ச்ருதி-யுக்தி-அநுபவம்

புத்தியினாலே நிரம்ப வாதங்கள் செய்து லோகம் பூராவும் இன்றைக்கும் ப்ரமிக்கும்படியாக ஸித்தாந்தம் நிர்மாணம் பண்ணின ஆசார்யாளும், ‘ச்ருதி (வேதம்) சொல்கிற விஷயங்களை மூளையால் ஆராய்ச்சி பண்ணவே பண்ணாதே. நம் மூளைக்கு அதீதமானதை பரமாத்மாவே ரிஷிகளுக்கு ஸ்புரிக்கப்பண்ணி அவர்கள் லோகோபகாரமாக நமக்கு வேதங்களைக் கொடுத்திருக்கிறார்கள். ச்ருதி வாக்யத்தைக் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளு’ என்றுதான் சொல்லியிருக்கிறார்.

ஆனால் அவரே புத்தியினால் எந்த அளவுக்கு ஸித்தாந்தத்தை நாட்ட முடியுமோ அந்த அளவுக்கு ஆழமாகப் போய் அலசி அலசிப் பார்த்து, ஆக்ஷேபணை, ஸமாதானம் எல்லாம் விஸ்தாரமாகச் சொல்லிப் புஸ்தகங்கள் எழுதியிருக்கிறார்.

வைதிகமான எல்லா ஸம்ப்ரதாயங்களைச் சேர்ந்த ஆசார்ய புருஷர்களும், (அதாவது) ராமாநுஜர், மத்வர் முதலிய யாரானாலும் ஸரி, இப்படி ச்ருதியை ‘சப்த ப்ரமாணம்’ என்பதாக அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டு, ஆனாலும் தங்கள் தங்கள் கொள்கைகளை புத்தி ரீதியிலும்தான் விஸ்தாரமாக எடுத்துச் சொல்லி எழுதியிருக்கிறார்கள்.

ஒரு ஸித்தாந்தமென்றால் அது ச்ருதி, யுக்தி, அநுபவம் என்ற மூன்றுக்கும் பொருந்துவதாக, மூன்றுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டுமென்ற கருத்தையே எல்லா ஆசார்யர்களும் பின்பற்றியிருக்கிறார்கள். ச்ருதி சொல்கிற விஷயங்களை அப்படியே ஏற்கவேண்டும். அதற்கு விரோதமில்லாமலும், அதன் முடிவுகளுக்கே கொண்டு விடுவதாகவும், அல்லது அதில் குறிப்பு மட்டும் காட்டியிருப்பதை நன்றாக விளக்கியும், அதில் சொல்லாமல் விட்ட விஷயங்களை நன்றாக ஆராய்ச்சி பண்ணியும் புத்திவாதம் செய்வதுதான் ‘யுக்தி’. முடிவிலே ச்ருதியும் யுக்தியும் அநுபவத்தில் கொண்டுவிட்டால்தான் ப்ரயோஜனம். அந்த அநுபவம் ஹ்ருதயம் என்பதான உயிருக்குள்ளேயே ஏற்படுவது.

