அறிந்தவனும் அறியாதாரும்

இப்படி எல்லா ஜனங்களையும் அதர்மப் பிரவாஹத்தில் அவிழ்த்துவிடக் கூடாது என்றுதான் பகவான் அர்ஜுனனை ‘வார்ன்’ பண்ணுகிறான். அதில்தான் ஆரம்பித்தேன். அப்புறம் ‘ஸப்ஜெக்ட்’ எங்கெங்கேயோ – ஆனால் எல்லாமும் ஸமயாசார ஸம்பந்தமுள்ளதாகவே – போய்விட்டது. ஜனங்கள் ‘கர்மஸங்கிகள்’ தான் – பலனில் ஆசைவைத்து கர்மாக்களைப் பண்ணுவதில் ஈடுபாடு கொண்டவர்கள் தான். நிஷ்காம்யம், நைஷ்கர்ம்யம், த்யானம், ஞானம் என்றால், அவர்கள் இருக்கிற நிலையில் எடுபடாது என்று பகவான் சொன்னதைச் சொன்னேன். இவர்களை நல்லறிவு பெறாத ‘அவித்வாம்ஸ:’ என்றே சொல்லியிருப்பதையும் சொன்னேன்.

ஸரி, நல்லறிவு பெற்ற ‘வித்வான்’ என்ன பண்ண வேண்டும்? இப்போது சீர்திருத்தக்காரர்கள் பண்ணுகிற மாதிரி காரியங்களைக் குறைத்து ஈஸியாக்கித்தர வேண்டுமா? “கர்மா எல்லாம் யூஸ்லெஸ்; மனஸின் purity தான் முக்கியம்; அதனால் ஞானத்துக்கு வாருங்கள்” என்று உபதேசிக்க வேண்டுமா? முடிவிலே பகவான் இப்படித்தான் கர்மஸந்நியாஸத்தை உபதேசித்து, ஞானத்தில் எல்லாக் கர்மாவையும் பஸ்மீகரமாக்கச் சொல்கிறார். ஆனால் முடிவிலேதான்; ஆரம்பத்திலே அல்ல. ஆரம்பத்தில் வித்வான் என்ன பண்ண வேண்டுமென்கிறார்?

… அவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத குர்யாத் வித்வாம்-ஸ்ததா…

“பாரத!” என்று அர்ஜுனனைக் கூப்பிட்டு, “யதா அவித்வாம்ஸ: குர்வந்தி ததா வித்வான் குர்யாத்” என்கிறார். ரொம்ப விசித்ரமாகச் சொல்கிறார். வித்வான் – அதாவது விஷயம் தெரிந்த ஞானி – எப்படிப் பண்ணுகிறானோ அந்த வழியிலேயே அவித்வானான அஞ்ஞானியும் பண்ணிப் பார்க்க வேண்டுமென்றுதான் பொதுவாக லோகமெல்லாம் சொல்வது. ஆனால் பகவான் சொல்வதற்கு அர்த்தமோ இதற்கு அப்படியே நேர்மாறாக இருக்கிறது; யதா – எவ்வாறு, அவித்வாம்ஸ: – அஞ்ஞானிகளான பொது ஜனங்கள், குர்வந்தி – செய்கிறார்களோ, ததா – அவ்வாறே, வித்வான் – ஞானியும், குர்யாத் – செய்ய வேண்டும்.

அஞ்ஞானி பண்ணுகிற மாதிரிதான் ஞானியும் பண்ண வேண்டும் என்று ஸ்பஷ்டமாகச் சொல்கிறார்!

