தொழில் முறையில் பாதிப்பு இல்லை

புத்தர், ஜினர் போன்றவர்கள் இந்த ஏற்பாட்டைத் தப்பாகப் புரிந்துகொண்டார்கள். அவர்கள் அப்படி நினைக்கும்படியாக அக்கால ப்ராமணர்களும் இருந்திருக்கலாம். அநுஷ்டான சக்தியையோ, வேதாந்த ஞானத்தையோ நன்றாக அபிவ்ருத்தி செய்து கொள்ளாமல், உசந்த ஜாதி என்ற அந்தஸ்து மாத்திரம் கொண்டாடி இருக்கலாம். அப்படியானாலுங்கூட அப்படித் தப்புப் பண்ணுகிறவர்களை மூல உத்தேசப்படித் திருத்தவேண்டும் என்று புத்த-ஜினர்கள் நினைக்காமல், ‘உத்தேசமே தப்பு; வர்ண விபாகமே கூடாது; வேத தர்மத்தில் பக்ஷபாதமாகத்தான் ஜாதிப்பிரிவினைகள் பண்ணியிருக்கிறது’ என்று எடுத்துகொடுத்தவுடனே — மநுஷ்ய மனஸ்தானே? — பொதுஜனங்களுக்கும் பழைய ஏற்பாட்டில் கொஞ்சம் பற்று விட ஆரம்பித்தது. இந்த ஸமயத்தில் ‘அவர்கள் உங்களுக்குச் செய்யாததை நாங்கள் செய்கிறோம்’ என்கிற ரீதியில் பௌத்தர்களும் ஜைனர்களும் வர்ண வித்யாஸம் இல்லாததாகத் தங்கள் மதத்தை அமைத்து, தங்கள் மூல நூல்கள் உள்பட எல்லா சாஸ்திரங்களையும் கலைகளையும் ஸர்வ ஜனங்களுக்கும் அவர்களுடைய பேச்சு மொழியிலேயே கற்றுக் கொடுப்பதற்காக பெரிய வித்யாசாலைகளாக ஏற்படுத்தத் தொடங்கினார்கள். ‘கன்வர்ஷ’னுக்கு இது பெரிய பலமல்லவா?

ஆனாலுங்கூட, கவனிக்க வேண்டிய முக்யமான அம்சம் என்னவென்றால் பௌத்த-ஜைன கன்வர்ஷன் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தபோதுகூட, பாரம்பர்யமாகத் தொழில் பண்ணுவது என்பது எடுபடவே எல்லை. அதாவது, ப்ராமணர்களைப் பொறுத்தமட்டில் வைதிக கர்மாநுஷ்டானமும், வேதாந்த தத்வத்தில் விச்வாஸமும் கொஞ்சம் கலகலத்துப் போன பின்பும்கூட, பொதுமக்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் ப்ராமணர்களையே லீடர்களாகக் கொண்டிருந்தது சற்று ஆடிப்போன பிறகும்கூட, அந்தந்தத் தொழில்காரரும் ஜாதி ரீதியில் அப்படியே தொடர்ந்து தொழில் செய்வது என்பது நீடித்துக்கொண்டுதான் வந்தது. அதாவது, அப்ராமணர் ஸம்பந்தப்பட்டவரையில் வர்ணதர்மம் எடுபடவே இல்லை. யாகம் அப்ராமணன் பண்ணவில்லை. தத்வ விசாரத்தில் அவன் ஈடுபட்டதும் கொஞ்சந்தான். புது மதக்காரர்கள் ப்ராமணரின் லீடர்ஷிப்பை விடச் சொன்னதைத்தான் அவன் எடுத்துக்கொண்டானே தவிர புதுசாக வந்த ஸமய தத்வங்களை ஆராய்ந்து, புரிந்துகொண்டு எடுத்துக்கொண்டது ரொம்பவும் குறைச்சல்தான்.

