ஹாரமும் ஆஹாரமும்

ராஜா ஒருத்தன் இருந்தான். அவனுக்கு ஒரு குரு. அவர் நல்ல மஹான். அடிக்கடி அரண்மனைக்குப் போய் உபதேசம் பண்ணிவிட்டு வருவார். அப்படி ஒரு நாள் காலம்பற [காலையில்] போனவர் நீண்டநேரம் அநேக விஷயங்களை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்ததால் மத்யான்னம் வந்துவிட்டது.

“இங்கேயே பிக்ஷை பண்ணிவிட்டுப் போகணும். ஆசார நியமத்தோடு, தனியாகப் பண்ணிப் போட ஏற்பாடு செய்கிறேன்” என்று ராஜா ரொம்பவும் கேட்டுக் கொண்டான்.

அவனுடைய பிரார்த்தனையை மறுக்க முடியாமல் மஹான் அரண்மனையிலேயே போஜனம் செய்தார்.

அப்போது நல்ல வெயில் வேளை வந்துவிட்டதாலும், பஞ்ச பக்ஷ்ய போஜனம் பண்ணினதில் அவருக்குக் களைப்பாக இருந்ததாலும் அங்கேயே கொஞ்ச நேரம் இளைப்பாறினார்.

அவர் சிரம பரிஹாரம் பண்ணிக்கொண்ட அறையின் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு முத்து மாலை அவர் கண்ணில் பட்டது. அது ராஜாவுடையது. விலை உயர்ந்த முத்தாலானது.

நல்ல வைராகியான அவருக்கு எதனாலோ அன்றைக்கு அந்த முத்தாஹாரத்தைப் பார்த்தவுடன் அதை எடுத்து வைத்துக்கொண்டு விடவேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. ரொம்ப ‘ஸ்ட்ராங்க்’-ஆக உண்டாயிற்று.

பக்கத்தில் யாருமில்லாததால் சட்டென்று அதை எடுத்து வஸ்திரத்துக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு விட்டார்.

ஸாதாரண மனிதர்கள் பண்ணினாலே திருட்டு என்பது பாவம், குற்றம். மஹானாக, ராஜ குருவாக இருந்தவர் கொஞ்சங்கூட மனஸை உறுத்தாமல் இப்படிப் பண்ணிவிட்டு, தாம் பாட்டுக்கு ஆச்ரமத்துக்குத் திரும்பிப் போய்விட்டார்!

சித்தே [சற்று] நாழி ஆன அப்புறம் ஹாரம் திருட்டுப் போய்விட்டதென்று அரண்மனையில் தெரிந்தது. ஒரே பரபரப்பு. எங்கே பார்த்தாலும் தேடினார்கள். யாரையும் விடாமல் சோதனை பண்ணிப் பார்த்தார்கள். ஆனால் வாஸ்தவத்தில் அது காணாமல் போனதற்குக் காரணமான குருவை மட்டும் எவரும் கொஞ்சங்கூட சந்தேஹப்படவில்லை. ஏனென்றால் அன்னிக்கு [அன்றைக்கு] வரையில் அவர் அவ்வளவு சுத்தராயிருந்தவர்.

‘பழி ஓரிடம் பண்டம் ஓரிடம்’ என்று யார் யாரையோ பிடித்து, மரியாதை ஸ்தானத்திலிருந்தவர்களை வாயால் கேட்டும், ஆள்-படைகளை அடித்து உதைத்தும் ‘என்கொயரி’, ‘இன்வெஸ்டிகேஷன்’ நடத்தினார்கள். தடயம் ஒன்றும் கிடைக்கவில்லை.

ஒரு நாள் போச்சு. அன்று ராத்திரி முழுக்க குருவுக்கு ஸரியாகத் தூக்கமேயில்லை. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததால் அல்ல. மத்யானம் பண்ணினது போதாது என்று ராத்திரியும் ஏதோ கன்னா பின்னா எண்ணம். அது வேணும் – இது வேணும் என்கிற ஆசை தோன்றிக்கொண்டிருந்ததாலேயே தூக்கம் வரவில்லை!

