ஸங்கீத லக்ஷியம் சாந்தமே

லோகத்தில் மனசுக்கு ரொம்பவும் ஆனந்தமாகவும் சாந்தமாகவும் இருக்கப்பட்ட பல விஷயங்களுக்கு, அப்பர் ஸ்வாமிகள் ஒரு ‘லிஸ்ட்’ கொடுக்கிறார். இந்திரியங்களுக்கு அகப்படுகிற சுகங்கள்போல இருந்தாலும், நிரந்தரமான, தெய்வீகமான ஆனந்தத்தைத் தருகிற வஸ்துக்களைத் சொல்கிறார். அந்த வஸ்துக்கள் என்ன? முதலில், துளிக்கூட தோஷமே இல்லாத வீணா கானம்; அப்புறம், பூரண சந்திரனின் பால் போன்ற நிலா; தென்றல் காற்று; வஸந்த காலத்தின் மலர்ச்சி; வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிற தாமரைத் தடாகம்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

இந்திரியங்களால் பெறுகிற இன்பங்களை ஈசுவர சரணாரவிந்த இன்பத்துக்கு உபமானமாக அடுக்கும்போது, “மாசில் வீணை” என்று சங்கீதத்துக்கே முதலிடம் தருகிறார்.

நல்ல ஸங்கீதம்—அதுவும் குறிப்பாக நம்முடைய ஸங்கீதத்துக்கே எடுத்த வீணையோடு கானம்—என்றால் அது ஈசுவரனின் பாதத்துக்குத் கொண்டு சேர்ப்பதாகவே இருக்கும். நம் பூர்வீகர்கள் இசையை ஈசுவரனின் சரணங்களிலேயே ஸமர்ப்பணம் பண்ணினார்கள். அந்த இசை அவர்களையும், அதைக் கேட்கிறவர்களையும் சேர்த்து, ஈசுவர சரணாரவிந்தங்களில் லயிக்கச் செய்தது. தர்ம சாஸ்திரம் தந்த மகரிஷி யாக்ஞவல்கியரும் “சுஸ்வரமாக வீணையை மீட்டிக் கொண்டு, சுருதி சுத்தத்தோடு, லயம் தவறாமல் நாதோபாஸனை செய்துவிட்டால் போதும் — தியானம் வேண்டாம்; யோகம் வேண்டாம; தபஸ் வேண்டாம்; பூஜை வேண்டாம; கஷ்டமான சாதனைகளே வேண்டாம் — இதுவே மோக்ஷத்துக்கு வழிகாட்டிவி்டும்” என்கிறார்.

வீணா வாதன தத்வக்ஞ: ச்ருதி ஜாதி விசாரத : |
தாளக்ஞச்ச அப்ரயத்னேன மோக்ஷமார்க்கஸ ஸ கச்சதி ||

இதிலே இன்னொரு விசேஷம் சங்கீத வித்வான் மட்டுமில்லாமல், அவன் கானம் செய்வதை வெறுமே கேட்டுக் கொண்டிருக்கிற அத்தனை பேருக்கும், அவன் ஒருத்தன் செய்கிற சாதனையின் பூரண பலனான நிறைந்த திவ்விய சுகம் கிட்டிவிடுகிறது.

வித்யா தேவதையான சரஸ்வதி எப்போதும் வீணாகானம் செய்கிறாள். லௌகிகமான (secular) பாட்டே கூடாது. பகவானைப் பற்றித்தான் பாட வேண்டும். சரஸ்வதியும் பரமேஷ்வரனின் பலவித லீலைகளைப் பற்றித்தான் பாடுகிறாள் என்று ‘ஸெளந்தர்ய லஹரி’ சுலோகம் சொல்கிறது.

