ஞான சிவனே ஞானாவதாரமாவது

இப்படி இரண்டு ரூபமாகப் பார்க்கும்போது ஈச்வரன் தான் முக்யமாக ஞானம் தருகிறவன். ‘இது இதற்கு இன்னின்ன ஸ்வாமியிடம் போ’ என்று சொல்லும்போது ஆரோக்கியத்திற்கு ஸூர்யன் மாதிரி, ஞானத்திற்கு ஈச்வரனிடந்தான் போகச் சொல்லியிருக்கிறது:

ஆரோக்யம் பாஸ்கராத்-இச்சேத் ஞாந-தாதா மஹேச்வர:

ஞானந்தான் சாச்வதமான மோக்ஷத்தைத் தருவது. முடிவிலே “என்னை சரணடை” என்றபோது, “உன்னை எல்லாப்பாவத்திலிருந்தும் விடுவிக்கிறேன்” என்று சொல்லி, விட்டுவிட்டார். ஆனால் அதற்கு முன் “ஈச்வரனை சரணடை” என்றவர், “அவனுடைய அநுக்ரஹத்தினாலே பரம சாந்தமான சாச்வத ஸ்தானத்தை அடைவாய்” என்கிறார். அந்த ஸ்தானம்தான் ஞானத்தினால் பெறும் மோக்ஷம்.

தத் ப்ரஸாதாத் பராம் சாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி சாச்வதம்

விச்வரூப யோக தர்சனத்தின்போது ஈச்வரன் ருத்ரனாகச் செய்யும் ஸம்ஹாரத்தைத் தம்முடையதாகவே காட்டியவர், முடிக்கிற அத்யாயத்தில் அவர் தக்ஷிணாமூர்த்தியாக இருந்து செய்யும் ஞான மோக்ஷ ப்ரதானத்தைச் சொல்லி, இது ‘அவனுக்கே ஆன கார்யம்’ என்று கொஞ்சம் வித்யாஸப்படுத்தினாற்போலக் காட்டினார்.

இப்போது, 72 துர்மதங்கள் கிளம்பியபோது இப்படிக் கொஞ்சம் பிரித்தாற்போல ஞானத்துக்கு என்றே இருக்கும் ஈச்வராவதாரமாகவே ஸம்பவிக்கட்டுமென்று நினைத்தார். ஆனால் இவர் ‘ஸம்பவாமி யுகே யுகே’ என்று சொன்னதற்காக அவர் அவதாரம் செய்து அவஸ்தையெல்லாம் படுவாரென்றால் இரண்டும் ஒன்றுதான் என்றும் ஆகிறது!

ஞானத்துக்காக அவதாரமென்றால் கிரீட குண்டலமும், கௌஸ்துபமும், பீதாம்பரமுமாக தர்பார் நடத்தும் தாம் போவதைவிட, ஒரே சடையும் முடியுமாக ச்மசானத்தில் வஸ்திரத்தையெல்லாம் அவிழ்த்துப் போட்டுவிட்டோ, அல்லது ஆல மரத்தின் கீழேயோ, கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பவர் போவதுதான் பொருத்தம் என்று நினைத்தார். ‘நாம் தான் இவ்வளவு அவதாரம் எடுத்தாச்சே! அவர் மட்டும் ஏன் சும்மா உட்கார்ந்துகொண்டிருக்க வேண்டும்? ‘சிவனேன்னு உட்கார்ந்திருக்கிறது’ என்று பேர் வாங்கவேண்டும்? இந்தத் தடவை அவர் போகட்டும். நாம் ஒன்றுமே செய்யவில்லை என்றில்லாமல் அவருடைய கார்யத்தில் கொஞ்சம் ஸஹாயம் செய்வதற்காக அம்ச ரூபத்தில் அவருக்கு ஒரு சிஷ்யராக வேண்டுமானால் போகலாம்’ என்று நினைத்தார்.

ஆசார்யாளுடைய நான்கு முக்ய சிஷ்யர்களில் ஒருவரான பத்மபாதாசார்யாளை மஹாவிஷ்ணுவின் அம்சம் என்று ‘சங்கர விஜய’ங்களில் சொல்லியிருக்கிறது.

பரமசிவனுக்கு ஈசானன், ஈச்வரன், ஸதாசிவன் என்றெல்லாம் பேர். ச்ருதியிலேயே “ஸகல வித்யைகளுக்கும் தெய்வம் ஈசானன், ஸர்வ பூதங்களுக்கும் அவனே ஈச்வரன்” என்றெல்லாம் சொல்லி, “அவன் எனக்கு மங்கள சிவமாக இருக்கட்டும்” என்று ப்ரார்த்தித்துக்கொண்டு, அப்படிப்பட்ட ஸதாசிவனை ஓம்காரமான ஆத்ம ஸ்வரூபமாக அத்வைத பாவனையில் அநுஸந்திப்பதோடு முடித்திருக்கிறது1. “ஈச்வர: ஸர்வ பூதாநாம்” என்று இங்கு உள்ள ச்ருதி வாக்யத்தையேதான் பகவானும் கீதையில் அப்படியே ‘ரிபீட்’ பண்ணியிருக்கிறார். ஸர்வ வித்யைகளுக்கும் அவனே அதிபதி என்றும் இங்கே வருவதால் அவன்தானே உபதேச குருவாக அவதரிக்க வேண்டியவன்?