அஞ்ஞானிக்கு இச்சா லாபத்திலேயே பற்று; அதற்காகவே சாஸ்திர கர்மாக்களைச் செய்கிறான். “அந்த சாஸ்திர கர்மங்களையே ஞானியும் பண்ணணுமப்பா” என்கிறார். “ஞானிக்கு இப்படிப்பட்ட இச்சை, ஆசைப்பற்று இருக்கலாமா? அதுதானே நரக த்வாரத்துக்கு வழி?” என்று கேட்டால், “நான் அப்படிச் சொன்னேனா? ஞானியும் கர்மா பண்ணணும் என்றேனே தவிர, தன்னுடைய இச்சா பூர்த்திக்காகப் பண்ணணும் என்று சொல்லவில்லையே! ஸந்தேஹமிருந்தால் இப்போதே qualifying clause போட்டு விடுகிறேன்:

குர்யாத் வித்வான் ததா அஸக்த:

என்று ‘அஸக்த:’ வைச் சேர்க்கிறார். “அஸக்த:” என்றால் ‘பற்றில்லாதவனாக’ என்று அர்த்தம். முதலில் அஞ்ஞானியைச் சொல்லும்போது முதல் வார்த்தையாகவே “ஸக்தா:” என்றார். “பற்றுள்ளவர்களான” என்று ஆரம்பித்தார். சிறியதான இந்திரிய இன்பப் பயன்களில் பற்றுக் கொண்டவர்களாக அவித்வான்கள் எந்தெந்த கர்மாக்களைச் செய்கிறார்களோ அவற்றையே வித்வானும் இப்படிப்பட்ட பற்று இல்லாமல் செய்ய வேண்டும் என்கிறார்.

“எதற்காக? ஞானி என்றால் ஞானம் அடைந்து விட்டவன் என்று அர்த்தம். ஞானத்துக்கு அப்புறம் அவன் அடைய வேண்டியது எதுவுமில்லை. அவனுக்கு எந்தப் பலனும் தேவைப்படாதபோது இந்தக் கர்மாக்கள் எதற்காக?”

“அதுவா? அவன் தனக்காக இப்படிச் செய்ய வேண்டும் என்று நான் சொன்னேனா என்ன? பின்னே ஏன் செய்ய வேண்டுமென்றால் –

சிகீர்ஷு: லோக ஸங்க்ரஹம்”.

“ஸங்க்ரஹம்” என்றால் நன்றாகப் பிடித்துக் கொள்வது; அதாவது கட்டிப் பிடித்துக் காப்பாற்றுவது. “லோக ஸங்க்ரஹம்” என்றால் லோகத்தை இப்படிப் பரம அன்போடு கட்டிக்காப்பது – நல்வழிப்படுத்துவது. லோகம் என்றால் அஞ்ஞானிகள்தான். ஞானி லோகத்துக்கு மேலே போனவன்.

“சிகீர்ஷு:”— விரும்பி;”லோகஸங்க்ரஹம் சிகீர்ஷு:”— உலகத்தை உயர்ந்த மார்க்கத்தில் கொண்டு போக வேண்டுமென்று விரும்பி.

ஞானிக்கு ஆசை இருக்கக் கூடாதுதான் என்றாலும் பகவானே அவன் மனஸு கருணை சுரக்கும்படிப் பண்ணி, “ஐயோ, லோகம் இப்படிக் கெட்டுப்போய் கஷ்டப்படுகிறதே; இதை ஸங்க்ரஹம் பண்ண வேண்டும்” என்று ஆசைப்பட வைக்கிறான்.

அதாவது ஜனங்களை மேலே கொண்டு போவதற்காகவேதான் ஞானியும் அவர்களைப் போல சாஸ்திர கர்மாக்களைப் பண்ணிக் காட்ட வேண்டும். தன்னுடைய உச்ச நிலைக்கு அவர்களை அழைத்துக் கொண்டு போவதற்காகவே அவர்கள் இருக்கிற ஏணிப்படிக்கு இறங்கி வந்து, அவர்களுடைய கையைப் பிடித்துக்கொண்டு, ‘ஸம்-க்ரஹம்’ என்றபடி நன்றாக இறுக்கிப் பிடித்து மேலே ஏற்றிக் கொண்டு போக வேண்டும்.