ச்ருதி, யுக்திகளினால் விளக்க முடியாத அநுபவங்கள் ஸித்தாந்தம் செய்கிற ஆசார்ய புருஷர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். இவற்றைக் காட்டியும் ஒரு ஆசார்யர் தாம் முடிவாகச் சொல்லவந்த பேரநுபவத்துக்குப் பக்கபலம் உண்டாக்கலாம். அந்த மஹான்களுக்குத்தான் என்றில்லை. நம்மைப் போன்றவர்களுக்குக்கூடச் சில அநுபவங்கள் ஏற்படுகின்றன. அவற்றுக்கு புத்தி யுக்தியால் காரணம் சொல்லமுடியாது. ஒரு தாயாரின் நிறைந்த அன்பு, ஒரு ஸுஸ்வரமான வீணாகானத்தைக் கேட்டு அப்படியே சொக்கிப் போவது, நல்லதாக இல்லாததாகவும் இதே மாதிரி பல விஷயங்களை அநுபவத்தில் தெரிந்து கொள்கிறோம். இதற்கெல்லாம் யுக்தி காட்டமுடியுமா? இப்படிப்பட்ட அநுபவங்களை எடுத்துக்காட்டி, “இப்படியிப்படி ப்ரயத்க்ஷ அநுபவம் இருக்கிறதோ, இல்லையோ? நீயே பார்த்திருக்கிறாயோ, இல்லையோ? இதே அடிப்படையில் நாங்கள் ஸித்தாந்தம் பண்ணுகிற இந்த ஸமாசாரங்களையும் ஏற்றுக்கொள்” என்று ஒரு ஆசார்யர் compare பண்ணி (ஒப்புவமை காட்டி),  parallel (இணை) காட்டி விஷயத்தை ஸ்தாபிப்பது, ச்ருதி-யுக்தி-அநுபவம் என்ற மூன்றில் கடைசியான அநுபவம் என்பதன் கீழ்வரும்.

கடைசியில் மஹாநுபவமாக சிஷ்யனுக்கே கிடைக்கிற ஸித்திதான் ஸ்வாநுபூதி என்றும் அபரோக்ஷாநுபூதி என்றும் சொல்வது.

ஈச்வர பக்தி இருக்கிறவனுக்கே, அதோடுகூட அந்த ஈச்வர பக்திக்கு ஸமதையான குருபக்தியும் இருக்கிறவனுக்கே தத்வார்த்தமெல்லாம் பிரகாசிக்கும் என்று சொல்கிறபோது அந்த ப்ரகாசம் என்பது இந்த அநுபூதி தான். ‘ப்ரகாசம்’ என்பதை அப்படியே மொழி பெயர்த்த மாதிரிதான் அவர்களும் (மேல்நாட்டினரும்) Enlightenment என்றும் Illumination என்றும் சொல்கிறார்கள்!

ஆக அது அநுபவ ப்ரகாசம்; வெறும் புத்தி ப்ரகாசமில்லை. (புத்தி என்பதை மூளை என்ற அர்த்தத்தில் சொல்கிறேன்.)

அநுபவம்தான் முக்யம். ஆணிவேர். உபதேசம் மூளையோடு நிற்காமல் அநுபவமாகப் பழுக்கவேண்டுமானால் அதற்கு ஈச்வர பக்தியும், அதற்குக் கொஞ்சங்கூடக் குறைச்சலில்லாத குரு பக்தியும் இருந்தால்தான் முடியும். அதுதான் ஹ்ருதயம் என்கிற நிலத்தைக் கிளறிவிட்டு அநுபவம் ஊற்றெடுப்பதற்கு வழி பண்ணும். அல்லது, இன்னொரு விதமாகச் சொன்னால், ஹ்ருதயம் என்ற கதவைத் திறந்துவிட்டு ஞான ஜ்யோதிஸ் உள்ளுக்குள்ளே அடிப்பதற்கு வழி ஏற்படுத்தும்.

மூளையைச் சாணை தீட்டிக்கொண்டு யுக்தியினால் உள்ளர்த்தங்களை பிரகாசிக்கச் செய்து கொண்டாலும்கூட அந்தப் பிரகாசமும் ஆத்ம ஜ்யோதிஸின் அநுபவ ப்ரகாசத்துக்கு வழி திறந்துவிடுவதாகத்தான் இருக்கவேண்டும். மூளை அஹம்பாவக் கொழுப்புப் பிடித்துத் தன்னையே நிலை நாட்டிக்கொள்ளாமல், இப்படி வழி விட்டு, விலகிப் போவதற்கு பக்தி வேண்டும். ஈச்வர பக்தியும் அதற்கு ஸமானமான குருபக்தியும் வேண்டும் என்று அந்த ச்லோகம் சொல்கிறது.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s