தந்த்ர சாஸ்த்ரங்களையும், மந்த்ர சாஸ்த்ரங்களையும், இன்னும் அநேக திவ்ய உபாக்யானங்களையும் பார்த்தால் கூடப் பரமேச்வரன்தான் அந்த தந்த்ரத்தையோ, மந்த்ரத்தையோ, உபாக்யானத்தையோ அம்பாளை முன்னிலைப்படுத்தி உபதேசித்தவன் என்று இருக்கும்.

இந்த வித்யைகளுக்கெல்லாம் மேலே இருப்பது அத்வைத வித்யை. அந்த வித்யை வெறும் புஸ்தகமோ, மந்த்ரமோ இல்லை. அதுவே அநுபவம். தன்னில் தானாக இருக்கிற ஒரே ஸத்ய அநுபவம். அப்பேர்ப்பட்ட அத்வைத வித்யையும் அந்த சிவன்தான் என்றே குறிப்பாகச் சொல்லியிருக்கிறது. “அஹம் ப்ரஹ்மாஸ்மி” (‘நானே பிரம்மம்’) என்கிற மாதிரியே “சிவோஹம்” (‘நானே சிவன்’) என்று த்யானம் செய்கிற வழக்கமிருக்கிறது. மாண்டூக்ய (உபநிஷ) த்திலும் “சிவம் அத்வைதம்” என்றே இருக்கிறது. அதனால் அத்வைத வேதாந்தத்துக்கான ஆசார்ய புருஷர் பரமசிவனின் அவதாரமாயிருப்பதே பொருத்தமென்று தெரிகிறது.

குரு ஸகல அறிவும் நிரம்பியவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஸர்வஜ்ஞனாகப் பரமசிவனையே நிகண்டுவிலும் (“அமரகோச” அகராதியிலும்) சொல்லியிருக்கிறது : “க்ருசாநுரேதா ஸர்வஜ்ஞோ தூர்ஜடிர்-நீல லோஹித:”.

மற்ற புஸ்தகங்களில் (பரமசிவனை ஞானாசார்யனாகச்) சொல்லியிருப்பது இருக்கட்டும். அவதார ஆசார்யாள் என்ன சொல்லியிருக்கிறார்? அவர் சொல்வதற்குத் தனியான மதிப்புண்டல்லவா? குரு யார், ஞானம் தருவது யார் என்று அவர் எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா?

சொல்லியிருக்கிறார். “ப்ரச்நோத்தர ரத்ந மாலிகா”வில் இந்தக் கேள்விகளையும் போட்டு பதில் சொல்லியிருக்கிறார்.

“கோ ஹி ஜகத்குரு: உக்த?“-“ஜகத்குரு என்று சொல்லப்படுவது யார்?” என்றே அதில் ஒரு கேள்வி. வெறும் குரு இல்லை; ஜகத்குரு! ஜகத்குரு என்றாலே இப்போது ஆசார்யாளைத்தான் நினைத்துக் கொள்கிறோம். அவருக்கு முந்தி அந்தப் பட்டம் வாங்கினவர் க்ருஷ்ண பரமாத்மா. “க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்” என்றே எட்டு அடியும் முடிவதாக அவர் மேலே ஒரு அஷ்டகம் இருக்கிறது என்று சொன்னேன். ஆனால் இங்கே ஆசார்யாள் “கோ ஹி ஜகத்குரு-ருக்த:” என்று கேட்டுவிட்டு என்ன பதில் கொடுக்கிறார்

“சம்பு:”

‘சம்பு’ என்று சொல்லப்படும் சிவன்தான் என்கிறார். அந்த சம்-புதான் இந்த சம்-கரர் ஆனார்!2 அவரே இப்படிச் சொல்கிறார்! சிவன்தான் குரு என்பதை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில் அடுத்த கேள்வியும் பதிலும் கொடுத்திருக்கிறார்.

“ஞாநம் குத:?” – ஞானம் எவரிடமிருந்து (கிடைக்கும்)?

“சிவாதேவ” – “சிவாத் ஏவ” – சிவனிடமிருந்துதான்.

ஞானாசார்ய அவதாரம் பரம சிவனுடையதாகத்தான் இருக்கவேண்டுமென்று தெளிவாகி விட்டதல்லவா?

மொத்தத்தில் விஷயம் என்னவென்றால் பரமாத்மாவின் ஸங்கல்பப்படி இதுவரை அதன் ஒரு ரூபமான மஹாவிஷ்ணுவிடமிருந்து அவதாரங்கள் ஏற்பட்டாற்போல இப்போது இன்னொரு ரூபமான பரமேச்வரனிடமிருந்து ஒரு அவதாரம் நிகழ வேண்டுமென்று நிச்சயமாயிற்று.


1மஹா நாராயணோபநிஷத் — 21

2சம்பு, சம்-கரர் என்ற பதங்களின் விளக்கம் பிற்பாடு விரியும்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s