ஸாதாரணமாகவே ஒரு இயக்கத்துக்கு அது சொல்கிற எதிர்ப்புக் கார்யத்தை வைத்துத்தான் பொதுஜன ஆதரவு கிடைக்கிறது; இந்த அளவுக்கு அது விதிக்கிற விதிகளுக்கு ஆதரவு கிடைப்பதில்லை. ‘வெள்ளைக்காரனை விரட்டு’ என்று காந்தி சொன்னதால் எல்லாரும் அவர் கீழே எதிர்ப்புக் கார்யத்தில் ஒன்றுசேர்ந்தார்கள். ஆனால், அவர் விதித்த அஹிம்ஸை, ஸத்யம், ஒழுக்கம், ஈச்வர பக்தி முதலானதை எத்தனை பேர் எடுத்துக்கொண்டார்களென்று பார்த்தால் வருத்தமாகத்தான் இருக்கும். வெள்ளைக்காரனிடம் ஏன் நாம் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதாக, அந்நிய ஆட்சியின் அதர்மத்துக்காக அவ்வளவு இல்லாமல், நம்முடைய ஸ்வேச்சா ஸ்வதந்த்ரங்களில் ஆசையால்தான் பெரிய போராட்டம் நடத்தியது. அந்த காந்தியே நம்மை சில தர்மங்களில் கட்டுப்படுத்துகிறார் என்னும்போது அவற்றை ஏற்றுக்கொள்ள மனஸ் இல்லை. பொதுவாக நம்முடைய தப்பை உணர்ந்து நம்மைத் திருத்திக்கொள்வதைவிட, பிறன் தப்பைச் சொல்லி எதிர்ப்பதில்தான் நமக்கு ருசி. நானே உங்களிடம், நாஸ்திகத்தையோ கன்வர்ஷனையோ எதிர்த்துக் கூட்டம் போடுங்கள் என்று ஒரு வார்த்தை சொன்னால் உடனே பெரிசாக மஹாநாடு நடத்திக் காரஸாரமாகப் பேசி, தீர்மானங்கள் நிறைவேற்றுவீர்கள்; அதுவே, சாஸ்திர ஆசாரப்படி இப்படி இப்படி இருங்கள் என்று ஓயாமல் சொன்னாலும், கேட்கத் தோன்றுகிறதா?

இப்படித்தான் பௌத்த-ஜைன தர்மங்களை, தத்வங்களை ஜனங்கள் விசேஷமாக எடுத்துக்கொண்டு பின்பற்றவேயில்லை. இதிலே அவர்களுக்கு ரொம்பவும் ச்ரமமாக, நடைமுறை ஸாத்யமாக இல்லாத இன்னொரு அம்சத்தையும் சொல்ல வேண்டும். நீக்குப்போக்குள்ள நம்முடைய மதத்தைப் போலில்லாமல் அவை ரொம்பவும் ஐடியல் நிலையிலுள்ள அஹிம்ஸை, துறவு முதலியவற்றை எல்லா ஜனங்களுக்குமே வற்புறுத்தின. அதோடு ச்ரமண மதத்திலோ மிகவும் கடுமையான நியமங்கள், உடம்பை ஏகமாக வருத்திக்கொள்வதாக. “விட்டுப் பிடித்து”, ஸௌக்யமாக, ஒவ்வொரு படியாக முன்னேறிக்கொண்டு போகிற நம் மதத்தைப் போல அவை இல்லை*. ஆதலால் பெயரளவில் ஏதோ பௌத்த-ஜைன மதங்கள் பரவியிருந்தாலும் அவற்றை ஜனங்கள் மனமார ஏற்று, நடத்திக்காட்டிவிடவில்லை. முக்யமாக, பாரம்பர்யத் தொழில் என்பது இப்போதும் போகவில்லை. இதை விட்டால் எவனுக்கு எந்தத் தொழில் என்பதில் ஏகப் போட்டியும் பொறாமையும் உண்டாகி எல்லாத் தொழில்களும் பாதிக்கப்பட்டு ஸமூஹ வாழ்வே சீர்குலையும் என்பதை ஜனங்கள் புரிந்துகொண்டு ஜாதித் தொழில் முறையையேதான் பின்பற்றி வந்தார்கள். அசோகர் முதலான புறச் சமயச் சார்புள்ள ராஜாக்களுடைய சாஸனங்களைப் பார்த்தால் நன்றாகத் தெரியும் — அவர்கள் ஆட்சியிலும் வர்ணதர்மம் இருந்துகொண்டேதான் இருந்தது, அவர்களும் அதை ஆதரித்துத்தான் வந்திருக்கிறார்கள் என்பது.