ஆசாரியாள் ‘ஸெளந்தர்ய லஹரியில’ அம்பாள் கழுத்தழகைச் சொல்லும்போது, அவளிடமிருந்து, சங்கீதம் முழுதும் பிறக்கிறது என்பதை வெகு அழகாகச் சொல்லுகிறார் (‘கலே ரேகா; திஸ்ரோ’ என்று ஆரம்பிக்கும்) கழுத்திலே மூன்று ரேகைகள் இருப்பது உத்தம ஸ்திரீ லட்சணம். புருஷ லட்சணம் Adam’s apple என்று இங்கிலீஷில் சொல்கிற நெஞ்சிலே இருக்கப்பட்ட உருண்டையான படைப்பு. ஈசுவரன் ஆலகாலத்தை தொண்டையில் கோலிக்குண்டு மாதிரி அடக்கிக்கொண்டார் அல்லவா? ஆண்கள் எல்லோரும் அவனது ஸ்வரூபம் என்பதற்கு அடையாளமாகவே உத்தம புருஷர்களின் தொண்டையில் இப்படி உருண்டை இருக்கிறது. அதே மாதிரி ஸ்திரீகள் யாவரும் தேவீ ஸ்வரூபம் என்பதால் அவர்களுடைய பரம மங்கள சின்னமான கழுத்து ரேகைகள் மூன்றும் உத்தமப் பெண்களிடம் இருக்கிறது. இதை ஆசாரியாள் வர்ணிக்கும்போது, “ஸங்கீதத்தில் ஷட்ஜ கிராமம், மத்தியம கிராமம், காந்தார கிராமம் என்று மூன்று வரிசைகள் (Scale, Gamut) உண்டு. இந்த மூன்று தொகுப்பு(கிராமம்)களிலிருந்துதான் மதுரமான நானாவித ராகங்களும் எழுந்திருக்கின்றன. அம்மா, நீயோ ஸங்கீதத்தின் கதிகளிலும், கமகங்களிலும் மகா நிபுணை. அந்த மூன்று ஸங்கீத கிராமங்களும் உன் கண்டத்திலிருந்துதான் பிறந்தன. அதற்கு அடையாளமாகவே அது ஒவ்வொன்றுக்கும் உரிய ஸ்வரங்கள் தொண்டைக்குள் எந்தெந்த இடத்தில் பிறந்து, எந்தெந்த இடத்தில் முடிகின்றன என்று எல்லை வகுத்துக் காட்டுவதுபோல், வெளிப்பட்ட இந்த மூன்று ரேகைகளும் உன் கழுத்தில் காணப்படுகின்றன” என்கிறார்.

அத்வைத பரமாசாரியார்களுக்குச் சங்கீதத்தில் எத்தனை பாண்டித்தியம் இருந்தது என்பதும் இங்கே தெரியவருகிறது. ஸங்கீதமே அத்வைதமாக நம்மை மூலத்தோடு கரைப்பதுதான். சாக்ஷாத் அம்பிகை வீணாதாரிணியான சியாமளாம்பிகையாக விளங்குவதாகக் காளிதாஸர் ‘நவரத்தின மாலிகை’யில் ‘ஸரிகமபதநிரதாம்’ என்று பாடுகிறார். அவள் பாடுகிற சங்கீதத்தால் அவளுடைய மிருதுவான இருதயமும் அதற்கும் உள்ளே இருக்கிற அத்வைதமான சாந்தமும் (சாந்தாம், மிருதுள ஸ்வாந்தாம்) வெளிப்படுகின்றன என்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், எத்தனை உணர்ச்சிப் பரவசங்களைத் தூண்டிவிட்டாலும் சாந்தம்தான் சங்கீதத்தின் முடிந்த முடிவாக இருக்க வேண்டும். சங்கீதத்தினாலேயே அன்பு என்கிற மிருதுவான இருதயம் ஏற்படுவதாகவும் தொனிக்கிறது. தசவித கமகங்களைச் செய்கிற சியாமளாம்பிகையான மீனாக்ஷியை வீணை மீட்டிப் பாடிக்கொண்டே, இந்த அன்போடு அன்பாக, சாந்தத்தோடு சாந்தமாகத்தான் முத்துஸ்வாமி தீக்ஷிதர் கரைந்து போனார். தியாகராஜ ஸ்வாமிகளும், பாஷை தெரியாதவர்களுக்கும் கேட்டமாத்திரத்தில் எல்லையல்லாத விச்ராந்தி தருகிறமாதிரி சாம ராகத்தில் ‘சாந்தமுலேக ஸௌக்கியமு லேது’ என்று பாடியிருக்கிறார். ஈசன் எந்தை இணையடி நீழலில் அப்படியே லயித்துப் போகிற இந்த சாந்தத்தைத்தான் அப்பரும் ‘மாசில் வீணை’ என்பதாக உவமிக்கிறார்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s