பெரிய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, ராத்ரி பூரா தூங்காததால் ஜீர்ணக் கோளாறு ஏற்பட்டது. மறுநாள் முழித்துக் கொள்கிறபோதே வயிற்றிலே ‘கடமுடா’ பண்ண ஆரம்பித்தது. பேதி பிடித்துக் கொண்டது; அஞ்சு தடவை, ஆறு தடவை ‘போய்’ ரொம்ப பலஹீனமாய்விட்டது. நல்ல வெயில் வேறு வந்துவிட்டது.

ஆனாலும் இப்படி உடம்பு ஆயாஸப்பட்டுப் போனாலும் பேதியானதிலிருந்தே அவருடைய மனஸுக்கு ஒரு தெளிவு ஏற்படத் தொடங்கியிருந்தது. முதல் நாள் உண்டான கெட்ட எண்ணமும், ஆசைகளும் கொஞ்சங்கொஞ்சமாக விலகிக் கொண்டே வந்தன. இப்போது இனிமேலே ‘போவதற்கு’ எதுவுமேயில்லை என்கிற மாதிரி உடம்பு கிழித்த நாராக ஓய்ந்துபோன ஸ்திதியில் அவருடைய வழக்கமான உசந்த மனஸே அவருக்குத் திரும்பிவிட்டது.

அந்த வெய்யிலிலே, உடம்பு ஓய்ந்து போன நிலையிலேயே முத்து மாலையை எடுத்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார்.

ராஜாக்கிட்டே போய், அந்த ஹாரத்தைக் கொடுத்தார்.

“என்ன காரணமென்றே தெரியவில்லை. நேற்றைக்கு மத்யான்னத்திலிருந்து என் புத்தி கெட்டுப்போய்க் கிடந்தது. அந்தக் கெட்ட ஆவேசத்தில் நான்தான் இந்த மஹா பாவத்தைப் பண்ணினது. ஸந்நியாஸியானவன், சிஷ்யன் என்று தன்னை ஆச்ரயித்திருக்கிறவனுடைய ஸொத்தை, அவன் போட்ட ஆஹாரத்தையும் சாப்பிட்டுவிட்டு உடனே அபஹரிக்கிற பாபத்தைப் பண்ணிவிட்டேன். திருடனை எப்படித் தண்டிக்க வேண்டுமோ அப்படி எனக்கு சிக்ஷை பண்ணு. அதோடு இன்னம் பல பேரை இதுவரை ஸந்தேஹப்பட்டு நீ தண்டிக்கும்படியாகவும் கண்டிக்கும்படியாகவும் நேர்ந்ததற்கும் நான் காரணமானதால் அதெல்லாவற்றையும் சேர்த்து வைத்து எனக்குச் சிக்ஷை கொடு. என்னால் எத்தனை நிரபராதிகளுக்குக் கஷ்டம் ஏற்பட்டு விட்டதென்பதில் எனக்கு உண்டாயிருக்கும் வேதனை அப்போதுதான் தீரும்” என்று ராஜாவிடம் சொன்னார்.

ராஜா சிரித்தான். “உங்கள் சிஷ்யன் என்கிறதாலேயே உங்களுடைய அநுக்ரஹத்தில் எனக்கும் ஏதோ கொஞ்சம் அறிவு உண்டாயிருப்பதால் என்னால் உண்மையை ஊகிக்க முடிகிறது. நீங்கள் இப்போது சொன்னமாதிரி ஒரு நாளும் நடந்திருக்க முடியாது. உங்களுடைய பரம தயாளத்தினால்தான் நீங்கள் இப்படிக் கதை சொல்லுகிறீர்கள். நிஜத் திருடன் என்ன தண்டனை கிடைக்குமோ என்ற பயத்தில் அப்புறம் உங்களிடம் வந்து, ‘சரணாகதி, காப்பாற்ற வேண்டும்’ என்று காலில் விழுந்திருப்பான். தஞ்சம் என்று வந்தவனைத் தாங்கித்தானாக வேண்டும் என்று கருணையில் அவனுக்கு அபயம் தந்துவிட்டு, இப்போது நீங்களே குற்றத்தைச் செய்ததாகக் கதை சொல்லுகிறீர்கள். நீங்கள் குற்றத்தை ஒத்துக்கொண்டாலும், நீங்கள் சொல்வதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்” என்றான்.