ஒன்று போதும், இதை நிச்சயமாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கு :

பிற்பாடு உதயனாசார்யர் முதலான தர்க்க சாஸ்திர நிபுணர்களும், வைதிக கர்மாநுஷ்டானத்துக்கு அதிமுக்யத்வம் தந்த குமாரில பட்டர் முதலிய மீமாம்ஸகர்களும், முடிவாக வேதாந்தியான நம்முடைய ஆசார்யாளும் பௌத்த-ஜைன மதங்களை ஜயித்துப் பழையபடி ஸநாதன வேத தர்மமே அதன் வர்ணாச்ரம விபாகத்துடன் நிலை நாட்டப்பட்டது. இது ப்ரத்யக்ஷமாக, ஹிஸ்டாரிகலாக நிரூபணமான விஷயம்.

ஹிந்துக்களை மட்டம் தட்ட வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் வெள்ளைக்கார சரித்ர ஆசிரியர்கள் எழுதி வைத்து, இப்போது நம்மவர்களும் வேதவாக்காக மதிக்கும் அபிப்ராயப்படி, இடைக்காலத்தில் இங்கே அந்த மதங்கள் சக்திகரமாகவே ஸகல ஜனங்களிடையிலும் ஆழப் பரவிவிட்டனவாம். இப்படியிருந்தால் மறுபடி எப்படி வைதிகமாக வர்ணவிபாகம் செய்திருக்க முடியும்? நடுவிலே எல்லா ஜனங்களும் ஒரே ஜாதியாகப் போன அப்புறம், பகவத்பாதாள் காலத்தில் மறுபடி ஜன ஸமூஹத்தை, ‘நீ ப்ராமணன், நீ க்ஷத்ரியன், நீ வைச்யன், நீ நாலாம் வர்ணம்’ என்று யாரோ உத்தரவுபோட்டு இந்த தேசம் முழுக்க அந்த உத்தரவுப்படிச் செய்ய வைத்தார்களென்பதற்கு ஒரு ஆதாரமுமில்லை. நல்லவேளையாக, ஹிஸ்டரி என்ற பெயரில் எத்தனையோ கதை கட்டியிருப்பவர்கள் இம்மாதிரி எதுவும் ஜோடித்துச் சொல்லவில்லை. ஏனென்றால், இதை எந்த அறிவாளியும் ஒப்புக்கொள்ள மாட்டான் என்று அவர்களுக்குத் தெரியும்.

இயற்கையாகவே அமைந்துவிட்ட ஒன்றைப்போல, நீண்ட காலமாகப் பல ஜாதிகள் பாரம்பர்யப்படி தொழில் செய்து வந்தபோது அதை எதிர்க்கேள்வி கேட்காமல் அந்தந்த ஜாதியில் பிறப்பவர்கள் ஏற்றுக்கொள்வது ஸஹஜமானது. ஆனால், ஒருதரம் இந்த ஜாதிக்கட்டு ஏற்பாட்டை உடைத்துவிட்டு, அப்புறம் எவரோ வந்து மறுபடி கட்டுகிறேன் என்று ஆரம்பித்து, ‘நீ இன்ன ஜாதி, நீ இன்ன ஜாதி’ என்று நிர்ணயிக்க ஆரம்பித்தால் அதற்கு எவனும் கட்டுப்பட்டிருக்கமாட்டான். ‘ஏன், அவன்தான் இந்த ஜாதியாய் இருக்கட்டும்; நான்வேறே ஜாதியாயிருக்கிறேனே’ என்றுதான் ஆக்ஷேபிப்பான், ‘பரத கண்டம்‘ என்றே சொல்லும்படியாக விஸ்தாரமாக உள்ள நம்முடைய தேசத்தில் ஒரு தரம் பரவலாக ஒரு அபேதவாத ஸமுதாயம், அதாவது வர்ண வித்யாஸமில்லாத பௌத்த-சமண ஸமுதாயம் உண்டாகியிருந்தால் அதைப் பழையபடி தேசம் பூராவும் வர்ண தர்மக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கவே முடியாது.