சாஸ்திரோக்தமாக ஸாதாரண ஜனங்கள் என்னென்ன கர்மா செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் ஞானியே மாடலாக இருந்து பண்ணிக் காட்டி, அவர்களையும் பண்ண வைக்க வேண்டும். அவனுடைய ஞானத்தையும் பக்தியையும் அப்புறந்தான் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இப்போது அவர்களுக்கு அதில் ருசி வராது. அதனால் முதலில் அவர்கள் சாஸ்திரோக்த கர்மாக்களைப் பண்ணுவதற்கே, தன்னளவில் அவற்றைக் கடந்துவிட்ட ஞானியும் (ஞானி என்றால் பக்திமானும் தான்) இவற்றைச் செய்து ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் இவன் மாதிரி ஆவதற்காகவே முதலில் அவர்கள் மாதிரி இவன் ஆக வேண்டும். மேல்நிலையில் இருக்கிற அவன் வாஸ்தவத்தில் கர்மாவில் ஒட்டாவிட்டாலும் அப்படி நடக்க வேண்டும். (இதற்கு நேர்மாறாகத்தான் இப்போது நிஜமாக வேதாந்தத்தில் ஒட்டிக் கொண்டிருந்தவர்களும் அப்படி நடிக்கிறார்கள்!)

அப்படியானால் ஞானிக்கு மட்டும் உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கிற “மித்யாசார தோஷம்” ஒட்டாதா?

ஒட்டாது. வாஸ்தவத்தில்தான் அவனுக்கு உள் – புறம் என்ற பேதமேயில்லையே! எதிலும் ஒட்டாத நிலைதானே ஞானம்? அதில் தோஷம் மட்டும் எப்படி ஒட்டும்? இன்னொரு எக்ஸ்ப்ளனேஷன்: இவன் வேதாந்தி-வேஷம் போடுகிறவனைப் போலத் தன்னைப் பற்றி லோகம் உசத்தியாக நினைக்கவேண்டுமென்றா துராசையில் இப்படிச் செய்கிறான்? கர்மாவைச் செய்யப் பிடிக்காத அடங்காக் குணத்தாலே அவன் ஞானி வேஷம் போடுகிறானென்றால், இவனோ நிச்சிந்தையான நிஷ்க்ரிய ஞான நிலையின் நிம்மதியிலேயே தான் பாட்டுக்குக் கிடக்கலாம் என்றில்லாமல் பாமர ஜனங்களிடம் பரம கருணையாலல்லவா கர்மி மாதிரித் தன்னைக் குறைத்துக் காட்டிக்கொண்டு, தனக்கு வேண்டியே யில்லாத கார்யங்களை இழுத்துப் போட்டுக்கொள்கிறான்? இது தியாகமே தவிர, மித்யாசாரமாக எப்படி ஆகும்?

ஸரி, இவன் எதற்காக இந்த சாஸ்திர கர்மாக்களைச் செய்ய வேண்டும்?

இவனை லோகம் ச்ரேஷ்டன் என்று நினைக்கிறது. இவனைப்போல உயர்ந்த ஸ்தானத்திலிருக்கிறவர்கள் எப்படி நடக்கிறார்களோ அப்படி நடந்து பார்க்க வேண்டுமென்று ஜனங்களுக்கு உள்ளூர ஒரு ஆசையுண்டு.

யத் யத் ஆசரதி ச்ரேஷ்ட: தத் தத் ஏவ இதரோ ஜந: | (3.21)

