலிருந்து பேசக்கூடிய மகாகவியான காளிதாஸன், பாணன் முதலியவர்களுடைய வாக்கைப் பார்த்தால், ஒரே வஸ்துதான் பல தேவதைகளாக வந்திருக்கிறது என்று ஸ்பஷ்டமாகத் தெரியும்.

‘ஒரு மூர்த்திதான் உள்ளது. அதுவே மூன்றாகப் பிரிந்தது. இவை ஒன்றுக்கொன்று சமம். ஒன்று உயர்ந்தது – மற்றது தாழ்ந்தது என்றில்லை’ என்கிறார் காளிதாஸன்.

ஏகைவ மூர்த்தி: பிபிதே த்ரிதா ஸா
ஸாமான்யமேஷாம் ப்ரதமா வரத்வம்

பாணரும் இப்படியே சொல்கிறார். “எந்த ஒன்றே ரஜோ குணத்தால் சிருஷ்டி செய்கிற பிரம்மாவாகவும், ஸத்வ குணத்தால் பரிபாலிக்கிற விஷ்ணுவாகவும், தமோ குணத்தால் பிரளயத்தை உண்டாக்கும் ருத்திரனாகவும் இருக்கிறதோ, அந்தப் பிறப்பற்ற ஒன்றை – முத்தொழிலுக்கும் காரணமாக, மூன்று வேத ரூபமாக இருக்கிற முக்குண மூலத்தை நமஸ்கரிக்கிறேன்” என்கிறார்.*

ரஜோஜுஷி ஜன்மனி ஸத்வவ்ருத்தயே
ஸ்திதௌ ப்ரஜானாம் ப்ரளயே தம: ஸ்ப்ருசே |
ஆஜாய ஸர்க்க ஸ்திதி நாச ஹேதவே
த்ரயீமயாய த்ரிகுணாத்மனே நம: ||

ஒரு சித்தாந்தத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற வீம்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி திறந்த மனஸோடு பார்க்கிற மகாகவிகள் இருவர் இப்படிச் சொல்கிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சிவன் விஷயத்தில் இவர்கள் சொல்கிற ஐக்கியம் அத்தனை தேவதைகளுக்கும் பொருந்தும்.

அநுபவ சிகரத்திலிருந்து பேசிய மகான்கள் தங்களுக்கென்று ஓர் இஷ்ட தெய்வம் இருந்தாலும்கூட, மற்ற தேவதைகளும் அதுவேதான் என்று தெளிவாகக் கண்டு கூறியிருக்கிறார்கள். ‘மகேசுவரனுக்கும் ஜனார்த்தனனுக்குமிடையே வஸ்து பேதம் துளிக்கூட இல்லாவிட்டாலும் என் மனசு என்னவோ சந்திரனைச் சிரஸில் சூடிய சிவபெருமானிடம்தான் விசேஷமாக ஈடுபடுகிறது’ என்று ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் கூறுகிறார். ‘நான் சைவன்தான்; சிவபஞ்சாக்ஷர ஜபம் செய்கிறவன்தான். இருந்தாலும் காயாம்பூ நிறத்து கோபிகாரமணனிடமே என் சித்தம் லயிக்கிறது’ என்கிறார் ‘கிருஷ்ண கர்ணாம்ருத’த்தில் லீலாசுகர்.

இஷ்ட தெய்வம் என்று ஒன்று இருக்கலாம். ஆனால் அதுதான் எல்லாமாயிருக்கிறது என்பதால், அதுவேதான் மற்ற தெய்வங்களுமாயிருக்கிறது என்ற எண்ணம் இருக்க வேண்டும். ஒன்றைப் பிடித்துக் கொண்டதற்காக இன்னொன்றை நிந்திக்கக்கூடாது. விஷ்ணுதான் கடவுள், சிவன் ஒரு ஜீவன் – அல்லது சிவன்தான் கடவுள், விஷ்ணு ஒரு ஜீவன் – என்றால்கூட, ஒரு மூர்த்தியிடம் துவேஷம் பாராட்ட இடமில்லை. ஒருத்தர் ஸ்வாமி, இன்னொருத்தர் பக்தர் என்றாலும் பக்தருக்குரிய மரியாதையைச் செய்யத்தானே வேண்டும்? சிவன் விஷ்ணுவுக்குப் பக்தன்; அல்லது சிவனுக்கு விஷ்ணு பக்தன் என்றே சொல்கிறார்களே தவிர, இருவருமே பரஸ்பரம் துவேஷித்துக் கொள்ளும் விரோதிகள் என்று யாரும் சொல்லவில்லையே. அப்படியிருக்க அவர்களில் ஒருவரை நாம் ஏன் துவேஷிக்க வேண்டும்?

ஒரு புராணத்தில் சிவன் விஷ்ணுவை நமஸ்கரிக்கிறார்; இன்னொரு புராணத்தில் விஷ்ணு சிவனை நமஸ்கரிக்கிறார் என்பதால் இவர்கள் சின்னவர்களாகிவிடவில்லை. சிவனை நமஸ்காரம் பண்ணு என்று சிவனே சொல்லாமல், விஷ்ணு அதை நமக்குக் காரியத்தில் உபதேசிக்கிறார்; இப்படியே நமக்கு விஷ்ணு பக்தி உண்டாக்கவே, சிவன் விஷ்ணுவைப் பூஜிக்கிறார். ஜனங்களின் விதவிதமான ருசிக்குத் தகுந்த மாதிரி ஒரே பரமாத்மா வேறு வேறு ரூபத்தில் வருகிறார். அவரவருக்கும் தங்கள் இஷ்ட மூர்த்தியால் இந்த மூர்த்தியை நமஸ்காரம் பண்ணுகிறார். பகவானைப் பூஜிக்கிற மாதிரியே பாகவதர்களையும் பூஜிக்க வேண்டும் என்று வைஷ்ணவர்கள் சொல்கிறார்கள். சிவனைப்போலவே சிவனடியாரையும் வழிபட வேண்டும் என்று சைவர்களும் சொல்கிறார்கள். எனவே, இவர்களில் ஒருத்தர் இன்னொருத்தரைப் பூஜை செய்வபரையும் நாம் நமஸ்கரிக்கத்தான் வேண்டும்.

முன்னே சொன்ன ‘ப்ரச்னோத்ர ரத்ன மாலிகா’வில் இன்னோரிடத்தில் ‘மேலான தெய்வம், பரதேவதை எது?’என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு, அதற்கும் ‘சித்சக்தி’ என்று பதில் சொல்கிறார் ஸ்ரீ ஆசார்யாள். சித்சக்தி என்பது தான் பரப்பிரம்மத்தின் பேர் அறிவு. அதுதான் அத்தனை தேவதைகளுமாயிற்று. அதுவே நமக்கு நல்லறிவு தரும் ஞானம்பிகை. அந்த ஞானாம்பிகைதான் நமக்கு எல்லா விதமான பேத புத்தியும் போவதற்கு அநுக்கிரகிக்க வேண்டும்.


* அதர்வண வேதத்தை நீக்கி ரிக் — யஜுர் — ஸாமம் ஆகியவற்றை மட்டும் மூன்று வேதங்கள், ‘த்ரயீ’ என்பர்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s