நம் பிரார்த்தனையும் அடியார் நம்பிக்கையும்

இத்தனை வருஷமாக நித்யமும் நீங்கள் கூட்டங்கூட்டமாக வந்து எனக்கு நமஸ்காரம் பண்ணிக்கொண்டு வந்திருப்பதில் நானும் உங்களுக்காக அவனை மனஸால் நமஸ்கரித்து, உங்கள் நல்லதற்காக ப்ரார்த்தித்துக் கொள்ளத்தான் முடிந்த மட்டும் முயற்சி பண்ணி வந்திருக்கிறேன். இருந்தாலுங்கூட நீங்கள் ப்ரார்த்திக்கிற விஷயங்கள் ஏதாவது பலித்திருக்கிறதென்றால் அதற்கு என் முயற்சியை விட உங்கள் நம்பிக்கைதான் முக்ய காரணம். நீங்கள் என்னிடம் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறீர்களோ அந்த அளவுக்கு ‘ஸின்ஸிய’ராக உங்களுக்காக என்னால் ப்ரார்த்திக்க முடியுமா என்றே தோன்றுகிறது. அதனால்தான் சொன்னேன், என் ஆசீர்வாத பலன் என்று நினைப்பதுகூட அதைவிட உங்களுடைய நம்பிக்கையின் பலனேதான் என்று! முடிவாகப் பார்த்தால் நீங்கள் ப்ரார்த்திக்கும் காரியம் பூர்த்தியாவதற்கு முடிவான காரணம், என் வக்காலத்து இல்லாமல் அந்த நாராயணனுக்கே உங்களிடமுள்ள க்ருபா சித்தந்தான்.

பெத்தப் பேர் சூட்டி, நூறு, ஆயிரம் என்று ஜனங்கள் நமஸ்காரம் பண்ணி, அது போதாதென்று, “ஒங்க ஆசீர்வாதத்துலதான் இன்ன இன்ன நடந்தது: ஆச்சர்யமா நடந்தது” என்று வேறே சொல்லும் போது, ஆசீர்வாதம் பண்ண நமக்கே ‘அதாரிடி’ இருக்கிறது என்று ப்ரமைப்படாமல் ஜாக்ரதை செய்து கொள்வது ரொம்ப அவச்யமாகிறது. இதில் கொஞ்சம் தப்பினால் கூட ஸாக்ஷாத் நாராயணனின் உடமையை ‘மிஸப்ரோப்ரியேட்’ பண்ணிக் கொள்கிற பெரிய அபசாரமாகி விடும்.

If you see any errors in the text, please leave a comment