ஆசை உண்டே தவிர, ச்ரேஷ்டர்கள் நடப்பது ரொம்பவும் உயர்ந்த மாதிரி இருந்தால், இவர்களால் பின்பற்ற முடியாமல், அதை அநுஸரிக்க முடியாமல் தோற்றுப் போவார்கள்; தோற்றுப்போவது தெரியக்கூடாது என்று போலியாக வேஷம் போடுவார்கள். அதனால் ச்ரேஷ்டனாயிருக்கப்பட்டவனே ஸாதாரண ஜனங்கள் இருக்க வேண்டிய, இருக்கக்கூடிய கீழ் லெவலுக்கு வந்து, அந்த லெவலின் ஒழுங்குகளை நடத்திக் காட்டுகிறான். ஞானிக்கு அது கீழ் லெவல் என்றாலும் ஸாதாரண மநுஷ்யனுக்கு அவனால் முடியக் கூடியதான சற்று உயர்ந்த லெவல்தான். சாஸ்த்ரோக்த கர்மா என்ற இந்த லெவலை விட்டால்தான் அவன் இன்னம் கீழ் லெவலில் பாழாய் விடுவான். இந்திரியம் இழுத்தபடிச் சிற்றின்பக் காரியங்களை மட்டுமே செய்தால் பாமர ஜனங்கள் அந்தச் சேற்றிலேயே புதைந்து போய், அப்புறம் ச்ரேஷ்டனாலுங் கூட அவர்களைத் தூக்கிவிட முடியாமல் போய்விடும். அதனால் சின்ன லாபங்களையே ஒரு நிலையில் தருவதாயிருந்தாலும், இதற்காக இந்திரியங்களை தெறிகெட்டுப் போகவிடாமல் அவற்றுக்கு இஷ்டமான பலன்களை ஒரு பக்கம் கட்டுப்படுத்தி சுத்தி பண்ணிக்கொண்டுமிருப்பதான சாஸ்திர கர்மாக்களை ச்ரேஷ்டன் பற்றில்லாமல், பட்டுக் கொள்ளாமல் அநுஷ்டித்துக் காட்ட வேண்டும். இவனைப் பார்த்து இவன் மாதிரியே பண்ண விரும்பும் ஜனங்களாலும் இவற்றை அநுஸரிக்க முடியும். த்யானம், ஆத்மவிசாரணை பண்ண முடியாது என்கிற மாதிரிக் கர்மாக்களைப் பண்ண முடியாது என்று இல்லை. எல்லாரும் பண்ணுவார்கள். அதற்கு goal-ம் மோக்ஷம், ஸம்ஸார நிவிருத்தி என்பது போல் அவர்களுக்கு அப்பீலாகாத ஏதோ ஒன்றாயில்லாமல், அவர்கள் ஆசைப்படும் லாபங்களாகவே இருப்பதால் இந்தக் கர்மாக்களைப் பண்ணுவதில் ச்ரமங்கள் நியமங்கள் இருந்தாலுங்கூடப் பொறுத்துக் கொண்டு பண்ணுவார்கள். இப்படி ச்ரமப்பட்டும், நியமத்துக்குக் கட்டுப்பட்டும் பண்ணுவதாலேயே கர்மாவானது இவர்கள் உத்தேசித்த பலனைத் தருவதோடு, உத்தேசிக்காத பலனாக இவர்களுடைய உள்ளத்தின் அழுக்குகளை அலம்பி, இவர்களுடைய ஆசைப்பற்றுக்களையும் குறைக்க ஆரம்பிக்கும். அப்புறம் ஐஹிகமான [இஹலோகத்து] பலனுக்காக இல்லாமல், ஸமூஹம் ஒரு ஒழுங்கில் நடக்க வேண்டும், குடும்பம் ஒரு ஒழுங்கில் நடக்க வேண்டும், தனி ஆள் ஒரு கட்டுப்பாட்டில் சீராக அபிவிருத்தியாக வேண்டும் என்பதற்காகவே சாஸ்திர கர்மாக்களைத் தொடர்ந்து பண்ணிக் கொண்டிருப்பார்கள். நிஷ்காம்யகர்மா என்பது இதுதான். அதற்கு போவதற்கு வழி காம்யமாக சாஸ்திர கர்மா பண்ணுவதுதான். பலனில் ஆசையோடு பண்ணுவதே காம்யம்.