ஆசார்யாள் காலத்தோடு பர மதங்கள் படுத்துப்போக ஆரம்பித்துவிட்டன என்று எல்லோரும் ஏகோபித்து அபிப்ராயப்படுகிறார்கள். அது வாஸ்தவம். ஆனாலுங்கூட அந்தத் தனி மநுஷ்யர் ஒருதேச ஜனங்கள் அத்தனை பேரும் ஜாதித் தொழிலை விட்டிருந்தால், இப்படிப் பழைய முறைப்படி மறுபடி வர்ண தர்மத்தின்கீழ் அவர்களைக் கொண்டு வந்திருக்க முடியாது. அவர் ராஜ ஸஹாயத்தினால் கார்யம் செய்ததாகவும் தெரியவில்லை. ராஜாக்ஞையால் வர்ணாச்ரமம் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டது என்பதற்கும் ஹிஸ்டாரிகலாகவோ, இலக்கியங்களிலிருந்தோ கொஞ்சங்கூட ஆதாரமில்லை. நின்றசீர் நெடுமாறனைப்போல ஒரு ராஜா ஜைனம் மாதிரியான ஒரு மதத்துக்குப் போனபோதுகூட ஜனங்கள் நம்முடைய கோயில் குளத்துக்குப் போகவும், பஹிரங்கமாக நம் ஸமயாநுஷ்டானங்களைச் செய்யவும் பயந்துகொண்டு பேசாமல் வேண்டுமானால் இருந்திருக்கிறார்களேயன்றி, அப்படியொன்றும் அத்தனை பேரும் நேராக அந்தப் பரமதங்களைத் தழுவிவிடவில்லை. கொஞ்சம் பெருவாரியாகவே தழுவிய சமயங்களில்கூடக் குலத்தொழில்களை விடாமல்தான் இருந்திருக்கிறார்கள். அதாவது ஸமய சிந்தனா ரீதியில் மாறுதல் ஏற்பட்டபோதுகூட, உலகத்துக்கான நடைமுறைக் கார்யத்தில் மாறுதல் இல்லாமல் ஜாதிப்படிதான் கார்யங்கள் நடந்தன. அதனால்தான் மதாந்தரத்துக்குப்போன ஒரு ராஜாவை ஸம்பந்தர் மாதிரி ஒருத்தர் மறுபடி ஹிந்து மதத்துக்குத் திருப்பியபோது, பயந்துகொண்டிருந்தவர்கள் மறுபடி தைர்யமாகக் கோயிலுக்குப் போவது, வைதிக அநுஷ்டானங்களைப் பண்ணுவது என்று ஆரம்பித்திருக்கிறார்கள்; பிற மதத்துக்கே போனவர்களில் சிலபேர் ஹிந்து மதத்துக்குத் திரும்பியிருக்கிறார்கள்; சிலர் மாறின மதத்திலேயே இருந்திருக்கிறார்கள். இதெல்லாம் எப்படியானாலும் முதலிலிருந்து கடைசிவரை ஜாதி ரீதியான தொழில்கள் மாத்திரம் அப்படியே intact-ஆக (கட்டுக்குலையாமல்) நீடித்துவந்திருக்கின்றன.


* முன்சொன்ன ‘ஆசார விஷயங்கள்‘ என்ற மூன்றாம் பகுதி உரையில் இவ்விஷயம் விரிவாக விளக்கப்படுகிறது.

If you see any errors in the text, please leave a comment