மஹான் ரொம்பவும் மறுத்தார். மன்றாடினார். “நானாகப் பண்ணின குற்றப்படி நான் திருடன். இப்போது நீ அந்தக் குற்றத்தை மறுத்து, நான் பொய் சொல்கிறேன் என்பதாக இன்னொரு விதத்தில் என்னைக் குற்றவாளி ஆக்குகிறாய்! வேண்டாமப்பா. என்னைத் தண்டி! அதுதான் என் மனஸை ஆற்றும். குரு சொல்லைக் கேட்க வேண்டியதும், குருவுக்கு ஸந்தோஷம் தருவதைச் செய்வதும்தானே சிஷ்யனின் தர்மம்?” என்றார்.

ராஜா யோசித்தான். அப்புறம் சொன்னான் “எனக்குச் சொல்லவே வாய் கூசினாலும் நீங்கள் விடாப்பிடியாகச் சொல்வதால் நீங்கள்தான் ஹாரத்தை எடுத்ததாக வைத்துக்கொள்ளப் பார்க்கிறேன். ஆனாலும் குற்றம் ஒன்றாகவே இருந்தாலும் எந்தக் காரணத்துக்காக அது பண்ணப்பட்டது என்பதையும் ஆராய்ந்து அதை ஒட்டியே ஒரே குற்றத்துக்கு வேறு வேறு சிக்ஷைகளை நீதி சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. எப்படியாகப்பட்டவர், என்ன மாதிரியான ஸந்தர்ப்பத்தில், எந்த விதமான நோக்கத்துக்காகக் குற்றம் செய்தார் என்று கவனித்தே தீர்ப்புச் செய்ய வேண்டும். (ஸர்க்கம்ஸ்டன்ஸ், மோடிவ் பார்த்தே ஸென்டென்ஸ் பண்ண வேண்டும் என்றுதானே இப்போதும் லா இருக்கிறது?) அதனாலே, மஹானான தாங்கள் இப்படியொரு கார்யம் பண்ணினீர்களென்றால் எந்தக் காரணத்தின் மேலே அப்படிப் பண்ணினீர்கள் என்று தெரிந்து கொள்ளாமல் தண்டிக்கிறதற்கில்லை. முதல் தடவை குற்றம் பண்ணினவர் தாமே அதை ஒத்துக்கொண்டு, திருட்டுக் குற்றமானால் பொருளையும் ஒப்புவித்து விடுகிற பக்ஷத்தில் தண்டிக்காமலே விட்டுவிடலாம் என்றும் சாஸ்திரம் இடம் தருகிறது” என்றான்.

“இப்படியெல்லாம் சொல்லி என்னை நீ அடியோடு தண்டிக்காமல் விடப்படாது. எத்தனையோ காலமாக நீதி பரிபாலனம் செய்து வந்திருப்பதால் நீதான் காரணத்தைக் கண்டுபிடித்து, கொஞ்சமோ நஞ்சமோ அதற்கான சிக்ஷையைத் தரவேண்டும். ஏனென்றால் இந்தத் திருட்டு புத்தி எனக்கு எப்படி வந்தது என்பதற்கு எனக்கு எந்தக் காரணமும் தெரியவில்லை” என்று குரு சொன்னார்.

அதற்கு ராஜா, “உங்களைப் போன்ற ஒரு மஹானே தன் சொந்த விஷயமான ஒன்றில் காரணம் தெரியவில்லை என்னும்போது மற்றவர்கள் யார் அதை ஆராய்ந்து தெரிந்து கொள்ள முடியும்? தாங்களே தீர்கமாகச் சிந்தனை செய்து சொன்னால்தானுண்டு” என்றான்.

“ஸரி, நேற்றைக்குக் கெட்டுப் போயிருந்த புத்தியை இன்றைக்காவது தெளிவித்து, கெட்டதற்குத் தண்டனை வாங்கிக்கொள்ள வேண்டுமென்ற புத்தியைத் தந்திருக்கிற பகவானைப் பிரார்த்தனை பண்ணிக்கொண்டு பார்க்கிறேன்” என்று அந்த மஹான் சொல்லி, ஈச்வரத் தியானம் பண்ணினார்.

கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், “ஆமாம்; இப்போதுதான் காரணம் கொஞ்சம் புலப்பட ஆரம்பித்திருக்கிறது. நேற்றைக்கு வழக்கத்துக்கு வித்யாஸமாக ஏதாவது நடந்ததா என்று பார்த்தால், நீ பிரியத்தின் பேரில் நிர்பந்தம் செய்ததால் நான் இங்கே சாப்பிட்டது ஒன்றுதான் தெரிகிறது. அதற்கப்புறந்தான் இந்த பாப காரியத்தில் என் புத்தி பிரவேசித்திருக்கிறது. அதோடு அப்புறமும், ராத்ரிகூட, மனஸ் கெட்டே கிடந்தது. ஆனால் இன்றைக்கு அதிஸாரம் மாதிரி பேதியாக ஆகக் கொஞ்சங் கொஞ்சமாகத் தெலிவு ஏற்பட்டு, பண்ணின தப்பு புரிந்துவிட்டது. இப்போது இதற்குக் காரணமும் ஊஹித்துக் கொள்ள முடிகிறது. நேற்றுச் சாப்பிட்ட அன்னம் வயிற்றில் இருந்தவரையில் மனஸு கெட்டுப் போயிருந்திருக்கிறது; இன்றைக்கு தெய்வ ஸங்கல்பத்தால் அதிஸாரம் உண்டாகி, அது வெளியே போகப் போகக் கெட்ட எண்ணமும் வெளியேறியிருக்கிறது என்று தோன்றுகிறது. இதிலிருந்து சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி அன்ன தோஷத்தால்தான் குணதோஷம் ஏற்பட்டிருக்கிறது என்று அநுமானிக்கத் தோன்றுகிறது. அநுமானத்தை ஊர்ஜிதம் பண்ணிக் கொள்வதற்கு நீ வேண்டுமானால் நேற்று அன்னமாகப் பக்குவம் பண்ணின அரிசி முதலானதுகள் எங்கேயிருந்து வந்தது என்று விசாரணை பண்ணிப் பார்” என்றார்.

அன்னம் என்பதில் ப்ரோடீன், கார்போஹைட்ரேட், வைடமின் முதலியன மட்டும் இல்லை. அதைச் சமைத்தவர், தான்யமாகவும் பச்சைக் காய்கறியாகவும் அதை விலைக்கோ தானமாகவோ கொடுத்தவர், அதைப் பயிர் பண்ணியவர் ஆகியவர்களுடைய குணதோஷங்களும் அந்த அன்னத்தில் ஸூக்ஷ்மமாக டெபாஸிட் ஆகி, சாப்பிடுகிறவனுக்குள் போகிறது. இவர்கள் தோஷமுடையாவர்களாயிருந்தால் சாப்பிடுகிறவனையும் அந்த தோஷம் தொற்றிக்கொள்ளும். இதுதான் அன்ன தோஷம் என்பது.

ராஜா உடனே உக்ராண மணியக்கரனுக்குத் தாக்கீது அனுப்பினான். முதல் நாள் குருவுக்குச் சமைத்துப் போட்ட அரிசி எங்கேயிருந்து வந்தது என்று விசாரித்துத் தெரிவிக்கும்படி உத்தரவு போட்டான்.

மணியக்காரன் பூரா விவரங்களையும் விசாரணை பண்ணித் தெரிவித்தான். என்ன தெரிவித்தானென்றால்: சிலநாள் முந்தி ஒரு பெரிய கொள்ளைக்காரன் கடைத்தெருவில் ஒரு பெரிய மளிகைக் கடையிலிருந்து ரொம்ப உசந்ததான ஸன்ன சம்பா மூட்டைகளைத் திருடி, அப்புறம் ராஜ ஸேவகர்களிடம் பிடிபட்டுவிட்டான். அவனோடு, அரிசி மூட்டையும் கைப்பற்றப்பட்டது. அப்புறம் அவனுக்குச் சிக்ஷையும் விதிக்கப்பட்டது. ஆனாலும் உடைமைக்கு (அரிசிக்கு) ஸொந்தக்காரன் அதை ராஜாங்கத்திலிருந்து திரும்பி வாங்கிக் கொள்வதற்கான due date ஆகியும் எதனாலோ ஆஜராகவில்லை. அதனால் சட்டப்படி அந்த அரிசி அரண்மனைப் பண்டகசாலையில் சேர்க்கப்பட்டுவிட்டது. நேற்றுவரை பிரயோஜனப்படுத்தாத அந்த அரிசியைத்தான் நல்ல ரகமாயிருக்கிறதே, முதல் முதலில் குருவுக்கு நைவேத்யம் பண்ணினால், பாக்கியெல்லாம் அவருடைய பிரஸாதமாகுமே என்று நினைத்து நேற்று பாகசாலைக்காரர்கள் அவருக்குச் சமைத்துப் போட்டார்களாம்.