மேல்நிலையில் உள்ளவன் – “ச்ரேஷ்டன்” என்று சொல்லப்பட்டவன் – ஸாதாரண ஜீவனைக் காம்யமாகவாவது சாஸ்திர ஆசாரங்களுக்குக் கட்டுப்பட்டு கர்மா பண்ண வைப்பதற்காகத்தான் அவற்றைத் தானும் நிஷ்காம்யமாகப் பண்ணி வழிகாட்ட வேண்டும் என்று பகவான் உத்தரவு போடுகிறார். பாமரஜனங்கள் ‘ஸக்தர்’களாகப் பண்ணுவது என்று அவர் சொன்னதே காம்யம்; அதை வித்வான் ‘அஸக்த’னாகப் பண்ண வேண்டுமென்பதே நிஷ்காம்யம்.

வித்வான் பண்ணிக் காட்டாவிட்டாலும் பொது ஜனங்கள் ஏதாவது கர்மா பண்ணிக் கொண்டேதான் இருப்பார்கள் – காம்யமாக, “அது வேணும், இது வேணும்” என்று எதையாவது கார்யத்தைப் பண்ணிக் கொண்டிருக்காமல் எவனும் க்ஷணங்கூடச் சும்மா இருப்பதில்லை; ந ஹி கச்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்-யகர்மக்ருத். ஏனென்றால் பிரகிருதி என்ற மாயை இப்படித்தான் ஸத்வ-ரஜோ-தமோ குணங்களால் ஜீவனைக் கட்டி அவனறியாமலே எதையாவது பண்ணிக் கொண்டிருக்கும்படி ஆட்டி வைக்கிறது : கார்யதே ஹ்யவச: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர் குணை: (3.5) .

ஆதலால் வித்வான் என்கிற ச்ரேஷடன் முன்னுதாரணமாகச் செய்து காட்டாவிட்டாலுங்கூட ஸாதாரண ஜனங்கள் தாங்களாகவே ஆசைப் பூர்த்திக்காக எதையாவது செய்துகொண்டுதானிருப்பார்கள். இதையேதான் இவர்கள் சாஸ்திரத்துக்குக் கட்டுப்பட்டுச் செய்யுமாறு வித்வான் தன் எக்ஸாம்பிளால் தூண்டுதல் தருகிறான். காம்ய கர்மாதான் ‘ஆப்ஜெக்டிவ்’, அதாவது லக்ஷ்யம் என்றாலும்கூட அதற்குப் போகிற வழி, means, தன்னிஷ்டப்படியில்லாமல் சாஸ்திரோக்தமாக மாற்றி அமைக்கப்படும்போது அதன் தன்மையே அடியோடு மாறிப்போகிறது! மட்டமாக இருப்பதே உத்தமமாக மாற்றப்படுகிறது. இச்சா பூர்த்திக்காகவே பண்ணுவதென்கிற போதும் சாஸ்திர கர்மா என்றால், “இத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும், ஸ்நானம் பண்ண வேண்டும், ஸத்வமாக இன்ன ஆஹாரந்தான் இத்தனை மணிக்கு அப்புறம் சாப்பிட வேண்டும், வேர்க்க விருவிருக்க ஹோமம் பண்ண வேண்டும், மணியடிக்க வேண்டும்” என்றெல்லாம் எத்தனை கட்டுப்பாடுகள் இருக்கின்றன? இதெல்லாம் சாஸ்திரோக்தமாகயில்லாமல் தன்னிஷ்டப்படி செய்யும் போது இல்லை அல்லவா? நெறியில்லாமல் செய்வதாலேயே ஆசையும் அழுக்கும் அதிகமாகின்றன. அதையே நெறியோடு செய்தால் சாந்தியும், சுத்தியும் ஏற்பட ஆரம்பிக்கின்றன. தன்னிஷ்டப்படியே செய்யும்போது அஹங்காரந்தான் அதிகமாகிறது; பயபக்திக்கு அங்கே இடமேயில்லை. சாஸ்திர கர்மாவினால் இஷ்ட பலனைத் தருபவனும் ஒரு ஈச்வரன்தான் என்று காட்டி, அவனைப் பிரார்த்தித்து அவனுக்கு அடங்கியே காம்யமானதைக் கேட்டுப் பெறச் சொல்லும்போது பயபக்தி உண்டாகி இவனை சுத்தி செய்கிறது.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s