மணியக்காரன் ராஜாவுக்கு இந்த விவரங்களைத் தெரிவிக்க, ராஜா மஹானுக்குச் சொன்னான்.

இரண்டும் இரண்டும் நாலு என்கிற மாதிரி அந்த மஹானுக்கு எப்படித் திருட்டுப் புத்தி உண்டாச்சு என்பது தெரிந்து விட்டது. திருட்டுச் சொத்தை ராஜ தர்மப்படி ராஜா ஸ்வீகரித்தாலும் அது மஹானுடைய ஸாத்விக ஸந்நியாஸ தர்மத்துக்கு விரோதமானதால் அவரை ‘அஃபெக்ட்’ பண்ணிவிட்டது. ஆனாலும் அவர் மனஸரிந்து குற்றம் பண்ணாததாலும், அவருடைய பூர்வ சரித்ரம் சுத்தமானதாலும் பகவானே அப்புறம் அவருக்கு அதிஸாரம் உண்டாகுமாறு பண்ணி அவருடைய உடம்பில் அந்த அன்ன ஸத்து ரத்தமாய்ச் சேராமல் வெளியேறும்படிச் செய்து, தோஷத்தைப் போக்கிவிட்டான்.

ராஜாவிடம் குரு, “பார்த்தாயா? இதனால்தான் ராஜாவின் அன்னம் கூடாது என்ற சாஸ்திர நியமப்படி நான் இருந்தேன். நீ பிடிவாதம் பிடித்தாய் என்பதால் நான் விட்டுக் கொடுத்ததில் இத்தனை வினை வந்து சேர்ந்தது.

“எப்படி ஒருத்தனுடைய வியாதியின் அணுக்கள் இன்னொருத்தன் சரீரத்தில் பரவி அந்த வியாதி இவனுக்குத் தொற்றிக் கொள்கிறதோ அப்படியே, கெட்ட எண்ணத்துடன் செய்த கார்யங்களில் ஸம்பந்தப்பட்ட வஸ்துவில் அதைச் செய்தவனின் மானஸிகப் பரமாணுக்கள் ஒட்டிக் கொண்டிருக்குமாதலால், அந்த வஸ்து இன்னொருத்தனுக்கு உள்ளே போனால், இவனுக்கும் அந்தக் கெட்ட எண்ணம் தொற்றிக் கொள்ளும். நேற்றுச் சாப்பிட்ட அரிசியில் படிந்திருந்த திருட்டுக் குண பரமாணுக்கள் எனக்குள்ளே போனதன் விளைவைப் பார்த்ததிலிருந்து இது எவ்வளவு உண்மையென்று நிரூபணமாகிறது” என்றார்.

காரணத்தைப் பார்த்தே குற்றத்துக்குத் தண்டனை தரவேண்டுமென்ற ராஜா, அவரை நிர்ப்பந்தப்படுத்திச் சாப்பிட வைத்த தான் ஒரு மஹானுக்குப் பக்குவம் செய்யும் உணவு எப்படியிருக்க வேண்டுமென்று கவனிக்காததாலேயே இப்படி ஏற்பட்டதால் குற்றம் தன்னுடையதே என்றான். அவரை ‘அப்ஸால்வ்’ பண்ணிவிட்டான். அது அறியாமையால் அவன் செய்ததே, நல்லெண்ணத்துடனும் குருபக்தியாலும் அவன் செய்ததே என்பதாலும், அவன் பச்சாதாபப்பட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாலும் குற்றமாகாது என்று குருவும் அவனை க்ஷமித்து விட்டுவிட்டார்.

If you see any errors in the text, please leave a comment